இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
அற்புத மகான்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

தேனி. எம். சுப்பிரமணி


இவ்வுலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் தேரே எனும் கிராமத்தில் குதிராம், சந்திரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். தேரே ஊரின் ஜமீன்தார் வழக்கு ஒன்றில் அவருக்குச் சாதகமாக, உண்மைக்கு மாறாக பொய்சாட்சி சொல்ல வேண்டுமென்று குதிராமைக் கட்டாயப்படுத்தினார். குதிராம் பொய்சாட்சி சொல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் கோபமடைந்த ஜமீன்தார் பல வழிகளில் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார். குதிராம் தொடர்ந்து அந்த ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, குதிராம், சந்திரமணி தம்பதியினர் அந்த ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த கமார்புகூர் எனும் மற்றொரு கிராமத்திற்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.



கமார்புகூருக்குச் சென்று வசித்து வந்த குதிராம், சந்திரமணி தம்பதியருக்கு 1836 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று நான்காவது குழந்தை பிறந்தது. நான்காவதாகப் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான “கதாதரர்” என்று பெயர் வைக்கப்பட்டது. கதாதரர் வளர்ந்து சிறுவனானதும், அந்த ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பிற்கு விளையாடச் சென்று விடுவான். சாதீயக் கொடுமைகள் அதிகமிருந்த அந்தக் காலகட்டத்தில், அனைத்து சாதிச் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு விளையாடுவான். அவனிடம் எவ்விதச் சாதிப் பாகுபாடுகளும் இல்லை. அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து சாதியினரிடமும் அன்பாக இருப்பான். இதனால் கிராமத்திலிருந்த அனைத்து சாதியினரிடமும் அவன் நற்பெயரைப் பெற்றான்.

மேற்கு வங்க மாநிலத்தில் கூத்தாடிகள் ஊர் ஊராகச் சென்று ராமாயணம், மகாபாரதம், பதிணென் புராணங்கள் போன்றவற்றிலிருந்து ஏதாவது ஒரு கதையை நடித்துக் காட்டி, மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வார்கள். இந்தக் கூத்தாடிகள் மூலம், எழுதப் படிக்கத் தெரியாத பலருக்கும் புராணக் கதைகள் நன்றாகத் தெரியும். கதாதரருக்குக் இந்தக் கூத்து பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கமார்புகூருக்கு அருகில் எந்தக் கிராமத்தில் கூத்து நடந்தாலும் அங்கு சென்று விடுவான். கூத்தைப் பார்த்து விட்டு வந்து, அதைப் போல் நடித்துக் காண்பிப்பான். சில சமயம், தம் நண்பர்களை அழைத்துக் கொண்டு மாந்தோப்பில் அதைப் போல நாடகம் நடத்திப் பார்ப்பான்.



கதாதரர் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து “ராதா சோகம்” என்ற நாடகத்தை நடத்தினான். இந்நாடகத்தில் கதாதரர் ராதை வேடமும், மற்றவர்களுக்கு தோழி வேடங்களும் போடப்பட்டன. இந்நாடகத்தில், கிருஷ்ணர் பிரிவால் வாடும் ராதைக்குப் பிராணபயம் நேரிடுமெனக் கண்டு கொண்ட தோழிகள், தங்களுள் ஒருத்தியான பிருந்தையைக் கிருஷ்ணரிடம் தூது அனுப்புவதாக ஒரு காட்சி உண்டு.

இக்காட்சியில் பிருந்தையாக வேடம் கொண்டவன், ராதையாக வேடம் கொண்ட கதாதரரிடம் சென்று, “நான் கிருஷ்ணரிடம் போய் என்ன சொல்வது?” என்று கேட்டான். கதாதரர் எந்தப் பதிலும் சொல்லாமல், கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லியபடி மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டான்.

இதைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. கதாதரர் தன்னை ராதை வேடம் கொண்டவன் என கருதாமல், உண்மையிலேயே கிருஷ்ணரைப் பிரிந்த ராதையாகத் துயரமடைந்தான்.

இவர் துயரமடைந்த நிகழ்வு, கண்ணபிரான் உரலுடன் சேர்த்துப் பிணிக்கப்பட்டதைக் கேட்டு, “எத்திறம் உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே” என்று ஸ்ரீ நம்மாழ்வார் மூர்ச்சித்துக் கிடந்தது மற்றும் ஸ்ரீ ராமபிரான் தனிமையில் கரதூஷணாதியருடன் போர் செய்கிறார் என்பதைக் கேட்டதும் சதுரங்க சேனைகளை அழைத்துக் கொண்டு உதவிக்கு ஸ்ரீ குலசேகராழ்வார் புறப்பட்டது போன்ற மனநிலைக்கு ஒப்பாகக் கொள்ளப்படுகிறது.



