இளமை பொங்கி வழியும் பேரழகுக்குச் சொந்தக்காரி அவள். தேவலோக பேரழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோரின் கலவையாக இருந்தாள் அவள். பெயர் புரந்தரி. தாசி குலத்தில் பிறந்த இவள் பக்தியின் மறுவடிவமாகவே திகழ்ந்தாள். குறிப்பாக, திருப்பதி ஏழுமலைவாசன் மீது அவளுக்கு தணியாத பக்தி. ஆடல், பாடலுடன் வீணை மீட்டுவதிலும் தனித்திறமை பெற்றிருந்த புரந்தரி, அந்த திறமைகளாலேயே ஏழுமலையானை அனுதினமும் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள்.
இரவு வந்துவிட்டால் போதும்; தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக்கொண்டு, கையில் வீணையையும் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவாள். புரந்தரியின் இல்லத்தில், அவள் விருப்பத்தின் பேரில் மனைவி லட்சுமிபாயுடன் தங்கி ஆன்மிக சேவை செய்து வந்த ரகுநாதருக்கு இது தெரியாது.
ஒருநாள் இரவு, சலங்கை ஒலி நடமாடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தார் ரகுநாதர். தனது அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது, இன்னொரு அறையில் இருந்து அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தாள் புரந்தரி.
மறைந்து நின்றவாரே அவளைப் பார்த்தார். அவளது பருவச் செழிப்பையும் மீறி ஜொலித்துக் கொண்டிருந்தது அலங்காரம். கையில் அழகான வீணை. காலில் சலங்கைகள். அதன் ஒலிதான் தன்னை எழுப்பிவிட்டது என்று புரிந்து கொண்டார்.
‘எங்கே இந்த இரவு நேர பயணம்...?‘ என்று புரந்தரியிடம் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது அவருக்கு! ஆனாலும், அவசரப்பட்டு பேசிவிடக் கூடாது என்று எண்ணி அமைதியானார். புரந்தரியும் வெளியேறி விட்டாள்.
மறுநாள் இரவு அவளை கண்காணித்தார் ரகுநாதர். அன்றும் அவள் அதே அலங்காரம், வீணையோடு வெளியேறினாள். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது.
இரவில் அப்படி என்னதான் நடக்கிறது என்று குழம்பிய ரகுநாதர், ஒருநாள் இரவு புரந்தரி வீட்டைவிட்டு வெளியேறும் சமயத்தில் அவளை வழி மறித்தே விட்டார். இதை எதிர்பார்க்காத புரந்தரிக்கு திடீர் அதிர்ச்சி. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“நான் சில நாட்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் இதே இரவு வேளையில் தங்களை அலங்கரித்துக் கொண்டு எங்கோ செல்கிறீர்கள். எங்கே செல்கிறீர்கள் என்று அறிய ஆசைப்படுகிறேன். விருப்பம் இருந்தால் கூறுங்கள்...“ என்று பணிவாகவே கேட்டார் ரகுநாதர்.
அவரது இந்த வேண்டுதல் புரந்தரிக்கு தர்மச்சங்கடமாகிப் போனது. அதேநேரம், உண்மையை மறைக்கவும் அவள் விரும்பவில்லை.
“சுவாமி! இறைவனுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள். உங்களிடம் பொய் சொல்வது, அந்த ஏழுமலையானுக்கே அபச்சாரம் செய்வது போலாகி விடும். அதனால், உண்மையைச் சொல்லி விடுகிறேன். நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்“.
“நீங்கள் உண்மையைத்தான் சொல்வீர்கள் என்று நானும் நம்புகிறேன்“.
“நான் இந்த இரவு நேரத்தில் வெளியேறுவது, வேறு யாரையும் பார்க்க அல்ல; அந்த ஏழுமலையானைப் பார்க்கத்தான்“.
“என்னது... ஏழுமலையானைப் பார்க்கவா? அதுவும், இந்த இரவு நேரத்திலா?“
“குழப்பம் அடைய வேண்டாம் சுவாமி. ஏழுமலையானின் சந்நிதியில் அவர் மீதான எனது பக்தியை வீணையின் இசையாலேயே வெளிப்படுத்துவேன். அப்போது, மணிகள் ஒலிக்க சந்நிதியின் கதவுகள் தானாக திறக்கும். அந்த ஏழுமலையான் எளியவளான எனது வீணையின் இசைக்கு கட்டுப்பட்டு எழுந்தருளி, என் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவார். சிறிது நேரத்திற்கு பிறகு, என்னிடம் அவர் வீணையை வாங்கி மீட்ட... நானும் அவரது வாசிப்புக்கு ஏற்ப அபிநயம் புரிவேன்... இது இன்று நேற்று அல்ல; பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கிறது...“ என்று புரந்தரி சொல்லச் சொல்ல, பிரமித்துப் போய் நின்றார் ரகுநாதர்.
இவள் சொல்வது உண்மையா? இல்லை... கற்பனைக் கதையா? என்று அவசரத்தில் யோசித்தவர், “தாங்கள் சொல்வதை உண்மை என்று நம்புகிறேன். அந்த ஏழுமலையானுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள என்னால் அவரை நேரில் காண முடியவில்லை. இப்போது, உங்கள் மூலமாக அவரை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்“ என்றார், பணிவாக!
