இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
அற்புத மகான்கள்

சீரடி சாய்பாபா

தேனி. எம். சுப்பிரமணி


உலக வாழ்க்கைப் பந்தங்களிலிருந்து விடுபட்டு இறைவனை நாடும் வழிமுறையை எளிமையாகச் சொன்னதுடன் தன் அற்புதச் செயல்களின் மூலம் தனக்கென தனி பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் சீரடி சாய்பாபா. இன்று அவர் இல்லாவிட்டாலும், அவர் வாழ்ந்த சீரடியில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அருளாசி வேண்டி அலை மோதிக் கொண்டுதான் இருக்கிறது. சாயிபாபாவை இந்துக்களும் இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.

சீரடி சாய்பாபா சீரடிக்கு வந்த பின்புதான் அவருடைய தகவல்கள் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளன. அதற்கு முன்பு அவர் 1838 ஆம் ஆண்டு பிறந்தார் என்கிற விவரம் தெரிந்தாலும் அவரது உண்மையான பெயர் என்ன? அவர் பிறந்த இடம் எது? பிறந்த தேதி என்ன? என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் பிறப்பு குறித்த செய்தியாகச் சொல்லப்படும் கதைக்குள் செல்வோமா?

பத்ரி என்ற ஊரில் ஹரிஸாடே, லட்சுமி தம்பதியருக்கு குழந்தை இல்லாத குறை மனக்கவலையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களுக்குக் குழந்தை ஒன்றை அளிக்க வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டிருந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வேண்டுதல் நிறைவேறியது. லட்சுமி கர்ப்பமடைந்து பத்து மாதங்களுக்குப் பின்பு அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அந்தக் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அறிவதற்காக, ஹரிஸாடே தன் மகனின் ஜாதகத்தைக் கணிப்பதற்காக உள்ளூர் சோதிடர் ஒருவரை அணுகினார்.

குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டு அந்த ஜாதகத்தைக் கணித்த சோதிடர், “இந்தக் குழந்தை மிக அற்புதமான குழந்தை. இக்குழந்தை பிற்காலத்தில் பலரும் போற்றும்படி வாழ்ந்து, புகழ் பெற்ற மகானாக உயர்ந்து விடுவார்” என்றார்.

ஹரிஸாடேயும் அவரது மனைவியும் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.



அப்போது சோதிடர், “இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.” என்றார்.

ஹரிஸாடேயும் அவரது மனைவியும், “நீங்கள் எங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியைத்தானே சொல்லி இருக்கிறீர்கள். நாங்கள் எதற்கு உங்களை மன்னிக்க வேண்டும்?” என்றனர்

சோதிடர், “உங்கள் மகன், மிகப் பெரிய மகான் ஆவது உங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய விசயம் என்றாலும், இந்தக் குழந்தையை நீங்கள் வளர்க்க முடியாது. இன்னும் சில காலத்தில் இந்தக் குழந்தையைத் தத்து (சுவீகாரம்) பெற்றுச் செல்ல ஒருவர் வருவார். அவர் உங்கள் குழந்தையைத் தத்து எடுத்துச் சென்ற சில நாட்களில் நீங்கள் இருவரும் மரணமடைந்து விடுவீர்கள்.” என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.

குழந்தையில்லாத தங்களுக்குக் குழந்தை அளித்த இறைவன், அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமையைத் தங்களுக்கு அளிக்கவில்லையே என்று வருத்தமடைந்தனர். இருப்பினும் தங்கள் குழந்தை மகான் ஆகப் போகும் மகிழ்ச்சியில் அந்த வருத்தத்தை மறந்து போனார்கள்.

“குழந்தை நம்முடன் இருக்கும் குறுகிய காலத்திற்காவது குழந்தையை அதிகமான அன்புடன் வளர்ப்போம்” என்று வளர்த்து வந்தனர்.



ஒரு நாள் லட்சுமி தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தாள். அதே சமயம் ஹரிஸாடேயும் திடுக்கிட்டு எழுந்தார். இருவர் முகத்திலும் பயம் தெரிந்தது.

லட்சுமி, “எனக்குத் தோன்றிய கனவில் நம் குழந்தையைக் கேட்டு பக்கிரி ஒருவர் வந்தார். கனவில் வந்த இறைவன் அந்தக் குழந்தையை அவரிடம் கொடுத்தனுப்பச் சொன்னார்” என்றாள்.

ஹரிஸாடேயும், “என்ன ஆச்சர்யம். எனக்கும் அதே கனவு வந்தது. அதனால்தான் நானும் திடுக்கிட்டு எழுந்தேன்.” என்றார்.

இதைக் கேட்ட லட்சுமியும், “காலை நேரத்தில் கண்ட கனவு பலிக்கும் என்பார்கள். சோதிடர் சொன்னது போல், நம் குழந்தையைக் கேட்டு ஒருவர் வந்து விட்டார்” என்றாள்.

கனவு கண்டு எழுந்த இருவருக்கும் அதற்குப் பின்பு தூக்கம் வரவில்லை.

காலை அவர்கள் வீட்டின் முன்பு பக்கிரி ஒருவர் வந்து நின்று, “அம்மா” என்று அழைத்தார்.

லட்சுமி வெளியே சென்று பார்த்தார். அங்கு அவர் கனவில் தெரிந்த பக்கிரி நின்று கொண்டிருந்தார். லட்சுமி அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“என்னம்மா இது கேள்வி? நான் தங்கள் குழந்தையைக் கேட்டு வந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் கனவில் தோன்றிய இறைவன் என்னிடம் தங்கள் குழந்தையைக் கொடுத்தனுப்பச் சொல்லியிருப்பாரே...? என் கனவில் தோன்றிய இறைவன் தங்கள் குழந்தையைப் பெற்றுச் செல்லும்படி சொன்னாரே...” என்றார் அந்த பக்கிரி.

இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் நோக்கத்துடன் லட்சுமி உள்ளே சென்று, தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் ஹரிஸாடேயும் வந்தார்.

அங்கு நின்றிருந்த பக்கிரியிடம் குழந்தையைக் கொடுத்து, “இந்தக் குழந்தை இனி தங்களுடைய குழந்தை. இறைவன் கட்டளைப்படி தங்களிடம் இந்தக் குழந்தையை ஒப்படைத்து விட்டோம். இனி இவனை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குங்கள்” என்று கண்ணீர் வடித்தபடி கூறினர்.

குழந்தையைப் பெற்றுக் கொண்ட அந்த பக்கிரி, “அம்மா அழாதீர்கள். இனி இந்தக் குழந்தை குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம். இவனைச் சிறப்பான முறையில் வளர்த்து ஆளாக்குவதுதான் எனக்கு இறைவன் இட்ட கட்டளை.” என்றபடி அங்கிருந்து சென்றார்.

அதன் பிறகு இருவரும், சோதிடர் சொன்னது போல் குழந்தையைத் தத்து கொடுத்த சில நாட்களில் மரணமடைந்தனர்.

குழந்தையைத் தத்து பெற்றுச் சென்ற அந்த பக்கிரி இசுலாம் சமயத்தவர் என்பதால் அந்தக் குழந்தைக்கு “கபீர்” என்று பெயர் சூட்டி வளர்க்கத் தொடங்கினார். அந்த பக்கிரியின் மனைவியும் அந்தக் குழந்தையைத் தான் பெற்றெடுத்த குழந்தையைப் போல் வளர்த்து வந்தார். குழந்தை கபீர் வளர்ந்து சிறுவனாக ஆன நிலையில், அந்த இசுலாமிய பக்கிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.



ஒருநாள் அவர் தன் மனைவியை அழைத்து, “எனக்கு மரணம் நெருங்கி விட்டது. நான் மரணமடைந்த பின்பு, நீயும், குழந்தையும் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள “சேலு” எனும் ஊருக்குச் செல்லுங்கள். அங்கு என் நண்பர் கோபால்ராவ் தேஷ்முக் எனும் ஜமீன்தார் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நான் அனுப்பியதாகச் சொன்னால் அவர் உனக்கும் உன் குழந்தைக்கும் தங்குவதற்கு வசதி செய்து கொடுப்பார்.” என்றார்.

சில நாட்களில் இசுலாமிய பக்கிரி மரணமடைந்தார். அவரது மனைவி, குழந்தை கபீருடன் சேலு எனும் ஊருக்குச் சென்று ஜமீன்தார் கோபால்ராவ் தேஷ்முக்கைச் சந்தித்து தன் கணவர் இறந்துவிட்ட தகவலைச் சொன்னார். அவர் இருவருக்கும் தங்குவதற்கு இடமளித்தார்.

சிறுவனாக இருந்த கபீருக்கு கோபால்ராவ் தேஷ்முக் பல சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். சிறுவன் வளர்ந்து இளைஞனாக ஆகிவிட்டான். கோபால்ராவ் தேஷ்முக்கிடம் கல்வி கற்ற பல சீடர்களில் கபீர் நல்ல அறிவுத் திறனுடன் இருந்தான். இதனால் கோபால்ராவ் தேஷ்முக் கபீர் மீது அதிகமான அன்பு செலுத்தினார்.

கோபால்ராவ் தேஷ்முக், தங்களை விட கபீர் மீது அதிகமான அன்பு செலுத்துவது மற்ற சீடர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள், கபீரைக் கொன்று விட வேண்டுமென்று திட்டம் தீட்டினர்.



ஒரு நாள் கோபால்ராவ் தேஷ்முக், கபீர் இருவரும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சீடர்களில் ஒருவன் கபீரைக் கொல்வதற்காக அங்கிருந்த செங்கல் ஒன்றை எடுத்து கபீரை நோக்கி வீசினான். அந்தக் கல் கபீர் மேல் படாமல் அவரருகே வந்து அந்தரத்தில் நின்றது. பின்னர் சப்தமின்றி கீழே விழுந்தது.

இதைக் கண்ட மற்ற சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதல் செங்கல்லை வீசிய சீடன் மீண்டும் ஒரு செங்கல்லை எடுத்துக் கபீரை நோக்கி வீசினான். அந்த செங்கல் கபீர் மேல் படாமல், அருகில் நின்ற கோபால்ராவ் தேஷ்முக் தலையில் பட்டது. இதனால், அவர் தலையிலிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது.

தான் வீசிய செங்கல் குருவின் தலையில் பட்டு காயமேற்படுத்தியதைக் கண்டு கல் வீசியவன் அதிர்ச்சியுற்றுக் கீழே விழுந்தான். கீழே விழுந்த அவன் கையைப் பிடித்துப் பார்த்த இன்னொரு சீடன், “நாடித்துடிப்பு இல்லை. இவன் மரணமடைந்து விட்டான்” என்று சொல்ல அங்கிருந்த மற்ற சீடர்கள் பயந்து போனார்கள்.

இதையெல்லாம் பார்த்த குரு கோபால்ராவ் தேஷ்முக், தன் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடி அவர்களை நோக்கி வந்தார். அவருடன் கபீரும் வந்தார்.