கதாதரருக்கு சிறுவயதிலிருந்தே உலகப்பற்று இல்லாமலிருந்தது. சன்னியாசிகளைக் கண்டால் போதும் அவருக்குள் தனி மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் பேசுவதும், அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் என்று அவர்களுடன் நெருக்கமாகி விடுவான்.

ஒருநாள் அவரது தாய் அவருக்குப் புது ஆடை கொடுத்து உடுத்தச் சொன்னார். அவர் அந்தப் புது ஆடையை உடுத்திக் கொண்டு ஜகன்நாத் யாத்திரை செல்லும் சாதுக்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் கௌபீனம் (கோவணம்) அணிந்திருந்ததைப் பார்த்ததும், தன் புது ஆடையை இரண்டாகக் கிழித்து தானும் கௌபீனம் அணிந்து கொண்டான். அப்படியே, அவனது தாயிடம் சென்று, “அம்மா, நானும் கௌபீனம் அணிந்து சன்னியாசியாகி விட்டேன்” என்றான்.

அவன் தாய் ஒன்றும் சொல்லவில்லை. கதாதரர் பிறந்த பின்புதான் அவர்கள் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறி, ஓரளவு நல்ல நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவன் என்ன செய்தாலும், அவனுடைய வீட்டிலிருப்பவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

குழந்தைப் பருவத்திலேயே ஆடல், பாடல்களிலும், கேளிக்கைகளிலும் பற்றுடையவராக இருந்த அவன் ஓவியங்கள் வரைவதிலும், மண் சிலைகள் செய்வதிலும் திறனுடையவராக இருந்தான். உடைந்து போன மண் சிலைகளை சரி செய்வது, சிலைகளுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை விருப்பத்துடன் செய்வான். அந்த சிலைகள் கடவுள் சிலைகளாக இருந்தால் அதை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவான். குழந்தையாக இருந்த போதே அவனுக்கு கடவுள் மீது ஈடுபாடு அதிகமாக இருந்தது.



அவனுக்கு ஒன்பதாவது வயதில் உபநயனம் செய்ய வேண்டி வந்தது. அவர்கள் சமூகத்தில், உபநயனத்தின் போது உயர் குலத்தில் பிறந்த பெண்ணிடம் பிச்சை ஏற்க வேண்டும் என்கிற வழக்கம் இருந்தது. ஆனால், கதாகரர் தனக்குப் பிடித்தமான ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம்தான் பிச்சை ஏற்பேன் என்று பிடிவாதம் பிடித்தான். வீட்டிலிருப்பவர்களும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தனர். குழந்தையாக இருந்த போதே ”அனைவரும் சமம்” என்கிற சமநிலைக் கருத்தை வெளிப்படுத்தி, அக்கிராமத்து மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.

கதாதரரின் சகோதரர் ராமகுமாரர் கல்கத்தாவில் ஏற்படுத்தி இருந்த பாடசாலையில் சேர்ந்து படிக்கும்படி அவரைத் தூண்டினார். அவரும் அங்கு சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அவருக்கு, அங்கு நடந்த வீண் வாதங்கள் அந்தக் கல்வி மேல் வெறுப்பு ஏற்படச் செய்தது. வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை விட, வாழ்க்கையில் ஈசுவரனை அடையும் வழிக்கான கல்வியே தனக்குத் தேவை என்று சொல்லி பாடசாலைக்குச் செல்ல மறுத்து விட்டார்.

அதன் பிறகு கிராமத்தில் இருந்த இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். ஆனால், அந்த சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

இந்நிலையில், கல்கத்தாவிற்கு வடக்கே ஐந்து மைல் தொலைவிலிருந்த தட்சிணேசுவரம் எனும் இடத்திலிருந்த காளி கோயில் ஒன்றில் அர்ச்சகராக இருந்த அவர் சகோதரர் ராமகுமாரர், கதாதரரை உதவிக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கோயிலில் சகோதரருக்கு உதவியாகச் சில பணிகளைச் செய்த அவருக்கு அந்தப் பணி மிகவும் பிடித்துப் போனது. அந்தக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உடனே சாப்பிட மாட்டார். அந்த பிரசாதத்தைக் கங்கைக் கரைக்குக் கொண்டு சென்று சுயம் பாகம் செய்து சாப்பிடுவார்.

