”உங்களின் ஒருவரின் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் (அதை நீக்கி விட்டு) அதை ஏழுதடவை தண்ணீராலும் எட்டாவது தடவை மண்ணிட்டும் கழுவிக் கொள்ளுங்கள்.”
-நபிகள் நாயகம் (நூல் - முஸ்லிம்)
நல்ல முகமதுவும் இளம்பூரணனும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். நல்ல முகமது ஹார்ட்வேர் ஷாப் வைத்திருக்கிறார். நல்ல முகமதுக்கு வயது 50. கனத்த உருவம். தலையில் வெள்ளை நிற துணித்தொப்பி. சந்தன நிற பைஜாமா அதே நிற ஜிப்பா. மீசை இல்லாத சால்ட் அண்ட் பெப்பர் தாடி. அவரைச் சுற்றிய இரண்டடி ஆரத்தில் அத்தர் நறுமணம்.
இளம்பூரணன் ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக பணிபுரிகிறார். வயது 49. ஹெச்பி பென்சில் போல நெடுநெடு உயரன். நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். பெரும்பாலும் சபாரி தான் உடுத்தியிருப்பார்.
பத்து வருடங்களுக்கு முன் மரியம் நகரில் இருவரும் தலா இரண்டு சென்ட் மனைகளை வாங்கினர். அப்போதைய விலை சென்ட்டுக்கு 8 லட்சம். இப்போதைய விலை சென்ட்டுக்கு 20 லட்சம். அப்போது நகரில் நான்கே வீடுகள் இருந்தன. இப்போது 125 வீடுகள்.
அந்த 125 வீடுகளில் இளம்பூரணன் வீடு தவிர, மற்ற அனைத்து வீடுகளும் இஸ்லாமியருடையவை. இளம்பூரணனின் நண்பர்கள் பயமுறுத்தினர். “நூத்தி சில்லரை பாய்மார்கள் வீட்டுக்கு நடுவே போய் சிக்கிட்டீங்க புரபஸர்… உங்களை தந்தூரி சிக்கன் போட்ரப் போராங்க!”
இளம்பூரணன் அந்த பயமுறுத்தலைக் கண்டு கொள்ளவில்லை.
“எனக்கு முஸ்லிம்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை… அவரவர் வழியில் அமைதியாக வாழ்வோம்!”
தீபாவளி பலகாரங்களை இளம்பூரணன் நல்ல முகமது வீட்டுக்குக் கொடுத்து விடுவார். ரம்ஜான் பக்ரீத் பிரியாணி நல்ல முகமது இளம்பூரணனுக்குக் கொடுத்து விடுவார்.
இருவரும் ஒருவரையொருவர் வெளியில் சந்தித்தால் வணக்கம் பரிமாறிக் கொள்வர்.
இருவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கொள்வர்.
எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருந்தபோது அது நடந்தது!
நகரின் சாலையில் கல்யாண மாப்பிள்ளைகள் சவாரி செய்யும் காரில் அந்த நாய்க்குட்டி நின்றிருந்தது. நாய்க்குட்டியைக் கவர்ச்சிகரமான ஒப்பனை செய்திருந்தனர்.
பேன்டு வாத்தியம்… நாதஸ்வரம்… செண்டைமேளம்… தாரைத்தப்பட்டை… முழங்கின.
காரின் பக்கவாட்டில் இளம்பூரணனும் அவரது இரு மகன்களும் நடந்து வந்தனர். முழங்கப்படும் இசைக்கேற்ப மூவரும் நடனமாடினர்.
அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து நாய் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தனர்.
“ஒரு நாய்க்கு வந்த வாழ்வைப்பாரு… ஒரு சினிமா ஹீரோ வரவேற்பு… எண்பதடி உயரக் கட்டவுட் மட்டுமே மிஸ்ஸிங்!”
இளம்பூரணனின் வாயை ஒரு முஸ்லிம் கிளறினார்.
“நாய் வளர்க்கப் போறீங்க போல…”
“ஆமா…”
“என்ன வகை நாய் இது?”
“மொதல்ல திபெத்திய மாஸ்டிப் நாய்தான் வாங்கனும்னு முயற்சி பண்ணினேன். அந்த வகை நாய்களுக்கு சிங்கம் போன்ற உடலமைப்பு. அடர்த்தியான ரோமங்களும் இருக்கும். ஒரு குட்டியோட விலை 45 லட்சம்!”
“யா அல்லாஹ்!”
