மனிதர்களுக்கு வரும் நோய்களைக் கண்டறிந்து, அதற்குச் சரியான சிகிச்சையளித்து, அதன் மூலம் நோயாளிகளைக் குணமடையச் செய்து, அவர்களது துன்பத்தைப் போக்குபவர்களாக மருத்துவர்கள் இருப்பதால், மருத்துவர்களைக் கடவுளாகக் கருதுகின்றனர். இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதுமே இந்நிலை இருக்கிறது.
நோய்களும் நோயாளிகளும் இருப்பதால்தான் மருத்துவர்களின் தேவையும் இருக்கிறது. மருத்துவம் ஒரு சேவையாக இருக்கிறது. ஆனால், உயிர்காக்கும் சில மருத்துவங்களில் சிறப்பு பெற்ற மருத்துவர்கள் (நிறுவனங்கள்), அம்மருத்துவத்தை வணிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பல் மருத்துவத்தில் பெரிதாக அப்படியொரு நிலை இல்லை.
இவ்வேளையில், பல் நோயாளிகளுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பார்ப்போம்.
* நோயாளி ஆண் - பெண், சிறுவர் - சிறுமியர், ஏழை -பணக்காரர் என்று எந்தப் பாகுபாடுமின்றி, நோயாளிகள் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
* நோய்களுக்கு சிகிச்சை தருவதில் எவ்வித வேறுபாடுகளுமின்றி கவனம் செலுத்த வேண்டும்.
* நோய் கண்டறிதல், சிகிச்சை முறை தெரிவுகள், சிகிச்சைக்கான கட்டணம், அபாய நேர்வு பற்றி முழு தகவல்களையும் ஒளிவு மறைவில்லாமல் நோயாளிகளுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
* தேவைப்பட்டால் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* பல் மருத்துவரின் குறிப்பிட்ட வகை சிகிச்சையை வலி, பின் விளைவு, கட்டணம் கருதி மறுக்க பல் மருத்துவ நோயாளிகளுக்கு உரிமை இருக்கிறது.
* உயர்தர நெறிமுறை பராமரிப்பு.
* பாதுகாப்பான சூழல்.
-என்று நோயாளிகள் பல் மருத்துவரிடம் தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெற்றிடலாம்.
இதே போன்று, பல் மருத்துவ நோயாளிகளின் பாதுகாப்பு பற்றிய சில கருத்துகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவை;
|
அகழாய்வு
“புன்னகை காலத்தின்
பாறையில் புதைந்த
கலைச்சின்னம்
பற்கள் கல்லாக மாறிய
மௌனங்கள்
ஒரு மொழி அழிந்து போனது.
அதில் அன்பு என்ற சொல்
நிழலாக மீந்தது
நாம் தோண்டுவது வரலாறு
அல்ல
மீண்டும் வடிவம் பெற்ற ஒரு
சிறு காலத்தை”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.
|
மரியாதை மற்றும் கண்ணியம்
* மரியாதை, கண்ணியம், மனித நேயத்துடன் கூடிய இனம், மொழி, பால், மத பாகுபாடுகள் அற்ற சிகிச்சையும் கவனிப்பும் இருக்க வேண்டும்.
தகவல்
* நோய் கண்டறிதல், முன்கணிப்பு, சிகிச்சைத் திட்டம், ஆபத்துகள், மாற்றுச் சிகிச்சை முறைகள், வசதிகள், சிகிச்சையை செய்து கொள்ளாவிடில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி முழுமையான தகவல்களை பல் மருத்துவர்கள் நோயாளிக்குத் தகுந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.
தகவலறிந்த ஒப்புதல்
* முழு விவரங்களை கேட்டறிந்த பின் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வது அல்லது மறுப்பது. சிகிச்சை தொடர்பான கேள்விகளைக் கேட்டுத் தகுந்தப் பதில்களைப் பெறுவது.
தனி உரிமை மற்றும் இரகசியத்தன்மை
* ஒரு பிரபல நடிகர் அல்லது தொழிலதிபர் அல்லது முக்கியமானவர்கள், ஏன் எந்தவொரு நோயாளியின் பல் சிகிச்சை குறித்தத் தகவல்களையும் வெளிப்படுத்திவிடாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது அவசியம்.
* நோயாளியின் சிகிச்சை விவரங்கள் நோயாளியின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது.
அமெரிக்காவின் ஆரோக்கியக் காப்பீடு பெயர்வுத் திறன் மற்றும் பொறுப்புக் கூறல் சட்டம் 1996 நோயாளிகளின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது. இந்தச் சட்டத்தை ஆங்கிலத்தில் Health Insurance Portability and Accountablity Act 1996
என்பர். இதனைச் சுருக்கமாக, HIPAA என்கின்றனர்.
நோயாளியின் பங்களிப்பு
* பல் மருத்துவரின் முடிவுகளில் கலந்து சம்மதித்தல்
தெரிவு
தனது பல் மருத்துவ பிரச்சனைக்குச் சிகிச்சையளிக்கும் பல் மருத்துவரைத் தேர்ந்தெடுத்தல். தேர்ந்தெடுத்த மருத்துவரிடம் அவரின் ஆலோசனை நேரத்தை முன் பதிவு செய்தல்.
மருத்துவ ஆவணங்கள் அணுகும் உரிமை
* பல் மருத்துவப் பிரச்சனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடும் உரிமை.
பாதுகாப்பு
பாதுகாப்பான, ஆரோக்கியமான, நோய்த் தொற்றை உரிய முறையில் தடுக்கக்கூடிய சூழலில் மருத்துவம் பெறும் உரிமை.
