"மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்"
(நற்றிணை - 170. மருதம்)
நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுது கொண்டிருப்பது அவளது உடல் குலுங்குவதில் தெரிகிறது. அதனைக் கண்ட பூதி அவளை நோக்கி மிக விரைவாக வந்து நல்வெள்ளையின் கூந்தலைப் பற்றி தன்பக்கம் திருப்புகிறாள்.
நல்வெள்ளையின் கண்கள் சிவந்தும் கன்னங்கள் உப்பியும் கிடப்பதைக் கண்ட பூதி திகைத்துப் போகிறாள்.
ஒருநாழிகைப் பொழுதின் முன்புதான் பூதியும் நல்வெள்ளையும் வைகை நதிக் கரைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். அதற்குள் என்ன நிகழ்ந்திருக்கும்? பூதியால் ஊகிக்க முடியவில்லை.
கடல்நீரை உண்ட மேகம் கரு மலைகளாய் மாறிற்று. அவை உயர்ந்து பேரழிகின் இருப்பிடமாய்த் திகழ்ந்த மலைமுகடுகளில் ஒடுங்கிப் பெருமழையாகப் பெய்கிறது.
மழை நீர், அருவி வழி ஓடி வைகையில் கலந்து புதுப்புனலாகக் கரைபுரண்டு ஓடுகிறது. அப்புதுப்புனலை வரவேற்க மதுரை நகரமே தயாராகிவிட்டது. வைகை ஆறு விழாக்கோலம் பூண்டது.
ஆண்களும் பெண்களும் வைகையை வணங்குவதற்காகவும், அதில் நீராடி மகிழ்வதற்காகவும் புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆராதனைக்கு வேண்டிய பூ ,பொன், மீன் முதலியவற்றை ஏந்தியவராய் கூட்டம் கூட்டமாக ஆற்றங்கரையை அடைந்தார்கள்.
ஆராதனை முடிந்தபின்னர் நீர் விளையாட்டுகள் தொடங்கின. பெண்கள் தம் கணவரோடு நீரைக்குடைந்து விளயாட விரும்பினர். ஆனால், கணவர்கள் சிலரோ தமது காதல் பரத்தையருடன் நீராடும் ஆர்வத்தை மறைக்கமுடியாது திண்டாடினர். தம் மனைவியரில் நின்றும், விலகி சொல்லப்போனால் அவர்களுக்கு ஒளித்து தாம் விரும்பிய பரத்தையரை அடைவதற்கு அவர்களுக்கு நல்வெள்ளை, பூதி போன்ற ஆடல் மகளிரான விறலியரின் துணை தேவைப்பட்டது.
விறலியரும் பாணரும் தம்மைப் பேணுவார் குறைந்து வறுமையில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் இது, குறுநில மன்னர்கள் அழிந்து மூவேந்தர்களின் ஆட்சிக்குள் தமிழகம் முழுவதும் வந்து கொண்டிருந்தது. அரசர்கள் முன்புபோல் பாண்கடன் என்ற வகையில் கலைஞர்களை அதிகம் பேணுவதில்லை. எழுத்தறிவும், நூலறிவும் கொண்ட புலவரும் வடநாடுகளில் இருந்து புதிதாய் வந்து குடியேறும் பார்ப்பனர்களும் மூவேந்தர்களின் விருப்பத்துக்கு உரியவராய் முதன்மை பெறத் தொடங்கி விட்டார்கள். இதனால் ஒரு சிலர் தாம் உயிரெனக் கருதிய கலைகளை விட்டு மீன்பிடித்தல் முதலான வேறு தொழில்களை நாடிப் போய்விட்டார்கள்.
ஆனால், நல்வெள்ளை, பூதி முதலியோரின் குடும்பங்கள் தம் கலைக்கு முழுக்குப் போட்டுவிட விரும்பவில்லை. கலை அவர்கள் நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி இரத்ததில் கலந்து விட்டிருந்தது. கலைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு வேறு தொழில்கள் எவற்றையும் அவர்கள் அறியாதவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில்தான் மருத நிலத்து இளைஞர்கள் இவர்களது கலைக்கு ஆதரவு அளித்தனர். இவர்களது வறுமையைப் போக்கவும் உதவினர். அவர்களது பரத்தையருக்கும் கலைகளில் ஈடுபாடு மிகுதியாய் இருந்தது. அவர்களும் கூத்துக் கலைகளையும் இசைக்கலையையும் கற்க விரும்பினார்கள். இந்தத் தொடர்பு காரணமாக, பூதியும் நல்வெள்ளையும் கீரன் முதலிய பாணரும் புதுப்புனல் விழாவில் இசையும் நடனமுமாய் இவர்களோடு பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஓம்பூரில் மிகவும் பிரபலமான பெரும் நிலக்கிழான் மாறன் தனது காதல் பரத்தையான மருதியை தாம் நீராடிக்கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துவருமாறு பூதியை கேட்டுக்கொண்டான். பூதி மருதியைத் தேடிச்சென்றுவிட்டபோதுதான் நல் வெள்ளைக்கு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
பூதியைக் கண்டவுடன் நல்வெள்ளை அவள்மடியில் சாய்ந்து மேலும் அழுகிறாள்.
பூதியால் பதட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“என்ன நல்வெள்ளை... என்ன நடந்தது?”
நல்வெள்ளை தனது அழுகையைக் கட்டுப்படுதியவளாய் கண்களை அழுத்தித் துடைத்துக் கொள்கிறாள்.
“பூதி, நாங்கள் விறலியராய் பிறந்திருக்கக் கூடாது. பிறந்திருந்தாலும் தன்மான உணர்வுடன் பிறந்திருக்கக்கூடாது” என்றாள் நள்வெள்ளை.
