“வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிற்ப்பிற் இழையோள் குழவி”
- சிறுபாணாற்றுப்படை
முல்லைப் பூக்கள் செறிந்த காட்டின் நடுவே மூங்கில் தடிகளால் உருவாக்கப்பட்ட குடில்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய்... அவற்றின் கூம்பு வடிவில் அமைந்த ஒற்றைக் கூரைகள் நிலவொளியில் மின்னிக் கொண்டிருந்தன.
முற்றத்தில் நெடிது வளர்ந்திருந்த கொன்றை மரத்தில் சாய்ந்தபடி இருக்கிறாள் நற்செள்ளை. சற்றுத்தூரத்தில் அருவியொன்று சலசலத்து ஓடுகிறது.
நற்செள்ளை, பூங்குன்றனது மகன் சாத்தன்... தன் மடியில் கிடந்த சாத்தனின் அடர்ந்த ஆனால் குட்டையாகச் சுருளாக இருந்த கருங்கூந்தலை நற்செள்ளையின் கைகள் கோதிக்கொண்டிருந்தன. அவள் கை என்ற இழைகள் வழி அன்பு மகனுக்குக் கடத்தப்பட்டடுக் கொண்டிருந்தது.
“அம்மா கதை சொல்லு “
சாத்தன் அண்ணாந்து பார்த்துத் தாயை வேண்டுகிறான்.
கதைகள் தாய்வழி வழங்கப்படும் முதுசங்கள். அவளின் நினைவடுக்குகளில் பொக்கிசமாகப் பேணப்பட்ட நிகழ்ச்சிகள். மறக்கமுடியாத தருணங்கள், கனவுகள் கனத்த இரவுகளின் எகாந்தத்தில் கதைகளாக வடிவம் கொள்ளும்.
நற்செள்ளை, அவள் தாய்க்கு அவளின் தாய் சொன்ன தங்கள் பரம்பரைக்கதையை மகனுக்குச் சொல்லலானாள்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதைகள் அவை.
கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்றருவியாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறு கையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக் கொண்டு வருகிறான்.
கொற்றவை முது தாய். ஆனாலும், அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை, பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர். அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம் ஒன்று தொடர்ந்து கொண்டிருந்தது. அது, மரங்கள் அடர்ந்த காட்டை நட்சத்திரங்களின் உதவியுடன் இருட்டை ஊடுருவி முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்களின் முன்னாலும் பின்னாலும் பெரிய வேட்டை நாய்கள் மோப்பம் பிடித்தபடி ஓடுவதும் நடப்பதுமாய்க் காவல் காத்துச் சென்றன.
அக்கூட்டத்தினரில் பெரும்பாலானவர்களின் கைகளில், கூர்மையான கொம்புகளும் கல்லாயுதங்களும் மட்டுமன்றி அன்று அவர்கள் வேட்டையாடிய மரை, முயல், உடும்பு முதலான விலங்குகளும் காணப்பட்டன. கைகளில் ஏந்திய சுமையோ காலை முதல் விலங்குகளின் பின் ஓடியதால் உண்டான களைப்போ அவர்களின் நடையின் வேகத்தைக் குறைக்கவில்லை.
இன்று அவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அவர்கள் எதிர்பாராத அளவு விலங்குகள் குறைந்த நேரத்துக்குள்ளாகவேக் கிடைத்துவிட்டன. எப்படியும் ஒரு சில நாட்களுக்கு இந்த ஊண் உணவு போதும். அவர்கள் தங்கள் குகைக் குடியிருப்புக்கு விரைந்து செல்வதற்குக் காரணம் இல்லாமலில்லை. இன்று அவர்கள் தரப்பில் ஒரு உயிர் கூடப் பலியாகவில்லை. இதனை அவர்கள் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். கள்ளும் தேனும் அருந்தியும் குரவை இட்டு நடனம் ஆடியும் இந்நாளை அவர்கள் இனிதாக்கிக் கொள்வார்கள்.
கொற்றவை சேயோனைப் பெருமையாக நோக்குகிறாள். வேட்டையின் போது அவன் காட்டிய திறமை அவளுக்கு வியப்பைக்கூடத் தந்தது. பன்னிரண்டு அகவையே சேயோனுக்கு ஆகியிருந்தது. கொற்றவையின் நாற்பது ஆண்டு கால அனுபவத்தில் இவ்வளவு திறமையான வேட்டைக்காரனை அவள் கண்டதில்லை. இலக்கு வைத்து அவன் எறிந்த கல்லாயுதங்கள் குறிதவறாது விலங்குகளைக் கொன்றுவிட்டன. ஒரு நாளில் பத்துக்கு மேலான விலங்குகளை ஒருவனேக் கொல்வது என்பதும் அதுவும் ஒரு குறி கூட பிழையாகாதவாறு கொல்வது என்பதும் அசுர சாதனைதான்,
தனக்குப் பின் இந்தக் கூட்டத்தை வழி நடத்த ஏற்ற வீரமும் வலியும் கொண்ட பெண் வாரிசு இல்லையே என்ற வருத்தம் கொற்றவையைச் சில காலமாக அரித்துக் கொண்டிருந்தது. அந்த வருத்தம் இன்று அறவே நீங்கிற்று.
சேயோன் ஆண் என்றாலும், அவனே இந்தக் கூட்டத்தை வழிநடத்தக் கூடிய தலைவன் என அவள் தீர்மானித்துக் கொண்டாள். உரிய காலத்தில் அவள் சேயோனைத் தலைவனாகத் தன் கூட்டத்துக்கு அறிவிப்பாள்.