எந்தத் தொழில் செய்வோரும் தங்களைக் காலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்திக் கொண்டே, புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிநவீனத் தொழில்நுட்பங்களைச் சுவீகரிக்க வேண்டும். ஊமைத் தூக்கத்திற்கு ஓலை வாங்கும் வரை சார்ந்திருக்கும் துறையின் கல்வியை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டில் பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence –AI) தாக்கம் அதிகரித்துள்ளது. பல் மருத்துவம் மறுவடிவம் எடுத்துள்ளது. புதிய ஒழுங்குமுறை உருவாகி வருகிறது.
பல் மருத்துவ நோயாளிகள் அதிவிரைவான தனிப்பயனாக்கப்பட்ட பல் மருத்துவத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, பெரு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மகத்தான பல் மருத்துவனைகளைத் தொடங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிறிய அளவில் மருத்துவமனை (Clinic) நடத்திக் கொண்டிருக்கும் பல் மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளுக்குள்ளாகின்றனர்.
இன்றையக் காலத்தில், பல் மருத்துவச் சேவை சார்ந்த சவால்களை ஒவ்வொரு பல் மருத்துவரும் சந்திக்க வேண்டியிருக்கிறது. தெளிவான யுக்தியையும், தொடர் செயல்பாடுகளையும் கைக்கொண்டு பல் நோயாளிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயம் பல் மருத்துவர்களுக்கு இருக்கிறது. அத்துடன் பல் மருத்துவர்கள் கூடுதலாகச் சில பிரச்சனைகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக,
* கால மாற்றத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
* துணைப் பணியாளர்களின் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், சிறு மருத்துவமனைகளின் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது.
* பல் மருத்துவ நோயாளிகள், அதிக வசதிகளையும், தெளிவான தகவல் தொடர்பையும் எதிர்பார்க்கின்றனர்.
|
வெள்ளிக் குவியல்கள்
“சிரிப்பு ஒரு தற்காலிகச் சூரியன்
ஆனால் அதன் உள்ளே
ஒரு துளி இருள்
பற்கள் மினுமினுக்கும் போது
இருள் மறைந்து
மனதில் பூக்கும் ஒரு
நிலவின் சாயல் அது.”
- ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை
|
நவீனப் பல் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் மொத்தம் ஆறு இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு
செயற்கை நுண்ணறிவு நோய் பகுத்தாய்வு, சிகிச்சைத் திட்டம், சிகிச்சைச் செயல்முறைகளில் புதிய ஆதிக்கத்தை செலுத்துகிறது. பாரம்பரியத்திலிருந்து நவீனத்துக்கு உடனடித் தாவல் தேவையில்லை. இருப்பினும், காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவது அவசியம் என்பதால், அது குறித்த செலவு, பயிற்சி, பணிப்பாய்வு சரிசெய்தல் மாற்றத்தில் உள்ளடக்கம் தேவையாக இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட தேவைகள் முக்கியம்.
* மென்பொருள், வன்பொருள் மற்றும் பயிற்சி சார்ந்த தொடக்கச் செலவுகள்.
* துணைப் பணியாளர்களைப் புதிய தொழில்நுட்பத்திற்கு தகவமைப்பது.
* பல் மருத்துவ நோயாளிகளின் பார்வைகளையும் நம்பிக்கைகளையும் நிர்வகிப்பது.
* ஏற்புடையாக்கல், இணக்கம், ஒருங்கிணைப்பு வைத்து புழங்கும் கருவிகளை பழக்கப்படுத்துவது.
2. துணைப் பணியாளர்கள் நிர்வாகம்
பல் மருத்துவச் சேவையில் தகுதியான துணை ஊழியர் பற்றாக்குறை மிகப்பெரிய தடைக்கல். பல் நலக் காப்பாளர், உதவியாளர், வரவேற்பாளர், துணைப் பல் மருத்துவர் போன்ற பதவிகளுக்கு தகுதியான நபர்களை நியமிப்பது, மருத்துவமனையில் நிர்வாகச் செலவை அதிகரிக்கும். பல வேளைகளில் வரவுக்கு மேல் செலவு இருக்கும். உடனடி தேவைகளுக்கும் நீண்டக் காலக் கட்டமைப்புக்கும் இடையே ஒரு பல் மருத்துவர் தடுமாற்றம் கொள்ள நேரிடுகிறது.
* திறனுடைய துணைப் பணியாளர்களை அதிக சம்பளத்துக்குப் பணி அமர்த்துதல்.
* மூத்தப் பணியாளர்களின் கவனக் குறைவுகளால் உற்பத்தி திறன் குறைபாடு ஏற்படுதல்.
* பணிகள் தெளிவின்மை, குறைவான வளர்ச்சி சந்தர்ப்பங்கள் மற்றும் பின்னூட்டங்கள் நிர்வாகத்தைத் தேங்க வைக்கின்றன.
* மாறுபட்ட தலைமுறை எதிர்பார்ப்புகள் கலாசாரப் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.
3. நிர்வாகச் செலவைச் சிறப்பாகக் கையாளுதல்
தற்சமயம் ஒரு பல் மருத்துவமனையை நடத்தும் நிர்வாகச் செலவு மருத்துவமனை வருமானத்தை விட அதிகம். இந்தச் செலவுகளுக்கு பயந்து பல பல்மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தயங்குகின்றனர்.