அங்கிருந்த சீடர்கள், “கல் எறிந்த சீடன் கபீரை நோக்கி செங்கல்லை வீசியதாகவும், அது கபீர் மேல் படாமல் தங்கள் மேல் பட்டு காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவன் மரணமடைந்து விட்டான்” என்றனர். கோபால்ராவ் தேஷ்முக் இறந்து போன சீடனின் கையைப் பிடித்து, நாடித்துடிப்பைப் பார்த்து, அவன் மரணமடைந்து விட்டதை அறிந்தார்.

கோபால்ராவ் தேஷ்முக், அந்த இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனிடம் ஒரு மாட்டைக் காண்பித்து, “இந்த மாட்டிலிருந்து பால் கறந்து கொடு” என்றார்.

அவன், “அய்யா, இந்த மாடு மலட்டு மாடு. இந்த மாட்டில் பால் கறக்க முடியாது” என்றான்.

“உண்மைதான். நீ அந்த மாட்டில் பால் கறக்க முடியாது. ஆனால், கபீர் கறந்தால் அந்த மாட்டில் பால் சுரக்கும்” என்று சொல்லியபடி, அங்கிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக் கபீரின் கையில் கொடுத்தார் கோபால்ராவ் தேஷ்முக்.

கபீர் அந்த மாட்டிடம் பால் கறந்து தன் குருவிடம் நீட்டினார். இதைக் கண்டு மாடு மேய்ப்பவனும் மற்ற சீடர்களும் ஆச்சர்யமடைந்தனர். குரு கபீரிடம் “நீ கறந்து கொண்டு வந்த பாலை இறந்து போனவன் வாயில் ஊற்றி, அவனை எழுப்பி விடு” என்றார்.

என்ன ஆச்சர்யம். கபீர் இறந்து கிடந்த சீடன் வாயில் சிறிது பாலை ஊற்றியதும் அவன் எழுந்து அமர்ந்தான்.

உயிர்த்தெழுந்தவனும், கபீர் மேல் பொறாமை கொண்ட மற்ற சீடர்களும் கபீரிடமும், குருவிடமும் மன்னிப்பு கேட்டனர். குரு கபீர் மேல் அதிகமான அன்பு கொண்டிருப்பதன் காரணத்தையும் உணர்ந்தார்கள்.

குருவின் மேல் பட்டு காயமேற்படுத்திய செங்கலை கபீர் மிகவும் பாதுகாப்போடு பாதுகாத்து வந்தார். சில மாதங்கள் சென்றன.



ஒரு நாள் குரு கபீரை அழைத்து, “என் மரணம் நெருங்கி விட்டது. நான் மரணமடைந்தவுடன் நீ இங்கிருக்க வேண்டாம். சீரடி என்ற ஊருக்குச் சென்று விடு. அங்கு உன்னுடைய அற்புதச் செயல்களால் மக்களுக்குப் பல்வேறு பயன்கள் கிடைக்கும். உனக்கும் நற்புகழும் கிடைக்கும்.” என்று சொன்னார்.

அவர் இப்படிச் சொன்ன சில நாட்களில் அவர் மரணமடைந்தார். அதன் பிறகு கபீர் தான் பாதுகாப்பாய் வைத்திருந்த செங்கலை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டு குருவின் கட்டளைப்படி சீரடி நோக்கிச் சென்றார்.

சீரடியை அடைந்த அவர் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றின் கீழ் போய் அமர்ந்தார். அந்த மரத்தினடியில், பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அவர் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதை அந்த ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர அவருக்கு உணவு கொடுக்கவோ, தண்ணீர் கொடுக்கவோ எவரும் முன்வரவில்லை.

அந்த ஊரிலிருந்த சிவன் கோயில் ஒன்றின் பூசாரியான மகல்சாபதிக்கு, “யார் இவர்? இப்படி உணவு, தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இப்படி அமர்ந்திருக்கிறாரே? இவரிடம் ஏதாவது சக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி ஒரே இடத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது” என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அவர் வேப்பமரத்தடிக்கு வந்தார்.

“ஐயா! தாங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? பல நாட்களாக இப்படி அமர்ந்திருக்கிறீர்களே...?” என்று கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்டு விழித்த கபீர், “உயிர் இருக்கும் வரைதான் பெயருக்கு மதிப்பு. உயிர் போய் விட்டால் அது சடலம். அவனுடைய பெற்றோர் வைத்த பெயர் பல நேரங்களில் காணாமல் போய் விடுகிறது. ஒருவன் பணக்காரனாகி விட்டால் அவனைப் பணக்காரன் என்கின்றனர். ஏழையாகி விட்டால் ஏழை என்கின்றனர். அந்த ஏழைக்குக் கூட உடுத்த ஏதாவது ஆடை இருக்கிறது. சொந்த பந்தங்கள் இருக்கிறது. ஆனால், எனக்கென்று எதுவுமில்லை. எதுவுமில்லாதவனை எப்படி அழைப்பீர்கள்? பக்கிரி என்றுதானே அழைப்பீர்கள்! அப்படியே அழையுங்கள்” என்றார்.

மகல்சாபதி, அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தார். பின்பு, “ஐயா! நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

அவருடைய கேள்விக்குப் பதிலளிக்காமல் கபீர் மவுனமாக இருந்தார்.

மறுநாள் மகல்சாபதி தன் நண்பர்களான அப்பாஜோக்லே மற்றும் காசிநாத் ஆகியோர்களிடம் ஊருக்குப் புதியதாக வந்திருப்பவரிடம் தான் பேசியதையும், அவர் சொன்ன பதிலையும் சொன்னார். இதைக் கேட்ட அவர்களிருவரும், தாங்களும் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

மறுநாள் மகல்சாபதி தன் வீட்டில் செய்த உணவை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைப் போய்ச் சந்தித்தார். அவர், “அல்லாமாலிக்” என்று சொல்லி அவர்கள் மூவரையும் வரவேற்றார்.