அவசர மருத்துவக் கவனிப்பு
அவசரப் பல் மருத்துவச் சிகிச்சைகளுக்கான வாய்ப்பு.
வெளிப்படைத்தன்மை
பல் மருத்துவச் சிகிச்சையில், சிகிச்சை முறைகளில், சிகிச்சைக் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மை மிக முக்கியம்.
பல் மருத்துவரின் பொறுப்புகள்
* துல்லியமான மருத்துவத் தகவல்களை நோயாளிகளுக்குத் தெரிவித்தல்.
* உடன் செயல்படும் மருத்துவர்களுக்கும், துணை மருத்துவ உதவியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் மரியாதை தருதல்.
* அளிக்கும் சிகிச்சையின் நிவாரணம் எந்த அளவில் இருக்கும் என நோயாளியிடம் தெரிவித்தல்.
* சிகிச்சை கட்டணம் மற்றும் நிதிக் கொள்கைகள் பற்றி நோயாளிக்கு அறிவித்தல்.
தரமான பல் மருத்துவ சிகிச்சைக்கான அடிப்படைகள்
* குறித்த நேரத்தில் பாதுகாப்பான நெறிமுறை சிகிச்சை அளிக்கும் பல் மருத்துவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.
* சிகிச்சையளிக்கும் பல் மருத்துவரின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தை தெரிந்து கொள்ளல்.
* தனது பல் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்வையிடுதல்.
* அவசர மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகள்.
* ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் நோயாளி விரும்பினால் இன்னொரு பல் மருத்துவரிடம் இரண்டாவது கருத்துகளையும் கேட்டுப் பெறலாம்.
* ஒரு பல் மருத்துவரின் சிகிச்சையில் அதிருப்தி அல்லது மருத்துவக் குறைபாடு இருந்தால் நோயாளிக்குப் புகார் செய்யும் உரிமை உண்டு.
* நோயாளிகள் அனுமதியின்றி நோயாளியை மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடாது.
* நோயாளி பேசும் மொழி தெரியாத மருத்துவர் மொழி பெயர்ப்பாளர் வைத்து நோயாளியுடன் பேசலாம்.
* காது கேளாத, வாய் பேசாத நோயாளிக்கு சமிக்ஞை மொழியில் பேசக்கூடிய மொழி பெயர்ப்பாளர் அமர்த்தலாம்.
நோயாளி மொழி பெயர்ப்பாளர் சேவைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இம்மொழிபெயர்ப்புகள் மூன்று வகைப்படும்.
1. ஒரே நேர மொழிபெயர்ப்பு
2. தொடர்ச்சியான மொழிபெயர்ப்பு
3. நேரடி பார்வை மொழிபெயர்ப்பு
|
பல் கொட்டும் கனவுகள்
ஆ. சுந்தரேசன், கிருஷ்ணகிரி.
பல் மருத்துவம் சேவையா அல்லது தொழிலா அல்லது வணிக நிறுவனங்களில் ஒன்றா...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
பல் மருத்துவத்தில் சேவை 50 சதவீதமாகவும், தொழில் 50 சதவீதமாகவும் கொள்ளலாம். சேவை மனப்பான்மை, சகிப்புத் தன்மை, தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், பொதுமக்களிடம் சிறப்பான தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு பல் மருத்துவர் வெற்றி பெற முடியாது. உலகில் சேவை என்று குறிப்பிடப்பட்ட பல தொழில்கள் வணிகமயமாகிவிட்டன. பல் மருத்துவமும் சில பெரிய நகரங்களில் வணிகமயமாகச் செயல்படுகின்றன. பல இடங்களில் பல் மருத்துவர்கள், சிறிய அளவில் சேவையாகச் செய்து கொண்டிருக்கின்றனர். பல் மருத்துவத் தேவைகளுக்கேற்ப நாம் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
|
ஒரு நோயாளிக்கு 10 வகையான உரிமைகள் உள்ளன.
* சகல உரிமைகளுடன் கூடிய நோயாளி (Right patient)
* சரியான மருந்து (Right drug)
* சரியான அளவில் மருந்து (Right dose)
* சரியான வழிமுறை (Right route)
* சரியான நேரம் (Right time)
* சரியான விதத்தில் சிகிட்சையை ஆவணப்படுத்துதல் (Right documentation)
* குறிப்பிட்ட சிகிட்சையை நோயாளி மறுக்கும் உரிமை (Right to refuse)
* சரியான காரணம் (Right reason)
* சரியான மறுமொழி அல்லது எதிர்வினை (Right Response)
* சிகிட்சை பற்றிய சரியான மதிப்பீடு (Right assessment / evaluation)
தமிழ்நாட்டில் பல் மருத்துவ நோயாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை தேசிய வழிகாட்டும் முறைகள் நெறிப்படுத்துகின்றன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 மற்றும் 2019 பல் மருத்துவ நோயாளிகளைப் பாதுகாக்கிறது.
தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பல் மருத்துவர்களுக்கான நடத்தை விதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
* பல் மருத்துவர் சட்டம் 1948 பிரிவு 34 பல் மருத்துவர்களின் தகுதிப் பதிவை கட்டாயப்படுத்துகிறது.
* பல் மருத்துவர் திருத்த சட்டம் 1955, 29.03.1948 தேதிக்கு முந்தையப் பல் மருத்துவம் படிக்காத, ஆனால் அனுபவம் வாய்ந்த பாரம்பரிய பல் மருத்துவர்கள் தங்கள் பெயர்களைத் தகுதிப் பதிவு செய்வதை அனுமதிக்கிறது.
பல் மருத்துவ நோயாளிகளின் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சில சமயங்களில் தவறாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.