* நோயாளிகளுக்கான கட்டணத்தைச் சிறிது அதிகப்படுத்தினாலும் நோயாளிகள் குறைந்த கட்டணம் வாங்கும் மருத்துவமனைக்குச் செல்லக்கூடும்.
* ஒவ்வொரு பல் மருத்துவரும், நிதிநிலைமையைச் சரி செய்து கொள்ளக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
* கருவி, வழங்குப் பொருட்கள், பயன்பாடுகள், பராமரிப்பு மற்றும் சம்பளம் சார்ந்த செலவீனங்கள்.
* காப்பீடு வழி கிடைக்கும் செலவு, ஈடு செய்யும் தொகை தருவதில் தேக்கம்.
* செலவீனங்களை கட்டுப்படுத்துவதால், சிகிச்சைத் தரமும் நோயாளியின் திருப்தியும் குறைதல்.
* நோயாளி வரத்து குறைவு, நோயாளியின் வருகை ரத்து, கையிருப்புப் பொருள் விரயம் போன்றவை மருத்துவமனையின் வருவாயைப் பெருமளவில் பாதிக்கிறது.
4. காப்பீடுகள் தொடர்பான மாற்றங்களை வழிநடத்தல்
காப்பீடுச் சிக்கல்கள் பல்மருத்துவத்திற்கு ஒரு மிகப்பெரிய சவால். அடிக்கடி காப்பீடு நிறுவனங்கள் தங்கள் விதிகளை மாற்றுதல், குறிப்பிட்ட சிகிச்சைக்கு மட்டும் செலவு ஈடுவசதி, செலவு ஈடை வழங்குவதில் கால தாமதம் போன்றவை பல் மருத்துவத்தில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றன. காப்பீடு நிறுவனங்களின் மறுதலிப்பு, மேல்முறையீடு, தாமதமான பணப்பட்டுவாடா உள்ளிட்ட சில செயல்பாடுகள் பல் மருத்துவத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
* தொடர்ச்சியான காப்பீட்டுக் கொள்கைகள் மாற்றம் சட்டப்பூர்வமான அதிகாரம் வழங்குவதில் தேவையற்ற கண்டிப்பு.
* குறியீட்டு முறை மற்றும் ஆவணமாக்கம் இடைவெளிகளைக் காரணம் காட்டி காப்பீடு நிறுவனங்கள் செலவு ஈடு தொகையை நிறுத்தி வைத்தல்.
* கூடுதல் நிர்வாகப் பணிச்சுமை.
* கையில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பணத்துக்கும் காப்பீடு மூலம் செலவு ஈடு பெறும் தொகைக்கும் இடையே வரும் நோயாளியின் மனக்குழப்பம்.
|
பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு
ஆர். முனீஸ்வரன், சிவகங்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல் மருத்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும், அதன் மூலம் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். இருப்பினும், அத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கு மனிதர்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பத்திற்கேற்பப் புதிய வேலைவாய்ப்புகள் நிறைய உருவாகும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கேற்ப, பல் மருத்துவர்களும் தங்களை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
|
5. மின்மயமான பாதுகாப்பை நிலையாக்குதல்
* மின்னாளுமை அபாயம் இல்லாத துறைகளே தற்சமயம் ஏதும் இல்லை.
* நோயாளிகளின் தரவுகள் திருடப்படுகின்றன.
* சிறிய அளவில் மருத்துவமனை நடத்தும் பல் மருத்துவர்கள் கூட, மிரட்டி பணம் பறிக்கும் தீம்பொருள், மின்தூண்டியிடல் போன்றவைகளால்பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிறுமீறல் பொருளாதாரச் சேதம், நிறுவனத்தின் மாண்பு மற்றும் நோயாளிகளின் நம்பிக்கைகளைச் சீர்குலைத்து விடுகிறது.
* சிறு பல் மருத்துவமனைகளின் மீது மின்வெளித் தாக்குதல்.
* காலாவதியான மென்பொருள், பலவீனமான கடவுச்சொற்கள், சரிவர பராமரிக்கப்படாத மருத்துவமனைக் கருவிகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கரும்புள்ளிகள்.
* மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களின் அலட்சியம் குறுநிறுவனத்திற்கு ஆபத்து.
* மீறலைத் தொடர்ந்து வழக்கு, அபராதம், நிறுவன மாண்புச் சீர்குலைவு அணி வகுக்கும்.
6. தனிப் பயனாக்கப்பட்ட நோயாளிப் பராமரிப்பு
வசதிகள், மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, மருத்துவர்- நோயாளிக்கிடையிலான புரிதலை பல் நோயாளிகள் விரும்புகிறார்கள்.
* இணைய வழியிலான பதிவு வசதி மற்றும் உடனடித் தகவல் தொடர்பு.
* நீண்ட காத்திருப்பு, அட்டவணைச் சீர்குலைவு, கட்டணக் குழப்பம் தவிர்த்தல்.
* சிகிச்சை தொடர்பான தெளிவான விளக்கங்கள்.
* நம்பிக்கையூட்டும் விதமாக, மருத்துவமனைப் பணியாளர்கள் கணினி அறிவு பெற்றிருத்தல்.
என்று காலத்திற்கேற்றபடி பல் மருத்துவர்கள் நவீனமயமாக்கலுடன், அதற்காக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இன்னும் பல இருக்கின்றன.