மகல்சாபதி வீட்டிலிருந்து அன்புடன் எடுத்து வந்து கொடுத்த உணவை ஏற்று சாப்பிட்டார்.

பக்கிரியின் பேச்சுக்கள் அந்த மூவருக்கும் புதுமையாகவும், பல நற்கருத்துக்களை வழங்குவதாகவும் இருந்தன. காலை முதல் இரவு வரை அவர் பேச்சைக் கேட்பதற்காகவே மூவரும் தினமும் அவரைச் சந்தித்து வந்தனர். அவர்கள் மூவரும், ஊரிலிருக்கும் மக்களுக்கு அவருடைய சிறப்பான பேச்சுக்களையும், அதில் அடங்கியிருந்த சிறந்த தத்துவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.

அதன் பிறகு, ஊரிலிருந்த மக்கள் அனைவரும் அவரை “பக்கிரி” என்று அன்புடன் பார்க்கத் தொடங்கினர். தங்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து அவரிடம் ஆசி பெற்றனர்.

ஊரிலுள்ள பலரும் அவரை பக்கிரி என்று அழைத்தாலும், அந்த ஊரிலிருந்த அமன்பாய்க்கு மட்டும் அவரை பக்கிரி என்று அழைப்பது பிடிக்கவில்லை.



ஒருமுறை அவளுடைய மகன் அவரை பக்கிரி என்று சொன்னதைக் கேட்டு அவன் கன்னத்தில் அறைந்தாள்.

“பெரியவர்களை அப்படி அழைக்கக் கூடாது. நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து காப்பவன் இறைவன். அவரை நாம் “பாபா” என்று அழைப்பது போல், இவரையும் “பாபா” என்றுதான் அழைக்க வேண்டும்” என்றும் சொன்னாள்.

அன்றிலிருந்து அந்தச் சிறுவன் மட்டுமல்ல. ஊர் மக்கள் அனைவரும் அவரை அன்புடன் “பாபா” என்று அழைக்கத் தொடங்கினர். பக்கிரியாக இருந்து பாபாவாக உயர்ந்த அவர், தன்னிடம் உடல்நலம் சரியில்லை என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கியே அவர்கள் நோயைக் குணப்படுத்தினார்.

இதனால் அந்த ஊர் மக்களுக்கு நோய் குறித்த அச்சமில்லாமல் போனது. அதே சமயம் அந்த ஊரில் வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருக்கு வருமானமும் குறைந்தது. இதனால் அந்த வைத்தியர் பாபாவின் மேல் கோபமடைந்தார். அவர் பாபாவிற்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்பத் தொடங்கினார்.

பாபாவைப் பொறுத்தவரை தன்னை வணங்குபவர்களைதான் காப்பாற்றுவார் என்றில்லை. “வாப்பா… அப்பா… பாபா…” என்று யார் எப்படி அழைத்தாலும் தக்க நேரத்தில் உதவுவது பாபாவின் குணம்.

ஒருநாள் பாபா, மசூதியில் இருந்து மறைந்து அவுரங்கபாத்துக்குச் சென்று விட்டார். அவர் அவுரங்காபாத்தில் ஓர் மலை மீது அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் குதிரையை காணாமல் தேடிக் கொண்டு வந்தார்.

பாபா அவரை “சந்த்பாடீல் என் அருகில் வா!” என்று அழைத்தார். பாபா அழைப்பதைக் கேட்காமல் அவர், குதிரையைத் தேடும் கவனத்திலேயே இருந்தார். பாபா மீண்டும் சற்று சத்தமாக அழைத்தார்.

திரும்பிப் பார்த்த அவர், “என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? இதற்கு முன்னால் என்னைப் பார்த்திருக்கிறீர்களா? ” என்று கேட்டார்.

“சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போன உன் குதிரையைப் பற்றி கேட்காமல், என்னைப் பற்றி கேட்கிறாயே” என்றார் பாபா.

“நான் காணாமல் போன குதிரையைத்தான் தேடுகிறேன் என்று உங்களால் எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது” என்றார்.

“உன் காணாமல் போன குதிரை எங்கிருக்கிறது என்று கூட என்னால் சரியாகச் சொல்ல முடியும்” என்றார் பாபா.

பின்னர் அவரே, “உன் குதிரை நீ வந்த வழியிலுள்ள ஓடைப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. போய் பிடித்து வா!” என்றார்.

பாபா சொன்ன இடத்திற்கு சற்று முன்னர், குதிரையைத் தேடிச் சென்று திரும்பியிருந்தாலும், அவர் சொன்னதற்கேற்ப சென்று பார்ப்போமே? என்றபடி அங்கு சென்றார். அங்கு தற்போது பாபா சொன்னவாறு, காணாமல் போன குதிரை ஓடையில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.

குதிரையைப் பிடித்துக் கொண்டு பாபா இருக்குமிடத்திற்குத் திரும்பினார்.

“அய்யா, நீங்கள் சொன்னபடி குதிரை கிடைத்து விட்டது.” என்றார்.

“கிடைக்க வேண்டிய நேரத்தில் அது சரியாகக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான். சரி வாருங்கள் நாம் இருவரும் புகைப்பிடிக்லாம்” என்றார் பாபா.

சாந்த்பட்டீல் தயங்கினார்.

