“ஏன் ஆச்சி நம்மூர் ஆசுபத்திரியில கொரோனானு ஒரு வியாதி இருக்குன்னு சந்தேகப்பட்டு ராசாத்தினு ஒருத்தங்கள சேத்துருக்காங்களாமே. உங்களுக்குத் தெரியுமா? அதனால நெறைய சட்டம் போடப்போவுதாங்களாம். இனிமே நம்ம திண்ணையில கூடி நின்னு பாடு பேசக்கூடாதாம். பிள்ளேளுவ அக்கம்பக்கத்தாரோட வெளையாடக் கூடாதாம். கைய நல்லா சோப்பு போட்டு கழுவணுமாம்...” மகராசியம்மாள் பேசத்தொடங்க தெருவில் போய்க்கொண்டிருந்த வெள்ளைச்சீல ஆச்சியும் சேர்ந்து கொண்டாள்.
ஆமா நானும் கேட்டேன். இனிமே நம்ம சனம் முழுக்க பாடையில வச்சு கட்டுதப்போ தாவாக்கட்டைய இழுத்துவச்சி துணி கட்டுவாங்கல்லா, அது கணக்கா கட்டிக்கிட்டுத் திரியும் போல...
வாச முன்ன நின்னுக்கிட்டு எதுக்கு வேண்டாத பேச்சு பேசுதீக. மூக்கு வாய துணியவச்சி பொத்தி கட்டிக்கிடணும். அவ்வளவுதான் இது மகராசி.
எனக்கு என்னாத்துக்கு வெட்டிப் பேச்சு ஆத்தா. நான் அந்தாக்ல போயி நம்ம சாமியாடி ஈஸ்வரிகிட்டேந்து திருநீறு வேங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேம். நீயும் பூசிக்கிடு. அது என்னம்போ நம்ம பூக்காரத் தெரு மாடசாமி மவன் பேசிக்கிட்டிருந்ததக் கேட்டேன். ஏதோ சீனானு தொல தேசத்துல ஒரு ஊரு இருக்காம்ல அங்க இருக்க சாமி கோவிச்சுக்கிட்டுது போல. நான்தான் இந்த ஒலகத்துலயே பெரிய சாமி. என்னயத்தான் எல்லாரும் கும்புடணும் அதத் தெரிஞ்சிக்கிடாம வேற வேற சாமியக் கும்பிட்டதால தீட்டுக் கிருமிய பரப்பி உட்டு சாபம் போடுதேம். எந்தச் சாமி உங்களக் காப்பாத்துதுனு பாக்கேம்னுச்சாம். அது போட்ட சாபந்தான் இப்டி கொள்ள நோயா வந்து நிக்குனு தலைவருங்கல்லாம் பேசிக்கிடுதாங்களாம்.. திருநீறு குடுத்துட்டு ஈஸ்வரி ஆத்தா கூட சொல்லிச்சு. நம்ம வாகையடி இசக்கியம்மன் அவ கனவுல வந்து சொன்ன விசயத்த.
இந்த ஒலகத்து சாமிங்க நாங்களெல்லாம் கூடிப் பேசினோம். அதுல எடுத்த முடிவுப்படி கதவடைச்சு அவுகவுக கோயிலுக்குள்ளார உக்காந்துக்கிட்டோம். பாக்கதுக்கு யாரும் வரவேண்டாம். வீட்டுக்குள்ளாரயே ஒரு மண்டலம் மஞ்சத் தண்ணி ஊத்திக்குளிச்சு சுத்தபத்தமா இருந்துக்கிடுங்க. வாச தாண்டி போனாவே தீட்டு ஒட்டிக்கிடும். வீட்டுக்கு வந்தபொறவு ஒண்ணுத்தயும் தொடாம துணி நனச்சி குளிக்கணும். அப்டிசெஞ்சீகன்னா அந்த சீனா பாம்பு அம்மன் கோவம் தணிஞ்சி பரப்பி உட்ட கிருமித்தீட்ட உறிஞ்சிக்கிடும். அதுக்குப்பொறவு நாங்க அவளக் கட்டிப்போட்டு ஒண்ணுஞ்செய்ய உடாம பண்ணிப்போடுவோம். சரியான பொறவு எல்லாரும் கூடி என் கோயில்முன்ன கொடை குடுங்கனு சொல்லிச்சாம். சரி ஆத்தா நான் வாரேம். நீங்களும் பதனமா சாமி சொன்னமேனிக்கு நடந்துக்கிடுங்க.
