இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
அற்புத மகான்கள்

குருநானக்

தேனி. எம். சுப்பிரமணி


அந்தக்காலத்தில் மக்களிடம் அதிகமாக இருந்த தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனிதனாகப் பிறந்தவர்கள் சாதி, மதம் எனும் பெயரில் பிரிந்து விடாமல் மக்கள் எனும் ஒரே நிலையில் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உபதேசித்ததுடன், மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும், அவர்களுக்குள் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து, ஆனந்தம், சாந்தி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரு அற்புத மகான் குருநானக்.

1469 ஆம் ஆண்டு (ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் என்றும், அக்டோபர் 20 ஆம் நாள் என்றும் இரு வேறு நாட்கள் குறிப்பிடப்படுகின்றன.) பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் 35 மைல் தொலைவிலுள்ள ராயி கோயி தல்வந்தி (தற்போது நான்கானா சாஹிப் என பெயர் மாற்றமடைந்துள்ளது. எனும் கிராமத்தில் “சத்சிரி” எனும் சாதியைச் சேர்ந்த மேத்தா காலு – திருப்தா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நானக். இவர் சிறு குழந்தையாக இருந்த போதே தன் வயதுச் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, “நீங்கள் புது விளையாட்டு விளையாட விரும்பினால் என்னைப் போல் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி மனத்துக்குள் “சத்திய கர்த்தர்” என்று சொல்லிக் கொண்டே இருங்கள். உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்” என்பார். அந்த அளவுக்கு அவருக்குச் சிறு வயதிலேயே கடவுள் பக்தி அதிகமாக இருந்தது.

கிராம மணியக்காரராக இருந்த நானக்கின் தந்தை மேத்தா காலு, நானக்குக்கு ஏழு வயதான போது அவரை கோபால பண்டிதர் என்பவரிடம் கல்வி கற்க அழைத்துச் சென்றார். கோபால பண்டிதர் நானக்கை தன்னருகில் அமர வைத்துப் படிக்கச் சொன்னார்.

நானக் அவரிடம், “நீங்கள் எனக்கு என்ன சொல்லித் தருவீர்கள்?’ என்று கேட்டார்.

அவர், “கடைக் கணக்கு வழக்கு, கணிதம் மற்றும் பலவற்றையும் கற்பிப்பேன்?” என்றார்.

“எனக்கு இந்தப் படிப்புகளையெல்லாம் படிக்க விருப்பமில்லை. இந்தப் படிப்புகளெல்லாம் நிலையில்லாத உலகில் அழிந்து விடக் கூடியவை. கடைசிக் காலத்தில் கூட வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய கல்வியையே நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் நானக்.

வாழ்க்கைக்கு உதவும் படிப்புகள் என்று அவர் சொல்லித் தரும் படிப்புகள் கடைசிக் காலத்தில் பயன்படாது என்று சிறுவனான நானக் சொன்னதைக் கேட்டு கோபால பண்டிதர் திகைத்துப் போனார். இந்தச் சிறு வயதில் கடைசிக் காலம் வரை சிந்தித்த அவருடைய திறன் கண்டு வியந்தும் போனார். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவருக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து வந்தார்.

நானக் அந்தப் பாடங்களைக் கேட்டுக் கொண்டாலும் அதைக் கற்றுக் கொள்வதில் விருப்பமில்லாமலே இருந்து வந்தார். இதைக் கண்ட பண்டிதர் நானக்கின் தந்தையைச் சந்தித்து, “உங்கள் மகனுக்கு இந்தக் கணக்கு வழக்குப் படிப்பில் ஆர்வமில்லை. வேறு படிப்பில் சேர்த்து விடுங்கள்” என்றார்.



நானக்கின் தந்தையும் தம் பையனுக்கு கணிதம், இந்திப் பாடங்களில் நாட்டமில்லை எனக் கண்டதும் சமஸ்கிருதம் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக விரஜ்லால் பண்டிதர் என்பவரிடம் சேர்த்து விட்டார். விரஜ்லால் பண்டிதர் சிறுவனான நானக்கின் அறிவைக் கண்டு வியந்து போனார்.

