உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டும் என்று உங்கள் மனத்திற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டாம். இந்தக் காட்சியைப் படித்துப் பாருங்கள்.
எட்டாம் வகுப்பில் படிக்கின்ற விமலா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெறுகிறாள். தன் வெற்றியை பகிர்ந்து கொள்ளவும், பாராட்டுக்களை கேட்கவும் அவரசமாக வீட்டிற்கு ஓடி வருகிறாள்.
வீட்டில் விமலாவின் பெற்றோர் இருக்கின்றனர். அம்மா, சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் போது விமலா உள்ளே நுழைகிறாள்.
அம்மா அம்மா இதோ பாருங்க, எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு என்று கத்திக் கொண்டே வந்து அம்மாவை கட்டிக் கொள்கிறாள்.
என்ன பரிசு ? என்கிறார் அப்பா, ஷேவ் செய்து கொண்டே.
இதோ இந்த பிளாஸ்டிக் டப்பா என்று பெருமை பொங்க தன் கையில் இருக்கும் டப்பாவைக் காட்டுகிறாள் விமலா.
போயும் போயும் இந்த பிளாஸ்டிக் டப்பாவுக்கா நீ இத்தனை நாள் கஷ்டப்பட்டு உழைச்சே, வெட்டி வேலை என்கிறார் அப்பா, கிண்டலான சிரிப்போடு.
இதனோட விலை பத்து ரூபா இருக்குமா? இது மாதிரி எங்கிட்ட பத்து டப்பா இருக்கு, இதுவா முதல் பரிசுக்கு கொடுப்பாங்க என்கிறாள் அம்மா.
விமலாவின் திறமை, உழைப்பு, ஆர்வம், விடாமுயற்சி, போட்டியில் பெற்ற வெற்றி ஆகிய எதுவுமே பெற்றோர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் முதல் பரிசுக்காக கொடுக்கப்பட்ட பொருளின் விலை மட்டுமே. பாசத்தையும், பாராட்டையும் எதிர்பார்த்த விமலாவின் பிஞ்சு நெஞ்சம் நொறுங்கும்; சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா?
விமலாவின் பெற்றோரைப் போல நடந்து கொள்வது மிகவும் தவறு. நமது குழந்தை பெற்ற வெற்றிதான் முக்கியமே தவிர, பரிசுப் பொருளின் விலை முக்கியம் அல்ல. அது போல பல பிளாஸ்டிக் டப்பாக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும். ஆனால் அவை காசு கொடுத்து வாங்கியவையே தவிர, வெற்றி பெற்று ஈட்டியவை அல்ல. பலமுனைப் போட்டியை சமாளித்து பரிசு வாங்கி வரும் குழந்தையைக் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும், பலரிடமும் சொல்லி பெருமைப்பட வேண்டும். இதையே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும் பெற்றோரையே குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றனர்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் இப்படி நடந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று வரும் குழந்தையை பாராட்டுங்கள். சற்று அளவிற்கு அதிகமாகவே இருந்தாலும் கவலையில்லை. அது உங்கள் குழந்தைதானே.
இது என்ன பெரிய வெற்றி? உனக்கு நான் எழுதிக் கொடுத்தேன். அப்பா பக்கத்திலே இருந்து பலமுறை படிக்க வைத்தார். அப்படியும் ஜெயிக்கலைன்னா நீ தண்டம், மகா மக்கு என்ற ரீதியில் குழந்தைகளிடம் பேசாதீர்கள். நீங்கள் எழுதிக் கொடுத்தது சரிதான், உங்கள் குழந்தைக்கு நீங்களே முயற்சி எடுக்காத போது, வேறு யார் முன் வந்து உதவி செய்வார்கள். ஆகவே அதை சொல்லிக் காட்டுவது சரியல்ல. இவ்வாறு நீங்கள் உடன் இருந்து உழைத்தும் உங்கள் குழந்தைக்கு வெற்றி கிடைக்காவிட்டால்? என்ன ஆகியிருக்கும்.
