குழந்தைப் பருவம் முதல் பதின்ம வயது வரையிலான குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பல் மருத்துவத்தின் ஒரு சிறப்புப் பிரிவே, ‘குழந்தைப் பல் மருத்துவம்’ எனப்படும்.
குழந்தைகளின் சொத்தைப் பற்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்தல், பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் சரியான விதத்தில் முளைப்பதை உறுதி செய்தல் குழந்தைப் பல் மருத்துவரின் முக்கியப் பணியாகும். குழந்தை உளவியல், வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய அக்கறை குழந்தைப் பல் மருத்துவருக்கு இருக்க வேண்டும்.
குழந்தைகள் பல் மருத்துவத்தின் தந்தை என்று ராபர்ட் புனான் என்பவர் அழைக்கப்படுகிறார். 1816 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பல் மருத்துவமனையைத் திறந்த ராபர்ட் புனான் ஒரு பிரெஞ்ச் பல் மருத்துவர். அவர் குழந்தைகள் பல் மருத்துவத்திற்குத் தேவையான சிறிய, கச்சிதமான, நுணுக்கமான பல் மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்தார். அவர் இளம் வயது பல் பராமரிப்பையும், பல் நோய் ஆரம்பத் தடுப்புகளையும் வலியுறுத்தினார். 1823 ஆம் ஆண்டு ராபர்ட் புனான் ‘மேனுவல் டி ஓடன்டல்ஜி’ (Manual d’ Odontalgie) எனும் குழந்தைகள் பல் மருத்துவப் புத்தகத்தை வெளியிட்டார்.
ராபர்ட் புனான்தான் முதல் முதலில் குழந்தைகளுக்கான பல் தூரிகைகளையும், பற்பசைகளையும் வடிவமைத்தார். புனான் பால்பற்கள் தானாக விழும் வரை அவற்றைப் பாதுகாக்க திட்டவறை தயாரித்தார். குழந்தைகளுக்குப் பேசத் தொடங்கியவுடனே பல் நலத்தைப் பாதுகாக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார் புனான்.
குழந்தைகள் பல் மருத்துவத்தின் தந்தை என இவரை அழைப்பது போன்று, குழந்தைகள் பல் மருத்துவத்துன் தாய் என்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பல் மருத்துவ உதவியாளர் மின்னி இவான்ஜலின் ஜோர்டான் என்பவர் அழைக்கப்படுகிறார். இவர், உலகில் முதன்முறையாக லாஸ் ஏஞ்சல்ஸில் குழந்தைகளுக்கான பல் மருத்துவமனையைத் திறந்தார். ஜோர்டான் குழந்தைகள் பல் தொடர்புடையப் பிரச்சனைகளை ஆய்வு செய்யவும், தகுந்த சிகிச்சை வழங்கவும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தார்.
பல் மருத்துவத்தில் விதி ஏழு என சில மருத்துவ விழுமியங்கள் பிரித்துச் சொல்லப்படுகின்றன. ஒரு குழந்தை ஆணோ, பெண்ணோ அதன் ஏழாவது வயதில் முதல் பல் சீரமைப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அது பல் ஆரோக்கியத்துக்கான தூர அளவுகள் பற்றிய நினைவூட்டலாய் அமையும். குழந்தைகளுக்கு நிரந்தரப் பற்களும், கடைவாய்ப் பற்களும் முளைக்கும் தருணமே பல் சீரமைப்பு மதிப்பீடுக்கு உகந்த நேரம்.
அந்த வேளையில்தான் குழந்தைகள் பல் மருத்துவர், குழந்தைகளின் வாயைப் பரிசோதித்து ஒழுங்கற்ற விதத்தில் பற்கள் கூட்டமாய் முளைப்பது பற்றியும், கடிப்பது பற்றியும் கண்டறிவார். குழந்தைகளது ஏழு வயதில்தான் பால் பற்களை இழக்கத் தொடங்கியிருப்பர்.
|
பிரதிபலிப்பு
“நீ சிரிக்கவில்லை
கண்ணாடி சிரித்தது
பற்களின் ஒழுங்கு சமூகத்தின்
வரைபடம்
ஒளி தட்டியபொழுது உணர்வு
படியும்
அது ஒரு புகைப்படம் அல்ல
உணர்ச்சியின் உறைந்த ஒலி”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.
|
* அமெரிக்கப் பல் சீரமைப்புக் கூட்டமைப்பு, ஒரு குழந்தையின் முதல் பல் சீரமைப்பு மதிப்பீட்டை ஒரு குழந்தையின் ஏழாவது வயதில் செய்வது மேலானது என்கிறது.
* ஒரு குழந்தையின் ஏழாவது வயது பற்கள் விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வயதில்தான் குழந்தைகளுக்கு கடைவாய்ப்பற்கள் முளைக்கின்றன, சில பால்பற்கள் விழுகின்றன. சில நிரந்தரப் பற்கள் எழுகின்றன.
* குழந்தையின் ஏழு வயதில்தான் பல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட பல் பிரச்சனைகளை இனம் கண்டு கொள்கின்றனர்.
* நிரந்தரப் பற்கள் வளர தாடையில் போதுமான இடம் இல்லாததால் பற்கள் நெரிசலாய் முளைக்கின்றன. இதனை ஆங்கிலத்தில், Teeth Crowding என்கின்றனர்.
* மேற்பற்கள் கீழ்பற்களை அதிகமாக மறைப்பது. இதனை ஆங்கிலத்தில், Overbite என்கின்றனர்.
* தாடைச் சீரமைப்பில் உள்ள குறைபாடு அல்லது கீழ்ப்பல் முந்தி இருப்பது. இதனை ஆங்கிலத்தில், Under Bite or Class III Malocclusion என்கின்றனர்.