சில ஆண்டுகளில், அவரது சகோதரர் ராம்குமார் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதன் பிறகு கதாதரர், அந்தக் காளி கோயிலின் அர்ச்சகரானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.

காளி பூஜை செய்வதில் அவர் காட்டிய பக்திக்கு அளவேயில்லை. அவர் காளியை தமது தாயாகவே நம்பினார். தாயைப் பார்த்துக் குழந்தை கொஞ்சுவது போல் பேசுவார். பின்னர் மந்திரங்கள் சொல்வார். ஆடுவார், பாடுவார். காளி தேவி தனக்குக் காட்சி அளிக்கவில்லையே என மனங்கசிந்து அழுவார். சில வேளைகளில் பக்தியுடன் காளி பூசைக்கு வைத்திருக்கும் பூக்களைத் தம் தலையிலே போட்டுக் கொள்வார். ஆரத்தி முடியும் காலம் முடிந்த பிறகும் கூட ஆரத்தியைச் சுற்றிக் கொண்டே இருப்பார். இப்படி வித்தியாசமான செய்கைகளால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். சிலர் கமார்புகூரிலிருந்த கதாதரரின் வித்தியாசமான செயல்கள் குறித்து அவருடைய தாய்க்குத் தகவல் அனுப்பினார்கள்.



அவருடைய தாயும் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால், மகனின் பைத்திய நிலை மாறும் என நினைத்தார். உடனே அவர் தன் மகனை தட்சினேஸ்வரத்திலிருந்து கமார்புகூருக்கு வரும்படி தெரிவித்தார். தாயின் வேண்டுகோள்படி கமார்புகூருக்குச் சென்ற கதாதரருக்கு, அவரது தாய், ராமச்சந்திர மகோபாத்தியாயர் என்பவரின் ஐந்து வயது மகளான சாரதாமணி தேவி என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகு தட்சினேஸ்வரம் திரும்பிய கதாதரர் மீண்டும் காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியைத் தொடர்ந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அவருடைய வித்தியாசமான செயல்கள் தொடர்ந்தன. அவரின் செயல்கள் முன்பை விட அதிகமானது. காளியை நோக்கி, “தாயே, எனக்கு எப்போது காட்சி தருவீர்கள்?” என்று கதறி அழுவார். அங்கிருந்த பலரும் இவருக்குப் பைத்தியம்தான் பிடித்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அவரை டாக்கா நகரத்திலிருந்த வைத்தியர் ஒருவரிடம் கொண்டு போய்க் காண்பித்தனர். அந்த வைத்தியர், “இவருக்குப் பைத்தியம் எதுவும் பிடிக்கவில்லை. கடவுள் பற்று அதிகமாகி இருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று சொல்லி அனுப்பினார்.

அதன் பிறகு பூசை செய்து வந்த கதாதரருக்கு, தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்குக் காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்கு எந்தப் பலனுமில்லை.

இதனால் பொறுமையை இழந்த அவர் ஒரு நாள், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். கதாதரரின் தீவிரமான பக்தியில் மனமிரங்கிய காளி தேவி அவர் முன்பு தோன்றினார். கதாதரர் மெய்மறந்து தரையில் வீழ்ந்தார். இரண்டு நாட்கள் வரை அப்படிக் கிடந்த அவர் பின்னர் எழுந்ததும் தனக்குள் பேரானந்தம் பெருகியிருப்பதையும் உணர்ந்தார்.

கதாதரர் பணியாற்றிய காளி கோயிலின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு என்பவர் இருந்து வந்தார். அவர் ஒரு நாள் கதாதரரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். கதாதரர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழையப் போனார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே கதாதரரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. அவர் நம்ப முடியாமல் தன் கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தார். அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். அவர் அப்படியே உறைந்து போனார்.



கதாதரர் அறையின் எல்லைக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. கதாதரர் காளியாகவும், சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு ஆச்சரியத்துடன் அங்கேயே நின்று கொண்டார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது நம் கற்பனையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

அறைக்கு வெளியே இருந்த அவர் தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். மீண்டும் அறைக்குள் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கே கதாதரர் சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் பயந்து போய் திரும்பி விட்டார்.

சிறிது நேரம் கழித்து கதாதரர் கோயிலுக்கு வந்தார். மதுர்பாபு கதாதரரிடம், தான் கண்ட காட்சியைப் பற்றிச் சொன்னார். ஆனால் கதாதரர், அதனை ‘ஆம்’ என்று ஒப்புக் கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. “எனக்கு ஏதும் தெரியாது! எல்லாம் இறைவன் செயல்” என்று மட்டும் கூறினார்.

