கழுத்து எலும்புத் தேய்வு
டாக்டர் க. கார்த்திகேயன்
எண் சான் உடம்பிற்குத் தலையே பிரதானம் என்பர். அத்தகைய தலையை உடலுடன் இனைத்துத் தாங்குவது தண்டுவடக் கழுத்து எலும்புகளே... தண்டுவட எலும்புகள் மொத்தம் 33 ஆகும். இதில் கழுத்து எலும்புகள் 7, இதனையே நாம் ஆங்கிலத்தில் Cervical Bones என்று அழைக்கிறோம். இந்தத் தண்டுவட எலும்புகளினூடாகவே மூளையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகள், இரத்தக் குழாய்கள் செல்கின்றது.
இத்தகைய கழுத்து எலும்புகளில் உராய்வினால் ஏற்படும் அழற்சியே கழுத்து எலும்புத்தேய்வு (Cervical Spondylosis) என குறிப்பிடப்படுகிறது. 40 வயதிற்குமேல் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு இப்பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வுகளின் மூலம் அறியமுடிகிறது. கழுத்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து எலும்புகளுக்கிடையேயான சவ்வானது நைந்தோ அல்லது கிழிந்தோ போவது, தேய்வினால் கழுத்து எலும்புகளில் வட்டுக்கள் (Discs) அழுந்துவது, எலும்பு தனது நிலையிலிருந்து நகரும் (Prolapse) நிலைக்குட்படுவது போன்றவை கழுத்து எலும்புத் தேய்வினால் ஏற்படும் கூடுதல் பாதிப்புகளாகும். சிலருக்குக் கழுத்தெலும்பின் அதீத வளர்ச்சியினால் துருத்திக் கொண்டிருக்கும் எலும்பானது தண்டுவடத்திற்குள் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியானது உண்டாகும். இந்த வலியானது கழுத்திலிருந்து கைவரை பரவும்.
யாருக்கெல்லாம் கழுத்தெலும்புத் தேய்வு உண்டாகும்?
கழுத்துப்பகுதியை அதிக அசைவுக்குண்டான பணி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், சுமை தூக்குபவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், விபத்தினால் கழுத்துப்பகுதியில் பாதிப்படைந்தவர்கள், கழுத்தில் வாதநீர் தேக்கத்திற்குள்ளானவர்கள், அதீத உயரமாகத் தலையணை வைத்து உறங்குபவர்கள் ஆகியோருக்குக் கழுத்தெலும்புத் தேய்வானது ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
கழுத்தெலும்புத்தேய்வினால் ஏற்படும் பாதிப்புகள்
* கழுத்துப்பகுதியில் கடுமையான வலி
* கழுத்தை அசைப்பதில் சிரமம்
* தும்மினாலோ அல்லது இருமினால் கூட கடுமையான வலி
* கைத்தூக்குவதில் சிரமம்
* கைத்தசைகளில் இறுக்கம்
* கண்களில் கூச்சம்
* கடுமையான தலைவலி
* கழுத்திலிருந்து வலியானது கைவரை பரவுதல் ,சிலநேரங்களில் விரல்கள் மருத்துப்போதல்
* அன்றாட இயல்பான வேலைகள் செய்வதில் சிரமம்
நோய்க்குண்டான பரிசோதனைகள்
கழுத்தெலும்புத் தேய்விற்கான முழுமையான பரிசோதனைகளாக எக்ஸ்ரே, C .T ஸ்கேன், MRI ஸ்கேன் ஆகியவையும் கழுத்துத்தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய EMG (Electro Myo Gram) எனும் சோதனையானது செய்யப்படுகின்றது.
சிகிச்சைகள்
எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளின் பேரில் வலியைக் குறைப்பதற்கான வலி நிவாரண மருந்துகள், மாத்திரைகள் ஆரம்பநிலை பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதிகப்படியான பாதிப்பிற்குள்ளானவர்களுக்குச் சில நேரங்களில் அறுவைச்சிகிச்சையும் தேவைப்படலாம்.
இயன்முறை சிகிச்சைகள்
இயன்முறை சிகிச்சையில் வலியைக் குறைப்பதற்கு மின் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றது. உதாரணமாக, கழுத்து தசை வலிகளைக் குறைப்பதற்கு வெப்பச்சிகிச்சை (Heat Therapy), மெழுகு ஒத்தடம் மற்றும் பனிக்கட்டி ஒத்தடம் ஆகியவையும் நரம்பு மற்றும் உள்ளார்ந்த தசைகளில் ஏற்படும் வலிகுறைப்பிற்கு மின் சிகிச்சை உபகரணங்களைக் கொண்டு (IFT,TENS) மற்றும் தசை இருக்கத்தைத் தவிர்க்கவும், கழுத்து தசைகளை வலுவாக்கவும் தசைப்பயிற்சிகள், மசாஜ் போன்ற பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
முக்கியமாகத் தேய்வினால் ஏற்படும் எலும்பின் இடைவெளியைக் குறைத்து சரியான நிலையில் சீர்படுத்த Cervical Traction எனப்படும் எலும்பு இழுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நரம்புகளில் ஏற்படும் எலும்பின் அழுத்தம் குறைவதுடன் வலியும் குறைகிறது.
மருத்துவ, இயன்முறை மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டாலும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே சில முன்னெச்சரிக்கைகளை வலியைக் குறைப்பதற்கும், தேய்வு மேலும் உண்டாகாமல் தடுப்பதற்கும் மேற்கொள்ளவேண்டும். அவை, ஒத்தடங்கள் கொடுப்பது நல்ல பலனைத் தரும். அதிக உயரமான தலையணையை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். கூடியவரையில் தலையணையை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அப்படி உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கழுத்து வலிக்கான தலையணையை (Cervical Pillow ) மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம். தேவையில்லாத அசைவினைத் தடுக்கவும், வலியைக் குறைக்கவும் கழுத்துப்பட்டையை (Cervical Coller ) மருத்துவரின் ஆலோசனைப்படி அணியலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.