கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்ப்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்ததுடன் தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதிய மகான் மத்துவர். “விஷ்ணுவை வழிபடுவதே உண்மையில் பரம்பொருளின் வழிபாடு” என முதன்முறையாக அறிவித்ததுடன் இதற்காக “துவைதம்” எனும் தனிக் கொள்கையை வலியுறுத்திய மகான் மத்துவர். இவர் ராமாயண காலத்தில் வாயு குமாரனாகவும், மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தார் என்றும் சொல்வார்கள். இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்வோமா?
கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் ஊருக்கருகிலுள்ள பாஜகம் கிராமத்தில் மத்தியகேஹர் எனும் அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குச் சொந்தமாக இருந்த சிறிது நிலத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் வாழக்கை நடத்தி வந்தார். அவர் அந்தப் பகுதியில் புலமை மிக்க அறிஞராக இருந்ததால் அவரை அங்கிருந்த மக்கள் “பட்டர்” என அழைத்தனர். இவருடைய மனைவி வேதவதி. அத்தம்பதியர்களுக்கு ஒரு பெண்ணும் இரு பிள்ளைகளும் பிறந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக இரு பிள்ளைகளும் இளம்வயதிலேயே இறந்து போய் விட்டனர். இதனால் மனம் வருந்திய அத்தம்பதியர்கள் தங்களுக்குப் பின் வாரிசு இல்லையே என்று கவலைப்பட்டனர்.
இதனால் அத்தம்பதியர்கள் தங்களுக்குப் பிள்ளை அளிக்க வேண்டி, அருகிலுள்ள உடுப்பி கோயிலுக்குச் சென்று தினமும் வழிபட்டு வந்தனர். அவர்களின் பன்னிரண்டு ஆண்டு வேண்டுதலின் பலனாக அவர்களுக்கு 1238 ஆம் ஆண்டு விஜயதசமியன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் “வாசுதேவன்” என்று பெயரிட்டனர். வாசுதேவன் குழந்தையாயிருக்கும் போதே துடிப்புடனும் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவனாகவும் இருந்தான்.
அவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருநாள் வீட்டிலிருந்து அவன் காணாமற் போய் விட்டான். அவன் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு வாசுதேவன் உடுப்பி கோயிலில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் உடுப்பி கோயிலுக்கு விரைந்தனர். அங்கே அனந்தேசுவரர் சன்னதி முன்பு பக்தர்களின் கூட்டம் நிறைந்து இருந்தது. சாஸ்திர விதிப்படி திருமாலுக்கு எப்படி பூசை செய்ய வேண்டும் என்று சிறுவன் வாசுதேவன் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்த பலரும் வாசுதேவன் சாதாரணக் குழந்தையல்ல, தெய்வக் குழந்தை என்றனர்.
ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ, கடனைத் திருப்பி கொடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்தான். அப்போது ஆறு வயதேயான குழந்தை வாசுதேவன் வேகமாக சமையலறைக்குச் சென்று, அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வந்து, “உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள்” என்று கடன்காரன் கையில் கொடுத்தான். அவன் கொடுத்த புளியங்கொட்டைகள் அனைத்தும் தங்கக் காசுகளாக மாறியிருந்தன. கடன் கொடுத்தவன் அதை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பிப் போனான்.
வாசுதேவனுக்கு ஏழு வயதான போது உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் விளையாட்டு, மல்யுத்தம், ஓடுதல், குதித்தல், நீந்துதல் என அனைத்திலும் முதலாவதாக இருந்தான். ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான். வீர விளையாட்டுகளில் விஞ்சி நின்ற வாசுதேவன் படிப்பிலோ மிகவும் மந்தமாக இருந்தான். வாசுதேவனின் ஆசிரியர் படிப்பு சொல்லிக் கொடுக்க பல வழிகளில் முயன்றும் அது முடியாததால் கடைசியாக அவனுக்குப் படிப்பு வராது என்ற முடிவுக்கு வந்ததுடன் படிப்பிலிருந்து விலக்கி வீட்டுக்கும் அனுப்பி விட்டார்.