மதுர்பாபு, தான் நேரில் கண்ட காட்சியைப் பற்றி பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார். கதாதரர் சாதாரண மனிதனல்ல அவர் பரமனின் அம்சமானவர் என்பதை உணர்ந்தார். அதன் பிறகு கதாதரரை பரமஹம்சர் என்றே அழைத்தார்.

பரமஹம்சர் நிர்விகல்ப சமாதியை அடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்காகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இக்காலத்தில் உணவு உண்ணாமல் பல நாட்கள் இருப்பார். சில வேளைகளில் பிறரறியாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வீட்டுக்குள் சென்று துடைப்பம் எடுத்து பெருக்குவார். அப்படியே, “தாயே, நான் பெரியவன் என்றும், பிராமணன் என்றும், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் நினைக்கிற மனோபாவம் என்னிடம் இருக்க வேண்டாம். இவர்கள் அனைவரும் பிரம்ம வடிவம் என்கிற எண்ணம் எனக்கு உண்டாகும்படி அருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வார். நிர்விகல்ப சமாதி நிலைக்கு வழிகாட்ட தனக்கு குரு எவருமில்லையே என பரமஹம்சர் வருத்தமடைந்தார்.

இந்நிலையில் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி ஒருவர் தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். அவர் பரமஹம்சருக்குக் கடுந்தவத்தால் ஏற்பட்ட தேக எரிச்சலையும், தீராப்பசியையும் போக்கி யோகாப்பியாசத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் அதில் தேர்ச்சியடைந்தார்.

அதன் பிறகு, பரமஹம்சர் அனைத்து ஞானங்களையும் உணர்ந்து ஞானியாக வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்திற்கேற்ற குரு கிடைக்காமல் கவலைப்பட்டார். இந்நிலையில், தோதாப்புரி என்ற ஒரு மகான், இவருக்கு குருவாக இருந்து வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். அவர் கதாதரருக்கு வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தார்.

பரமஹம்சர் அவருடைய உபதேசப்படி மூன்று நாட்கள் அப்பியாசம் செய்து நிர்விகல்ப சமாதி நிலை அடையப் பெற்றார். தோதாப்புரி நாற்பது வருடங்கள் கஷ்டப்பட்டு அடைந்த நிர்விகல்ப சமாதி நிலையை பரமஹம்சர் மூன்று நாட்களிலேயே பெற்றதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார்.

தோதாப்புரி ஆச்சர்யத்துடன், “பரமஹம்சரே, இனி நீ எனக்கு சீடனல்ல. எனக்கு சமானன்” என்று கூறி அவருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது இருவரும் தமக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவரிடமிருந்து தோதாப்புரி விடை பெற்றுச் சென்றார்.



தோதாப்புரி மகான் சென்ற பிறகு, பரமஹம்சர் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்தார். அதனால், அவருக்குக் கடுமையான ரத்தக் கடுப்பு உண்டாயிற்று. அவரது உடல்நிலை குணமானதும், அவருடைய பக்தி நிலை மாற்றம் கண்டது. இந்து சமயம் தவிர, பிற சமயங்களான இசுலாம், கிறித்தவம் போன்ற இதர தர்மங்களையும் கடைப்பிடிக்கத் தொடங்கினார். அதன் மூலம் பல தரிசனங்களைக் கண்ட அவர் அனைத்து சமயங்களும் உண்மை என்றும், கடவுள் ஒன்றே என்றும் உணர்ந்தார்.

“ஒவ்வொரு சமயத்தின் வழிபாட்டு முறைகளும், தர்ம முறைகளும் வேறுபாடுகளுடையதாக இருக்கின்றன. கடவுள் ஒருவரே. வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்தான். யார் எந்த முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் தேடும் கடவுளை அடைய முடியும்.” என்று பரமஹம்சர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் பரமஹம்சரின் மனைவி சாரதாமணி தேவிக்கு 18 வயது ஆகியிருந்தது. அப்போது, அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தட்சினேஸ்வரம் வரை கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார்.

பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம், “உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.” என்றார்.



சாரதாமணி தேவியும், “தாங்கள் என்னை மனைவியாக ஏற்க வேண்டாம். தங்களுக்குப் பணிவிடை செய்யும் சீடராக ஏற்றுக் கொண்டு, தங்களுக்கு அருகில் இருக்க அனுமதியளிக்க வேண்டும்” என்று வேண்டினார். பரமஹம்சரும் அதற்கு சம்மதித்தார். சாரதாமணி தேவி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வாழத் தொடங்கினார்.

