பண்டையக்காலம் தொட்டே வலியைக் குறைப்பதற்கு உள்மருந்துகளைத் தவிர வெளிப்புற சிகிச்சைகளை மக்கள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் பழங்கால ஒத்தட முறைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதன் பரிணாம வளர்ச்சியாக மருந்தில்லா மருத்துவமான இயன்முறை மருத்துவத்தில் (பிசியோதெரபி ) வலியைக் குறைக்கும் சிகிச்சைகளில் ஒன்றாக மெழுகு சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகிறது.
மெழுகு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மெழுகுடன் திரவ பாரபின் மெழுகு, மினரல் ஆயில், பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவைகளை உள்ளடக்கிகிய ஒரு கூட்டுப்பொருளாகும். மற்ற ஒத்தடம் கொடுக்கும் பொருட்களை விட மெழுகானது வெப்பத்தை உள்ளிழுத்து அதே அளவிற்கு வெளியிடும் தன்மை கொண்டதாக இருப்பதால் வலி குறைப்பதற்கு ஏதுவாகச் சிகிச்சைக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மெழுகு சிகிச்சை அல்லது மெழுகு ஒத்தடம் அளிப்பதற்கு மெழுகானது அதற்குண்டான சூடேற்றும் தொட்டியில் 46 முதல் 68 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 115 முதல் 154 டிகிரி பாரன்ஹீட் வரை சூடேற்ற வேண்டும். இந்த வெப்ப அளவே சிகிச்சைக்கு ஏற்ற அளவாகும்.
மெழுகு சிகிச்சையானது நான்கு முறைகளில் அளிக்கப்படுகிறது அவை ;
1. நனைக்கும்அல்லது மூழ்கும்முறை (Dipping Method)
இந்தமுறையில் பாதிப்பின் பகுதியானது மெழுகுத் தொட்டியில் மூழ்கும் வரை அமிழ்த்தி எடுக்கப்படுகிறது (உதாரணமாக கைகளில் மணிக்கட்டு வரையிலான பகுதி, கால்களில் கணுக்கால் வரையிலான பகுதிகள் ) சிகிச்சைக்கான கால அளவு பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கு சுமார் ஆறிலிருந்து எட்டு முறை வரை அளிக்கப்படுகிறது. (ஒரு முறை என்பது 2 முதல் 3 வினாடிகளாக வரையறுக்கப்படுகிறது)
2. சுற்றுதல் அல்லது போர்த்துதல் முறை (Wrapping Method)
சூடாக்கப்பட்ட மெழுகில் துணியைத் தோய்த்துத்தெடுத்து பாதிக்கப்பட்ட வலியுள்ள பகுதிகளில் சுற்றி எடுத்தல் அல்லது ஒற்றி எடுத்தல்.
3. பூசுதல் முறை (Brushing Method)
தூரிகையினால் (Brush )மெழுகை நனைத்து வலியுள்ள இடங்களில் பூசுதல்.
4. ஊற்றுதல் முறை (Pouring Method)
முதுகுப்பகுதி, இடுப்புப்பகுதி, தொடை போன்ற பெரிய பகுதிகளில் தாங்கக்கூடிய வெப்ப அளவில் நேரடியாக வலியுள்ள பகுதியில் ஊற்றுதல்.
மெழுகு சிகிச்சையினால் ஏற்படும் பயன்கள்
மூட்டுகளில் தேய்வினால் ஏற்படும் வலிகள்(Joint Pain ), முடக்குவாதம், மூட்டுகளில் ஏற்படும் நீர்க்கோர்வை, கீல்வாதம், சிறு மற்றும் பெரு மூட்டுகளில் அழற்சியினால் ஏற்படும் வலிகள், எலும்பு முறிவுக்கு பின்னர் ஏற்படும் வலிகள் ஆகியவற்றைக் குறைக்கவும், மூட்டு இயக்கச் சிகிச்சைப் பயிற்சிகளின் போது மூட்டுகளை இலகுவாக்கவும் மெழுகு சிகிச்சையானது பயன்படுகிறது. நோய் மற்றும் விபத்தினால் ஏற்படும் வலிகள், சுளுக்கு (Sprain) மற்றும் தசைத்திரிபுவினால் (Strain) ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது. வீக்கம், மூட்டுகள், தசைகளில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கவும், மூட்டின் இயக்கங்களை இலகுவாக்குவதிலும் மெழுகு சிகிச்சையானது மிக்க பலனளிக்கிறது.
மெழுகு சிகிச்சையானது உள்ளார்ந்த வெப்பச்சிகிச்சை முறை (Deep Heat Therapy) என்பதால் சிகிச்சை அளிக்கும் போது சில காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். திறந்த நிலையில் காயங்கள், தோல் நோய்கள், மெல்லிய தோல் உணர்ச்சி கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வெப்பச்சிகிச்சையான மெழுகு சிகிச்சையை தவிர்ப்பது நலம்.
எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத, மெழுகுச்சிகிச்சை வலியைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதே உண்மை.