ஒரு முறை பண்டிதர் “ஓம்” என்று எழுதிச் சொல்லித் தந்தார்.

அங்கிருந்த மாணவர்கள் பண்டிதர் சொன்னதைக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் நானக் மட்டும் அப்படியிருக்கவில்லை. “ஓம் என்பதற்குப் பொருள் என்ன?” என்று கேட்டார்.

பண்டிதர், “நான் சொல்வதை மட்டும் நீ கேட்டுத் தெரிந்து கொள். அதற்கு உனக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் அதன் பொருளைச் சொல்லித் தர மாட்டேன்” என்றார்.

உடனே நானக், “பொருள் தெரியாமல் என்ன படித்தும் என்ன பயன்? நான் உங்களுக்கு ஓம் என்பதன் பிரணவப் பொருளை விளக்கிச் சொல்கிறேன்” என்று கூறியபடி அதற்கான பொருளை விளக்கினார்.

பண்டிதர் அசந்து போனார்.

அதன் பிறகு பண்டிதர் நானக்கின் தந்தையைச் சந்தித்து, “உங்கள் மகனுக்கு நான் பாடம் கற்றுக் கொடுக்க முடியாது. இனி என்னிடம் பாடம் கற்றுக் கொள்ள அனுப்ப வேண்டாம்” என்று சொல்லி விட்டார்.

நானக்கின் தந்தை தன் மகனை என்ன செய்வது? என்று குழம்பிப் போனார். அடுத்து பார்ஸி மொழியாவது கற்றுக் கொள்ளட்டும் என்று குதுபுதீன் மௌலவி என்பவரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். நானக் அந்தப் படிப்பிலும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நானக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத குதுபுதீன் மௌலவி, நானக்கிற்கு கற்றுக் கொடுக்க முடியாது என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.

நானக்கின் தந்தை இனி அவரைப் படிக்க அனுப்புவது வீண் என்று உணர்ந்தார். தன் வீட்டிலிருக்கும் எருமை மாடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் சென்று மேய்த்து வரும்படி சொன்னார். நானக்கும் அதன்படி எருமை மாடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்வார். மாடுகளை மேயவிட்ட பின் அங்கு ஏதாவது மரத்தடி நிழலில் அமர்ந்து கடவுள் குறித்த தியானத்தில் அமர்ந்து விடுவார்.

இப்படி ஒரு நாள் அவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது, அவர் மேய்க்கக் கொண்டு சென்ற எருமை மாடுகள் ஒரு ஜாட் சாதிக்காரனின் வயலில் புகுந்து வயலின் ஒரு பகுதியை நாசம் செய்து விட்டன. அந்த வயல்காரன் கிராமத்துப் பெரிய மணியக்காரரிடம் புகார் செய்தான்.



அவர் நானக்கைக் கூப்பிட்டு “எருமைகளை மேயவிட்டு இவருடைய வயலை ஏன் நாசம் செய்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு நானக், “அழித்தவன் அவனே. அவனே இதைச் சரியும் செய்வான். இதில் நீங்களோ, நானோ ஒன்றும் செய்ய முடியாது.” என்று சொல்ல மணியகாரர் திகைத்துப் போனார். நானக்கின் தந்தையை அழைத்து வயல்காரனுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு அளிக்க உத்தரவிட்டார். நானக்கின் தந்தை வயல்காரனுக்கு இழப்பை ஈடு செய்து கொடுத்தார்.

நானக்கை என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தந்தை தவித்துப் போனார். நானக்கின் மேல் கோபம் கொள்ளத் தொடங்கினார். இதையறிந்த நானக்கின் சகோதரி நானக்ஜீ தன் கணவனிடம் சொல்லி, நானக்கை சுல்தான்பூருக்கு அழைத்து வந்து அங்கிருந்த தௌலத்கான் லோடி என்பவரின் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டாள்.