காளி கோயில் நிர்வாகியாக இருந்த மதுர்பாபு குடும்பத்தினர் புனித யாத்திரை செல்ல விரும்பினர். அவர்கள் பரமஹம்சரையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் வைத்தியநாதம் என்னும் ஊரில் இருந்த மக்கள் உண்ண உணவு இல்லாமலும் உடுக்கத் தேவையான ஆடை இல்லாமலும் இருப்பதைக் கண்டு மன வருத்தமடைந்தார். அவர்களுடைய குறைகளைத் தீர்த்தால்தான் தாம் புனித யாத்திரையைத் தொடரமுடியும். இல்லையெனில் தன்னால், புனித யாத்திரைக்கு வர முடியாது என்று மதுர்பாபு குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

மதுர்பாபு குடும்பத்தினரும், அந்த ஊரிலிருந்த அனைவருக்கும் புதிய ஆடைகள் எடுத்துக் கொடுத்தும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் பரமஹம்சரின் விருப்பத்தை நிறைவேற்றினர். அதன் பிறகு அவர்களது புனித யாத்திரை தொடர்ந்தது. புனித யாத்திரையில் காசிக்குச் சென்ற பரமஹம்சருக்குக் காசியில் புகழ் பெற்று விளங்கிய திரைலிங்க சுவாமிகள் முதலிய பல மகான்களுடன் நட்பு ஏற்பட்டது. பரமஹம்சருக்குப் பிருந்தாவனத்திலேயே தங்கி விட வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், காளிதேவியைப் பிரிய மனமில்லாமல் தட்சினேஸ்வரத்துக்குத் திரும்பி வந்து விட்டார்.

அதன் பிறகு பரமஹம்சருடைய காலம் முழுவதும் அவரைத் தேடி வருபவர்களுக்கு உபதேசங்கள் செய்வதில்தான் கழிந்தன. அவரைத் தரிசித்து, ஞானோபதேசம் பெறுவதற்காக வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.



பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால், அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் இருந்தது. கேசவ சந்திர சென் என்பவர் அப்போது இந்தியாவில் இருந்த சிறந்த அறிவாளிகளுள் ஒருவராக இருந்தார். அவர் படிக்காத பரமஹம்சருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க வேண்டும் என்று கருதி அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றார்.

எல்லோருமே பரமஹம்சர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர். பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார். சென், ''கடவுள் இல்லை'' என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார். பின் அவர் ராமகிருஷ்ணரிடம், ''கடவுள் இருக்கிறாரா?'' என்று கேட்டார். அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்லச் சொன்னார்.

சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது 'பிரமாதம், பிரமாதம்! சரியாகச் சொன்னீர்கள்!' என்று பாராட்டிக் கொண்டிருந்தார். சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம், ''இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா?'' என்று கேட்டார். எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அவர் சொன்னார், ''நண்பரே! இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்” என்று இப்போது நம்புகிறேன்.'' எல்லோரும் புரியாமல் விழிக்க அவர் தொடர்ந்தார், ''கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்? எவ்வளவு தெளிவான பேச்சு! நான் ஒரு படிக்காதவன், ஏழை. என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்கக் கடவுள் தேவையில்லை. ஆனால் உங்களைப் போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்? சாத்தியமே இல்லை.'' கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார்.

அதன் பிறகு பரமஹம்சருக்கும் கேசவ சந்திர சென்னுக்குமிடையில் நட்பு உருவானது. பிரம்ம சமாஜம் அமைப்பின் தலைவரான கேசவ சந்திர சென் பரமஹம்சரின் அற்புதங்களைப் பல இடங்களில் வெளியிடத் தொடங்கினார். அதன் பிறகு பரமஹம்சரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் மேலும் அதிகமானது.

இதனால் கேசவ சந்திர சென்னுக்கும், பரமஹம்சருக்கும் நெருக்கம் அதிகமானது. பிரம்ம சமாஜம் அமைப்பினர் ஈசுவரனைத் தாயாக நினைத்து வழிபடும் கொள்கை பரமஹம்சரின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதே.

