"உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீ இயும்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓரான் இல்லிற் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறமகள் வந்தென
இன்விழ வாயிற் றென்னு மூரே"
(குறுந்தொகை- 295)
நாகன் இன்று பெரும் நிலத்துக்குச் சொந்தக்காரன். அவன் இல்லத்தின் கொல்லையில் பசுவும் காளையுமாகப் பல மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவனது நிலத்தை உழுது பாடுபட உழவர்கள் இருக்கிறார்கள். அவனிடம் அழகிய தேரும் அதனை ஓட்டிச்செல்லப் பாகனும் இருக்கிறான்.
இச்செல்வமெல்லாம் முன்பு அவனின் காதலுக்குரியவளாய் இருந்து பின்பு மனைவியாக அவன் இல்லத்திற்கு நக்கண்ணை வந்தபின் வந்தவையே.
நக்கண்ணை வரும் முன் ஒரு பசுவும் சிறிய வீடு ஒன்றும் மட்டுமே அவன் குடும்பத்துக்கென்று இருந்தது.
இவையெல்லாம் இன்று நாகனின் நினைவில் இருப்பதாகத் தெரியவில்லை.
சேந்தன் விழவுக்களத்தில் சிறிய யாழை வைத்து மீட்டிக் கொண்டிருந்தான். பல நாள் சரியான உணவின்றி, பனங்குருத்தையும் உப்புக்கீரையும் மட்டுமே உண்டதால் அவன் வயிறு மிகவும் ஒட்டியிருந்தது. அரவு விழுங்கிய நிலவென கண்களில் கருவட்டம் சூழ்ந்து அவை ஒளியிழந்து காணப்பட்டன. ஆனாலும், தன் பசியைத் தன் யாழிசையால் வென்றுவிடத் துடிப்பவன் போல் பாலைப் பண்ணை மீட்டிக் கொண்டிருந்தான்.
பரத்தையர் சிலருடன் விழவுக்களத்துக்கு வந்த நாகன் சேந்தனை முதல் முதலில் அங்குதான் கண்டான். இசைப்பிரியனான நாகனை சேந்தனின் இசை ஏதோசெய்தது. மனதினைப் பிசையவைத்துக் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அன்று முதல் நாகன் சேந்தனின் புரவலனாகி விட்டான். பசி என்ற கொடுங் கூற்றுவன் சேந்தனின் பக்கம் திரும்பவே இல்லை. தனது பரத்தையர் சூழ நாகன் இருந்தாலும் சேந்தனின் இசையில் கட்டுண்ட நாகமாகவே இருப்பது சேந்தனுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. சேந்தனும் தன் இசைத் திறமையெல்லாவற்றையும் வெளியிட வாய்ப்புக் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியில் திளைத்தான்.
நாகனுக்கும் சேந்தனுக்கும் இடையேயான உறவை எப்படி விவரிப்பதென்பது தெரியாதிருந்தது.
சேந்தனின் இசைக்கு நாகன் அடிமை என்றாலும், இசையில்லாத நேரங்களில் சேந்தனை நாகன் வெறும் சேவகன் போலவே நடத்தினான். புதிது புதிதாகப் பரத்தையரைப் பெற்றுத்தரும் தரகனாகச் சேந்தன் மாற வேண்டியிருந்தது. அவ்வப்போது நாகனின் மனைவியிடம் சென்று, அவள் ஊடலைத் தவிர்க்குமாறு சொல்லும் தூதுவனாகவும் இருக்க வேண்டியிருந்தது.
நாகனின் மனைவி நக்கண்ணையின் முன் செல்லஸ் சேந்தனுக்கு என்றுமே துணிவு வருவதில்லை. கண்களில் கனலும் நெஞ்சில் ஏக்கமுமாய் தோன்றும் நக்கண்ணையிடம் நாகனுக்காகப் பொய்மை பேசுவதென்பது சேந்தனுக்கு பெரும் சோதனையாகவே இருக்கும். ஆனாலும், செஞ்சோற்றுக் கடனுக்காக அவன் பொய் பேச வேண்டியிருந்தது.
அன்றும் நக்கண்ணையின் கோபத்தைத் தணித்து அவளை நாகனிடம் சேர்த்து வைப்பதற்காக இல்லம் சென்றிருந்தான் சேந்தன். அங்கு யாழை மீட்டியபடி நாகனும் நக்கண்ணையும் காதலித்த காலத்து நினைவுகளை மீட்டும் வகையில் அமைந்த காதல் பாடல்களைப் பாடிக் கொன்டிருந்தான்.
நக்கண்ணையினால் சகிக்க முடியவில்லை, தன் தோழியிடம் சேந்தனை வெளியே அனுப்பும்படி கட்டளையிட்டாள்.
வெளியே வந்தாள் தோழி.
“பாணா! பரத்தையருடன் தூங்கிய நாகனை எழுப்புமாறு யாழிசைத்துப் பாடினாய். இங்கு வந்தும் நயமான பண் தரும் உன் யாழை இசைத்துப் பாடி நீ பொய் கூறுகிறாய். இங்கு நிற்காது போய்விடு”எனச் சத்தமிட்டாள் அவள்.
சேந்தன் அவ்விடத்தில் கூனிக்குறுகிப் போனான்.