நானக்கிற்கு பதினெட்டு வயதானதும் மூலசந்திரர் என்பவருடைய பெண்ணான சுலக்சனா என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு ஸ்ரீ சந்திரன், லட்சுமிதாஸ் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

நானக் மளிகைக் கடையில் வேலை பார்த்த போது, யாராவது பணமில்லை என்று சொன்னாலும் பொருளைக் கொடுத்து அனுப்பி விடுவார். “பணம் இல்லை என்பதற்காக அவருக்கு வேண்டிய பொருட்களைக் கொடுக்காமல் இருக்கலாமா?” என்று கேட்பார். இதனால் அவருடைய சம்பளத்தில் இலவசமாகக் கொடுக்கும் பொருள்களுக்குப் பணப்பிடித்தம் செய்யப்பட்டு குறைவான சம்பளமே கிடைத்து வந்தது.

ஒரு சமயம் நானக் ஒருவருக்கு கோதுமை மாவு நிறுத்துக் கொண்டிருந்தார். இப்படி நிறுத்துக் கொண்டிருந்த போது, ஒரு சேர், இரண்டு சேர் என்று எண்ணிக் கொண்டே வந்தார். இப்படியே பன்னிரண்டுக்குப் பிறகு பதின்மூன்று என்ற இடத்தில் “தேரா” என்று சொல்லியபடி சிந்தித்தார். தேரா என்பதற்கு பதின்மூன்று என்றும், உன்னுடையது என்றும் இரு பொருள் உண்டு. “இவ்வுலகில் என்னுடையது என்ன இருக்கிறது? எல்லாம் உன்னுடையதுதான்“ என்று கூறி மொத்த மாவையும் அம்மனிதனுக்கே கொடுத்து அனுப்பி விட்டார்.

இதனால் அந்த மளிகைக் கடை வேலையிலிருந்து நானக் விலக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் தம் வாழ்நாள் முழுவதும் மக்களிடையே இருந்த பகைமை, ஆசை, வெறுப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கு முழு மூச்சுடன் முயற்சி செய்தார். இந்துக்களானாலும் சரி, இசுலாமியர்களானாலும் சரி அனைவரும் பரமபிதாவான இறைவனின் சேவகர்களே. உலகில் கெட்டவனே கிடையாது. ஒவ்வொரு மனிதனும் பிறர் குற்றத்தைக் காண்பதை விட்டுவிட்டு, முதலில் தம் குற்றத்தைக் காண வேண்டும். பின்னர் அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மனித வாழ்க்கை முழுமையடையும்” என்று பிறருக்குச் சேவை செய்யும் நோக்குடன் தன் ஆன்மிகப் பணியைப் புதிய வழியில் தொடங்கினார்.



நானக் ஒரு சமூக சீர்திருத்தக் கருத்துடையவர். அந்தக்காலத்தில் மக்களிடம் அதிகமாக இருந்த தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனிதனாகப் பிறந்தவர்கள் சாதி, மதம் எனும் பெயரில் பிரிந்துவிடாமல் மக்கள் எனும் ஒரே நிலையில் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உபதேசித்தார். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும், அவர்களுக்குள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். ஆனந்தம், சாந்தி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இவர் முதன்முதலில் ஜமனாபாத் என்ற ஊரிலிருந்த லாலோ எனும் தச்சன் வீட்டில் தங்கினார். அங்கிருந்து டில்லி, கயா, காசி, ஹரித்துவார், பூரி முதலிய இடங்களுக்குச் சென்றார். பின் அவர் தென்னிந்தியாவில் இராமேசுவரம், அற்புதகிரி மற்றும் இலங்கை முதலிய இடங்களுக்குச் சென்று மதப் பிரச்சாரம் செய்தார். தெற்கிலிருந்து திரும்பி கத்வால், ஹேமகூடம், திஹரி, சர்மௌர், கோரக்பூர், சிக்கிம், பூடான், திபெத் ஆகிய இடங்களுக்குச் சென்று மதப் பிரச்சாரம் செய்தார்.

அதன் பிறகு நானக் பலுசிஸ்தான் வழியாக மெக்கா சென்றார். இந்த யாத்திரையில் ஈரான், கந்தகார், காபூல், பாக்தாத் முதலிய இடங்களில் “ஸத்ய நாம்” உபதேசங்கள் செய்தார். “உலகில் எல்லாச் செயல்களும் இறைவன் விருப்பப்படி நடக்கின்றன. எனவே சண்டை, சச்சரவு, உயர்வு – தாழ்வு வேற்றுமைகளை விட்டு உண்மையான மனத்துடன் இறைவனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எம்மனிதன் அருள், அறம், அன்பு, உண்மை உடையவனாகத் திகழ்கிறானோ அவனே வாழ்க்கையில் இன்பம் பெறுகிறான்” என்று குருநானக் உபதேசம் செய்தார்.

