51. பாக்ருத்விதியை
இதுவும் கார்த்திகை சுக்லபட்ச த்விதியையில் அனுஷ்டிப்பதே. இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்து வந்து விருந்திட்ட நன்னாள். இதில் உடன் பிறந்தாள் தன் அண்ணனை அவன் மனைவியுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமதூதர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும். அவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெறுவர்.
52. த்ருதியை - அட்சய திருதியை விரதம்
இது, வைகாசி மாதம் சுக்ல பட்ச திருதியையில் அனுஷ்டிப்பது. இந்நாளில் எண்ணெயிட்டுக் கொண்டு ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் முடித்து, விஷ்ணுவை எண்ணிப் பூசிக்க வேண்டும்.
53. பரசுராம ஜயந்தி
இதுவும் வைகாசி மாதம் சுக்கில பட்சம் திருதியையில் ரேணுகாதேவியிடம் பரசுராமர் பிறந்த இதில் விரதம் இருப்பின் நலமுண்டாம்.
54. அட்சயதிருதியை
வைகாசி மாத சுக்ல பட்சத்தில் அநுஷ்டிக்கும் விரதம். இந்நாளில் பிதுர் தர்ப்பணாதிகள் முதலியன செய்து விரதம் இருத்தல் வேண்டும். இது கிருதயுகாதி, சிவ விஷ்ணு பூசை செய்தல் வேண்டும்.
55. ரம்பா விரதம்
இது ஆனி மாதம் சுக்கில திருதியையில் அனுஷ்டிப்பது.
56. சுவர்ண கௌரி ஷோடச கௌரி விரதம்
இது ஆவணி மாதம் சுக்கில திருதிகையில் அனுஷ்டிப்பது. இது தேவியைச் சோடச உபசாரத்துடன் கலசத்தில் ஆவாகித்துப் பூசிப்பது. இது தேவ கன்னியர் அநுஷ்டிக்கக் கண்ட சந்திர பிரபனால் அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீஸ்கந்தபுரணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
57. சதுர்த்தி - சங்கடஹர சதுர்த்தி விரதம்
இஃது ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் அனுஷ்டிப்பது. பொன் முதலியவற்றால் கணேசத் திருவுருச் செய்து, கலசந் தாபித்து ஆவாஹித்துச் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பூசித்துக் கணேசரை நோக்கித் தமது சங்கடம் நீக்க வேண்டிப் பலகாராதிகளும் மற்றும் வைத்துப் பூசிப்பது. இவ்விரதம் கந்தமூர்த்தியால் ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின் கிருஷ்ணமூர்த்தியால் பாண்டவர்க்கும் கூறப்பட்டது.
58. தூர்வாகணபதி விரதம்
இது கார்த்திகை மாதத்துச் சுக்கில சதுர்த்தியில் விநாயகத் திருவுருவை அறுகின் மீது எழுந்தருளுவித்துப் பூசிப்பது.
59. சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விநாயக விரதம் அநுட்டிப்பது. இது பிரகஸ்பதியால் கூறப்பட்டது. இது தருமபுத்திரரால் அநுஷ்டிக்கப்பட்டது. அந்த சுக்ல சதுர்த்தியில் சந்திர தரிசனம் நிந்திக்கப்பட்டிருக்கிறது. இத்தோஷத்தால் சியமந்தக மணியின் பொருட்டுக் கிருஷ்ணன் அபவாதத்தினீக்கத்திற்காக விநாயக பூசை செய்தனர்.
60. பஞ்சமி
சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமி - விஷ்ணுவைப் பூசித்துப் புஷ்ப ஊஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதம் அநுஷ்டிப்பது.
61. நாக பஞ்சமி விரதம்
இது ஆவணி மாதம் சுக்கில பட்ச பஞ்சமியில், சதுர்த்தியில் ஒரு வேளை உணவு கொண்டு மறுநாள் ஐந்தலை உள்ள நாகத்தின் உருவைப் பொன் முதலிய லோகத்தாலாயினும், மண்ணாலாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தட்சணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையுந் துதிப்பது.
62. நாகத்தஷ்ட விரதம்
இதுவும் ஆவணி மாத சுக்கில பட்ச பஞ்சமியில் மேற் கூறியவாறு, மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்தி செய்து விஷ்ணுப் பிரீதி செய்வது. இதைச் செய்தவர்கள் நாகபயம் நீங்கி நலம் அடைவர்.
