ஆறலை கள்வராகிய வழிப்பறிக்காரர் இந்த யாழின் இசையைக் கேட்டால் தம்மை மறந்து நிற்பார்கள் அவர்கள். ஆயுதங்களும் கை நழுவும், அவர்களது கொடும் குணமும் மாறும்.
பூங்குன்றனின் கைகள் யாழை அணைத்தபடி இருந்தன. காதலன் ஒருவன் தீராக் காதலுடன் தனது காதலியை அணைத்துக் கொள்வானே, அது போன்றதோர் அணைப்பு.
அது பேரியாழ் 21 நரம்புகள் கொண்டது. பாதிரி மலரைப் பிளந்தால், அதன் உள்ளேக் காணப்படும் சிவப்பை ஒத்த நிறத்தில் அமைந்த தோலால் யாழ் போர்த்தப்பட்டு நூலோடுவதற்காக அமைந்த துவாரங்கள் தெரியாதவாறு நேர்த்தியாகத் தைக்கப்பட்டிருந்தது.
அவன் ஆனைமலையின் உச்சியை அடைந்த போது, கதிரவன் மேற்கில் இறங்கிவிட்டான். திசைகள் யாவும் மலை முகடுகள், அவற்றில் மேகக்கூட்டங்கள் இறங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தன. முகில் மூட்டத்துக்குள்ளும் மலை முகட்டில் மலர்ந்திருந்த குருதி நிறச் செங்காந்தள் பூக்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் கன்னியரில் எவராலோ ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளைப் போலக் காட்சி மயக்கத்தைத் தந்தன.
பூங்குன்றனது கால்கள் மேலும் நடந்து கொண்டிருந்தன. பெருங்காற்று மரங்களிலும் மலை முகடுகளிலும் மோதி எழுந்த ஓசை ஏகாந்தத்தை அனுபவிக்கும் முனிவனின் மன ஓசையாக ஒலித்தது. அவன் நடந்தபடியே அருவி ஒன்றின் அருகில் வந்துவிட்டான். குனிந்து குளிர்ந்த நீரைப் பருகியவன் நீரை எற்றி முகத்தையும், கால்களையும் கழுவிக் கொண்டான். உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்றதாய் உணர்ந்தான். அருகில் சலசலத்து ஓடும் நதியின் ஓசையும் கூடு திரும்பும் தாய்ப் பறவைகளைக் கண்ட குஞ்சுகள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கும் ஓசையும் இணைந்து சங்கீதமாய் ஒலித்தன. அவனால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை.
அந்த இசை அவனின் காதுவழி சென்று இதயத்தில் இனிப்பாய் கசிந்தது. அவன் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டான். தனது யாழை எடுத்து மடியில் குழந்தை போல் வைத்துக்கொண்டான் .
யாழ் உறை தெய்வத்தை தனது உள்ளத்தில் இருத்தி, சில கணப்பொழுது பிராத்தனை செய்தான். மூன்றாம் பிறை போல் அமைந்து தந்தத்தால் செய்யப்பட்ட கடையை மிக மென்மையாக திருகி சுருதி கூட்டிக் கொள்கிறான். விறலியின் முன்கை போல் வளைந்து கருநீல மணி போல கருப்பாக இருந்த தண்டின் வார்க்கட்டில் பொன்னால் செய்யப்பட்டது போன்று பள பளக்கும் நரம்புகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த நரம்புகளில் அவன் கை
படர்ந்து மீட்டத் தொடங்கிகுகிறது.
அவன் பறவைகளின் ஒலிக்கு பதிலொலி எழுப்பினான். அவன் யாழில் இருந்து அறுபதுக்கு மேற்பட்ட பறவைகளின் ஒலிகள் பிறக்கின்றன. அது சிறு விளையாட்டுப் போல ஒரு புது அனுபவமாக இருக்கிறது. அவன் அந்தவிளையாட்டில் திளைத்திருக்கையில் குளிர்ச்சி அவன் உடலிலும் உள்ளத்திலும் பரவுகிறது. அது நதியில் தவழ்ந்து வந்த தென்றலால் வந்ததா அல்லது நச்செள்ளையின் பரிசத்தால் வந்ததா எனப் பிரித்து நோக்க முடியவில்லை. அவன் அவளைத் திரும்பி நோக்குகின்றான். நாயின் நாக்கு போல சிவந்தனவாய் பள பளப்பானவையாய் அவள் கால்கள் அழகாக இருக்கின்றன. அவன், அவள் இடையைத் தழுவித் தன் அருகில் இருத்திக்கொள்கிறான்.
அவள் அவனை யாழில் காதல் கீதத்தை வாசிக்குமாறு வேண்டுகிறாள்.
பிரிவின் சோகமும் காத்திருதலின் இரக்கமும் இழையோடும் செவ்வழிப் பண்ணை இசைக்கத் தொடங்குகிறான். அவன் இசை காதலில் கனிந்து மோகத்தில் குழைந்து பெருக்கெடுக்கிறது. கொலைத்தொழில் மேற்கொள்ளும் ஆறலை கள்வர்களது மனதில் கூட அன்பையும் கருணையையும் பெருக்கெடுக்கச் செய்யும் அவனது இசை, ஆறல் விறலியாகிய நற்செள்ளையை தன்னிலை மறக்கச் செய்ததில் வியப்பு ஒன்றுமில்லைதான்.
நற்செள்ளையும் பூங்குன்றனும் கைகோர்த்து வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். காலம் என்ற உணர்வு சிறிதும் இல்லாது இசையின்பத்தில் திளைக்கின்றனர்.
அவன் இன்ப வெறி கொண்டவன் போல நரம்புகளை மீட்டுகிறான். அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுகிறது. நற்செள்ளை, மூடிய கண்களைத்திறந்தால் காதின் கேட்கும் சக்திக்கு ஊறு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தவள் போல் கண்களை மூடியபடியே இருக்கிறாள்.
அவனது உணர்ச்சி வேகத்துக்கேற்ப கைகளிலிலும் வேகம் கூடுகிறது. அவன் வேகத்தைத் தாங்கும் சக்தி அந்த நரம்புகளுக்கு இல்லை போலும், ஒரு நரம்பு அறுந்து தெறிக்கிறது.
இருவரும் சாடாரென இவ்வுலகத்துக்கு தூக்கி எறியப்படுகிறார்கள். இவ்வளவு நேரமும் அவர்கள் அனுபவித்த இன்பம் வடிந்து மனதில் சிறிது வெறுமை தலைகாட்டுகிறது.
நிலா உச்சியைத் தொட்டுவிட்டது. அப்பொழுதுதான் அவர்களுக்கு வீடு திரும்ப வேண்டும் என்ற உணர்வு வருகிறது. நற்செள்ளை பூங்குன்றனது கையைப் பற்றுகிறாள். அவர்கள் இருவரும் நிலவொளியில் நடக்கிறார்கள்.