* துபாயின் புர்ஜ் கலிபா கட்டடத்தின் 163 ஆவது தளத்தில் நிற்கிறீர்கள். உங்களைக் கறுப்பு கோட் அணிந்த கருப்புக் கண்ணாடி மாட்டிய எயிட்பேக் மனிதன் உச்சியிலிருந்து தள்ளி விடுகிறான். சாமர்சால்ட் அடித்து ஆழத் தரையில் விழுகிறீர்கள். திருஷ்டி பூசணிக்காய் மாதிரி சிதறி ரத்தச்சேற்றில் குப்புறக் கிடக்கிறீர்கள்!
* படுக்கையறையில் பிரபலக் கவர்ச்சி நடிகையுடன் காதல் செய்கிறீர்கள்.
* தீபாவளிக்கு உங்கள் பிறந்த ஊருக்குப் போக பேருந்து, ரயில், டாக்ஸி கிடைக்கவில்லை. பறந்து பல நகரங்களைத் தாண்டிப் போகிறீர்கள். வழியில் பல பறவைகள் உங்களை மோதிச் செல்கின்றன.
* ஆதிவாசிகளின் பிடியில் சிக்கிக் கொதிக்கும் அண்டாவில் போடப்படுகிறீர்கள். அண்டாவை ஆட்டிக் கவிழ்த்து விட்டுத் தப்பி ஓடுகிறீர்கள். ஆதிவாசிகள் உங்களைத் துரத்தி வருகிறார்கள். அம்புகள் சீறிப் பாய்கின்றன.
* மிஸ் பல்லழகர் 2025 பட்டம் உங்களுக்கு தரப் போகிறார்கள். விழா தொகுப்பாளினி விளையாட்டாக உங்கள் பற்களைத் தொட ஒட்டு மொத்த 32 பற்களும் கொடகொடவென்று இரத்த நூலுடன் கொட்டுகின்றன.
- இவையெல்லாம் நிஜமல்ல கனவு கண்டிருக்கிறோம் என்பது தூக்கத்திலிருந்து விழித்ததும் உங்களுக்குத் தெரிகிறது.
சரி கனவு என்பது என்ன?
தூங்கும் போது ஒருவர் மனதில் அனிச்சையாக தோன்றும் நினைவுகளின், காட்சி பிம்பங்களின், உணர்வுகளின் தொடர் சங்கிலியே கனவாகும். கனவு என்பது சிக்கலான தோற்றப்பாடாகும். கனவு தகவல்களைச் செயல் ஆக்கம் செய்கிறது. கனவு நினைவுகளை ஒருங்கிணைக்கிறது. கனவு உணர்வுப் பூர்வமான அனுபவங்களை கதை வடிவமாக்குகிறது. சிக்மன்ட் ஃப்ராய்டு விருப்பங்களே கனவுகள் ஆகின்றன என்கிறார்.
|
விழுந்தவையெல்லாம்...!
“இதழ்கள் ஒரு திரை
அதன் கீழே ஒளிதுணை
பற்கள் சமூகத்தின்
மின் கல்லறைகள்
சிரிப்பு ஒரு வடிகட்டி
வைக்கப்பட்ட நம்பிக்கை
அந்த நொடியில் நீயா, அல்லது
உன் முகமூடா
ஒளி விழுந்ததும் உணர்ச்சி
உருகி மறையும்”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.
|
ஐந்து வகை தூக்கநிலைகள் உள்ளன.
1. முதல் படிநிலை - மொத்தத் தூக்கத்தில் ஐந்து சதவீதம்
2. இரண்டாம் படிநிலை - மூளையின் வேகமான அதிர்வெண் அலை வடிவங்கள் உருவாகின்றன.
3. மூன்றாம் நிலை - மூளை மின்னலைகளின் வேகம் குறைந்து டெல்டா அலைகள் தோன்றுகின்றன.
4. நான்காம் நிலை - ஆழ்ந்த தூக்கம்.
5. ஐந்தாம் நிலை - ரெம் (REM) எனப்படும் விரைவான கண்ணசைவு நடக்கின்றது.
கனவுகளுக்கு மனோதத்துவ ரீதியான காரணங்கள்
* உள்ளடக்கம் - நிஜ வாழ்க்கை நடப்புகளும் உணர்வு அறிவாற்றலும் உணர்வு ரீதியான அனுபவங்களும் இணைந்து விசித்திரமான லாஜிக் இல்லாத கனவுகளை உருவாக்குகின்றன.