“இப்பொழுது எங்கள் தன்மான உணர்வுக்கு என்ன கேடு வந்துவிட்டது?”
“அழுகையின் காரணத்தைச் சொல்லாது புதிராக நல்வெள்ளை பேசுவது பூதிக்கு எரிச்சலைத் தருகிறது”
“எங்கள் அன்னை இளவெயினி எத்தனை சிறப்பாக இருந்தார் என்பது உனக்குத் தெரியும்தானே?”
ஆமாம் இளவெயினி அன்னை கூத்தில் சிறந்தவர். ஆடுகளத்தில் அவர் குரவையிட்டு ஆடத்தொடங்கியதும் கூட்டம் அலை மோதும். அது மட்டுமா அவர் பாடவும் வல்லவராயிற்றே... வஞ்சி நகர வேந்தன் கடுங்கோவே இவரது பாடலால் மகிழ்ந்து அணிகலங்களையும் பொற்தாமரையையும் வழங்கிப் பெருமை செய்தது கூட நினைவில் நிற்கிறது. நள்ளை, அதற்கும் நீ அழுததற்கும் என்ன தொடர்பு?” பூதி கேட்டபடியே அவளை உற்று நோக்குகிறாள்.
அவர்கள் காலத்தில் நம்பெண்கள் முல்லை சான்ற கற்புடையவராய் போற்றப்பட்டார்கள். ஆனால், இன்று நாம் எப்படி மற்றவர்களால் பார்க்கப்படுகிறோம் தெரியுமா…?
பூதி அவளைக் கதைக்கவிட்டு மௌனமாக இருக்கிறாள்.
நான் எனது காதலன் பாணன் கீரனை எதிர்நோக்கி நின்றேன். அப்பொழுது மருத நில மங்கையர் சிலர் என்னைக் கண்டவுடன் முகத்தில் கோபமும், அதேசமயம் மருட்சியும் கொண்டவர்களாய் என்னை உற்று நோக்கினார்கள். அவர்களுள் ஒருத்தி கூறிய வார்த்தைகள் என்னெஞ்சை குத்தி வருத்தத்தை ஏற்படுத்தின” என்ற போது நள்ளையின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“அப்படி உன் மனம் நோகும் வண்ணம் அவர்கள் என்னதான் கூறினார்கள்?” அவசரப்படுத்தினாள் பூதி.
“விறலியரான நாங்கள் அழகிய கண்களையும் அடர்ந்த கூந்தலையும் பருத்த தோள்களையும் நேர்த்தியான பற்களையும் திரண்ட நெருங்கிய தொடையையும் உடையவராய் தழையுடை அணிந்து திருவிழாவில் பொலிவுடன் வந்து நிற்கிறோமாம்...”
நள்ளை முடிக்கும் முன் பூதி அவசரமாகத் தலையிடுகிறாள்.
“அவர்கள் கூட எம் அழகை இரசிக்கும் அளவுக்குப் பேரழகிகளாக் இருக்கிறோம் என்பதற்காக மகிழ்ச்சியடைவதை விடுத்து நீ கவலையடைகிறாயே?”
“அவர்கள் எங்கள் அழகை ரசித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் அவர்கள் எங்கள் நடத்தையையல்லவா விமர்சிக்கிறார்கள்”
பூதிக்கு நள்ளை கூற முனைவது புரியாதவளாய் புருவங்களைச் சுருக்கி நோக்குகிறாள்.
“நாங்கள் அவர்களது காதலர்களை மேலும் மேலும் புதிய பரத்தையர்களிடையே அழைத்துச் செல்லாதவாறு காதலர்களை அழைத்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வோம் என எனது காதுபடச் சொல்லிவிட்டு மிக விரைவாகத் தமது காதலர்களை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்”
பூதிக்கு இப்பொழுது நள்ளையின் அழுகைக்கான் காரணம் முழுமையாகப் புரிந்துவிட்டது.
அவள் வாய்விட்டுச் சிரிக்கிறாள்.
“நள்ளை, இதற்காகவா அழுதாய்.! அவர்கள் கணவர்களுக்கு மன அடக்கமில்லை. அல்லது அவர்களை அடக்கியாளும் திறன் இந்தப் பெண்களிடம் இல்லை. எய்தவன் இருக்க அம்பை நோகும் இவர்கள் சொன்னார்கள் என்றா இந்த அழுகை அழுகிறாய்”
“இல்லைப் பூதி பல சமயங்களில் நாமும் மருத நில ஆடவருக்கு பரத்தையர் விடயத்தில் உதவத்தானேச் செய்கிறோம். மருத நில ஆடவர்கள் அதற்காகத் தரும் பொருள் கொண்டு வாழத்தானே செய்கிறோம். நாமும் பெண்கள் பரத்தையரும் பரிதாபத்துக்குரிய பெண்கள். மருதநிலத் தலைவியரும் பெண்கள். இந்த மூவரையும் ஏதோ ஒரு வகையில் மருத நில ஆடவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றாள் நள்ளை.
“அது உண்மைதான். அதற்கு நாம் என்ன செய்வது? நமது கலைகளுக்கு முன் போல் மக்கள் செல்வாக்கும், அரசனின் செல்வாக்கும் கிடைக்குமானால் செல்வச் செழிப்புக் காரணமாய் தடுமாறும் ஆடவர்களைப் பின்தொடரும் இழிநிலைக்கு ஆளாகுவோமா?”
“நாளை இந்த நிலை மாறுமா?” விடை தெரியாத கேள்விக்குள் சிக்கியவளாய் மௌனமாகிறாள் நள்ளை.