63. ரிஷிபஞ்சமி விரதம்
இது புரட்டாசி மாதத்தில் சுக்ல பட்சத்தில் மத்யானத்தில் பஞ்சமி திதி இருக்கையில் அநுஷ்டிப்பது. இதில் ரிஷி பஞ்சமி விரதத்தின் பொருட்டுப் பஞ்சகவ்ய, யமுனை பூசைகள் முடித்துக் கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிட்டர், அகஸ்தியர், அருந்ததி முதலியவர்களையும் சகல ரிஷிகளையும் பூசித்து உத்தயாபனஞ் செய்வது. இது ரஜஸ்வலையானவள் போஜன பாத்திரங்களைத் தீண்டுவதாலும், புருஷ்ன் ரஜஸ்வலையானவளுடன் பேசுவதாலும் தீண்டுவதாலும், உண்டான பாவம் நீங்க அநுஷ்டிப்பது. இதனை வைதர்ப்ப தேசத்தவனான உதங்க நாம வேதியன் மருமகள் அநுட்டித்தனள். பின்னும் சுமித்திரன் மனைவி ருது பீடையுடன் பாண்டஸ்பர்சனஞ் செய்து பெண்ணாயாகி இவ்விரதத்தால் சாபம் நீங்கினாள்.
64. மாசி சுக்லபஞ்சமி விரதம்
மாசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது.
65. ஷஷ்டி - லலிதா விரதம்
புரட்டாசி மாதம் சுக்ல பட்ச ஷஷ்டியில் பரமேஸ்வரியை எண்ணி விரதமிருந்து உத்யாபனஞ் செய்வது. இது கூர்ஜ்ஜர தேச வழக்கு.
66. கபிலாஷஷ்டி
இது புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்ச ஷஷ்டியில் சூரியன், குஜன் ரோஹிணி நட்சத்திரத்துடன் கூடிய நாள். இதில் சூரியன் பூசிக்கப்படுவன். பின்னும் கபிலைப் பசுவை ஆபரணாதிகளால் அலங்கரித்துப் பூசிப்பது.
67. சம்பா ஷஷ்டி விரதம்
மார்கழி அல்லது புரட்டாசி மாதத்திய சுக்ல ஷஷ்டியில் அநுஷ்டிப்பது.
68. சப்தமி - சைத்ர சுக்ல சப்தமி விரதம்
இது சித்திரை மாதத்தில் சுக்ல சப்தமியில் கங்கையைப் பூசித்து விரதமிருப்பது.
69. சீதலா விரதம்
இது ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது.
70. அமுக்தாபாண விரதம்
இது புரட்டாசி மாதத்திய சுக்கில பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. உமாமஹேச்வர பூஜை செய்து பன்னிரண்டு முடி கொண்ட கிரந்தி பூசை இயற்றி வந்தித்வ நிவர்த்தியாய்ப் புத்ர பௌத்ர விருத்தியின் பொருட்டும் எல்லா சௌபாக்கிய சித்தியின் பொருட்டும் தட்சிணகரத்தில் நோன்பு முடி கொண்ட கயிற்றினைக் கட்டிக் கொள்வது. இது கிருஷ்ணமூர்த்தி தரும புத்திரருக்குக் கூறியது.
71. சரஸ்வதி விரதம்
இது ஐப்பசி மாதத்தில் சுக்ல பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. உதய வியாபினியாகிய மூல நட்சத்திரத்தில் புஸ்தக ஸ்தாபனஞ் செய்து திருவோண நட்சத்திரத்தில் முடித்தல் வேண்டும்.
72. ரத சப்தமி விரதம்
இது மாசி மாதம் சுக்கில பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. இதில் அருணோதயமாகிய தனத்தில் திதித்வயமாகி ஷஷ்டி சப்தமி யோகமாகிய பத்மயோகத்தில் பொன், வெள்ளி, தாமிர பாத்திரமாகிய பாண்டத்தில் நெய் விளக்கிட்டச் சிரத்தில் தாங்கிக் கொண்டு சூரியனை மனத்தில் தியானித்து மந்திரஞ் செபித்துத் தீபத்தைச் சலத்தில் விட்டு 7 எருக்கிலை அல்லது 7 இலந்தை இலைகளைத் தலையிற் கொண்டு கங்கை முதலியன சுமந்து வரும் புண்ய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து விரதமிருப்பது. பொன் முதலியவற்றால் ரதஞ்செய்து அதில் சூரியனையும் சாரதியையும் பிரதிஷ்டித்துப் பூசித்துக் தானாதிகள் செய்து விரதம் இருப்பது. இவ்வாறு செய்யின் ஒரு பிறவியில் செய்த பாவம் நீங்குமெனக் கர்க்கர் கூறுகினறனர்.
73. அசலா சப்தமி
மாசி மாத சுக்கில பட்ச சப்தமியில் அநுட்டிப்பது.
74. அஷ்டமி - சைத்திர சுக்கிலாஷ்டமி விரதம்
இதில் பவாநி யாத்திரை காசிகாண்டத்திற் கூறப்பட்டது.
75. அசோகாஷ்டமி விரதம்
சித்திரை மாதத்தில் புதனோடு புனர்பூச நட்சத்திரம் கூடிய அஷ்டமி திதியில் விடியற் காலையில் ஸ்நாநாதிகள் முடித்து விரதமிருந்தவர்கள் வாஜபேயபலம் அடைவர்.