* தூக்கத்தின் படித்தரங்கள் – ரெம் தூக்கம் (ராபிட் ஐ மூவ்மென்ட்) மூளையின் செயல்பாடும் அதிவேக கண்ணசைவும் ஏற்படும்.
* கனவுகள் நினைவுகளை ஒருங்கிணைக்கின்றன - மூளை மிகவும் அவசியமான நினைவுகளைச் சேமித்து தேவையற்றவறை புறம் தள்ளும்.
* உணர்வுகள் செயலாக்கம் – கனவு உணர்வு நிலைகளை ஒழுங்குபடுத்துகிறது. கனவு காண்பவன் எப்போதுமே பாதுகாப்பான அதே நேரம் ஒரு மெய்நிகர் சூழலில் அமர்ந்து கொண்டு தனது உணர்வுகளை அலசிப் பார்க்கிறான்.
* ஆசைகளை நிறைவேற்றல் - நிஜ வாழ்வில் நிறைவேறாத விஷயங்களைக் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறான் ஒருவன்.
* செயல்படுத்தும் தொகுப்புக் கோட்பாடு - அங்கொன்றும் இங்கொன்றான முறைமை சார்ந்த நரம்பியல் வலைப்பிணையம் வைத்து அதிவேகக் கண்ணசைவு தூக்கத்தில் மூளை சில சித்தரிப்புகளைக் கனவுகளாக முயற்சிக்கிறது.
* கனவுகளும் பிரக்ஞையும் - பல நேரங்களில் பிரக்ஞையுடன் கனவு காண்பது. கனவு காண்பவருக்கு, தான் கனவு காண்கிறோம் என்பது தெரியும். கனவை விரும்பி தொடர்ந்து அவன் காண்பான். இதனை லூசிட் டிரீமிங் (Lucid dreaming) என்பர்.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு நாளில் மூன்றிலிருந்து ஆறு கனவுகள் காண்கின்றனர். ஒரு கனவு ஐந்திலிருந்து 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாம் காணும் கனவுகள் 95 சதவீதம் கனவில் இருந்து எழுந்தவுடன் மறந்து போகும். கனவுகள் நீண்டநாள் நினைவுத்திறனை மேம்படுத்துகின்றன. கண்ணில்லாதவர்கள் கண்கள் உள்ளவர்களை விட அதிகம் கனவு காண்கிறார்கள்.
கனவுகளின் பொதுவான தலைப்புகள்
* உயரத்திலிருந்து விழுதல்.
* வகுப்பாசிரியர் மற்றும் அவரின் பாடம்.
* மிருகங்களால் மனிதர்களால் துரத்தப்படுதல்.
* விதவிதமான உணவுகளை ருசித்தல்.
* ஏதாவது ஒரு செயலை தொடர்ந்து செய்ய முயற்சித்தல்.
* காமம் சார்ந்த கனவுகள்.
சரி நண்பர்களே கனவுகளைப் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது கனவுகளுக்கும் பல் மருத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி கனவு காண்போம். இல்லையில்லை, உண்மையைத் தெரிந்து கொள்வோம்.
ஒரே ஒரு பல் விழுகிற மாதிரியோ, ஒட்டுமொத்தப் பற்களும் விழுகிற மாதிரியோ, யாராவது நாக்கைப் பிடுங்கி எறிவது மாதிரியோ கனவுகள் வரலாம். பல் தொடர்பான கனவுகளைக் காண்பவர்கள் தன்னைத்தானேத் தாழ்த்தி அபிப்ராயம் கொள்கின்றனர். அது தேவையற்றது.
பல் விழுவது போல கனவு காண்பது எல்லா சமுதாய மக்களுக்கும் நடப்பது தான் என்கிறார் லண்டனின் கனவு ஆராய்ச்சி மைய நிறுவனர் மெலின்டா பவல். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது பற்கள் விழுவது போல கனவு காண்கின்றனர் என்கிறார் மெலின்டா. பற்கள் விழுவது அல்லது கொட்டுவது போல ஏன் கனவு காண்கிறோம்? கனவுகள் காண்பது இன்னுமே விஞ்ஞானத்தில் ஒரு தீர்க்கப்படாத மர்மம்.
