எல்லா வீட்லயும் மாமியாரும் மருமவளும் எப்பமும் ஒரண்டிக்கிட்டே கெடக்காகளே. ஏன்னு தெரியுமா? மேற்குத் தெருவுல இருக்க ரெண்டு மூணு வீடு இருக்கு... அந்தத் தெருவுல ஒண்ணும் அப்டி பிரச்சினை இருக்க மாதிரி தெரியலயே ஆச்சி. - இது மகராசியம்மாள்.
அட அதான் மேற்குத் தெரு வீட்டப்பத்தி சொல்லுதேன். கடைசியில நீயே தெரிஞ்சுக்கிடுவ. நல்லய்யன் வீட்டப்பத்தி சொல்லுதேன். அவன் வீட்ல அவன் பொஞ்சாதி, அவன்அம்மா, அவன்புள்ள, இத்தன பேரு இருக்காக. அங்க என்ன நடந்துச்சு தெரியுமா?
காட்சிகள் மனக்கண்முன் விரியத் தொடங்கின...
பொழுது விடிஞ்சா தினமும் இதே ரோதன. இன்னிக்கு என்ன பஞ்சாயத்து கேட்டுக்கொண்டே நாற்காலியில் அமர்கிறான் நல்லய்யன்.
மொத உங்க ஆத்தாகிட்டயே கேளுங்க. பொறவு அதுக்கு தனி பஞ்சாயத்து வைக்க வேண்டி வரும். என்ன இருந்தாலும் நான் வந்தவதானே. எனக்குன்னு என்ன இருக்கு இந்த வீட்ல. பேசுததுக்குகூட உரிம இல்ல. அங்கலாய்த்துக் கொண்டே அமர்கிறாள் நல்லய்யனின் மனைவி.
சரி ஆத்தா. நீ சொல்லு. இது நல்லய்யன்.
தவமா தவம் கெடந்து பெத்த புள்ளய முந்தானையில முடிச்சு வச்சிக்கிட்டு ஆட்டம் போடுதா உன் பொஞ்சாதி. கேக்கதுக்கு நாதியில்ல. மொற உள்ளவுக போய்ச் சேந்த பொறவு என்ன மூலையில உக்காந்தி வச்சி கஞ்சி குடுக்கீய. ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கிறாள் பாண்டியம்மா எனும் பெயர் கொண்ட அவன் ஆத்தா. இது ஒண்ணும் புதுசல்ல. எதையும் எப்போதும் நேரடியாகச் சொல்ல மாட்டாள். பாட்டாகத்தான் பாடுவாள்.
“வகைவகையா சோத்தப் போட்டு
வஞ்சனையில்லாம கொழம்பு ஊத்தி
அவிச்சுவச்ச காயோட
அப்பளமும் சுட்டுப் போட்டேன்
பனைவெல்லப் பாயாசம்
பக்குவமா குடிக்கவச்சேன்
அத்தனையும் தின்னுபோட்டு
ஆச்சிய மறந்துபோனான்.
சொல்லிக்கிடாம போயிட்டான்
சொணகெட்டு நான் இருக்கேன்
ஏன் ஆத்தா இம்புட்டுதானா. எம்மவன் உங்கிட்ட சொல்லிக்கிடாம ஊருக்குப் போயிட்டான்னு சொல்லுதியா.
பொங்கி எழுந்தாள் பாண்டியம்மா. பொசகெட்ட பயலே. நான் இம்புட்டு வெசனப்பட்டு பாட்டா பாடிக்கிட்டுக் கெடக்கேன். நீ ஒய்யாரமா உக்காந்து இம்புட்டுதானான்னு கேக்க. அந்தா நிக்காளே உன் பொஞ்சாதி அவ செஞ்ச வேல. எங்கிட்ட அண்ட உடாம அவன வண்டி ஏத்தி அனுப்பி உட்டுட்டா.
ஏன் என்ன கொறஞ்சி போச்சாம். எம்புள்ள இங்க இருந்த மூணு நாளும் எங்கிட்ட பேச உடாம அவன் காதுக்குள்ள பாட்டா பாடிக்கிட்டுக் கெடந்தாக. அவன் போகையில எங்கிட்ட வந்து அம்மா ஆச்சிய பாட்டு பாடுதத நிறுத்தச் சொல்லுமா. நேரடியா பேசவே மாட்டேக்குனு கொற சொல்லிட்டுப் போனான். அதச் சொன்னதுக்குதான் இந்தக் குதி குதிக்காங்க.
பெறகு என்ன ஆச்சு தெரியுமா?
இதுக்கு முடிவுகட்ட பட்டணத்து காலேஜ்ல படிக்க தம் மவனோட உதவியோட அவுக ஆத்தா நாள் முழுக்க பாடுதத எல்லாம் பதிவு பண்ணி வானொலிக்கு அனுப்பினாரு நல்லய்யன். அவ்வளவுதான். திறமை மிக்க ஆச்சினு எங்கேருந்தெல்லாமோ படிக்குத பிள்ளேளுவ அவுக நாட்டுப்புற பாடல் திறமையத் தெரிஞ்சிக்கிடுததுக்கு வர ஆரம்பிச்சாங்க. அவுக வீட்ல சண்டையும் அத்துப்போச்சு. சந்தோசமும் பெருகிச்சு.
இங்ஙன சண்டைக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தீர்வுகண்டா பிரச்சினையே இல்லாமப் போயிடும். நான் இப்பஞ்சொன்னது மருமகளப் பிடிக்காதுன்னாலும் பேரப்பிள்ளேளுவகிட்ட பாசமா இருக்கவ கத. யாருமேலயும் பாசமில்லாம சுயநலமா இருக்குத ஜன்மங்களும் இருக்கு. அதுக குடும்பத்துல புருசனாவோ, பொண்டாட்டியோ, மாமியாளோ, இல்ல மவன் மருமவளோ யாராவேணுமின்னாலும் இருக்கலாம். சுயநலங்க குடுக்கத செரைக்கு விடிவே கெடையாது. விதினு நெனச்சி கூட இருக்க மத்தவுக பொருத்துக்கிட்டுப் போய்த்தான் ஆவணும்.
ஆமா ஆச்சி சுயநலங்களப் பத்தி பேசினா நேரங்காலம் போவுததே தெரியாது. சாப்பிட்ட பொறவு நேரா வந்துட்டேம்லா கொஞ்சம் ஏனம் கெடக்கு. வெளக்கணும். மீதிய நாளைக்கு பேசலாம். விடைபெற்றுச் சென்றாள் மகராசியம்மாள்.