“என்ன தயக்கம் சாந்த்பட்டீல்? ”

“ஒன்றுமில்லை அய்யா… புகைப்பிடிக்கும் குழாய், புகையிலை எல்லாம் வைத்திருக்கீறீர்கள். ஆனால் இதைப் பயன்படுத்த தண்ணீர், நெருப்பு வேண்டுமே. இந்தப் பாறையில் தண்ணீருக்கும் நெருப்புக்கும் எங்கே போவது?” என்றார் சாந்த்பட்டீல்.

“எங்கும் போக வேண்டாம். இருக்கும் இடத்திலேயே கிடைக்கும்” என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையைத் தட்டினார்.

என்ன ஆச்சரியம்… தண்ணீர் வெளிவந்தது. பக்கத்திலேயே மறுபடியும் தரையை தட்டினார். நெருப்பும் வந்தது. இதை கண்டு வியந்து போனார் சாந்த்பட்டீல். பஞ்சபூதங்களும் இவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். இவர் சாதாரண மனிதர் அல்ல. இவர் சக்தி வாய்ந்த மகான் என்று உணர்ந்தார்.

உடனே அவர் “மகானே… நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும்.” என்று கூறி பிடிவாதம் பிடித்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.



இதற்கிடையில் சீரடியிலிருந்த பாபா காணாமல் போய்விட்டது குறித்து அந்த ஊர் மக்கள் வருத்தமடைந்தனர். அவர் ஊரை விட்டுச் சென்றிருந்த சமயம் அந்த ஊர் முழுக்க காலரா நோய் பரவியிருந்தது. பாபாவின் மீது பொறாமையாக இருந்த அந்த ஊர் மருத்துவரும் இன்னும் சிலரும் அப்போது காலராவால் பாதிப்படைந்திருந்தார்கள்.

ஒருநாள் சாந்த்பட்டீல் பாபாவிடம், “என் உறவுக்காரப் பையன்… ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. நீங்களும் அவசியம் எங்களுடன் வர வேண்டும்.” என்று கூறி திருமண வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அவர் அழைத்துச் சென்ற திருமண வீடு சீரடியில்தான் இருந்தது. சீரடிக்கு திருமணக் குழுவினருடன் மீண்டும் திரும்பி வந்தார் பாபா. பாபா திருமணக்குழுவுடன் அந்த ஊருக்கு திரும்பி வந்தது அந்த ஊர் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவரைப் பார்க்க அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடினர். பாபா ஊர் திரும்பியதறிந்த மகல்சபாதி, “யா சாயி… வந்து விட்டாயா” என்று கதறி கொண்டே அங்கு வந்தார். பாபாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார். அன்றில் இருந்துதான் பாபாவாக அழைக்கப்பட்ட அந்த மகான், “சாய் பாபா.” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

சீரடி மக்கள், “பாபா, எங்கள் ஊரை இந்தக் காலரா நோயிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று அவரிடம் வேண்டியதுடன், “இனி இந்த ஊரை விட்டு வெளியில் எங்கும் செல்லாதீர்கள்” என்றும் கேட்டுக் கொண்டனர்.

சாய்பாபாவும், “காலரா நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறேன். இனி இந்த ஊரை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்” என்று உறுதியளித்தார்.

மறுநாள், பாபா ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதில் திருகையை வைத்தார். திருகையில் கோதுமையைப் போட்டு அரைக்கத் தொடங்கினார்.

பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பிச்சை எடுத்து வாழும் ஒருவருக்கு கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. அவர் ஏன் மாவு அரைக்கிறார்? என்று அவரிடம் கேட்க யாருமே முன் வரவில்லை. பாபா மாவரைக்கும் செய்தி ஊர் முழுக்கப் பரவியது.

ஊரில் இருக்கும் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர். அதில் சில பெண்கள் பாபாவின் கையை ஒதுக்கிக் திருகைக் குச்சியைக் கைப்பற்றி மாவரைக்கத் தொடங்கினர். பாபா முதலில் கோபமடைந்தாலும், அந்தப் பெண்களின் அன்பான நடவடிக்கையால் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாபா, கோதுமை மாவு அரைத்து முடிந்ததும் அந்த மாவைக் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வரச் சொன்னார். இப்படி நன்றாக அரைத்த மாவைப் பயன்படுத்த விடாமல் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டச் சொல்கிறாரே? என்று நினைத்தாலும் அவரிடம் கேட்க முடியாமல், அரைத்த கோதுமை மாவைக் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டித் திரும்பினர்.

அங்கிருந்தவர்கள் பாபாவிடம், “கோதுமை மாவை அரைத்து ஊர் எல்லையில் கொட்டி வரச் செய்தது ஏன்?” என்று கேட்டனர்.



உடனே பாபா, “நான் கோதுமை மாவை அரைக்கவில்லை. ஊருக்குள் நுழைந்த காலராவை அல்லவா அரைத்தேன்” என்றார்.

அதன் பிறகு அந்த ஊரில் காலரா நோய் காணாமல் போய் விட்டது. கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். பாபாவின் மேல் கோபம் கொண்டிருந்த அந்த ஊர் வைத்தியரும் தன் காலரா நோய் குணமடைந்தது அறிந்து மகிழ்ச்சியடைந்தார். பாபாவிடம் வந்து மன்னிப்பு கோரினார்.

பாபா சீரடியில் கோதுமை மாவை அரைத்த நிகழ்வு சாதாரணமானதாக இருந்தாலும் அது மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கோதுமையை அரைக்கவில்லை, பாவங்கள், உள்ளம், உடல் போன்றவற்றின் துன்பங்களையும், தன் அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரு கற்கள் அவர் திருகையில் இருந்தது. இதில் கர்மம் கீழ் கல்லாகும். பக்தி மேல் கல்லாகும். திருகையின் கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச எனும் மூன்று குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அகங்காரம் போன்றவைகளைத் துகள்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பதே பாபாவின் கருத்தாகும்.

