பூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கும் இந்தச் செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
இன்றைக்கு ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி. குறைந்தபட்சம் நூற்றுக்கு இருபது பேராவது இதனால் அவதியுற்று இயல்பான வேலைகளைச் செய்யமுடியாமல் வலியின் வேதனையால் துன்பப்படுகின்றனர். உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆண்களை விடப் பெண்களே குதிகால் வலியால் அதிகமாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன .
மனித உடலில் பாதத்தில் 26 எலும்புகள் உள்ளன. நடக்கும்போது அல்லது ஓடும் போது மனித உடலின் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு ஏற்றவகையில் பாத எலும்புகள் வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இப்பாத எலும்புகளில் குதிகால் எலும்பானது மற்ற எலும்புகளை விடப் பெரியதாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளது. குதிகால் எலும்புடன் சேரும் பாதத்தில் உள்ள தசை நார்கள் அழற்சியடைவதால் பொதுவாகக் குதிகால் வலி உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல் வேறு சில காரணங்களும் குதிகால் வலிக்குக் காரணிகளாக அமைகின்றன.
அவை;
1. பாத எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள்
2. நோய்த் தொற்றுக்கள்
3. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
4. விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
5. அதிக உடல் எடை
6. பாதங்களில் உள்ள நரம்புகளில் பாதிப்பு
7. நோய்த்தொற்றின் காரணமாக பாதத்தில் உள்ள தசை நான்களில் வீக்கம் மற்றும் அழற்சி
8. கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுவது
9. பாத எலும்புகளில் ஏற்படும் சிறு எலும்பு முறிவுகள்
10. எலும்புச்சிதைவு நோய்
11. குதிகால் மற்றும் பாதங்களில் ஏற்படும் கட்டிகள்
12. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிப் படிமங்களாக பாத எலும்புகளில் படிவது
13. சர்க்கரை நோயினால் ஏற்படும் எலும்பு, நரம்பு பாதிப்புகள்
14. கீல்வாதம்
இதைத்தவிர மிக முக்கியமான இன்னொரு காரணம் உண்டு. அது நாகரிகம் எனும் பெயரில் அதீத உயரத்திற்குக் குதிகாலை உயர்த்தும் அளவிலான காலணிகளை அணிவது.
அறிகுறிகள்
1. குதிகால் வலி
2. பாத எலும்புகளிடையே வீக்கம்
3. தூங்கும் போதோ அல்லது ஓய்வு நிலையிலேயோ தாங்கமுடியாத வலி
4. சில நேரங்களில் காய்ச்சல்
5. நடப்பதில் சிரமம்
6. பாதங்களை கீழ்நோக்கி அசைப்பதில் சிரமம்
பரிசோதனைகள்
1. எக்ஸ் -ரே
2. ரத்தப்பரிசோதனைகள்
3. MRI, CT ஸ்கேன்
இயன்முறை சிகிச்சையின் அவசியம்
பொது மருத்துவ சிகிச்சையில் வலிகுறைப்பிற்கான மருந்துகள் மற்றும் Cartigo Steroid பயன்படுத்தப்படுகிறது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சையும் சிலநேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது .ஆனால் இயன்முறை சிகிச்சையின் வழியாக,
1. பாத எலும்புகளில் வலியைக் குறைக்க, வலு குறைந்துள்ள கணுக்கால், பாத தசைகளை வலுப்படுத்துவது
2. நரம்பு பாதிப்பினைச் சரி செய்வது
3. நரம்பில் ஏற்படும் வலியினைக் குறைப்பது
4. நடைத்தோரணையைச் சரிசெய்வது
5. நோயாளியின் அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவது
இயன்முறை சிகிச்சை
1. குதிகால் எலும்பில் ஏற்படும் வலியினைக்குறைக்க Ultra sound therapy மற்றும் ஐஸ் தெரபி முறைகள் ஆரம்ப நிலையில் உள்ள பாதிப்பிற்கு அளிக்கப்படுகிறது
2. நாட்பட்ட வலியினைக் கொண்ட நோயாளிகளுக்கு Short wave diathermy மற்றும் பாத வலியினைக் குறைக்க மின் தூண்டுதல் சிகிச்சையான TENS சிகிச்சை அளிக்கப்படுகிறது
3. தசைகளை வலுப்படுத்த, கணுக்கால் மற்றும் பாதத் தசைகளுக்கு உடலியக்கப் பயிற்சிகள் இயன்முறை மருத்துவரால் அளிக்கப்படுகின்றது
4. குதிகால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு ஒய்வு எடுக்க வேண்டும். ஓடுவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கடினமான தரைப்பகுதியில் காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற பாதத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்
5. வலிகுறைய மிருதுவான காலணிகளை (MCR ,MCP வகை காலணிகள்) அணியவேண்டும்
6. பெண்கள் குதிகால் உயர்த்திய நிலையில் உள்ள காலணிகளைத் தவிர்க்க வேண்டும்
7. பாத எலும்புகள் அழுத்தமில்லாமல் இருப்பதற்கும், வலியைக் குறைக்கவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பாதப்பட்டை (HeelPad) அணிவது நல்ல பலனைத் தரும்
ஒழுக்கமான நடத்தை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நடையில் ஒழுங்கும் முக்கியம். அதற்குக் குதிகால் வலி வராமல் தவிர்ப்பதும், வலி வந்துவிட்டால் உரிய இயன்முறை சிகிச்சைகளைச் செய்து கொள்வதும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்தால் குதிகால் வலியின்றி குதித்தோடி மகிழலாம்.