தொழுது முடித்து தொழுகை விரிப்பை மடித்து பத்திரப்படுத்தினார் அறுபது வயது அஹமது கபீர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா!” ராவுத்தர் முஸ்லிம்கள் தாத்தாவை அப்பா என்றே அழைப்பர்.
“வஅலைக்கும் ஸலாம் அப்துல் பத்தா!”
பத்து வயது சிறுவன் ஓடிப்போய் தாத்தாவின் கால்களை கட்டிக் கொண்டான்.
“அப்பா! தொழுகையின் போது நீங்கள் செய்த சஜ்தா பற்றி சில கேள்விகள்!”
“கேள்!”
“சஜ்தா என்றால் என்ன?”
“சுஜுத் என்கிற அரபிவார்த்தை சஜ்தா ஆகியிருக்கிறது. சஜ்தா என்பது முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனின் தாள் பணிவது. சஜ்தா ஒவ்வொரு ரக்காயத்திலும் இருமுறை செய்யப்படும். ‘ஏழு உறுப்புகளின் மீது சஜ்தா செய்யும்படி நான் ஏவப்பட்டுள்ளேன். நெற்றி, இருகைகள், இருமூட்டுகள், இரு பாதங்கள் என இவற்றின் மீது சஜ்தா செய்ய வேண்டும்’ என நூல் புகாரியில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ஒரு ஹதீஸில் எடுத்துரைக்கிறார்!”
“ஓஹோ!”
“நெடுஞ்சாண்கிடையாக வணங்கும் போதும் அந்த வணக்கத்தின் போது இரந்து வேண்டும் போதும் ஓர் அடிமை இறைவன் என்கிற எஜமானனுக்கு மகா நெருக்கமாகிறான்!”
“அடிமை என்கிற வார்த்தை பிரயோகம் சரிதானா அப்பா?”
“பொருளால், பதவியால், அதிகாரத்தால் ஒருவன் உன்னை அடிமையாக்கினான் என்றால் அவனை எஜமானன் என்று ஏற்று அவனின் தாள் பணிவது அவமானமான செயல். உன்னையையும் உன்னை சுற்றி பிரபஞ்சத்தையும் உருவாக்கி நொடிக்கு நொடி உன் மீது ஆளுமையை செலுத்தி வரும் இறைவன் என்கிற ரப்புவுக்கு நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் அடிமைகள்தானே? அடிமை என்று இறைவன் நம்மை பாவிக்கவில்லை. நன்றியுணர்வுடன் நாம்தான் இறைவனை எஜமானன் என்று பாவிக்கிறோம்!”
“சஜ்தா எப்போது தொடங்கியது?”
“இறைவன் ஆதம் நபிகளை படைக்கும்போது மலக்குகளை ஆதமுக்கு சஜ்தா செய்ய சொல்கிறான். மலக்குகள் சஜ்தா செய்கின்றனர். இப்லீஸ் சஜ்தா செய்ய மறுக்கிறான். அத்துடன் மறுமைநாள் வரைக்கும் ஆதமின் மீதும் ஆதமின்
சந்ததிகள் மீதும் போர் தொடுப்பதாக இப்லீஸ் சூளுரைக்கிறான்...”
“ஒரு சந்தேகம் அப்பா!”
“என்ன?”
“சஜ்தா இறைவனுக்குரியதுதானே? மலக்குகள் ஏன் மனிதருக்கு சஜ்தா செய்ய வேண்டும்? அப்படி என்றால் மனிதர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் ஆகி விடுவார்களே?”
“நல்லகேள்வி. ஆதமின் மீதான மலக்குகளின் சஜ்தா மரியாதைக்கும் அங்கீகாரத்துக்கும் உட்பட்டது. அது மனிதத் தோன்றல்களுக்கான ஆதரவு சமிக்ஞை!”
“வாவ்!”
“சஜ்தா இறை நம்பிக்கையாளர்களையும் நாத்திகர்களையும் இனம் கண்டு பிரிக்கிறது. சஜ்தா உடல் ரீதியான பணிவு. சஜ்தா ஆன்மரீதியான தூய்மை படுத்தல். சஜ்தா இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சைகை. சஜ்தா இறைவனின் கருணையை கோரும் ஆன்மிக ஆலாபனை. தொழுகையில் ஒவ்வொரு சஜ்தாவின் மீதும் ‘சுபான ரப்பியல் ஆலா’ என மும்முறை ஓத வேண்டும். இதன்பொருள் ‘மகத்தான இறைவனுக்கே எல்லாப்புகழும்’ என்பதே!”
முறுவலித்தான் அப்துல் பத்தா.
“தொழுகையின் ஆன்மா சஜ்தா. சஜ்தா பற்றி திருக்குர்ஆனின் 14சூராக்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சூரா அல் அராப், சூரா அல் ராத், சூரா அல் நபி, சூரா அல் இஸ்ரா, சூரா மர்யம், சூரா அல் ஹஜ், சூரா அல் சஜ்தா, சூரா சாத், சூரா அல் இன்ஷிகாக், சூரா அல் அலாக் முதலியன அந்த சூராக்கள். மிகமிக அதிகமாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் அன்றாடம் செயல்படுத்தப்பட்ட வழிமுறை சஜ்தாதான்!”
“சஜ்தா பற்றிய ஒரு சூராவை முழுமையாகக் கூறுங்க அப்பா!”
“மீண்டும் அவனுக்கு எப்போதும் அடிபணியாதீர்கள். ஓ நபியே! மாறாக அல்லாஹ்வுக்கு நெருக்கமாக நின்று சஜ்தாவை தொடருங்கள்!”
“ஓவ்!”
