தாமிரபரணிக்கரையில் அமைந்திருக்கும் அந்த ஊரில் அன்று தேர்த் திருவிழா. கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல தெரு முழுக்கக் கூட்டம். எல்லார் வீட்டு அழிக்கம்பிகளுக்குள்ளிருந்தும் ஈசிச் சேரில் அமர்ந்திருந்த வயசான பெரிசுகளும் சின்னக் குழந்தைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
ராமனாதன் தன் வீட்டுத் திண்ணையில் நின்று பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னிக்கு என்ன விழா தெரியுமோ? தேரோட்டம். தேரோடற வீதிக்கெல்லாம் ரத வீதினு பேரு. நாலு வீதிலயும் சுத்தி வந்து தேர் நிலைக்கு வந்திடும். இந்தக் கூட்டத்துல என்னால தேர் வடம் பிடிக்கறதக் காட்ட கூட்டிண்டு போக முடியாது. நீ தனியாப் போறதும் தப்பு. பேசாம நாம இங்கே நின்னு பாக்கலாம். நம்ம வீட்டுப் பக்கத்துல தேர் வந்தப்புறம் மாடி பால்கனில நின்னு பாத்தா மொத்த கூட்டத்தையும் பாக்கலாம். இப்போதைக்கு இங்க உக்காந்து பாட்டி பண்ணின வடையச் சாப்பிடு.
துபாயிலிருந்து வந்திருக்கும் பத்து வயது நிதினுக்கு வெளியில் போகவேண்டும் என ஆசை. தாத்தா விட மாட்டார்.
அம்மா அப்பாக்கு லீவு இல்லன்னு என்னய மட்டும் விட்டுட்டு போயிட்டாங்க. இந்த தாத்தா போர். சேப்டி சேப்டி னு எங்கயும் போக விடமாட்டேங்குறார்.
வாசலில் டுர் டுர் என்ற சத்தத்துடன் கலர் கலர் மிட்டாய் விற்பவர்கள், சைக்கிளில் வைத்து ரப்பர் , பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பவர். குச்சி ஐஸ் வியாபாரி, சவ்வுமிட்டாய், பலூன்கள், பூ விற்பவர்கள் எத்தனை பேர். கொஞ்ச நேரத்தில் பைப்பில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேர் இழுப்பவர்களுக்கு கால் சுடக்கூடாதாம். பாவம் பாட்டி கஷ்டப்பட்டு போட்ட கோலம் தண்ணீரில் கரைந்தது.
போஸ்ட் கம்புகளில் ஏறி மின்சார ஒயர்களின் கனெக்சனைத் துண்டித்துக் கொண்டிருந்தார்கள்.
இனிமே தேர் வீதியக் கடந்தாதான் கரண்ட். வேர்த்துதுன்னா நீயும் ஒரு ஓல விசிறி வச்சி வீசிக்கோ. பேரனை உபசரித்தார் தாத்தா.
அழிக்கம்பியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு எட்டிப் பார்க்க முயன்றான் நிதின். கம்பி அருகருகே இருந்ததால் அவன் மூக்கு மட்டும் வெளியே நீட்ட முடிந்தது.
ஒவ்வொரு முறை அவன் மூக்கு வெளியில் நீளும் போதும் ஒரு ஈ வந்து அதில் அமர்ந்தது. ஓரிருமுறை பயந்த அவன் அதையே விளையாட்டாக ஆக்கிக் கொண்டான். அவன் உள்ளே நிற்கும்போது அந்த ஈ வீட்டுவாசலில் நிற்கும் பம்பாய் மிட்டாய்க்காரனின் மிட்டாயில் மொய்க்கும்.
பம்பாய் மிட்டாய். நினைச்சாலும் போய் வாங்க முடியாது. வாச் நெக்லஸ் அஞ்சே ரூபாய். போட்டு அழகு பாத்துட்டு சாப்பிட்டுட்டு போங்க. பம்பாய் மிட்டாய். கூவிக்கொண்டே வந்து நிற்கும் தன் வயதொத்த பிள்ளைகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பையிலிருக்கும் மிட்டாயைக் கையில் வாட்ச் மற்றும் கழுத்தில் நெக்லஸ் அணிவித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச தூரம் போனவுடன் அப்பிள்ளைகள் அவற்றை உருவி எடுத்து சாப்பிட்டுக்கொண்டே சென்றனர்.