நானக்கின் உபதேசம் எல்லா மதத்தவர்களையும் கவர்ந்தது. திபெத்தியர்கள் குருநானக்ஜியைப் புத்தராகவே பார்த்தனர். “குரு கோம்ப்கா மஹராஜ்” என்று அவரை அழைத்தனர். இப்படி அவர் பயணித்த இடங்களில் சில அற்புதங்களையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

ஒரு சமயம், சிக்கிம் என்ற இடத்தில் இருக்கும் மக்கள் இவரிடம், அங்கு இருக்கும் நதி எப்போதுமே உறைந்து போய் இருப்பதால் அதை உபயோகிக்க முடிவதில்லை என்றும் குடிக்கக் கூட நீர் கிடைப்பதில்லை எனவும் கூறினர்.

நானக் அந்த நதியில் காலை வைத்தார். அந்த நதியும் அவரது பாதங்களைத் தொட்டு மகிழ்ந்து புனிதமானது. அவர் கால் விட்ட இடங்கள் எல்லாம் இன்று வரை உறையாமல் இருக்கிறதாம். அந்த இடத்தின் பெயர் “லாச்சன் கோம்பா (Lachen Gompa) எனப்படுகிறது. அங்கு இருக்கும் மக்கள் நானக்கை ‘ரிம்பொச்சே நானக்குரு’ என்று அழைக்கிறார்கள்.

இப்படி அவரது உபதேசத்தைக் கேட்டும், அற்புதத்தைக் கண்டும் பலரும் அவருடைய சீடர்களாகினர். அவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கிய நானக் அதன் பிறகு, குருநானக் என்று அழைக்கப்படலானார். குருநானக்கின் உபதேசம் மிகவும் வித்தியாசமானது.



குருநானக் அரேபியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற போது, ஒருமுறை அவர் மெக்காவின் பக்கம் கால் நீட்டிப் படுத்தார். உடனே அங்கிருந்த இசுலாமிய மதக்குருக்களுக்குக் கோபம் வந்தது. “அல்லவின் இல்லத்தின் பக்கம் காலை வைத்துப் படுக்காதே” என்று அவர்கள் கூறினார்கள். நானக் அவர்களிடம், “ஹாஜி அவர்களே, நீங்கள் சொல்வது சரிதான். அல்லாவின் இல்லம் எந்தப் பக்கம் இல்லையென்று சொல்லுங்கள். அப்பக்கம் என் கால்களை வைக்காமல் படுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

அனைவரும் இப்பதிலைக் கேட்டுத் திகைத்தனர். எல்லா இடங்களிலும் கடவுள் உண்டு என்பதை உணர்ந்த மதகுருக்கள் எப்பக்கம் காலை வைத்துப் படுக்கச் சொல்வது என்று புரியாமல் விழித்தனர்.

குருநானக் உபதேசம் செய்த முறை இத்தகையது. எவ்வளவு நேரடியாக, எளிமையாக இசுலாமிய மதக் குருக்களுக்கு அவர் தம் கருத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது உபதேசங்கள் மதக்குருக்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் மனத்திலும் நன்கு பதிந்தன. குருநானக் உபதேசங்களைக் கேட்டு பலரும், அவரது கொள்கைகளுக்கு உடன்பட்டு அவருடைய புதிய வழிமுறைக்கு வரத் தொடங்கினர்.

குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார்:

நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ எனும் மூன்று கடமைகள் மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை. இவற்றின் பொருளாவது தெய்வீகப் பெயரை (வாஹெகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது.

இந்து, இசுலாம், பௌத்தம், சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் “சத்திய கர்த்தர்” (கடவுள்) நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்க வந்தார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.