வாசுதேவனின் பெற்றோர், “மகன் இப்படி படிப்பில்லாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாமல் போய்விடுவானே..?” என்று மனம் வருந்தினர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கைரேகை பார்ப்பதில் புகழ் பெற்றிருந்த ஒரு பெரியவரிடம் வாசுதேவனை அழைத்துச் சென்று காண்பித்தனர். வாசுதேவனின் கைரேகைகளைப் பார்த்த அவர், “உங்கள் மகன் ஓர் அவதார புருசர். ராமாயண காலத்தில் வாயு குமாரனாகவும், மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் பீமனாகவும் இருந்த இவர், இந்தப் பிறவியில் சிறந்த ஞானியாக நாடு முழுவதும் ஒளி வீசப் போகிறார்” என்றார்.
அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்ட பின்பு பெற்றோர்களுக்கும் மகன் மேல் புதிய நம்பிக்கை வந்தது. வீட்டில் வாசுதேவனுக்கு அவனது தந்தையே கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அதன் பிறகு வாசுதேவன் ஓரளவு படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினான். பின்னர் தாமாகவே கல்வி கற்க ஆரம்பித்தான். வேதங்கள், சாஸ்திரங்கள் என அனைத்தையும் கற்றுத் தெரிந்து கொண்டான். வாசுதேவன் வேத பாடங்களைப் படித்த பிறகு, பதினைந்தாவது வயதில் வேதங்கள், வேதங்களின் அங்கங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பின்பு துறவியாக வேண்டும் என்று விரும்பினார்.
துறவியாவதற்கு ஒரு குருவிடம் தீட்சை பெறுவது அவசியம் என்பதால் தனக்காக ஒரு குருவைத் தேட ஆரம்பித்தார். உடுப்பியிலிருந்த மடத்தின் தலைவராக இருந்த அச்சுதப்பிரக்ஞர் எனும் துறவியைச் சந்தித்தார். அவரிடம், தான் துறவியாக விரும்புவதால் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அச்சுதப்பிரக்ஞர், வாசுதேவனை சீடராக ஏற்றுக் கொண்டாலும், துறவியாவதற்கு பெற்றோரின் அனுமதியைப் பெற்று வர வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்தார். வாசுதேவன் பெற்றோரிடம் தான் துறவியாக விரும்புவதைத் தெரிவித்தார். அதற்கு அவர் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
“நாங்கள் மறைந்த பிறகு உத்தரக் கிரியைகள் செய்ய எங்களுக்கு வேறு மகன்களும் இல்லை. அக்கிரியைகள் செய்யாமல் போனால் எங்களுக்கு நற்கதி கிடைக்காதே” என்று சொல்லி அவர் துறவியாவதைத் தடுத்தனர். உடனே வாசுதேவன், “உங்களுக்கு கடைசிக் காலத்திலும், மரணத்திற்குப் பின்பும் செய்ய வேண்டிய கிரியைகள் செய்ய அடுத்த ஆண்டே தங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அதன் பிறகு நான் சந்நியாசம் மேற்கொள்கிறேன்” என்று பெற்றோரிடம் சொன்னார். அவர் சொன்னபடியே அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வாசுதேவனுக்கு சந்நியாசத்திற்கு பெற்றோரின் அனுமதியும் கிடைத்தது.
வாசுதேவன் குருவிடம் சென்று, சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டார். அங்கு அவருக்கு பூரணபிரக்ஞர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயருக்குப் “பூரண அறிவினை உடையவர்” என்று பொருள். குருவான அச்சுதப்பிரக்ஞர் வேதபாடங்களில் கரை கண்ட பண்டிதர். பூரணபிரக்ஞர் வேதங்கள், வேதங்களின் அங்கங்கள், சாஸ்திரங்களில் மேலும் கூடுதல் அறிவு பெற்றார். வேதாந்தத்தைப் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு அவருக்கும் குருவுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது.
