"கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் 5
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், 10
சென்று வாய் சிவந்துமேல் வருக_
சிறுகண் யானை வேந்து விழுமுறவே..."
(புறநானூறு 316)
பாணன் வெண்ணாகன் வாய்மொழிப் பாடகன் மட்டுமல்லன். எழுத்தறிவு பெற்ற புலவனும் கூட. அவன் தன் சுற்றத்துடன் அத்தனை நாடி வந்திருந்தான். அவன் அத்தனிடம் வருவது இது முதல் தடவையன்று. பல தடவைகள் அங்கு வந்திருக்கிறான்.
அத்தன் பேரரசன் அல்லன், சிற்றரசனும் அல்லன் குறுநிலத்தின் தலைவன். பாணன் குடிவழி வந்தவனும் கூட. அவனது இல்லம் காட்டை அண்டி அமைந்திருந்தது. அஃதை முற்றத்துக் கட்டிலில் படுத்திருக்கிறான், படுத்தானே ஒழிய அவன் விழித்தபடி ஏதோ சிந்தையில் ஆழ்ந்திருப்பதாகவே வெண்ணாகனுக்குபட்டது.
அத்தன் சிறந்த வீரன். உடல் பலமும் மனப்பலமும் ஒருங்கே படைத்தவன். அவன் அடிக்கடிப் போருக்குச் செல்வான். அதனை போர் என்பதிலும் சண்டை என்று குறிப்பிடலாம். அவன் இடம் சிறிது என்று போரிடச் செல்பவனல்ல. வீரமும் புகழும் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும் போரிடுபவன் அல்லன். தன்னை நாடி வரும் பாணருக்கும் புலவருக்கும் உணவும் கள்ளும் வழங்கி அவர் பசியாற்றவும் களிப்படையும் விரும்பி அதற்காகப் போருக்குச் செல்பவன். போரிடுவது அவன் தொழில். அதில் வரும் வருவாயைத் தனக்குச் சிறிதும் வைத்துக் கொள்ளாது அள்ளி வழங்கிவிடுபவன்.
நேற்று அவன் தன் குடியின் பெரும் அடையாளமான வாளைப் பணயமாக வைத்துவிட்டுப் போருக்குச் சென்றான். போரில் வெற்றி பெற்று பொருள் பல கொண்டு வந்தான்.
பானை பானையாகக் கள் அருந்தப் பாணருக்குத் தந்ததாகவும், வாய் சிவக்கும் வண்ணம் ஊணுணவு தாராளமாக வழங்கியதாகவும் பாணன் பூதன் கூறியிருந்தான். பாடினிக்கு பொன்னால் ஆன ஆபரணங்களை கொடையாகக் கொடுத்ததாகவும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான் பூதன்.
“பாணரும் விறலியரும் கள்ளுண்ட மயக்கம் விலகாமலே ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டிருந்தனர். பாலைப் பண் அவர் யாழில் இருந்து பெருக்கெடுத்தது. அந்த இசை விருந்தினைக் காதால் நுகர்ந்தும் நடன களியாட்டத்தை கண்களால் பருகியும் உள்ளம் மகிழ்ந்திருந்த அத்தன் தூங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது” என அத்தனின் படைவீரன் நேற்றைய நிகழ்வுகளை நினைவுறுத்திச் சொல்லியபடி வெண்ணாகனையும் அவன் சுற்றத்தாரையும் வரவேற்றான்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அத்தனும் அவர்கள் வரவை உணர்ந்து கட்டிலில் இருந்து எழுந்து அவர்களை வரவேற்றான்,
“என்ன சிந்தனை அரசே” என அத்தனை வணங்கியபடி வெண்ணாகன் வினவினான்.
“இன்றும் நான் போருக்குச் செல்லவேண்டும். இன்று பாலைவழி செல்வோரைக் குறி வைத்திருக்கிறேன். பாண்டியனின் கொற்கைத் துறைமுகத்திலிருந்து யவனப் பொருட்கள் வருகின்றன. அப்பொருட்களைப் பாதுகாத்து ஐம்பது வீரர்கள் வரை வருவார்கள். அவர்களை நான் வென்று அப்பொருட்களை எடுத்து வருவேன்... இது பந்தயம் எனத் தன் தொடைகளைத்தட்டி வீரத்திணவு கொண்டான்.
வீரன் இளங்கோ “அவ்வாறாயின் இன்று எதைப் பந்தயப் பொருளாய் வைக்கப்போகிறாய் அரசே” என்றான்.
அதற்கு அத்தை“எனது கருங்கோட்டு சீறியாழைப் பணையமாக வைக்கிறேன்” என்றான்.
உனது உயிருக்கு நிகரான யாழையா வைக்கிறாய்? என்றான் வெண்நாகன்.
“உன் அன்புக்கு முன் எனது யாழ் ஒன்றும் பெரிதல்ல” என்றான் அத்தன்.
“வெண்ணாகனே, நீயும் உனது சுற்றமும் இங்கு தங்கி விருந்துண்டு பரிசிலும் பெற்றுப் போக வேண்டும்” என்று அத்தன் புன்னகையுடன் கூறினான்.
மேலும், வெண்ணாகனுக்காகவாவது தான் மிகுந்த ஆற்றலுடன் போராட வேண்டும் என உறுதி கொள்கிறான் அத்தன்.
தம்மைக் காப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்ட அத்தனை தமது இறைவனாகவும், தம்மை அவனுக்கே உரிய பாணனாகவும் கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று வெண்ணாகனும் ஏனைய பாணர்களும் மன ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட நன்றியுணர்வுடன் நினைத்துக் கொண்டனர்.