ஒருநாள் சீரடியில் பலத்த மழையும், காற்றும் சேர்ந்து அடித்தது. பாபாவின் மேல் பற்று கொண்ட மகல்சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. அவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு பாபா அமர்ந்திருக்கும் வேப்ப மரத்தடிக்கு வந்தார்.

அங்கு பாபாவின் உடல் மணலாலும், இலைகளாலும் மூடியிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன மகல்சபாதி பாபாவின் உடலை மூடியிருந்த மணல் மற்றும் இலைகளை அகற்றினார். அங்கு பாபா நடந்த எதுவும் தெரியாமல் தியானத்தில் இருந்தார். பாபாவை நிஷ்டையில் இருந்து எழுப்பினார். இதைப் பார்க்க மக்கள் அங்கு கூடிவிட்டனர்.

“பாபா, நீங்கள் கொட்டும் மழையில் இந்த வேப்பமரத்தின் அடியில் இருப்பதற்குப் பதிலாக அருகிலுள்ள மசூதியில் கூட தங்கியிருக்கலாமே...?” என்றார்.

உடனே பாபா, “எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் எதுவும் தேவையில்லை” என்று மறுத்தார்.

“நீங்கள் இப்படிச் சொன்னால், நாங்களும் எங்கள் வீட்டிற்குச் செல்லாமல் உங்களுடனே இருக்கிறோம்.” என்று அவர்கள் சேர்ந்து சொன்னார்கள். அவர்களின் அன்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாபா மசூதியில் தங்க சம்மதித்தார்.



மசூதியில் தங்கியிருந்த சாயிபாபா இளம் பருவத்தில் தம் தலைமுடியை வளர்த்து வந்தாலும் அதை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைப் பற்றிய பாதுகாப்பிலும் அதிக ஆர்வம் காட்டிக் கொள்வதுமில்லை. ஆனால், அவர் தங்கியிருந்த இடத்தினருகில் மலர்த் தோட்டம் ஒன்றை உருவாக்க விரும்பினார். இதற்காகச் சில மலர்ச் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். அந்தச் செடிகளுக்குத் தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்காக வாமன் தத்யா என்பவரிடம் இரண்டு மண்பானைகளை இலவசமாகப் பெற்றார். கிணற்றிலிருந்து நீர் இரைத்து, மண் பானைகளில் ஊற்றி அவரே சுமந்து கொண்டு வந்து ஊற்றி மலர்ச் செடிகளைப் பாதுகாப்பாய் வளர்த்து வந்தார்.

மண்பானைகளை அவர் தங்கியிருந்த வேப்பமரத்தடியில் வைத்திருப்பார். அந்த மண்பானைகள் நெருப்பில் சுடாத பானைகள் என்பதால் அது மறுநாள் பயன்படுத்த முடியாதபடி உடைந்து போய்விடும். இப்படியே தத்யா மூன்று ஆண்டுகளுக்கு தினமும் சுடப்படாத மண்பானைகளைக் கொடுத்து வந்தார். பாபா, சுடப்படாத மண் பானைகளில் நீர் கொண்டு வந்து அந்த இடத்தை அழகியப் பூந்தோட்டமாக உருவாக்கினார். அந்த இடத்தில்தான் தற்போது “பாபா சமாதி மந்திர்” உள்ளது.

சாயிபாபா பொதுவாக மக்களுடன் கலந்து பேசுவதில்லை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார். பகற்பொழுதில் வேப்பமரத்தடியில்தான் அமர்ந்திருப்பார். சில சமயம், கிராம எல்லையிலுள்ள வாய்க்கால் அருகிலிருக்கும் ஆலமரத்தடிக்குச் சென்று அமர்ந்திருப்பார். மாலை நேரங்களில் குறிக்கோளின்றி நடந்து செல்வார்.

பாபா பகற்பொழுதில் அவருடைய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். இரவில் உதிர்ந்து கொட்டும் மசூதியில் படுத்திருந்தார். இந்த சமயத்தில் பாபாவிடம், ஹூக்கா, புகையிலை, ஒரு தகர டப்பா, நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டு துணி, ஒரு குச்சி போன்ற சிறு சிறு உடமைகள் மட்டுமே இருந்தன. தலையிலுள்ள அச்சிறு துணி நன்கு முறுக்கப்பட்ட முடியைப் போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது. இத்துணி பல வாரங்களாகத் துவைக்கப்படாமல் இருக்கும். காலணி எதுவும் அவர் அணிவதில்லை. பெரும்பான்மையான நாட்கள் சாக்குத் துணி துண்டே அவருடைய ஆசனமாகும். ஒரு கௌபீனத்தை (கோவணத்தை) அணிந்திருந்தார். குளிரை விரட்டுவதற்காக புனித நெருப்பின் முன்னால் இடதுகையை மரக்கட்டைப் பிடியின் மேல் வைத்தபடி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். எப்போதும் “கடவுளே ஒரே உரிமையாளர்” எனும் பொருளில் “அல்லா மாலிக்” என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