இந்தப் புனிதப் பயணத்தின் போது ஒரு நாள் இரவு, ஒரு புனித ஸ்தலத்துக்கு வந்தார். அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு புனித மடம் சென்றடைந்தார். அந்த மடத்தின் தலைவர், குருநானக்கைப் பற்றி நன்கு அறிந்தவர். ஆனால் மடத்தில் எந்த அறையும் காலியாக இல்லாததால், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.



தன் நிலையை நேரடியாக சொல்ல முடியாமல் தவித்த தலைவர் குருநானக்கிடம், பால் நிரம்பி வழியக் கூடிய நிலையில் இருந்த ஒரு கிண்ணத்தை நீட்டினார். அதன் உட்பொருளை, அதாவது மடம் நிரம்பி வழிகிறது, இடம் இல்லை என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார்.

மடத்தின் தலைவர், மடத்தில் தங்க இடமில்லை என்பதைத் தன்னிடம் சொல்ல முடியாமல் மறைமுகமாக சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட குருநானக் சிறிது நேரம் பால் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தார்.

பின்னர் தன்னிடமிருந்த மல்லிகைப்பூவிலிருந்து சில இதழ்களைக் கிள்ளி எடுத்துப் பாலின் மீது போட்டுக் கிண்ணத்தை மடத்தலைவரிடம் திரும்பவும் கொடுத்தார்.

மடத் தலைவரும், வழிய வழிய பால் ஊற்றப்பட்ட கிண்ணத்தில் மல்லிகை இதழ்களைப் போட்டதும் எந்த மாறுதலும் எற்படாதது போல தன்னை அங்கு அனுமதித்தால் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதைப் புரிந்து கொண்டு அவரை மடத்துக்குள் அனுமதித்தார்.

இப்படி குருநானக்கின் உபதேசங்களும், அணுகுமுறைகளும் பலரையும் அவர் வழியில் ஈர்த்தன. அவரால் ஈர்க்கப்பட்ட பலரும் அவர்களது சீடர்களாயினர். அவருக்குப் பல சீடர்கள் இருந்த போதும், பாலா, மர்தானா என்கிற இருவர் நண்பர்களாகவும், முக்கியச் சீடர்களாகவும் இருந்தனர். அவ்விரு சீடர்களும் அவருடன் எப்போதும் இருப்பர். அவர்களைப் பற்றியும் பல கதைகள் சொல்லப்படுவதுண்டு.

ஒரு முறை குருநானக் பஞ்சாப்பில் உள்ள அப்தால் என்ற கிராமத்திற்கு யாத்திரையாகச் சென்றார்.

அங்கு “பாவா வலீ கந்தாரி” எனும் ஆடம்பரமிக்க சந்நியாசி ஒருவர் இருந்தார். அப்பகுதியில் தண்ணீர் ஊற்று ஒன்றுதான் இருந்தது. அதுவும் அச்சந்நியாசியின் அதிகாரத்தில் இருந்தது.

குருநானக்குக்காக அவருடைய சீடர் மர்தானா பலமுறை நீர் கேட்டும் தர மறுத்தார் அச்சந்நியாசி. சீடர் மர்தானா குருநானக்கிடம் திரும்பி வந்து, அந்தச் சந்நியாசி நீர் தர மறுப்பதாகச் சொன்னார்.

உடனே குருநானக் தானிருந்த இடத்தினருகே தரையில் இலேசாகக் கீறினார். அந்த இடத்தில் நீரூற்று வந்தது. அங்கு தண்ணீர் நிறைய வந்தது. இதனால் அந்த சந்நியாசியின் நீரூற்று வற்றிப் போய் விட்டது. இதனால் கோபமடைந்த அந்த சந்நியாசி மலையுச்சிக்குச் சென்று ஒரு பெரிய பாறையை உருட்டி விட்டார். அதை நானக் தம் உள்ளங்கையினால் தடுத்து நிறுத்தினார். அந்த இடத்தில்தான் இன்று சீக்கிய மதத்தவர்களுக்கான சீக்கியரின் கோயில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அதனைப் “பஞ்சா சாஹிப்” என்று அழைக்கின்றனர். (இன்னும் அந்தப் பாறை கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அந்தப் பாறையில் குருநானக்கின் ஐந்து விரல்கள் அப்படியே பதிந்திருக்கிறது என்கிறார்கள்)