தனக்கும் சாப்பிட ஆசைதான். முடியாதே. ஏ...ஈயே நீ திருட்டுத்தனமா நக்கிட்டு வரியே அதோட டேஸ்ட் எப்டி இருக்கு...நிதின் வெகு சுவாரசியமாக மூக்கின் மேல் அமர வந்த ஈயுடன் பேச ஆரம்பித்தான்.
அவன் பேசியது ராமனாதனுக்கு சரியாகக் காதில் விழாததால், நல்ல பிள்ளை. பஜனை பாடுகிறாயா பாடு என தன் பங்குக்குக் பாடிக்கொண்டே உள்ளே எழுந்து போய்விட்டார்.
மீண்டும் வெளியில் பார்க்க ஆரம்பித்தான் நிதின். எப்படி முயற்சி செஞ்சாலும் ரெண்டு பக்கமும் வரிசையா வீடுகள்இருக்கற இந்த தெருவுல நேரெதிரே நடப்பதுதான் நல்லாத் தெரியுது. தள்ளி இருக்குற கோவில எட்டித்தான் பாக்கணும். இந்த அழிக்கம்பிகளால எட்டிப்பாக்க முடியாது. செம போர்.
வெகு நேர முயற்ச்சிக்குப்பின் தூரத்தில் நடப்பது ஒன்றும் தெரியாததால் நேரெதிரே இருந்த ஆளில்லா எதிர் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தான் நிதின்.
தொடக்கத்திலிருந்து இவனையேக் கவனித்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு இசக்கியம்மாள் அங்கிருந்த மகராசியம்மாளிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
நேரெதிர் வீட்ல வந்திருக்காம்ல அவன் தான் அந்த அய்யாவோட புள்ள வயத்துப்பேரன். உருளக்கிழங்கு கணக்கா இருக்கான் பாத்தியா. எங்கயோ தூர தொலைவுல இருக்காம்னு சொன்னாவ. நம்ம ஓனர் சின்னத்தாயி இருக்கால்ல அவ பேசிக்கிட்டிருந்ததக் கேட்டேன். படிப்பு படிப்புனு எப்பமும் ஊர்ப்பக்கமே எட்டிப்பாக்காத இவுக அப்பா இப்பந்தான் புத்தி வந்து தன் புள்ளயாவது எல்லாத்தையும் தெருஞ்சிக்கிடட்டும்னு ஊர்ப்பக்கம் கூட்டிக்கிட்டு வருதாம்.
பெரியய்யா வெள்ளையத்தேவர் இருக்கையில இப்படியா இருக்கும் திருவிழா.
இப்டி ஒரு சின்னப் புள்ள வீட்டுக்குள்ளார நிக்க முடியுமா. தெருவோட கத்திக்கிட்டே போவாரு. எல்லாப் புள்ளைங்களும் எம்பொறத்தால வாருங்க. நாம் பதனமா கூட்டிப்போயி தேர் காமிச்சுக் கூட்டிக்கிட்டு வாரேம்னு. திரும்பி வாரேல பிள்ளங்க எல்லார் கையிலயும் தின்பண்டம் வெளையாட்டுச் சாமான்னு ரொப்பில்ல கூட்டிக்கிட்டு வருவாக. பெத்ததுங்களும் நம்பிக்கையா அனுப்பி விடுமே. நம்மள விட ஐயா நல்லா பாத்துக்கிடுவாருனு. அதெல்லாம் ஒரு காலம். இப்பல்லாம் நம்பிக்க செத்துப்போச்சு.
இல்லன்னா நான் இப்டி அழிக்குள்ள கெடந்து சீரளியுவேனா சொல்லு.
சரி அண்ணாச்சி அத விடுங்க நாங்கல்லாம் இப்பந்தானே வந்தோம். உங்க அளவு எங்களுக்கு எதுவும் தெரியாதுல்ல. முன்ன நீங்க எம்புட்டோ பாத்திருப்பீக. அதப்பத்தி சொல்லுங்களேன். நேரம் போவும். பேச்சை திசை மாற்றியது சிமெண்ட் தூணும், அழிக்கம்பிகளும் சொல்லுதேன். இந்தாப் போறாம்ல. பிளாஸ்டிக் பொம்ம விக்குதவன். இவன் அய்யாதான் மரிக்கொழுந்து விக்குத மாசாணம்.