ஒரு நிமிடம் எதையோ யோசித்தவள், பின்னர் ரகுநாதரைப் பார்த்தாள்.
“இன்று இரவே நீங்கள் ஏழுமலையானின் அற்புத திருக்கோலத்தை நேரில் கண்டு தரிசிக்கலாம். என்னுடன் நீங்களும் வாருங்கள். சந்நிதியின் முன் மண்டபத்தில் உள்ள கல் தூணில் ஒளிந்து கொள்ளுங்கள். அங்கிருந்தபடியே இறைவனை தரிசியுங்கள்“ என்றாள்.
சந்தோஷத்தில் மனைவியிடம் சொல்லாமலேயே புரந்தரியுடன் புறப்பட்டார் ரகுநாதர். இருவரும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியை அடைந்தார்கள்.
வழக்கம்போல் சந்நிதியில் அமர்ந்த புரந்தரி பக்தி பரவசத்தோடு வீணையை மீட்க ஆரம்பித்தாள். கல் தூண் ஒன்றின் பின்புறம் ஒளிந்திருந்த ரகுநாதரின் கண்கள் ஏழுமலையான் சந்நிதி கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
அடுத்த நிமிடமே அங்கே தொங்கிக் கொண்டிருந்த மணிகள் தானாக அசைந்து ஒலியெழுப்பின. அவை எழுப்பிய சப்தம் பூஜை நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்த நொடியே சட்டென்று திறந்து கொண்டது சந்நிதியின் கதவு.
இப்போது ரகுநாதரின் பார்வை இன்னும் கூர்மையானது. அவருக்கும் அருள்பாலிக்க கரிசனம் கொண்டார் எம்பெருமான்.
சந்நிதியின் முன்பு புரந்தரி வீணை மீட்டிக் கொண்டிருக்க... தனது அழகான பாதம் தெரிய சர்வ அலங்கார கோலத்தில் நடந்து வந்தார் ஏழுமலையான். புரந்தரி வீணை இசைக்கு ஏற்ப நர்த்தனம் புரிந்த எம்பெருமான், தொடர்ந்து அவளிடம் வீணையை வாங்கி மீட்ட ஆரம்பித்தார். அவரது இசைக்கு ஏற்ப அபிநயம் புரிந்தாள் புரந்தரி.
இந்த தெய்வீக அற்புதக் காட்சிகளை தரிசித்துக் கொண்டிருந்த ரகுநாதரின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர்த் துளிகள், அவரது பாதத்தை முத்தமிட்டு, தரையில் கரைந்து மறைந்தன.
அப்போதுதான் அவர் எதிர்பார்க்காதது நடந்தது. அதுவரை அழகாய் வீணை மீட்டிய எம்பெருமான், திடீரென்று ராகத்தை அபஸ்வரமாக மாற்றி வீணையை மீட்டினார். புரந்தரியும் அதற்கு ஏற்ப மாறி ஆடினாள். அந்த அபஸ்வரத்தின் ஓசையை மறைந்திருந்த ரகுநாதரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் மறைந்திருந்து கவனிக்கிறோம் என்பதையே மறந்து வெளியே வந்தார்.
அவர் வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் எம்பெருமான் இப்படி ராகத்தை மாற்றினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
மறைவில் இருந்து வெளியே வந்த ரகுநாதர், “என்ன அபச்சாரம் இது? இதை என்னாலேயே கேட்க முடியவில்லையே; வேறு எப்படி அதை எம்பெருமான் ரசிப்பார்?“ என்று அவர் கேட்டபடியே நடந்து வந்து நின்ற போது, அவருக்கு நேர் எதிரே கையில் வீணையுடன் அமர்ந்திருந்தார் எம்பெருமான்.
உண்மை புரிந்து, “எம்பெருமானே...“ என்று குரல் எழுப்பிய ரகுநாதர், “எனது நிறைவேறாத ஆசை இப்போது நிறைவேறிவிட்டது...“ என்று கூறியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
அப்போது எம்பெருமானே திருவாய் மலர்ந்தருளினார்.
“பக்தா! உன்னை இங்கே அழைத்து வந்த இவள் ஓர் உத்தம பக்தை. இவளே உனக்கு ஞான உபதேசம் புரிவாள். என்னருள் பெற்ற நீ இன்று முதல் ‘புரந்தரதாசன்‘ என்று அழைக்கப்படுவாய். இந்த பூவுலகில் எம்மை பாடி, பல காலம் சிறப்பாய் வாழ்ந்து, என்னை வந்து சேர்வாய்“ என்று அருளி மறைந்தார்.
அதன்படி, புரந்தரியிடம் ஞான உபதேசம் பெற்று புரந்தரதாசன் ஆன ரகுநாதர், ஏழுமலையான் புகழ்பாடும் பக்தி பாடல்கள் பலவற்றை பாடி வாழ்ந்து, இறுதியில் பரமபதம் எய்தினார்.
இந்த புரந்தரதாசரே ‘கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன்‘ என்றும், ‘நாரத முனிவரின் அம்சம்‘ என்றும் போற்றப்படுகிறார். இவர் முக்தியடைந்த, கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற இடத்தில் ஆண்டு தோறும் அவரது நினைவுநாளில் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள், பக்தர்கள்.