இதனால் அடிக்கடி குருவுடன் வாதங்கள் செய்யத் தொடங்கினார். இதனால் சிறிது சிறிதாகப் பூரணபிரக்ஞரிடன் அறிவுத்திறன் ஆசிரமத்தை விட்டு வெளியிலும் தெரியத் தொடங்கியது. பூரணபிரக்ஞரின் தகுதி, ஞானம் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் தன் சீடரின் கருத்துக்களை ஒப்புக் கொள்ளாத அவரின் குரு அச்சுதப்பிரக்ஞர், பூரணபிரக்ஞர் எந்தவொரு விசயத்தையும் அணுகும் விதத்திலிருந்த புதுமையையும், அவர் வாதங்களில் இருந்த அசைக்க முடியாத உண்மை உண்டு என்பதையும் உணர்ந்து கொண்டு அவரையே மடத்தின் தலைவராக நியமித்தார். இவ்வாறு அனந்தேசுவரர் கோவில் பீடத்தின் தலைமைப் பதவியில் பூரணபிரக்ஞர் அமர்ந்த பிறகு அவருடைய குரு அவரின் மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு ஆனந்த தீர்த்தர் என்கிற பெயரிட்டார். இதை மத்துவர் என்றும் மத்துவாச்சாரியார் என்றும் மக்கள் போற்றிப் புகழத் தொடங்கினார்.
மத்துவருக்கு ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கை சரியானதாகத் தோன்றவில்லை. எனவே சங்கரரின் சீடர்கள் மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதாகப்பட்டதால் நாடு முழுவதும் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தம்முடைய கருத்துக்களைக் கூறுவது என மத்துவர் முடிவு செய்தார். இதன்படி மத்துவர் தனது குருவான அச்சுதப்பிரக்ஞர் மற்றும் சில சீடர்களுடன் தென்னிந்தியாவிலிருந்த சில ராஜ்யங்களுக்கு யாத்திரை செல்லத் தொடங்கினார்.
அந்தக் காலத்தில் தென்னிந்தியாவில் பல சிறு அரசுகள் செயல்பட்டு வந்தன. அவை அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் அனைத்து அரசுகளிலும் பண்டிதர்களுக்கு மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்தது. சபையில் ஒரு பண்டிதரை மற்றொரு பண்டிதர் வாதத்தில் வென்றுவிட்டால் அப்பண்டிதரின் வழக்கங்களையும், கொள்கைகளையும் அந்த அரசின் அரசனும் மக்களும் ஏற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
மத்துவர் முதலில் மங்களூருக்குச் சென்றார். அங்கு தம்மை வாதத்தில் எதிர்த்தவர்களை எல்லாம் மிகச் சுலபமாக வென்றார். அதன் பிறகு திருவாங்கூர் சென்றார். அந்த சமயத்தில் சிருங்கேரி மடத்தின் தலைவராக இருந்த வித்யாசங்கரரும் திருவாங்கூர் வந்திருந்தார். திருவாங்கூர் அரசவையில் இருவருக்குமிடையே நடந்த விவாதத்தில் மத்துவர் வெற்றி பெற்றார். இப்படியே தென்னிந்தியாவிலிருந்த பல அரசவைகளில் வெற்றி பெற்ற அவரின் புகழ் பரவத் தொடங்கியது. அதே சமயம் தோல்வியடைந்த சங்கரரின் சீடர்கள் மட்டும் அவர் மீது வெறுப்பு கொண்டனர். மத்துவரையும் அவரது சீடர்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதற்காக மத்துவர் கலங்கவில்லை.
உடுப்பி திரும்பிய அவர் முதலில் பகவத்கீதைக்கு ஒரு விரிவுரை எழுதினார். பின்னர் வேதாந்த சூத்திரங்களுக்குப் பாஷியம் செய்யும் வேலையை எடுத்துக் கொண்டார். இதற்காகப் பல வருடங்கள் உடுப்பியிலேயே தங்கியிருந்த அவர் வட இந்தியாவிற்கு யாத்திரை செல்ல நினைத்தார். வட இந்தியாவில் முகம்மதியர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் அதிகம் இருந்தது. இதனால் முகம்மதியர்களின் அரசுப் பகுதிகளின் வழியாக செல்ல வேண்டியிருந்தது. மத்துவருக்கு உருது, பார்சி மொழிகள் தெரிந்திருந்ததால் முகம்மதியச் சிற்றரரசர்களை அவர் எளிதில் கவர்ந்து விடுவார். அதனால் முகம்மதியர்களிடமிருந்து அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.
