"மாலை முன்றில குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணனது யாழே"
(ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து)
கார்கால வரவுக்காய் முல்லை காத்திருக்கிறாள். அவளைப் பிரிந்து பாசறைக்குச் சென்ற அவள் கணவன் மாறன் திரும்ப இன்னும் சிலகாலம் இருந்தது. அவனது பிரிவு முல்லைக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. பனியில் நனையும் மலர் போன்ற கண்களில் பசலை படர்ந்து கண்கள் முன்னைய அழகை இழந்துவிட்டன. அவன் நினைவு வாட்டியதால் புறத்தில் உள்ளவையெல்லாம் அவளுக்கு வெறுப்பைத் தந்தன. வெறுமை அவள்மனதில் குடிகொண்டது.
அப்பொழுதுதான் முல்லையின் தோழி பாணன் கீரனைக் கண்டாள். கீரன் ஒரு மாணாக்கன். நாடோடியாய் யாழ் இசை கற்றுக்கொண்டு திரியும் அவன் மாறனிடம் முல்லையின் நிலையை உரைப்பான் என அவள் நம்பினாள். அவள் கீரனை அழைத்துப் போய் முல்லையை அறிமுகம் செய்து வைத்தாள்.
“பாணனே கருமேகங்கள் திரண்டு மழை பொழிந்து கார்கால வருகையைச் சொல்லுகின்றன. கார்காலம் என்பதை நிரூபிப்பது போல முல்லைப் பூக்களும் பூத்துக் குலுங்குகிறது. ஆனிரைகளை மேய்க்கும் கோவலர்கள் முல்லை மலர்களைத் தொகுத்துப் படலை மாலைகளாகக் கட்டி மகிழுகிறார்கள். ஆனால் என் கணவனைப் பிரிந்திருப்பதால், இந்த மாலை எனக்குத் துன்பத்தையே மிகுவிக்கிறது. சொல் பாணா, பல இடங்களிலும் சுற்றித்திரியும் உனக்குத் தெரிந்திருக்கும். என் கணவனது பாசறை அமைந்திருக்கும் சிறுமலையிலும் இந்தமாலை இவ்வாறுதான் இருக்குமா?“ குழந்தை போல வினவும் முல்லையின் மொழி அவன் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவன் முல்லைக்காக மாறனிடம் தூது செல்ல உடனே சம்மதித்துக் கொண்டான்.
கீரன் மாறனிடம் செல்கிறான். அங்கு முல்லையிடம் இருந்து அவன் வருகிறான் என்று தெரிந்ததும் அவன் தன்னிடம் வந்த நோக்கத்தை மாறன் விளங்கிக் கொள்கிறான்.
“நான் இங்கு காலம் கடத்துகிறேன் என்ற என் கொடுமையை அவள் தூற்றுகிறாள். வாடிய முகத்துடன் இருக்கிறாள். வேறெந்த நினைவுமின்றி என்னையே நினைத்திருக்கிறாள். என் விருப்பம் மிக்க காதலி, பிரிவு நோயால் மெலிந்து போயிருக்கிறாள். பாணா, இதனைத் தானே நீ சொல்ல வந்தாய்” எனப் படபடப்பாக மாறன் கொட்டித் தீர்த்தபோது, கீரன் சிறிது வியப்பை அடைகிறான்.
ஆனாலும் இவ்வளவு தெரிந்தும், முல்லை வருந்தும் வகையில் அவளைப் பிரிந்து வந்தமை கோபத்தைத் தருகிறது. உண்மையில் அந்தக் கோபத்தில் நியாயம் இல்லைதான், கீரன் மிகவும் இளமையாக ,விடலைப் பருவத்தினனாக இருந்தான். அதனால், அவனால் மாறனின் கடமை உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை.
“மாறா, நான் உன் பாணனும் அல்ல, நீ என்புரவலனும் அல்ல. உன் மனைவியின் துன்பங்களை அறிந்தும் இரக்கமற்று இருக்கிறாய்” என அவனைத் திட்டித் தீர்க்கிறான்.
மாறனும் கீரனின் முதிராத மனநிலையைப் புரிந்து கொண்டவனாக அவனைச் சமாதானப்படுத்துகிறான்.
“பாணா, என்னை மன்னித்துக் கொள். நீ என்னவளைப் பற்றி மேலும் சொல். நீ சொல்பவை என் காதுகளுக்கு இனிமை தரும். பல நாடுகள் இடைப்பட்ட தொலைவில் இருக்கிறேன். வாடைக் காற்று பனித்துளி கலந்து வீசுகிறது. தனிமையை எண்ணி நொந்து கொண்டிருக்கிறேன். இந்த வேளையில் என் பனிமலர் நெடுங்கண்ணாள் கூறிய செய்திகளை எனக்குச் சொல்!” மாறனின் உற்சாகம் கீரனையும் ஒட்டிக் கொள்கிறது.
அவன் மாறனையும் முல்லையையும் வைத்துக் காதல் கீதம் பாடுகிறான். யாழிசையில் முல்லைப் பண் குழைந்து இழைந்து சுகம் செய்கிறது. மாறன் அந்த இசையில் மயங்கியபடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறான். பிரிவு கூட ஒரு வகையான இன்பம் என்பதை அவன் உணர்கிறான்.
காலங்கள் ஓடி மறைகின்றன. இன்று கீரன் மாணவன் அல்லன். தேர்ந்த யாழிசைக் கலைஞனாகவும் பாடகனாகவும் பரிமளிக்கிறான். மாறனும் பெரும் குடும்பஸ்தனாக மாறிவிட்டான். அவனுக்கு இன்று குழந்தைகள் உண்டு. ஆனாலும் கீரனுக்கும் மாறனுக்கும் இடையே அன்று தோன்றிய உறவு இன்னும் தொடர்கிறது.
கீரன் முற்றத்தில் அமர்ந்து யாழை மீட்டியபடி முல்லைப் பண்ணைப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் யாழில் இருந்து பிறந்த இனிய இசை மாறனின் முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த மானைக் கவர்ந்திருக்க வேண்டும். அது புல் மேய்வதை விட்டுவிட்டுக் கண்களை மூடிப் படுத்துக் கொள்கிறது. மான் கூட இசையை ரசிப்பதாக எண்ணத் தோன்றுகிறது.
முற்றத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் மாறன் அமர்ந்திருக்கிறான். அவனருகில் முல்லை அவனுக்குத் தாம்பூலம் வழங்குகிறாள். அவர்கள் மகன் கபிலன் மாறனின் நெஞ்சில் ஏறி விளையாடியபடி மழலை பேசுகிறான். அம்மழலை மொழியில் மயங்கிய மாறன் குழந்தையை அள்ளி எடுத்து மடியில் வைத்தணைத்தபடி, கண்ணே மணியே என உரத்தக் குரலில் கொஞ்சுகிறான். சிரிப்பும் குதூகலமுமான அப்பொழுதில் கீரனின் யாழிசை நலிந்து போகிறது.
யாழ் இனிமையும், குழல் இனிமையும், குழந்தையின் மழலை மொழி முன்பு தந்தைக்குத் தோற்றுப் போவது இயல்புதான்.
ஆனால்... கீரனுக்குத் தன் இசையில் நனையாதவர் முன்பு பாடுவது மனதின் ஒரு மூலையில் வலியை ஏற்படுத்தியது… அவன் யாழைக் குழந்தை போல் அணைத்தபடி மௌனமானான்.