என் உழைப்பை எல்லாம் வீணாக்கி விட்டாய், எனது பொன்னான நேரத்தின் அருமை தெரியாதவள் நீ. நான் மட்டும் நீ எக்கேடு கெட்டுப்போ என்று நினைத்து என் வேலையைப் பார்த்திருந்தால் இந்த நேரத்தில் இரண்டு ஜாக்கெட் தைத்திருப்பேன் என்று புலம்பி இருப்பீர்கள் அல்லவா?
ஆகவே குழந்தையின் வெற்றியில் உங்களுக்குப் பங்கு இருப்பதை சுட்டிக் காட்டாதீர்கள். அதற்காக பழி தீர்த்துக் கொள்ளுவதைப் போல அந்த வெற்றியை குறைத்து மதிப்பிடாதீர்கள். வெற்றியின் விலையை பரிசுப் பொருளின் விலையை வைத்து எடை போடாதீர்கள். குழந்தைகளின் சந்தோஷத்தை, திறமையைப் பணத்தை அளவு கோலாகக் கொண்டு கணிப்பது மிகவும் தவறான செயல். எனவே அந்த வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை உங்களை மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால் நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதுவே திரும்பவும் கிடைக்கும் என்பதே இயற்கை விதி. இதனை மதித்து நடக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடையே அன்பும், பாசமும் பெருகுவது நிச்சயம்.
குழந்தைகளின் செயல்முறை அட்டவணை தயாரித்துக் கொள்ளுங்கள்.
குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமைவது அதன் நடவடிக்கைகள் தான். சின்னச் சின்னச் செங்கல்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரம்மாண்டமான கட்டிடத்தை எழுப்புகிறது. அதைப் போலவே குழந்தையின் சின்னச் சின்னச் செயல்கள் தான் எதிர்காலத்தை எழுப்பும் அஸ்திவாரமாக அமைகின்றன. இதை மனதில் கொண்டு ஒரு வார காலத்திற்கு உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கி குறிப்பேட்டில் குறித்து வாருங்கள். அந்த குறிப்பில் நீங்கள் அவர்களிடம் கண்ட நல்ல நடத்தைகள், அவர்களின் செயல்திறன், எந்த வேலையில் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள், எந்த வேலையைச் செய்ய முகம் சுளிக்கிறார்கள், என்பதை எல்லாம் ஒன்று விடாமல் குறிக்க வேண்டும். நீங்கள் நல்ல நடத்தை என்று எண்ணுவதையும், கெட்ட நடத்தை என்று எண்ணுவதையும் இரண்டு பகுதிகளாக பிரித்து அதன் கீழ் குறித்து வரவேண்டும்.
இந்த அட்டவணையில் உங்கள் குழந்தையின் மனவெழுச்சி, உற்சாகம், பயம், உடல் நலம், சேவை மனப்பான்மை, அறிவுத்திறன், சமூக அக்கறை , உடல்வலு போன்ற பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்கள் செயல்கள் அமைந்திருப்பது ஒருவார காலத்திற்குப் பிறகு தெரிய வரும். உங்கள் செல்லப்பெண் எதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்? உங்கள் மகனின் நடத்தையில் ஆசிரியரை எரிச்சல் ஊட்டிய செயல் எது? வீட்டில் இருப்பவர்களிடம் அவன் பாசமாக இருப்பதை காட்டும் நிகழ்ச்சி எது? உங்கள் குட்டிப்பெண் செய்த எந்த செயல் சரியானது? அல்லது மாற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்ற செயல் எது? குழந்தைகள் மிகவும் விரும்பியது எது? மிகவும் வெறுத்தது எது? போன்ற பல செயல்களை அந்த அட்டவணை காட்டும்.
இந்த அட்டவணையைக் காய்தல் உவத்தல் அதாவது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு தயார் செய்ய வேண்டும். ஏன் என்றால் நமது குழந்தை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு அவர்களை வடிவாக்கம் செய்ய இந்த அட்டவணைதான் அஸ்திவாரமாக அமைகிறது. எனவே மிக முன்ஜாக்கிரதையுடன் இந்த அட்டவணையைத் தயாரித்தால், ஒரு புறம் அவர்களது நல்ல குணங்களும், மறுபுறம் மாற்றம் காணவேண்டிய குணங்களும் இருப்பதை அறியமுடியும்.