வட இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக ஹரித்துவாரம் போனார். அங்கே பல நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார். சில நாட்கள் இமயமலைக் குகைகளுக்குச் சென்று அங்கே தனியாகவும் இருந்தார். அதன் பின்பு மறுபடியும் ஹரித்துவாரம் திரும்பி வந்தார். திரும்பிய அவர் “விஷ்ணுவை வழிபடுவதே உண்மையில் பரம்பொருளின் வழிபாடு” என முதன்முறையாக அறிவித்தார். அங்கு வேதாந்த சூத்திரங்களுக்குத் தான் எழுதிய பாஷியத்தையும் வெளியிட்டார்.
இதன் பிறகு ஹரித்துவாரத்திலிருந்து மீண்டும் தன் யாத்திரையைத் தொடங்கினார். அப்படிச் செல்லுமிடங்களில் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லி வைணவ மதத்தில் இணைந்து விஷ்ணுவை வழிபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வட இந்தியாவிலிருந்து திரும்பும் வழியில் சாளுக்கியர் ஆட்சிப்பகுதியின் தலைநகராக இருந்த கல்யாண் எனுமிடத்தில் மத்வர் தங்கினார். அங்கு பல பண்டிதர்கள் வசித்தனர். அவர்களில் சோபணபட்டர் என்பவருடன் வாதம் புரிந்தார். இதில் சோபணபட்டர் மத்வரிடம் தோற்றுப் போனார். இதனால் அவரும் அவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் வைணவர்களாகி விட்டனர். இதன் பிறகு கல்யாணில் ஒரு மடத்தை நிறுவி அந்த மடத்தின் தலைவராக சோபணபட்டரை நியமித்து ஊர் திரும்பினார்.
உடுப்பி திரும்பியதும் குரு அச்சுதப்பிரக்ஞருக்கும் வைஷ்ணவ தீட்சை அளித்து அவரையும் சீடராக்கிக் கொண்டார். அக்காலத்தில் சிவன் மற்றும் சக்தி கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மத்துவர் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்.
உடுப்பிக்கு அருகில்தான் சங்கரரின் சிருங்கேரி மடம் இருந்தது. இம்மடத்தின் தலைவராக இருந்த பத்மதீர்த்தர் என்பவருக்கு தென்னாட்டு அரசர்களில் பலர் சீடர்களாக இருந்தனர். எனவே அரசர்களின் துணையுடன் மத்துவருக்கும் அவரது சீடர்களுக்கும் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. பத்மதீர்த்தரின் சீடர்கள் சிலர் மத்துவரின் குடிசையில் இருந்த பல நூல்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் மண்ணிற்குள் புதைத்து விட்டனர். மத்துவர் இது குறித்து கும்பலா நாட்டின் அரசன் ஜெயசிம்ஹ சாளுக்கியனிடம் தெரிவித்ததுடன், தனது நூல்களையும் மீட்டுத்தர வேண்டினார். அரசனும் தன் படைவீரர்களை அனுப்பி அவருடைய நூல்களைத் திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் ஒளித்து வைத்திருந்த மத்துவரின் நூல்களைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுக்கச் செய்தார்.
மத்துவரின் வாதத்தில் தோற்கடிக்கப்பட்டு அவருடைய வழக்கத்துக்கு மாற்றப்பட்டவர்களில் திரிவிக்கிரமபண்டிதர் என்பவரும் ஒருவர். திரிவிக்கிரமபாண்டியர் பல பகுதிகளில் பெயர் பெற்றிருந்தவர். அவர் வைணவரானதை அறிந்து பலரும் வைணவர்களாக மாறினர். ஜெயசிம்ஹனின் கும்பலா அரசுப் பகுதிகளில் மத்துவர் யாத்திரை செய்து கொண்டிருந்த போது அவருடைய தாய், தந்தையர் காலமாகினர். அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே மகன் புகழ் பரவியது கண்டு மகிழ்ந்தனர்.
