“அன்னை; வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, 10
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 15
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், 20
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
அலர் ஆகாமையோ அரிதே”
- அகம் -98
அது கொல்லி மலைசாரல், தினைக் கதிர் அறுக்கப்பட்டதால் அச்சாரல் குறும்பனின் மொட்டைத் தலையாய்த் தோற்றம் தந்தது.
இனி குறமகளும் அவள் தோழிகளும் மூங்கிற் தடியினால் ஆக்கப்பட்ட பரண் மேல் ஏறி தினைப் புனம் காக்கவென்று வெளியில் செல்ல முடியாது. நீண்ட நாட்களாக அவளால் ஆதனைக் காணமுடியவில்லை.
அவனைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அவளை இடையறாது வாட்டிக் கொண்டிருந்தது. தூக்கம் தொலைத்ததனால் அழகிய குவளை போன்ற கண்கள் பசலை நிறம் கொண்டன. பார்வை எங்கேயோ அந்தகாரத்தை வெறித்துக் கொண்டிருந்தது. உடலில் பசலை ஆங்காங்கே திட்டாய்த் தோன்றி அவளது மாமை நிற உடல் அழகை , ஒளியிழக்கச் செய்திருந்தது. உடல் மெலிவினால் வளைகளும் கழன்று விழுந்தன. பித்துப் பிடித்தவள் போல அவள் காணப்பட்டாள்.
அன்னை ஆசையாகப் பரிமாறிய பால் உணவு, அவள் தொண்டைக்குள் இறங்கவில்லை. யாருடனும் பேசும் விருப்பற்று மௌனமானாள்.
முற்றத்து வேங்கை மரத்தில் வந்து அமரும் கிளியும் அவள் தன்னுடன் பேசாததால் ஏமாற்றத்துடன் பறந்து போயிற்று.
அன்னையால் பொறுக்க முடியவில்லை. தன் அன்பு மகளில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டால் கூட அவளால் தாங்க முடிவதில்லை. அவள் தன் நிலத்துக் கடவுளான சேயோனிடம் தன் மகளின் அழகு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்திக்கிறாள். பின் குறி சொல்லும் முதிய கட்டுவிச்சியை அழைக்கிறாள்.
அகவன் மகளாகிய அவள் வெள்ளிப்பூண் பூட்டிய ஒரு மூங்கில் கோலை வைத்திருந்தாள். அவள் முறத்திலிருந்த நெல்லை எண்ணி நிமித்தங் கூறலானாள்.
“அம்மையே இவளின் இந்த நிலைக்கு முருகனாகிய அணங்கு இவள் உடலில் ஏறியமையேக் காரணம்” என்றாள்.
அருகில் இருந்த தோழிக்குக் கட்டுவிச்சியின் பொய் சொல்லும் திறமையைக் கண்டு சிரிப்பு வந்தது அவள் அதைப் பிறரறியாதவாறு மறைத்துக் கொண்டாள்.
அவள் குறி கேட்டு அன்னை செய்வதறியாது திகைத்தாள்.
செவிலித்தாயோ வெறியாட்டு மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என அறிவுரை கூறினாள்.
வெறியாட்டுக்கு ஏற்பாடு நடந்தது.
வீட்டு முற்றத்தில் வெண்மணல் குவிக்கப்பட்டு பரவப்பட்டது. அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டது. முருகாற்றுப்படுத்தும் வேலன் அழைக்கப்படுகிறான். அவன் கடம்ப மாலை அணிந்தவனாய் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுகிறான். பின் மறியை முருகனுக்கு பலி கொடுத்து, அதன் குருதியில் தினையைக் கலந்து மனையெங்கும் தூவுகிறான்.
வெறியாட்டின் உச்சக்கட்டமாய் பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல, குறமகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறான். அங்கிருந்த பெண்களும் குரவையிட்டு ஆடுகிறார்கள். பாணர்கள் பல வகையான இன்னிசையை எழுப்பிப் பாடுகின்றனர். சேயோனாகிய முருகனை வாழ்த்திய வாழ்த்தொலி அந்தப் பந்தலின் மூலைமுடுக்கெல்லாம் சந்தன அகில் வாசனையுடன் பரவுகிறது. பாணரின் பாடலால் முருகன் கோபம் தணிகிறான்
வெறியாட்டு முடிந்து விட்டது. அன்று இரவு ஆதன் நடுநிசியில் பல்வேறு தடைகளைத் தாண்டி வருகிறான். குறமகளது இல்லத்துக்கு அருகில் காத்திருக்கிறான். அவனது வரவை உணர்ந்த தோழி குறமகளை அவனிடம் அழைத்துச் செல்கிறாள்.
குறமகளை ஆதன் தனது உயிர் குழைந்து இன்பம் ஏறும் வகையில் ஆரத் தழுவுகிறான். குறமகள் தனது மனத் துயர் ஆதனைக் கண்ட பொழுதில் இருந்த இடம் தெரியாது பறந்து போனதாய் உணர்கிறாள்.
ஆனால், தோழியால் குறமகளுக்கு நடந்தவற்றை மறக்க முடியவில்லை. வேலன் கையில் விளையாட்டுப் பொம்மையாய் தலைவிபட்ட துன்பம் அவள் மனக் கண்களில் வந்துபோகிறது. அவள் இவ்வாறு குறமகள் துன்பமடையாதிருக்க வேண்டுமாயின், ஆதன் அவளை மணம் முடிப்பதே ஒரே வழி என இடித்துரைத்தாள்.
அடுத்தநாள் மாலை தோழி மிகவும் மகிழ்ச்சியாகக் குறமகளை நோக்கி ஓடிவருகிறாள்.
“உன் காதலன் ஆதன் தன் பெற்றோருடன் உன்னைப் பெண் கேட்டு வந்தான். உன் பெற்றோரும் அவனுக்கு உன்னை மணம் செய்ய முடிவு செய்து விட்டனர்”
தோழி கூறிய செய்தி குறமகளின் காதுகளில் தேனெனப் பாய்ந்தது. அவளை அணைத்து ஆனந்தக் கூத்தாடுகிறாள் குறமகள்.