சீக்கியர்கள் உலகவாழ்க்கையைத் துறக்குமாறு அவர்களுக்குக் கூறப்படவில்லை. ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சீக்கிய வழிபாட்டில் மிகமுக்கிய பகுதி சேவா (சேவை) என்பதாகும். இதனை அதிக அளவில் சீக்கியக் கோவில்களில் (குருத்துவாராக்களில்) காணலாம். எந்த வகையான மதம் அல்லது சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களும் இக்கோயிலுக்குள் வரவேற்கப்படுவார்கள். அங்கு அனைவருக்கும் “லங்கார்” (அனைவருக்கும் உணவு) வழங்கப்படும். இதற்கு குருநானக்கின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

குருநானக்குக்கு 12 வயதாக இருந்த போது அவரது தந்தை அவரிடம் ஒரு சிறு தொகையை அளித்து ஏதேனும் வியாபாரம் செய்து காண்பிக்கச் சொன்னாராம். அந்தத் தொகைக்கு உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி அந்த ஊரின் ஏழை எளியவர்களுக்கு வழங்கி விட்டு, அதுவே சிறந்த வணிகம் என்று தந்தையிடம் கூறினாராம்.

அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலம் “ஸச்சா ஸௌதா” (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது.



இப்படி பல இடங்களுக்கும் சென்று, மனிதர்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளை அகற்றிடவும், புதிய வழிபாட்டு முறையை விளக்கியும் இருபத்தைந்து ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு குருநானக் கர்தார்பூர் என்ற ஊரில் வந்து தங்கினார். அதன் பின்னர் அங்கிருந்தவாறே போதனைகள் செய்தார்.

கடைசியாக 1539 ஆம் ஆண்டில் (மே மாதம் 7 ஆம் தேதி என்றும், செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் என்றும், வேறு சில நாட்களையும் குறிப்பிடுகின்றனர்) குருநானக் பூதவுடலைத் துறந்து அமரரானார். அந்த சமயத்தில் அவருடைய பல சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்களில் இந்துக்களும், இசுலாமியர்களும் குருநானக் தங்கள் குரு என்றும், அவரது உடலைத் தங்கள் சமய வழக்கப்படியே இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று சண்டையிடத் தொடங்கினர். சாதி, மத வேற்றுமைகளை ஒழிக்கப் பாடுபட்ட குருநானக்கின் சீடர்கள் இவ்வாறு சண்டையிட்டது அவ்ருடைய கொள்கைகளுக்கு முரணாக இருந்தது. கடைசியில் அங்கே அவர் உடலைப் போர்த்தியிருந்த துணியினை விலக்கினார்கள்.

என்ன ஆச்சர்யம்! அங்கு குருநானக் உடல் இல்லை. அவர் உடல் இருந்த இடத்தில் பூக்கள்தான் இருந்தன. அந்தப் பூக்களை எடுத்துப் பகிர்ந்து கொண்டு இரு சமயத்தைச் சேர்ந்தவர்களும் அவரவர் சமய வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்தனர்.

சமூக மறு சீரமைப்பாளராக வாழ்ந்த குருநானக் மறைந்து விட்ட பின்பு, அவருடைய கொள்கைகள், அவருக்குப் பின்பு வந்த சீடர்கள் மூலம் விரிவுபடுத்தப்பட்டு சீக்கிய சமயம் தோன்றியது. சீக்கிய சமய வழியிலான நடைமுறைகள் 1699 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் குரு கோபிந்த்சிங் என்பவரால் முறைப்படுத்தப்பட்டது.

குருநானக் மறைந்து விட்டாலும், அவரது உபதேசங்கள் இன்றும் சீக்கியர்கள் மட்டுமில்லாமல் அனைவரது மனத்திலும் பதிந்திருக்கின்றன. அவருடைய உபதேசங்கள் பல இருந்தாலும், “மனிதனாகப் பிறந்தும், யார் பிறருக்கு உபகாரம் செய்யவில்லையோ, அவருடைய பிறவி வீணே” என்ற உபதேசம் இன்றைய சமூகத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது.


தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் நான்காவது மகான்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p3d.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License