பரமஹம்சரின் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இப்படி வேண்டிச் சீடராகச் சேர்ந்து கொண்டவர்களில் நரேந்திரன் என்பவரும் ஒருவர். இந்த நரேந்திரன்தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் விவேகானந்தர் குருவான பரமஹம்சரிடம், தந்திரங்களின் வழிமுறைகளை விளக்கிச் சொல்லக் கேட்டார். பரமஹம்சரும் விவேகானந்தருக்கு தந்திரங்களின் பல வழிமுறைகளைப் பற்றிச் சொன்னார். ஆனால் விவேகானந்தர் பரமஹம்சரிடம், “நேரிடையான வழிகள் இருக்க பின்புற வழிகள் அவசியம்தானா? இதையெல்லாம் ஏற்க முடியுமா?” என்றபடி அதைப் பற்றி பலவாறாக விமர்சனம் செய்தார்.

அவர் விமர்சனத்தையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பரமஹம்சர், “நீ சொல்வதை சரியெனக் கொள்ள முடியாது. பின்புற வழியாகவும் சில ஜீவன்கள் கடைத்தேறியிருக்கின்றனவே! எனவே எதையும் வெறுக்காதே. ஒரு வீடு என்றால் வாசல் கதவு மட்டும் இல்லையே. கொல்லைக் கதவு, கழிவறை வழியாக உள்ளே நுழைய ஒரு வழி என்று பல வழிகளும் இருக்கின்றன. அந்த வழிகளில் எல்லாம் நாம் செல்ல வேண்டும் என்பது இல்லை. பழக்கமும், வழக்கமும் சேர்ந்த வழிகளான ஆசாரங்கள் ஏழுவகையாகச் சொல்வர். வேதாசாரம், வைஷ்ணவாசாரம், சைவாசாரம், தக்ஷிணாசாரம், வாமாசாரம், சித்தாந்தாசாரம், கௌலாசாரம் என்பன. இதில் முதல் நான்கையும் தக்ஷிணாசாரம் என்றும், பின் மூன்றையும் வாமாசாரம் என்றும் சொல்வர். தக்ஷிணாசாரம் போன்ற முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது. வாமாசாரம் போன்ற முறைகள் மக்களுக்கு ஏற்ற வழியன்று.” என்றும் விளக்கினார்.

விவேகானந்தரின் சிறப்பான கேள்விகளும், வாதங்களும் பரமஹம்சருக்கு மிகவும் பிடிக்கும். இதனால் பரமஹம்சருக்கு மற்ற சீடர்களை விட, இளம் வயதுச் சீடரான விவேகானந்தர் மீது மிகுந்த பற்று இருந்தது. விவேகானந்தர் ஒரு முறை ராமன், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் குறித்த தகவலைக் கேட்டுக் கொண்டிருந்த போது பரமஹம்சர், “ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!” என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்டார்.

அதன் பிறகு அவரது சீடர்கள் மற்றும் அவரைத் தேடி வரும் பக்தர்களால் ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டார். கதாதரராக இருந்து பின்னர் அவரது சீடர்களாலும், பக்தர்களாலும் பரமஹம்சர், ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டவர் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகானாக உயர்ந்தார்.

மகான் ராமகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்க வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர் தன்னைத் தேடி வருபவர்களுக்கு உபதேசம் செய்வதுடன், மற்ற நேரங்களில் சீடர்களுடன் ஆன்மீகம் குறித்து விவாதங்கள் புரிவது சர்வ சாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா என்பவர் தினமும் அவர் கூறும் கருத்துக்களையும், அவர் புரிந்த விவாதங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்றவுடன் தன் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டார். இந்தக் குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் “ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



அவருடைய உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இந்த உபதேசங்களுக்காக அவர் நன்கொடையாக எதையும் பெற்றுக் கொள்வதில்லை. செல்வத்தின் மேல் இவருக்குத் துளியும் பற்றுதல் இருந்ததில்லை. அவர் காளி கோயில் அர்ச்சகராக இருந்த போது, ஒரு கையில் மண், மற்றொரு கையில் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, “பணம் மண், மண் பணம்” என்று கூறிக் கொண்டே மாற்றி மாற்றி இரண்டையும் கங்கை ஆற்றில் விட்டெறிந்திருக்கிறார்.

ஒரு நாள் பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். ஆனால் பரமஹம்சர் அதை வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான்.

“சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?” என்று கேட்டார் பரமஹம்சர்.

“ஒரு தடையும் இல்லை!” என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான்.

அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்து விட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன்.

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார்.

ஆனால், இன்று பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் எவ்வளவு சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமென்ற மனமே இருப்பதில்லை. தனக்கு மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் தானே பணத்தைச் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இந்தப் பணம் அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியைத் தந்து விடாது. ஆன்மிகம் ஒன்றுதான் மன நிம்மதியைத் தரும்.

ஒரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் பரமஹம்சரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார்.

பரமஹம்சரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. “குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது அதிகமானதால் தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வந்துவிட்டது. என் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் எனக்கு தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் அந்த வியாபாரியைப் பார்த்து, "வியாபாரியான நீ நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினாய். உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள். அதில் இருந்த எண்ணெய்தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று கேட்டார்.

வியாபாரி, "குருவே! என்னை மன்னித்து விடுங்கள். நான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன். சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம்.

ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,'' என்று சொல்லியபடி பரமஹம்சரை வணங்கினார்.



ராமகிருஷ்ண பரமஹம்சரின் எளிமையான உபதேசங்கள் மட்டுமில்லை. அவர் சொல்லும் சிறு கதைகளும் பல கருத்துக்களைக் கொண்டிருக்கும். அவரது கதைகள் இன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கின்றன. அந்தக் கதைகளில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாமா?

ஒரு பிராமணன், ஒரு சன்னியாசி ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சன்னியாசி பிராமணனிடம், “இந்த உலகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது இல்லை” என்றார்.

பிராமணனுக்கு சன்னியாசியின் கருத்தில் நம்பிக்கை இல்லை.

“இரவும் பகலும் என் குடும்பத்துக்காக நான் உடலை வருத்திப் பாடுபடுகிறேன். நான் பாடுபடுவது யாருக்காக? என் குடும்பத்துக்காகத்தானே... என் குடும்பத்துக்காகப் பாடுபடும் எனக்கு என் குடும்பத்தினர் உதவ மாட்டார்களா? உங்கள் கருத்தில் உண்மையில்லை.” என்றான்.

சன்னியாசியும், “உனக்கு, உன் குடும்பத்தினர் உதவ மாட்டார்கள்” என்றார்.

பிராமணன், “அய்யா, எனக்கு சிறு தலைவலி என்றாலும், என் தாய் வருத்தப்படுகிறார். உயிரை விடக் கூடத் தயங்க மாட்டேன் என்கிறார். இதுபோல், என் மனைவி, மக்கள் எல்லோரும் என் மேல் பற்று கொண்டவர்கள். எனக்கு ஒரு சிறு துன்பம் என்றாலும் அவர்கள் துடித்துப் போய் விடுகின்றனர். இப்படிப்பட்ட என் குடும்பத்தினர் எனக்கு உதவ மாட்டார்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றான்.

உண்மையிலேயே, உனக்காக உன் குடும்பத்தில் எவரேனும் உனக்கு உதவ முன் வந்தால் அவர்கள் உன் மேல் அக்கறையுடையவர்கள்தான். ஆனால், உண்மையில் உன் எண்ணம் தவறானது” என்றார்.

பிராமணனுக்கு சன்னியாசியின் பேச்சு வித்தியாசமாகத் தெரிந்தது.

உடனே சன்னியாசி, “உன் மேல் உன் குடும்பத்தினர் பற்றுடன் இருக்கிறார்கள் என்பதை நானும் நம்புகிறேன். ஆனால், அவர்கள் யாரும் உனக்காக, ஒரு போதும் உயிரை விட மாட்டார்கள். வேண்டுமானால் இதைச் சோதித்துப் பார்க்கலாம். நீ வீட்டுக்குப் போனதும் வயிற்று வலி இருப்பதாகச் சொல்லிச் சத்தமிடு. அதன் பின்பு சில மணி நேரங்கள் கழித்து, நான் உன் வீட்டுக்கு வருகிறேன். நான் வரும் வரை உன் சத்தத்தை மட்டும் நிறுத்தாதே...” என்றார்.

அவனும் அதற்கு சம்மதித்து வீட்டிற்குச் சென்றான். வீட்டுக்குச் சென்றவுடன் வயிற்று வலி என வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியவில்லையே என்றபடி சத்தமிடத் தொடங்கினான். வைத்தியர்கள் பலர் வந்தனர். இருப்பினும், யாராலும் அவன் வயிற்று வலியையோ, அவன் சத்தத்தை நிறுத்த முடியவில்லை.

மகன் படும் கஷ்டத்தைப் பார்த்த அவன் தாய் கண்ணீர்விட்டபடி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவனுடைய மனைவியும், மக்களும் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தனர்.

தான் படும் கஷ்டத்தில் பங்கு கொண்டு அழும் தாய், மனைவி, மக்களைப் பற்றி அந்த சன்னியாசி வரட்டும்... என் குடும்பத்தினர் என் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பார்க்கட்டும்” என்று மனதுக்குள் நினைத்தபடி சன்னியாசி வருகையை எதிர்பார்த்தான்.