மத்துவர் குமாரதாரா, நேத்ரவதி என்ற ஆறுகளின் சங்கமத்தில் தம் வாழ்வின் கடைசிக் காலத்தை அமைதியுடன் கழித்தார். தன்னுடைய நேரம் அனைத்தையும் நூல்கள் எழுதுவதில் செலவிட்டார். 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்த இவர் கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவற்றுள் அவர் எழுதிய மத்துவபாஷியம், உபநிசத் விளக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இங்கிருந்தவாறே தன் சீடர்கள் பலரையும் வைணவக் கொள்கைகளைப் பரப்பவும், பிற சமயப் பண்டிதர்களுடன் வாக்குவாதம் செய்யவும் அனுப்பி வைத்தார். அவர்களும் மத்துவர் கொள்கையை பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் மூலம் பரப்பினர். மத்துவர் பத்மநாபதீர்த்தர் என்கிற முக்கியச் சீடரை இப்பணிகளுக்குத் தலைவராகவும் நியமித்தார். மத்துவர் உருவாக்கிய உடுப்பி கிருஷ்ணன் கோயிலை நிர்வகிப்பதற்கென்று எட்டு சீடர்கள் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தார்.
மத்துவரால் உருவாக்கப்பட்ட இந்த உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலுள்ள கிருஷ்ணன் சிலை, அந்தக் கோயிலுக்கு எப்படி வந்தது என்பது குறித்து இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கிருஷ்ணர் சிலை உருவான கதை. இன்னொன்று இந்த சிலை மத்துவரிடம் வந்து சேர்ந்த கதை.
முதலில் சிலை உருவான கதையைப் படிப்போமா?
தேவகி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் யசோதை மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை என்னும் வருத்தம் தேவகிக்கு இருந்தது. ஒரு முறை கிருஷ்ணரிடம் இதைத் தெரிவித்ததும் கிருஷ்ணரும் தனது பாலலீலைகளை தாய்க்கு நடத்திக் காட்டினாராம். தேவகியோடு ருக்மணியும் இதைக் கண்டு களித்தாள்.
உடனே ருக்மணிதேவி, “ப்ரபோ! தங்களின் குழ்ந்தை வடிவமும் லீலைகளும் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அந்த பாலகிருஷ்ணர் மனதில் பதிந்து விட்டது. எனக்கு அந்த வடிவம் விக்கிரகமாக வேண்டும். விக்கிரகத்தை எனது பூஜை அறையில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன் அதைத் தாங்கள் உருவாக்கித் தரவேண்டும்” என்று கிருஷ்ணரிடம் வேண்டினாள்
கிருஷ்ணன் உடனே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார். பாலகிருஷ்ண உருவத்தில் சாளகிராம சிலை வடிவம் அமைத்துத் தரச் சொன்னார். அவர் வடித்த சாளகிராம சிலையை ருக்மணிதேவி தினமும் பூஜித்து வந்தாள்.
கிருஷ்ணர் தனது இறுதிக் காலம்வரை பழைய துவாரகையில் வசித்து, பின்னர் கிருஷ்ணரின் சங்கல்பத்தால் பழைய துவாரகை நீரில் மூழ்கிய போது ருக்மணி
பூஜை செய்து வந்த கிருஷ்ண சிலையும் மூழ்கிப் போய்விட்டது.
இந்தச்சிலை கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் முழுவதும் மூடப்பட்டு காலப் போக்கில் பாறை போல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. பல நூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப்பாறை கண்ணில் பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை உபயோகப்படுத்தி வந்தான்.
இனி இந்த சிலை மத்துவர் கைக்கு எப்படி வந்து சேர்ந்தது? என்பது குறித்த இரண்டாவது கதையைப் படிப்போமா?
மத்துவர் ஒருநாள் தனியாக உடுப்பிக்கு அருகிலுள்ள பண்டேஸ்வரா கடற்கரையோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்கு கடலில் ஒரு கப்பல் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அது மால்பே என்னும் இடத்தினை கடக்கும் சமயம் பெரும் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டது. அந்தச் சூறாவளிக் காற்றில் கப்பலே மூழ்கிவிடும் என்ற நிலையில் இருந்தது.
இதைப் பார்த்த மத்துவர் அந்தக் கடும்புயலைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு விஷ்ணுவை வேண்டியபடி, தனது மேல் அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கப்பல் இருக்கும் திசை நோக்கி வீசினார்.
