உடலையும் ,மனதையும் இலகுவாக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுவது உடற்பயிற்சிகளாகும். அதிலும் குறிப்பாக, இலகுவாக செய்யக்கூடிய பயிற்சிகள் ஏரோபிக் பயிற்சிகள். அத்தகைய ஏரோபிக் பயிற்சி வகைகளில் மிகவும் முக்கியமானது நீச்சல் பயிற்சியாகும். நீச்சல் என்பது ஒரு தற்காப்புக்கலைப் பயிற்சி என்றாலும் கூட, உடலின் அனைத்துப் பகுதிகளும் இயங்கி உடல் நலத்தைக் காக்கும் ஒரு உடலியக்கப் பயிற்சி என்றால் மிகையாகாது. மற்ற உடலியக்கப் பயிற்சிகளிலிருந்து நீச்சல் பயிற்சி என்பது எவ்வாறு வேறுபடுகிறதென்றால் ஏனைய உடலியக்கப்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது உடலின் குறிப்பிட்ட உறுப்புகள் அல்லது பகுதிகள் மட்டுமே பலமடையும்.அனால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனடைவது நீச்சல் பயிற்சியினால் மட்டுமே. ஐந்து வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
பொதுவாகவேக் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு நீச்சல் பழகியிருப்பார்கள். ஆனால், நகர்ப்புறங்களில் வேலைப்பளு, பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலையில் சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை நீச்சல் மட்டுமல்ல உடற்பயிற்சியும் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. அப்படி எந்தவிதமான உடற்பயிற்சிகளும் செய்ய முடியாத நகர வாழ் மக்கள் வாரம் இருமுறையேனும் குறைந்தது நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது நீச்சல் பயிற்சியினை மேற்கொள்வது நல்லது.
சிறுவர்களை நீச்சல் பயிற்சிக்கு ஈடுபடுத்துவதற்கு முன் தற்காப்பு முறைகளையும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். பயிற்சியாளரின் ஆலோசனையைத் தவறாது கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும்.
நீச்சலின் வகைகள் (Types of Swimming )
மார்பு நீச்சல் (Breast Stroke )
இந்த வகை நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளவதன் மூலம் தோள்பட்டை, கழுத்து மற்றும் கால்பகுதிகளில் உள்ள தசைகள், எலும்புகள், நரம்புகள் வலுப்பெறுகின்றன.சுவாசம் எளிதாகின்றது.
பின் நீச்சல் (Back Stroke )
கெண்டைக்கால் தசைகள் மற்றும் இடுப்புப்பகுதி தசைகள் வலுப்பெறும்.
பக்கவாட்டு நீச்சல் (Side Stroke )
மார்புப்பகுதி, நுரையீரல் மற்றும் சுவாசத்தசைகள் வலுப்பெறுவதுடன் சுவாசப் பிரச்சினைகள் நீங்கும்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல் (Butterfly Stroke )
வயிற்றுத்தசைகள், இடுப்பு, முதுகுத்தசைகள், காலில் தொடைப்பகுதித் தசைகள் வலுப்பெறும். பொதுவாகவே, நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளும் போது உடலிலுள்ள தசைகளுக்கு மிதமான எதிர் வினை (Gentle Resistance ) உண்டாவதால் தசைகள் நன்கு வலுப்பெறுகிறது.
சாதாரண நீச்சல் (Free Stroke )
சாதாரண வகை நீச்சலில் உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றது. சுவாசம் எளிதாகிறது.
நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் பொதுவான பயன்கள்
* உடல் எடை குறைகிறது.
* தொப்பை மற்றும் உடலில் உள்ள தேவையற்ற ஊளைத் தசைகளைக் குறைக்கிறது.
* மன அழுத்தம் குறைகிறது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
* முதுகெலும்பு உறுதியாகிறது.
* இரத்த ஓட்டம் சீராவதுடன் இரத்த அழுத்தம் சீர்படுத்தப்படுகிறது.
* மூட்டுகளில் ஏற்படும் வலிகள் மற்றும் உடல் வலிகளைப் போக்குகிறது.
* நன்கு பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
* தூக்கமின்மையைப் போக்குகிறது.
* நீச்சல் பயிற்சியின் போது, நுரையீரல் நன்கு விரிவடைவதால் பலம் பெறுவதுடன் நெஞ்சக நோய்கள் வராமல் தடுக்கிறது.
* தினமும் 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுபவர்களுக்கு சுமார் 200 -லிருந்து 300 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் கட்டுறுதி பெற உதவுகிறது.
* உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் குறைவதன் மூலம் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.
* இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது.
* பெண்கள் நீச்சல் பயிற்சியினை மேற்கொள்ளும்போது வயிறு, இடுப்பு வலிகள் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகள் குறைகிறது.
* இயல்பாகவே மூட்டுவலி, உடல்வலி கொண்டவர்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு கை மற்றும் கால்களுக்குப் பயிற்சி தருவது தரையில் செய்யும் பயிற்சிகளை விடக் கூடுதல் பலன் தரும்.
குறிப்பு
* நீச்சல் பயிற்சியின் பொது அதீத இதய நோய் பதித்தவர்கள்,மனநோயாளிகள் ,வலிப்புநோய் உள்ளவர்கள், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நீச்சல் பயிற்சியினைத் தவிர்ப்பது நல்லது.
* தோல் நோய் உள்ளவர்கள் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் கலந்திருப்பதால் நீச்சல் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.