அப்போது சன்னியாசி அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர், பிராமணன் உடலைத் தொட்டுப் பரிசோதனை செய்வது போல் செய்துவிட்டு, “இந்த வியாதி மிகக் கடுமையானது. இதற்கு சிகிச்சை என்று எதுவுமில்லை. ஆனால், இவர் குணமடைய ஒரு வழி இருக்கிறது. இவர் குணமடைய இவருடைய உறவுக்காரர் யாராவது ஒருவர் உயிரை விட வேண்டும்.” என்றார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சன்னியாசி பிராமணனின் தாயைப் பார்த்து, “அம்மா, உங்கள் தள்ளாத வயதில் உங்களையெல்லாம் காப்பாற்றுகிற இந்த மகனை இழக்கும்படி நேருமானால், நீங்கள் இருப்பதும், இறப்பதும் ஒன்றுதான். உங்கள் மகனுக்காக நீங்கள் உயிரை விடத் துணிந்தால், உங்கள் மகனைக் காப்பாற்றி விடலாம். பெற்ற மகனைக் காப்பாற்றத் தாயைத் தவிர யார் முன் வருவார்?” என்றார்.

இதைக் கேட்ட அந்தத் தாய் கண்ணீருடன், “சுவாமி, என் மகனுக்காக நீங்கள் சொல்வதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். இருந்தாலும், என் மகன் உயிரைக் காட்டிலும் என் உயிர் மேலானதா? இருந்தாலும், என் இழப்பை இவனுடன் பிறந்த, என் மற்ற குழந்தைகள் தாங்க மாட்டார்கள். நான் இல்லாவிட்டால் அவர்கள் நிலை மிக மோசமாகி விடும் என்பதால் என் உயிரை விட முடியாது.” என்று சொல்லி மறுத்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட பிராமணனின் மனைவி சப்தமிட்டு அழுதபடி, அவளது பெற்றோர்களையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே, “இவர்களெல்லாம் என்னை நம்பித்தான் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லை என்றால் நான் என் உயிரை என் கணவனைக் காப்பாற்றுவதற்காக விட்டுவிடுவேன். என் கணவனுக்காக, இந்த உயிரைக் கூட என்னால் விட முடியாமல் போய் விட்டதே...” என்று அழுது புலம்பினாள்.

இப்படியே பிராமணன் உறவுக்காரர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்தனர். தங்கள் உயிரை விட ஒருவர் கூட தயாராயில்லை.

கடைசியாக பிராமணனைப் பார்த்து, “பார்த்தாயா? உனக்காக உன் குடும்பத்தினர் உயிரைத் துறக்கவும் தயாராக இருப்பார்கள் என்றாயே... உண்மையைத் தெரிந்து கொண்டாயா? உலகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதில்லை என்று புரிந்து கொண்டாயா?” என்றார்.

“ஆமாம். சுவாமி! நான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். இன்று முதல் நானும் சன்னியாசம் போகிறேன்” என்றபடி எழுந்து அவரைத் தொடர்ந்து போனான்.

இப்படி ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கதைகள் அனைத்தும் எவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையானது. ஆனால் அந்தக் கதைகளில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் சிறப்பானது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களும், கதைகளும் இன்றும் பயனுள்ளதாக இருக்கின்றன.

ராமகிருஷ்ணரின் சிறப்புக்கு முக்கியக் காரணம் அவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த சமய வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகள், அதைத் தகர்த்து உண்மை அறிய பின்பற்றவேண்டிய வழிமுறைகள், நம்மாலும் மகிச்சியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையை ராமகிருஷ்ணர் வாழ்க்கையும், அவர் அளித்த உபதேசங்களும் நமக்கு வழங்குகினறன.

மனித வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு 1885 ஆம் ஆண்டில் தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒன்றும் செய்யாமல் படுத்த படுக்கையாக இருந்தால் குணமடைய முடியும் என்று தெரிவித்தனர். ஆனால் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

இதனால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தொண்டைப் புண் மேலும் அதிகமானது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள், அவருடைய தொண்டைப் புண் நோயைக் குணப்படுத்தி விட வேண்டும் என்கிற ஆவலுடன் அவரை கல்கத்தாவிற்கு அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று, தனியாக சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன. தான் படிக்காத போதும், மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலருக்கும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றால் அது மிகையில்லை.


தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஆறாவது மகான்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p3f.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License