என்ன ஆச்சர்யம்! வேகமாக விசீக் கொண்டிருந்த அந்தப்புயல் வெள்ளை அங்கவஸ்திரத்தைக் கண்டதும் சட்டென ஓய்ந்து அடங்கியது. புயலில் மூழ்க இருந்த அந்தக் கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது. அந்தக் கப்பலோட்டிய மாலுமி கரைக்கு ஒடி வந்து மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான்.
“ஐயா! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? இந்தப் புயலால் வந்த பெரும் ஆபத்திலிருந்து எங்களையும் கப்பலையும் காப்பாறி விட்டீர்கள். ஐயா இதற்கு அன்பளிப்பாக இந்தக் கப்பலிலுள்ள எந்தப் பொருட்களையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றான்.
மத்வர் புன்னகை தவழ தனக்கு எந்தப் பொருளும் வேண்டாமென்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் அந்தக் கப்பலில் இருந்த அந்த கோபிப் பாறையை நோக்கினார். அவருக்கு அந்தப் பாறைக்குள் மறைந்திருந்த கிருஷ்ணர் சிலை ஒன்றும் தெரிந்தது. கப்பலோட்டும் மாலுமியிடம் அந்தப் பாறையை மட்டும் கொடுக்கும்படி கேட்டார்.
கப்பல் மாலுமி, “கப்பலில் எவ்வளவு விலையுயர்ந்த பொருட்களெல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் வேண்டாமென்று சொன்னவர் கப்பலின் கீழ் பாரத்தைச் சமப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய பாறையைப் போய்க் கேட்கிறாரே...” என்று வியப்புடன் பார்த்தபடி அந்தப் பாறையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
அந்தப் பாறையை மிகவும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு அதைத் தன் தலையில் வைத்துச் சுமந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் பாடியபடி உடுப்பி நோக்கி நடந்து சென்றார். அந்த சமயம் அவர் பக்திப் பரவசத்தில் பாடிய பாடல்கள், தற்போது “த்வாத்சஸ ஸ்தோத்திரம்” என்று வழங்கப்படுகிறது.
கப்பலோட்டிய மாலுமியிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்த அந்த வெள்ளை மண்பாறையைத் திருக்குளத்தில் நீராட்டிய போது, கிருஷ்ணரின் சாளக்கிராம சிலை வெளிப்பட மத்வர் பரவசத்துடன் விழுந்து வணங்கினார். அந்தத் திருக்குளம் தற்போது “மத்வசரோவர்” என்று பெயர் பெற்றது. அந்தக் குளத்தின் தீர்த்தம் தான் தற்போதும் உடுப்பி கிருஷ்ண பகவானின் ஆராதனைக்கும், அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அந்தச் சிலைக்கு நீராட்டியதும் அது மேலும் ஸாந்நித்யம் பெற்று பிரகாசித்தது. உடனே முறைப்படி கிருஷ்ணமடத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் தற்போது உடுப்பி கிருஷ்ணன் கோயில் என்று புகழ் பெற்று விளங்குகிறது.
மத்துவர் கொள்கைப்படி கடவுள், ஜீவன், ஜடப்பொருள் என்ற மூன்றும் ஆதி அந்தமற்றவை. ஜடப்பொருட்களும், ஜீவனும் கடவுளிலிருந்து வேறுபட்டவை. ஜீவன்கள் எல்லையற்றவை. தங்களுக்குள் பல வித்தியாசம் கொண்டவை. ஜீவனுக்கும், பரமாத்மாவுக்குமுள்ள தொடர்பு முதலாளி, தொழிலாளிக்குமுள்ள தொடர்பைப் போன்றது. விஷ்ணுவை வழிபடுவதால் கடவுளின் குணங்கள் மனிதனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் கடவுளுக்கு இணையாக ஆக முடியாது. இது போன்ற மத்துவரின் கொள்கைகள் ஒரு மத வழக்கமாகவே உருவாயின. இவர் கொள்கை அனைத்தும் துவைதம் எனப்படுகின்றன.
1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மலர்களாக விழுந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவானது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் நேரடியாகப் பார்த்தனர். அவருடைய சீடர்கள் சிறிது நேரத்திற்குப் பின்பு மலர்களை விலக்கிப் பார்த்தனர். அங்கு மத்துவரை காணவில்லை. அவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.