பாபாசாஹேப் என்பவரின் தம்பி நானாசாஹேப் என்பவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தும் குழந்தைகள் எதுவுமில்லை. இதனால் பாபாசாஹேப், தன் தம்பி நானாசாஹேப்பை பாபாவிடம் ஆசி பெற்று வரும்படி அனுப்பினார். பாபாவிடம் அவர் ஆசி பெற்றுச் சென்ற ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் பாபாவின் சக்தி பற்றிய செய்தி அஹமத் நகர் வரை பரவியது. அதன் பிறகு சாயிபாபாவைப் பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதுபோல், கோபர்காங்வின் ஆய்வாளராக இருந்த கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் அவருக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. அவருக்கு சாய்பாபாவின் அருளினால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு சீரடியில் சிறப்பான ஒரு திருவிழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதைச் சீரடி சாயிபாபா பக்தர்களாக இருந்த சிலரிடம் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். இதை பாபாவிடம் தெரிவித்து அதற்கான அனுமதியையும் ஆசியையும் பெற்றனர். இந்த விழாவை இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்களுக்கும் சேர்ந்த ஒரு பொது விழாவாக அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இசுலாமியப் பண்டிகையான உரூஸ், ஸ்ரீ ராம நவமி தினத்தன்றுதான் வருகிறது என்பதைப் பாபாவிடம் பேசி முடிவு செய்தனர். இவர்கள் திருவிழா கொண்டாட விரும்பிய நிலையில், சீரடி ஊருக்குத் தண்ணீர் அளித்துக் கொண்டிருந்த இரண்டு கிணறுகளில், ஒன்றில் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. வற்றிப் போன அந்தக் கிணற்றில்தான் நல்ல தண்ணீர் இருந்தது. இன்னொரு கிணற்றுத் தண்ணீர் உப்பு நீராகும். சாயிபாபாவிடம் இது பற்றித் தெரிவித்தனர். அவர் அங்கிருந்து அந்த உப்புத் தண்ணீர் கிணற்றுக்குச் சென்றார். அந்தக் கிணற்றில் சில மலர்களை வீசினார். அந்தக் கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறியது.

திருவிழா ஊர்வலத்துக்காக கோபால்ராவ் குண்ட் சாதாரணமான ஒரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். அதே சமயம் நானா சாஹேப் என்பவர் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் மற்றொரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். இரண்டு கொடிகளுமே தயாரிக்கப்பட்டு விட்டதால் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சாயிபாபாவினால் “துவாரகமாயி” என்று அழைக்கப்பட்ட மசூதியின் இரு மூலைகளிலும் அந்தக் கொடிகள் ஊன்றப்பட்டன.

இத்திருவிழாவில் கோர்ஹாலாவைச் சேர்ந்த சாயிபாபாவின் இசுலாமியப் பக்தரான அமீர்சக்கர் தலாலுக்கு சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. சாயிபாபாவை முகமதிய ஞானியராகச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் “தாலி” எனும் தட்டுக்களில் வைத்து, இசையுடனும், நறுமணப் பொருட்களின் வாசனையுடனும் எடுத்து வரப்பெற்று கிராமம் முழுக்கக் கொண்டு சென்றனர். கடைசியாக மசூதிக்குச் சென்று திரும்பி அந்த சந்தனப் பொருட்களை “நிம்பா” என்னும் குழிகளில் கொட்டினர்.

இப்படி ஒரே நாளில், இந்துக்களின் கொடி ஊர்வலமும், இசுலாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலமும் எவ்விதப் பிரச்சனைகளுமின்றி அருகருகே கொண்டு செல்லப்பட்டன. இந்த விழா வருடந்தோறும் படிப்படியாக மாற்றமடைந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 8ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மாறிவிட்டது.

பாபா இந்துவா அல்லது இசுலாமியரா என்ற கருத்து வேறுபாடு பலருக்கும் இருப்பது உண்டு. இந்துக்களின் ஸ்ரீ ராம நவமித் திருவிழாவைப் போல் இசுலாமியர்களின் சந்தனக்கூடு விழாவையும் அவர் அனுமதித்தார். கோகுலாஷ்டமியின் போது “கோபால்காலா” திருவிழாவை உரிய முறைப்படி செய்வித்தார். “ஈத்” திருவிழாவின் போது இசுலாமியர்களின் நமாஸ் தொழுகையை தமது மசூதியில் அனுமதித்தார். அவருக்கு இந்து வழக்கப்படி காது குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் இசுலாமியர்கள் வழக்கப்படி சுன்னத் செய்து கொள்ளவில்லை. ஆனால் சுன்னத் செய்யும் வழக்கத்தை அவர் ஆதரித்தார். இசுலாமியர்களுக்கான மசூதியில் அவர் வாழ்ந்தார். இந்துக்களைப் போல் “துனி” எனும் அகண்ட நெருப்பை எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.

மேலும் இசுலாமிய சமயத்திற்கு விரோதமான மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார். அதாவது திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.

சாயிபாபாவின் அற்புதங்களைக் கண்ட, இந்து சமயத்தில் அதிகமான பற்றுடையவர்கள் (பிராமணர்கள், வேத சாத்திரங்கள் கற்ற அறிஞர்கள்) பலர் சாயிபாபா முன்பு தங்கள் வைதீக முறைகளை விட்டுவிட்டு, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினர். சாயிபாபா தன்னிடம் அருளாசி பெற வருபவர்களிடமிருந்து தட்சிணையைப் பெற்றார். தட்சிணை மூலம் பெறப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை தர்மத்திற்கும், மீதமுள்ள தொகையை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார். அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் “துனி” எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார். இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது. அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த உதியின் மூலம் சாயிபாபா எதைத் தெரிவித்தார்? இவ்வுலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் நிலையற்றது. பஞ்சபூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடல் அனைத்து இன்பங்களையும் அடைந்த பின்னர் இறுதியில் சாம்பலாக்கப்படும். இந்த உடல் சாம்பலாகப் போகும் உண்மையைத் தன் பக்தர்களுக்கு உணர்த்தவே அவர் உதியை வழங்கினார். “பிரம்மம்” ஒன்றே உண்மையானது. பிரபஞ்சம் எனப்படும் இவ்வுலகம் நிலையற்றது என்றும், தாய், தந்தை, மக்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள் அனைத்தும் உண்மையில் நம்முடையது அல்ல. இவ்வுலகிற்குத் தனியாக வந்த நாம், தனியாக இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