அப்பமெல்லாம் தேருக்கு மொத நாள் ராவே வியாபாரிங்க வந்து எல்லார் வீட்டுத் திண்ணையிலயும் படுத்துக்கிடுவாக. அப்டி தான் ஒரு நாள் இவனும் வந்து இங்க படுத்துக்கிட்டான். அதென்னம்போ தேரன்னைக்கு மரிக்கொழுந்து வாங்கி தலையில வச்சிக்கிட்டா நல்லதுன்னு நெனச்ச காலம். இவன் போறாத காலம்
அப்பந்தான் அது நடந்திச்சு.
இந்தா இருக்குல்ல கல்லு படி. அங்ஙன மரிக்கொழுந்து பொட்டிய வச்சிப்போட்டு ஆத்தாகிட்ட ஒரு சொம்பு தண்ணிய வேங்கி குடிச்சிப்போட்டு தெருமுக்குல போடுத படத்தப் பாக்க போயிருக்கான். அப்பமெல்லாம் தேர் அன்னிக்கு மொத ராவே சுத்துப்பட்டி கிராமம் பூராவும் வந்து தங்குமில்ல. அதுக பொழுது போக்குததுக்காவ முக்குல திரை கட்டி சினிமாப் படம் போடுவாக. அத்தினிபேரும் குடும்பத்தோட துண்ட மண்தரையில விரிச்சு ஒக்காந்து படம் பாப்பாங்க. இதுல வயசான ஆச்சிமாருங்க படத்துக்குக்கூட வசனம் வேர பேசுவாக. ஒண்ணு ரெண்டு ஒப்பாரியும் வைக்கும். அப்டித்தான் மாசாணம் போகையில வேலுண்டு வினையில்லை சாமி படம் போட்டாங்களாம். கூட்டமே முருகா முருகா னு கத்திக்கிட்டு பரவசமா இருக்கையில எவனோ களவாணிப்பய நம்ம கோடிவீட்டு மூக்காச்சி பாம்படத்த காதோட அத்துட்டுப் போயிட்டானாம். ஆச்சி வலி தாளாம கத்துததப் பாத்து படத்துல சாமி வேலக் களவாண்டதுக்காவ அழுதானு நெனைச்சி பக்கத்துல இருந்தவ திருநீறத் தலையில போட்டிருக்கா போல. வலி தாங்காம ஆச்சி எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சிடுச்சு. முன்ன ஒக்காந்த மாசாணம் தனக்கு தெரை மறைக்குதுன்னு சொல்லி ஆச்சியக் கையப் பிடிச்சி ஒக்காரச்சொல்லிட்டாம்போல. பொறவுதான்தெரிஞ்சது சேதி. அவன் கத்தி கதவடைச்சு எல்லாரையும் கூட்டி ஆச்சிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவதுக்கு ஒதவி செஞ்சிருக்கான். கடைசியில பழி அவன் மேலயே விழுந்துபோச்சு. ஆச்சி பாம்படத்தக் களவாண்டுக்கிட்டு ஒதவி செய்யுதது கணக்கா நடிக்காம்னு ஆளாளுக்கு பேசி அவனப் போலிசுல புடிச்சுக்குடித்தாட்டாங்க. நம்ம தேவரய்யா தான் போயி அபராதப்பணம் கட்டி அவன வெளியக் கொண்டு வந்தாக. அன்னிக்குப் போனவன்தான். அப்புறம் இந்த தெசப்பக்கம் திரும்பிக்கூடப் பாக்கல. இம்புட்டு வருசத்துக்குப் பொறவு அவன் புள்ளயப் பாக்குதேன்.
அவன் பொம்மையக் கொண்டு எறக்குதாம்ல. அந்த வீட்டுக் கதையச் சொல்லவா என்று இசக்கியம்மாள் கேட்க, மகராசியம்மாள் நாளைக்கு வந்து அந்தக் கதையைக் கேட்பதாகச் சொல்லிச் சென்றாள்.