“ஆதம்நபிகள் சஜ்தாவின் ஆயத்தை ஓதி சஜ்தா செய்கிறார். அதனைக் கண்ட ஷைத்தான் ‘சஜ்தா ஆயத்து ஓதிய ஆதமுக்கு சொர்க்கமும் ஓதாத எனக்கு நரகமும்’ எனக் கூறி தலைதெறிக்க ஓடுகிறான்!” சிரித்தான் அப்துல்பத்தா.
“ஷைத்தான் ஓடுவதை மனக்கண்ணில் காட்சிபடுத்தினால் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது அப்பா!”
“சஜ்தா இறைவனுக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்தல். சஜ்தா ஒரு பக்தி வழிபாடு. சஜ்தா சலாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சஜ்தா ஒரு நல்லொழுக்க செயல்பாடு...”
“சஜ்தா எதாவது ஒரு விதத்தில் இறைவனுக்கு தேவையான ஒன்றா?”
“இல்லவே இல்லை. இறைவன் தேவைகளற்றவன். ஒருதாய் மகனிடம் எதாவது எதிர் பார்ப்பாளா? மகன்தான் தாய் கேட்காமலே தாய்க்கான நன்றிக் கடனை நிறைவேற்றுகிறான். அது போலதான் இதுவும். சஜ்தாவில் கைகளை நாய் போல் விரிக்ககூடாது. ‘உங்களின் ஒருவர் சஜ்தா செய்யும்போது தனது முட்டு கால்களை வைப்பதற்கு முன் தனது கையை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல அமர வேண்டாம்’ என்கிறது சுனன் நஸயீ 1079...”
“தர்காக்களில் மண்ணறைகளில் சஜ்தா செய்யலாமா?”
“சஜ்தா செய்யக்கூடாது முத்தமிடலாம்!”
“சஜ்தா எதன் மீது கூடும், எதன் மீது கூடாது?”
“தங்கம், வெள்ளி, திராட்சைதோட்ட இலைகள், பழுக்காத அரைவெட்டு காய்கள் உண்ணும் பொருட்கள் மீது சஜ்தா கூடாது!”
“அப்டின்னா பிரயாணி தேக்ஸா மீது சஜ்தா கூடாது!”
“சீரியசா பேசிக்கிட்டு இருக்கும்போது ஜோக் அடிக்கக் கூடாது!”
“சாரி அப்பா!”
“புல், வைக்கோல், சுண்ணாம்பு, ஜிப்சம், செங்கற்கள் மீது சஜ்தா கூடும்!”
“சஜ்தாவில் வகைகள் உண்டா?”
“உண்டு. மூன்று வகைகள் இருக்கின்றன. நன்றி தெரிவிக்கும் சஜ்தா. பாராயணம் செய்யும் சஜ்தா. தொழுகையின் போது எதாவது ஒன்றை நிறைவேற்ற தவறிவிட்டால் அதற்கு நிவாரணமாக மறதி சஜ்தா. தொழுகையில் ரக்காயத்து கணக்கை மறந்து விட்டால் மறதி சஜ்தா செய்யலாம்!”
“மற்ற மதங்களில் சஜ்தா உண்டா?”
“அருமையான கேள்வி. திருக்குறளில் ‘கடவுள் வாழ்த்து’ என்கிற அதிகாரத்தில் பத்து திருக்குறள்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று இதோ-
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
இந்த திருக்குறள் இறைவனின் தாள் அல்லது திருவடி பணிவதைப் பாடுகிறது!
“ஆஹா!”
“கடவுள் வாழ்த்தின் முதல் திருக்குறளை தவிர மீதி ஒன்பது திருக்குறள்களும் இறைவனின் தாள் பணிவதை பற்றித்தான் பாடுகின்றன!”
“சபாஷ்!”
“இந்து மதபாடல் ஒன்றில் ‘நாதன்தாள் வாழ்க!’ என்கிற வரி வருகிறது. சைவநெறியில் இறைவனின் மலரடியும் திருவடியும் தொழுவாரின் குறி. தவிர இந்து மதத்தில் ‘சாஷ்ட்டாங்க நமஸ்காரம்’ என்று ஒன்று உண்டு. தரையில் எட்டு அங்கங்கள் பதியுமாறு வணங்குதல். தரையில் குப்புறபடுத்து கைகளை தலையில் மேல் குவித்து உடலின் எட்டு அங்கங்களான நெற்றி, இருதோள்கள், இருகைகள், மார்பு, இருகால் முட்டிகள் தரையில் பதியும் வண்ணம் வணங்குதல்.
இந்த சாஷ்ட்டாங்க நமஸ்காரம் இந்து மற்றும் புத்தமதத்தில் உண்டு. கிழக்கு ஆர்தடக்ஸ் மற்றும் ஓரியன்டல் ஆர்தடெக்ஸ் தேவாலயங்களில் மெட்டோனியா என்கிற வழிபாட்டு முறை உண்டு. சீன கலாசாரத்தில் மன்னர்களுக்கும் மூத்தவர்களுக்கும் அடிபணியும் கவ்லோ முறை உண்டு. பஹாய் மதத்திலும் புராதன கிரீஸ் நகரத்திலும் தாள் பணியும் வழக்கம் இருந்திருக்கிறது!”
“மொத்தத்தில் சஜ்தா பல்வேறுவடிவங்களில் பல்வேறு மதங்களில் இறைவழிபாட்டு முறையாக இருந்து வருகிறது!”
“சஜ்தா ஐவேளை தொழுகையுடன் இணைந்து ஓர் உன்னதமான வழிபாட்டு முறையாக இஸ்லாமின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக பிரகாசிக்கிறது. இஸ்லாமிக் சஜ்தா இஸ் எ யுனிக் ஒன்!”
அப்துல் பத்தா சிரித்தான். ஓடிப்போய் அப்பாவை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தான்.