“அடுத்து சிரித்த முகமும் பஞ்சு போன்ற வெள்ளை உரோமங்களும் கொண்ட சமோஸ்ட் வகை நாய் பார்த்தோம். சரியா வரல”
“அப்புறம்?”
“ஜப்பான் வகை அகிதாவகை நாய்களை பார்த்தோம். விலை இரண்டரை லட்சத்திலிருந்து பத்து லட்சம்… பையன் வேணான்ட்டான்!”
“சரி!”
“ஆங்கில புல்டாக் பார்த்தம். விலை ஒன்றரையிலிருந்து இரண்டு லட்சம். பொண்டாட்டி வேணான்ட்டா…”
“கடைசியா இந்த வகை நாயை வாங்குனீங்களாக்கும்!”
“ஆமா பாய். இந்த நாயின் வகையை சவ்சவ் என்பார்கள். சைனீஸ் பிரீடு. விலை 3 லட்சத்திலிருந்து 16 லட்சம் வரை. பேரம் பேசி இரண்டரை லட்ச ரூபாய்க்கு இந்த குட்டியை வாங்கினோம்!”
“ஆரோக்கியமான நாய் தானே?”
“நாயை வாங்கினவுடனே ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு போனேன். நாயின் உடல் எடை, இதயம், நுரையீரல், கண்கள், காதுகளை பரிசோதித்தார். தடுப்பூசி முதல் டோஸ் போட்டார். தடுப்பூசி டிஸ்டெம்பர், பார்வோ வைரஸ், ஹெபடைடிஸ் நோய்களை தடுக்கும் குடற்புழு நீக்கத்திற்கான மருந்தும் கொடுத்துள்ளார். நாய் பிறந்த 11-13 வாரங்களில் பூஸ்டர் டோஸும் 15-17 வாரங்களில் ரேபிஸ் தடுப்பூசியும் போட வேண்டும். உன்னி மற்றும் பேன் கட்டுப்பாட்டுக்கு மருந்து கொடுத்துள்ளார். வருடாவருடம் ராபிஸ் தடுப்பூசியும் மூன்றாவது பூஸ்டர் டோஸும் போட வேண்டும். தரமான நாய் உணவும் ஊட்டசத்துகளும் பரிந்துரைத்திருக்கிறார் கால்நடை மருத்துவர். நாய் வளர்க்கிறதுன்னா சும்மாவா?”
வீட்டு வாசலுக்குள் நுழையும் நாய்க்கு ஆரத்தி எடுத்தாள் இளம் பூரணனின் மனைவி.
கொட்டிய ஆரத்தி நீரில் 500 ரூபாய் நோட்டு கிடந்தது.
ஒரு முஸ்லிம் ஓடி வந்தார்.
“புரபஸர்! நாய்க்கு பேர் வச்சீங்களா?”
“இது ஆம்பளை நாய் பாய்… பலபேரு யோசிச்சோம். கடைசில டிரம்ப்னு பேர் வச்சிருக்கம்!”
“அந்த டெனால்ட் ட்ரம்ப் பேரையா வச்சிங்க. ஊர் வம்பை எல்லாம் பிடிவாதமா வாங்கி தலைல கொட்டிக்குமே?”
“அது எனக்கு தெரியாது. ஒரு பாப்புலர் பெயர் தேவைப்பட்டது. வச்சம்…”
ட்ரம்புக்கு வீட்டில் தனியறை ஒதுக்கியிருந்தார் இளம்பூரணன்.
ட்ரம்பின் வருகையை ஒட்டி நகர் மக்களுக்கு ஓர் அசைவ விருந்து வைத்தார் இளம்பூரணன்.
பாதி பேர் கலந்து கொள்ளவில்லை.
இளம்பூரணன் நல்லமுகமதை பார்த்து, “சாப்பிட வாங்க!” என்றார்.
“மகிழ்ச்சி… அழைத்ததற்கு நன்றி… வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டோம்…”
நாட்கள் நகர ஆரம்பித்தன.
பஜ்ரு தொழுகைக்கு எழுந்து பள்ளிவாசலுக்கு கிளம்பும் நல்ல முகமதை பார்த்து ட்ரம்ப் விடாமல் குரைக்கும்.
பல சமயங்களில் இரண்டு வீடுகளுக்கும் பொதுவான சுவரில் ஏறி நின்று குரல் எழுப்பும்.
நள்ளிரவு நேரங்களில் இளம்பூரணனின் வீட்டுக்குள் இருந்து ஊளையிடும்.
சில சமயங்களில் இளம்பூரணனின் வீட்டிலிருந்து நல்லமுகமது வீட்டுக்கு டூபாத்ரூம் இருந்து வைக்கும்.