அவள் சென்றவுடன் இசக்கி ஆச்சி ஆரம்பித்தாள். என்ன மகராசி ஆச்சரியமா இருக்கா. இந்த ஊர்ல இப்டித்தான் எல்லாத்துக்கும் அவுகவுகளுக்குப் புடிச்ச சாமிய காரணம் காட்டி உட்ருவாங்க. இப்பம் கொஞ்சம் முன்ன குளத்து முக்கு அனுமார் கோவில் பூசாரி சொல்லிட்டுப் போனாரு. ஆச்சி அனுமார் கோவிச்சுண்டுட்டார். அதான் முகக்கவசம் போட்டு எல்லாரும் பாக்கறதுக்கு தன்னய மாதிரியே இருக்கணும்னு நெனச்சி இந்த வியாதிய பரப்பி உட்ருக்கார். அவர நெனச்சி எல்லாரும் வியாழக்கிழமைதோறும் பாராயணம் பண்ணினேள்னா வியாதி உலகத்த விட்டே போயி ஷேமமா இருப்பேள்னு. சரி அத விடு. ஆஸ்பத்திரியில கெடக்கது முள்ளு மூக்கியா, நெல்லு நொறுக்கியா.
என்ன ஆச்சி உங்க ஊர் பட்டப்பெயர் வித்தியாசமாவில்ல இருக்கு. ஏதோ முள்ளு மூக்குனுதான் சொன்னாங்க. ஏன் ஆச்சி அவங்க மூக்கு கூர்மையா இருக்குமோ.
அட அது இல்ல மகராசியென இசக்கி ஆச்சி கதை சொல்ல மகராசியின் முன் கதை விரியத் தொடங்கியது...
ராசாத்தி சின்னப்புள்ளயா இருக்கையில பள்ளிக்கூடத்துல நடந்த கதை. ஜெயானு ஒரு டீச்சரம்மா வேலைக்கு சேந்த புதுசு. அது பக்கத்து டவுண்லேந்து வேலைக்கு வந்து போய்க்கிட்டிருந்துச்சு. இந்த ஊர்ல பெரும்பாலும் பிள்ளைங்களுக்கு சாமி பேரு தானே வைப்பாங்க. அதால அந்தம்மாளுக்கு கூப்பிடதுதுல சங்கடம் இருந்துச்சு போல. அவுங்க பேரோட சேத்து இனிசியலையும் சொல்லி கூப்பிடுவாகளாம். எம் லெச்சுமி இங்க வா. எல் லெச்சுமி அங்க போன்னு. அப்பம் இந்த ரெண்டு ராசாத்தியும் ஒரே வகுப்புல படிச்சிக்கிட்டு இருந்தாக போல. ஒருத்தியோட அப்பா பேர் பொன்னையா. இன்னொருத்தி அப்பா பேர் பெரியசாமி. அதனால ஜெயா டீச்சர் எப்பம் பி ராசாத்தினு கூப்பிட்டாலும் மாத்தி மாத்தி வந்து நிப்பாளுக போல. மத்த பிள்ளேளும் பி பி னு கேலி பண்ணி சிரிக்காங்கனு சொல்லி ரெண்டும் ஒப்பாரி வச்சிருக்கு. உடுவாளுங்களா ஆத்தாக்காரிங்க. பள்ளியூடத்துக்குப் போயி கொற சொல்லியிருக்காங்க. அந்த டீச்சரம்மா பயந்து போயி வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கிட்டுப் போயிடுச்சு.
அந்தா கெடக்குல்ல அடிபம்பு மேடை. அங்ஙன தான் முன்ன சனமெல்லாம் மாடுகட்டி போர் அடிக்கும். அறுத்துப் பரப்பின நெல்கட்டுமேல மாடுகளநடக்க உடுவாக. அதுல முக்காவாசி நெல்மணி உதுந்து போவும்.மிச்சம் மீதி இருக்கத கொத்து கொத்தா எடுத்து கையால துணி துவைக்கது கணக்கா அடிச்சுப் பிரிப்பாக. பின்ன பிரிஞ்ச நெல்லு மணிய முறத்துல அள்ளி நின்னுக்கிட்டே காத்து வீசுததிசையில அசைச்சு அசைச்சு தூத்துவாங்க. அப்பந்தான் பதர் பிரிஞ்சி தள்ளிப் போய் விழுகும். இதையெல்லாம் நீ எங்க பாத்திருக்கப் போற. உனக்கு தான் வயக்காடு வாசனையே இல்லையே. இருந்தாலும் வெள்ளாம பாக்கவமெல்லாம் பெரும்பாலும் எந்திரத்த வச்சி சுளுவாசெய்ய ஆரம்பிச்சுட்டான்...