உண்மைப் பொருள்களைப் பகுத்துணரும் விவேகம், நிலையற்ற பொருட்களின் மேல் பற்றின்மை போன்ற தத்துவத்தை தனது தட்சிணை, உதி ஆகியவற்றின் வழியாக அவர் தெளிவாகவே அறிவுறுத்தினார். தட்சணையை அவர் கேட்டுப் பெற்றார். உதியை அதற்குப் பதிலாகத் திருப்பி அளித்தார். அதாவது தட்சணை மூலம் இவ்வுலகத்தின் மேல் பற்றின்மையையும், உதி மூலம் உண்மையை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டினார்.

உலகத்தின் உறவுகளிடம் பற்று கொண்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனை அடைய வழிகாட்டிய சாயிபாபா, சீரடிக்கு வரும் போது தன்னுடன் கொண்டு வந்த செங்கல்லை மட்டும் மசூதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மசூதியில் இரவு நேரத்தில் அந்த செங்கல் மீது சாய்ந்து கொண்டுதான் இருக்கையில் அமர்வார். அவர் இதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சாயிபாபா இல்லாத நேரத்தில், தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் அந்த செங்கல்லைத் தன் கையில் எடுத்தான். அது அவனிடமிருந்து கை தவறிக் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. இதை சாயிபாபா அறிந்ததும், அந்த செங்கல்லின் இழப்பு குறித்து பெரிதும் கவலை கொண்டார்.

“இன்று உடைந்தது சாதாரண செங்கலல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்து விட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் துணையுடன் நான் எப்போதும் ஆன்மத் தியானம் செய்தேன். அது என் உயிரைப் போன்று பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது” என்று புலம்பி அழுதார். ஒரு ஜடப்பொருளான செங்கல்லுக்கு சாயிபாபா ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிறார் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவரிடம் யாரும் இது குறித்துக் கேட்டுக் கொள்ளவில்லை.

மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் நிலையில் அவன் மனதை இந்த உலக விசயங்களிலிருந்து மீட்டு ஆன்மிக விசயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் மத சம்பந்தமான நூல்கள் பாராயணம் செய்யப்படுவது இந்து சமயத்தினரிடையே வழக்கத்திலிருக்கும் ஒன்று. கடவுளின் அவதாரமாக இருந்த சாயிபாபாவிற்கு இது தேவையற்றது எனினும் மக்களுக்கு வழிகாட்டும் விதமாக இவ்வழக்கத்தை அவரும் பின்பற்றினார். தாம் விரைவில் மரணமடையப் போகிறோம் என்பதை உணர்ந்து, வஜே என்பவரை அழைத்து, தம் முன்பு ராம விஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார்.

வஜே முதலில் வாரம் ஒருமுறை அதைப் படித்தார். பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி சொன்னார். அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார். இப்படி பதினொன்று நாட்கள் சென்றன. பின்னர் மூன்று நாட்கள் படித்தார். ஆனால் வஜே மிகவும் களைப்பு அடைந்து விட்டார். அதன் பிறகு சாயிபாபா அவரைப் போகச் சொல்லி விட்டார். அதன்பிறகு ஆத்ம போதத்தில் மூழ்கியவராய் தன் மரணத்தை எதிர் கொண்டார். அன்றிலிருந்து தனது காலை சஞ்சாரத்தையும், பிச்சை பெற்று வரும் நியமத்தையும் நிறுத்தி மசூதியிலேயே தங்கி விட்டார். அந்த சமயத்தில், அவருடைய பக்தர்களில் சிலர் அவருடனேயே இருந்தனர்.

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் மகான் சாயிபாபா இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். சாயிபாபா மறைவுச் செய்தி சீரடி மக்களையும் அவர் மேல் அன்பும் பக்தியும் கொண்டிருந்த பகதர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில் சாயிபாபாவின் உடலை எப்படி அடக்கம் செய்வது? என்ற கேள்வி எழுந்தது. சிலர் சாயிபாபாவின் உடலை திறந்த வெளியில் அடக்கம் செய்து அதன் மேல் சமாதி கட்ட வேண்டும் என்றனர். சிலர் வாதாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் அடக்கம் செய்யக் கூடாது என்றனர். இந்தக் கருத்து வேறுபாடு முப்பத்தாறு மணி நேரம் தொடர்ந்து நீடித்தது. இறுதியாக வாதாவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் உடல் வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்குகள் அனைத்தும் பாலாசாஹேப் பாடே மற்றும் சாயிபாபாவின் மேல் அதிகமான பற்றுடைய அவருடைய பக்தர்களில் ஒருவரான உபாசினி ஆகியோராலும் செய்யப்பட்டது.

சாயிபாபாவை இந்துக்களும், இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

சாயிபாபா நோய் தீர்க்கும் அற்புதங்களை நிகழ்த்தினார். குழந்தையில்லாத பலருக்கும் குழந்தை கிடைக்க அருளினார் என்றும்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு செய்த பல வகையான அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. இவையனைத்தும் சாயி அற்புதங்கள் (சாயிலீலைகள்) என்று இன்றும் போற்றப்படுகின்றன. அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாலும், தன்னிடம் (சீரடி) தேடி வருபவர்களுக்கு இன்றும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறார்.


தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p3e.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License