கனவுகள் தூக்கத்தில் அங்கொன்றுமான இங்கொன்றுமான ந்யூரான் கிளர்ச்சிகள் உருவாக்கும் முட்டாள்தனமான குப்பை என்கிறார் செல்டர்மேன். செல்டர்மேன் கனவுகளின் தொடர்ச்சிக் கோட்பாட்டை நம்புகிறார். கனவுகள் எதிர்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு வழிகாட்டியாகச் செயல்படுகிறது எனவும் யூகிக்கிறார்.
டாக்டர் கெல்லி பல்க்கேலே கனவு ஒரு கற்பனை விளையாட்டு என்கிறார். தூக்கத்தில் நாம் புற உலகிலிருந்து விடுதலை பெறுகிறோம். நமது மனமும் கற்பனையும் சுதந்திரமடைகின்றன. அன்றைய நடப்புகளைக் கடந்த கால நிகழ்வுகளுடன் பிசைந்து கனவுகளை பிரசவிக்கிறோம் என்கிறார்.
|
பல் கொட்டும் கனவுகள்
ஆர். பாத்திமா மேரி, கோயம்புத்தூர்
நான் 15 வயது மாணவி. கனவில் பல் துலக்குகிறேன். என் பற்கள் கொடகொடவென இரத்தத்துடன் கொட்டுகிறது. விழித்துப் பார்த்தால் பிரச்சனை ஒன்றும் இல்லை. எனக்கு அடிக்கடி இந்தக் கனவு வருகிறது என்ன செய்யலாம்?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
இது போன்ற கனவுகள், தங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம். இருப்பினும், இதனை ‘வரும் முன் காப்போம்’ என்கிற எச்சரிக்கையாகக் எடுத்துக் கொள்ளலாம். வெளியில் சைக்கிளில் போகும் போது சாலை விபத்துகள் ஏற்படாமல் கவனமாக இரு. கடினமான மூடிகளைக் கடித்துத் திறக்காதே. சக மாணவிகளுடன் சண்டை போடாதே. மாடிப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது கவனமாய் இரு. அப்படியே, ஒரு முறை எங்களது பல் மருத்துவமனைக்கு வந்து உன் பற்களை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ளவும். மல்யுத்த போட்டிகளை, ரக்பி ஆட்டங்களைப் பார்க்காதே. நல்லி எலும்புகளை ராஜ்கிரண் போல் கடித்துத் துப்ப முயற்சிக்காதே. இரத்தம் குடிக்கும் ட்ராகுலா படங்களை பார்க்காதே. பல் பராமரிப்பின் மீது தேவைக்கதிகமான கவனம் செலுத்தாதே. உடன் படிக்கும் மாணவிகளுடன் உன் பற்களை ஒப்பிடாதே. அவ்வளவுதான், உன் பற்கள் கனவுகளிலும் மின்னும்...!
|
கனவுகளில் பற்கள் விழுவது பற்றி சிலபல கணிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று;
‘பல் விழுவதாக கனவு காண்பவர் உண்மையில் தன்னை அவலட்சணமிக்கவராக கருதுகிறார்!’
இன்னொரு கருத்து:
‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் பற்கள் இருமுறை விழுகின்றன. ஒன்று பால்பற்கள் விழுவது. இன்னொன்று வயோதிகத்தில் விழுவது. அதனால் பற்கள் வயோதிகத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் ஒரு விஷயம் ஆகையால் பற்கள் விழுவது போல கனவு காண்பது வளர்ச்சி, சரிவு மற்றும் உணவு ஊட்டப் பற்றாக்குறை போன்றவற்றை சுட்டும் கருவி!”
செயல் மற்றும் உணர்ச்சியில் மூழ்கிப் போன முடங்கிப் போன மனிதர்கள் பற்கள் விழுவது போன்று கனவு காண்கிறார்கள். பல் விழுவது போல கனவு கண்டவருக்கு ஓய்வும், உணவு போஷாக்கும் தேவை.
ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது போலக் கனவு கண்டால் ஓய்வும், புதுப்பிப்பும் அவசியம். நண்பர்களே! பற்கள் விழுவது போலக் கனவு கண்டால் பீதி அடையாமல் கண்ணாடி முன் நின்று பற்களைச் சோதித்து ஆறுதல் அடையுங்கள்.