அபூர்வமான சமயங்களில் எலியை பிடித்து வந்து கடித்துக் குதறி இரத்தச்சேறாய் துப்பி வைக்கும்.
உடம்பு ரோமங்களை சிலுப்பி உதிர்த்து வைக்கும்.
கடிப்பது போலவே கிர்ரென்று உருமி கூர்மையான பற்களைக் காட்டும்.
மொத்தத்தில் ட்ரம்ப் என பெயர் வைத்ததற்கு கவிதை நியாயம் வழங்கும் விதமாய் தன் துர்நடத்தைகளை அரங்கேற்றும் அந்த நாய்.
ஒரு நாள் நல்லமுகமதின் வீட்டுக்குள் புகுந்து சோபாவை கிழித்து வீட்டுப்பொருட்களை தொம்சம் செய்து விட்டது ட்ரம்ப்.
நல்லமுகமதின் மனைவி கைபேசி மூலம் தகவல் தெரிவித்து ட்ரம்ப்பை அப்புறப்படுத்தினாள். நல்லமுகமதின் மனைவி கணவரின் காதுகளை கடித்தாள்.
“எப்பா நீ நல்லமுகமதோ… கெட்டமுகமதோ.. ஆறு மாசமா ட்ரம்ப் பண்ற அட்டூழியம் தாங்கல…. அந்த இளம்பூரணனிடம் பேசி நாய் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டு வா!”
நல்லமுகமது ட்ரம்ப்பை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கும் இளம்பூரணனை நெருங்கினார்.
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்… ட்ரம்ப்பை உள்ள அனுப்புங்க…”
ட்ரம்ப் உள்ளே கொண்டு செல்லப்பட்டது.
“புரபஸர்! நாய் வளர்ப்பது இஸ்லாமியருக்கு ஹராமான விஷயம். உங்க ட்ரம்ப் ஒரு நாளைல பாதி நேரம் எங்க வீட்டுக்குள்ளதான் இருக்குது குரைக்குது ஊளையிடுது பீப் பேண்டு விடுது. சொன்னா கோவிச்சுக்கக் கூடாது. ட்ரம்ப்பை யாருக்காவது வித்ருங்க அல்லது யாராவது ஒரு சொந்தக்காரங்களுக்கு கிப்ட் பண்ணிடுங்க”
இளம்பூரணன் நல்லமுகமதை முறைத்தார். “இஸ்லாமில் விவசாயம், கால்நடை பாதுகாப்பு மற்றும் வேட்டைக்கு நாய்வளர்ப்புக்கு அனுமதி உண்டே!”
“மூன்றிலும் சேராது உங்கள் நாய் வளர்ப்பு….”
“நான் ஆசையா வளர்க்கிற ட்ரம்ப்பை விக்க மாட்டேன் யாருக்கும் பரிசாக கொடுக்கவும் மாட்டேன்… என்ன பண்ணுவீங்க?”
மௌனித்தார் நல்லமுகமது.
“போலீஸில் புகார் பண்ணுவீங்களா, ஜமாஅத்திடம் சொல்லி மேல் நடவடிக்கை எடுப்பீங்களா அல்லது ட்ரம்புக்கு விஷம் வச்சுக் கொல்வீங்களா?”
எதிர்மறையாய் தலையாட்டினார் நல்லமுகமது. “நீங்கள் சொன்ன மூன்றில் எதுவுமே பண்ண மாட்டேன். முஸ்லிம் வீடுகள் பெரும்பான்மையா இருக்கும் நகரில் எங்களை நம்பி வீடு கட்டி இருக்கீங்க. நாங்க உங்களுக்கு அனுசரனையா இருக்கனுமா, அச்சுறுத்தலா இருக்கனுமா? ட்ரம்ப் விஷயத்தில் உங்களுக்கு உசிதமான விஷயத்தைச் செய்யுங்க புரபஸர்! நான் என் இந்து சகோதரனை நேசிக்கிறேன்!”
அடுத்த வாரம்.
இளம்பூரணனின் வீட்டு சாமான்கள் லாரியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
நல்லமுகமது, “என்னாச்சு புரபஸர்?”
“இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுக் காலேஜ் கொடுத்திருக்ற குவார்ட்டர்ஸுக்கு இடம் மாறுகிறோம்… ட்ரம்ப் தொந்திரவு இனி உங்களுக்கு இருக்காது!”
இளம்பூரணனின் மடியில் இருந்த ட்ரம்ப் நீலநாக்கை நீட்டி நட்பாய் சிரித்தது.