கதையப் பாதியில உட்டுப்போட்டு வேற என்னம்போ சொல்லுதீயளே. ராசாத்தி பத்தி சொல்லுங்க உசுப்பேத்தினாள் மகராசி.
அட. நான் கதையத்தான் சொல்லுதேன். போர் அடிக்க எடத்துல எப்பமும் ரெண்டு ராசாத்தியும் நிப்பாளுங்க. ஒருத்திக்குத்தான் எப்பமும் நொறுக்கதுக்கு நெல்லு வேணுமே. அப்டி ஒருநாள் நிக்கையில ஒருத்தி சொல்லியிருக்கா என் ஆத்தா எப்பமும் மூக்கு குத்திக்கோன்னு கரச்சல் குடுத்துக்கிட்டேயிருக்கா. ரொம்ப வலிக்குமோன்னு ரோசனையா இருக்கு. நம்ம தங்கஆசாரிகிட்ட கேட்டப்போ அவரு சிரிச்சிக்கிட்டே சொல்லுதாரு ஒண்ணும் பிரச்சினையில்ல, நான் மூக்கு குத்தி உட்ட பொறவு வேப்பங்குச்சிய சொருகி உடுவேம். எண்ண தடவி புண்ணு சரியான பெறகு ஊமுள் வாரியக்கட்ட குச்சிய மூக்கு ஓட்டைக்குள்ளார தெனைக்கும் உட்டு எடுக்கணும். அப்பந்தான் தண்டு பெரிசா இருக்க மூக்குத்தியப் போடமுடியும்னு. அப்பம் முக்குவீட்டுல நல்லகண்ணுனு ஒருத்தியிருந்தா அவ சொல்லியிருக்கா. அடக் கிருக்கி. ஓட்ட போடுததுக்கு எதுக்கு ஆசாரிகிட்ட போவணும். இந்தா நிக்குல்ல மரம் இதிலேந்து ஒடமுள்ள பிச்சி குத்திக்கிடவேண்டியதுதானேன்னு. அவ பேச்சுக்குச் சொல்லப்போக, இந்தப்புள்ள நெசமாவே முள்ள பிச்சிக்கிட்டுப் போயி தெப்பக்கொளத்துத் தண்ணியில மொகத்தப்பாத்து மூக்கு குத்திக்கிட்டு வந்திருச்சு. பொறவு அங்கிருந்த சனமெல்லாம் அவளப் புடிச்சு எருக்க எலய ஒடிச்சு அதோட பாலத் தடவி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்காக. மறுநாள் அவ வகுப்புப் பிள்ளைங்கள்ல ஒருத்தி நம்ம ராசாத்தி ஒட முள்ள வச்சி தனக்குத்தானே மூக்குகுத்திக்கிட்டானு பெருமையா சொல்ல அவளுக்கு முள்ளு மூக்குத்தினு பெயரே வச்சிட்டாங்க. இன்னொருத்தி எப்பம்பாத்தாலும் நொறுக்குத்தீனிக்குப் பதிலா நெல்ல வாயில போட்டு அரைச்சுக்கிட்டே கெடக்கதால அவளுக்கு நெல்லு நொறுக்கினு பெயர் வந்துபோச்சு. ரெண்டுபேரும் கலியாணம் முடிஞ்சு இதே ஊர்லதான் இருக்காளுக. இப்பம் புரியுதா அந்த முள்ளு மூக்குத்தி ராசாத்தியதான் சுருக்கி முள்ளு மூக்கினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அவளுக்கு ஒண்ணும் ஆவாது. தைரியசாலி. வயிரம் பாஞ்ச ஒடம்பு.
சரி ஆத்தா. பேசிக்கிட்டேயிருந்தா சோலி ஒண்ணும் ஆவாது. நாளையிலேந்து நாமளும் நடவாசல்ல உக்காந்து பேச வேணாம். எங்க வீட்டுக் கொட்டில்ல உக்காந்து பேசலாம். சரி போய் நல்லா சோப்புபோட்டு கையக்கழுவு. சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் இசக்கி ஆச்சி.