* பல் வளைவுகளின் பக்கவாட்டு தவறான சீரமைப்பு. இதனை ஆங்கிலத்தில் cross bite என்கின்றனர்.
குழந்தைப் பருவத்திலேயே பல் பிரச்சனைகளைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கும் நிலையில் அந்தப் பல் பிரச்சனை தொடக்கத்திலேயே தவிர்க்கப்படும்.
பிற பல் நலத்திற்கான விதிகள் 7 நிலைகள் எனப்படுகிறது. அதாவது,
* குழந்தையின் ஏழாவது மாதத்தில்தான் முதல் பல் முளைக்கும் என்பதால், ஏழு மாதக் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு விளையாடக் கூடாது.
* ஏழாவது மாதத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு பல் இருக்கும். 11 வது மாதத்தில் அதே குழந்தைக்கு நான்கு பற்கள் முளைத்திருக்கும். இதனை, குழந்தைப் பற்களின் 7+4 விதிகள் எனப்படுகின்றன.
* உண்ணும் உணவில் இருந்து அமிலம் உற்பத்தியாகி பல் மேற்பூச்சைச் சேதப்படுத்த வெறும் ஏழு நிமிடங்கள் போதும்.
*குழந்தைக்கு பிஹெச் அளவு 7 என்றிருக்க வேண்டும். வாயின் பிஹெச் அளவு ஏழுக்குக் கீழிறங்கினால் வாய்க்குள் அமிலம் உருவாகி, பற்சொத்தையை உருவாக்கும்.
* ஒரு குழந்தைக்கு ஏழு வயதாகும் போது, அந்தக் குழந்தையின் 20 பால் பற்கள் விழுந்திருக்க வேண்டும்.
குழந்தையின் ஏழு வயது ஒரு கட்டாயக் கால அளவு. இந்தக் காலக்கட்டத்தில் பால் பற்களிலிருந்து நிரந்தரப் பற்களுக்கு நிலை மாற்றமடைதல் நிகழ்கிறது.
|
பல் கொட்டும் கனவுகள்
டி. அருள்மொழிவர்மன், அரக்கோணம்.
ஆண் மருத்துவர்களை விட, பெண் மருத்துவர்களே குழந்தைகளுக்கான பல் மருத்துவத்துக்குச் சரியானவர்கள் என்கிறார்களே...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
குழந்தைகளைப் பராமரிப்பதில் பெண்கள் எப்படி சிறப்புடையவர்களோ, அப்படியே பொது மருத்துவத்திலும், குழந்தை மருத்துவத்திலும் பெண் மருத்துவர்களே சிறப்பானவர்கள் எனலாம். குழந்தையின் விளையாட்டுக்கும், அதன் போக்குகளுக்கும் உடன்பட்டு, அவர்கள் அச்சப்படாமல் சிகிச்சையளிக்கப் பெண் மருத்துவர்களே சரியானவர்களாக இருக்கின்றனர். ஆண் மருத்துவர்களில் சிலர் குழந்தைகளுடன் நன்றாகப் பழகி, சிகிச்சையளிப்பவர்களும் இருக்கிறார்கள். பொதுவாக, பல் மருத்துவத்தில் பல் மருத்துவர்கள் பொறுமையுடன் செயல்படுபவது அவசியம்.
|
குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது, குழந்தைப் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, குழந்தைகள் பல் மருத்துவமனையில் இடம் பெற்றிருக்கும் குழந்தைப் பல் நலத்திற்கான படங்களைக் காண்பித்து விளக்க வேண்டும். அதன் பின்னர், குழந்தைப் பல் மருத்துவரைச் சந்தித்து, குழந்தைகளுக்கான பல் மற்றும் வாய் குறித்து முழுமையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைப் பல் மருத்துவர் குழந்தைகளுக்கு பற்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பார். அத்துடன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைக்கும் பெற்றோருக்கும் பரிந்துரைப்பார்.
வழக்கமான பல் பரிசோதனைகள் மூலம் பற்குழி, ஈறு நோய், ஒழுங்கீனப் பற்கள் பிரச்சனைகளை கண்டறியலாம். பல் பிரச்சனைகளை முன் கூட்டியே சரி செய்து கொண்டால் பெரும் பிரச்சனை வராமல் தடுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஒரு பற்குழியை நிரப்பினால் பின்னாளில் அப்பிரச்சனை மேலும் பெரிதாகாமல் தடுக்கலாம்.
உரியமுறையில் பல் துலக்கும் விதங்கள், பல் தழுவும் முறைகள் (flossing) போன்ற குழந்தைப் பல் பராமரிப்பு குறித்துக் கற்றுத் தரலாம். இளம் பருவத்தில் பல் நலத்தைப் பராமரிக்கச் சொல்லிக் கொடுத்தால், அது முதுமை வரை தொடர்ந்து இருக்கும்.
குழந்தைகளின் பல் ஆரோக்கியம் பற்றி பெற்றோர் அதிகம் கவலைப்படுவதுண்டு. குழந்தை கை சூப்பியாக இருப்பதையும் அல்லது அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த தணிப்பி எனப்படும் ரப்பர் நிப்பிளை பயன்படுத்துவதின் சாதகபாதங்களையும் அலசுவதாய் இருக்கும்.
முன்னதாக நேர்மறை பல் மருத்துவ அனுபவங்கள் குழந்தையின் பல் நலத்தை அதிகரித்து பதட்டத்தைக் குறைக்கும்.
உலக அதிசயங்களில் மட்டுமில்லை, குழந்தைகள் பல் மருத்துவத்திலும் 7 என்பது வியக்க வைக்கக்கூடியதாகவே இருக்கிறது.