சேதி தெரியுமா ஆச்சி இன்னைக்கு கோயிற்கதவு ஒன்பது மணிக்குத்தான் தொறக்குமாம். ஏதோ இரங்கல் கூட்டமாம். என் வீட்டுப்பக்கத்துல பேசிக்கிட்டிருந்தாங்க. சொல்லிக்கொண்டே வந்தாள் மகராசி.
நேத்தைக்கு நானே இதப்பத்திதான் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். நீயே சொல்லிட்ட. இரங்கல் கூட்டம் இந்திராகாந்தி அம்மாளுக்கு. அவுகளுக்குமட்டுந்தான் காலங்காலமா கூட்டம் நடந்திக்கிட்டு வருது. நான் கலியாணம் முடிச்சு வந்த சமயம் தொடங்கினது. அது ஒரு பெரிய கதை.... என்றபடி இசக்கியம்மாள் இழுக்கத் தொடங்கினாள்.
மகராசி அதைக் கேட்கும் ஆவலுடன் இசக்கியம்மாளைப் பார்த்து ‘சொல்லுங்க’ என்றாள்.
“மகராசி அந்தக் கதையைச் சொல்லுதேன் கேளு. மேக்கால நடந்தா வயக்காட்டுத் தெரு வரும். அங்க முன்ன ஆவுடையாச்சினு ஒருத்தி இருந்தா. வெள்ளச்சீல கட்டிக்கிட்டு தொங்கத்தொங்க பாம்படம் போட்டுக்கிட்டு இருப்பா. எப்பம் பாத்தாலும் அவுக வீட்டச்சுத்தி சின்னப் பிள்ளைங்க கூட்டமா நிக்கும். ஆச்சி ஊர்ப் பிள்ளேளுவளுக்கு கம்பு கெழங்கு, பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு எல்லாம் துட்டு வேங்காம அவிச்சுக்குடுக்கும். பாடுபாத்து வெளைய வச்சி இப்டி ஊர்ப்பிள்ளைங்களுக்கு குடுக்கியேனு பலபேர் ஏசினாலும் அது கண்டுக்கிடாது. ஒத்தேலதான் ஆச்சி இருந்திச்சு. காலையில கழனித்தண்ணி எடுக்கதுக்காக இங்ஙன வரும். வீடுவீடாப் போயி உளுந்தும் அரிசியும் களைஞ்சு ஊத்தின தண்ணிய தன் கொடத்துல ரொப்பும். எங்க வீட்ல எடுக்கையில கைய கழனிப்பானைக்குள்ளார உட்டு கலக்கிப் பாத்துதான் எடுக்கும். ஏம்னா ஒருக்க நான் என் மாமியா இலையில போட்ட இட்லிய சாப்புட முடியாம திண்டாடி யாரும் பாக்கமாட்டாகனு நெனச்சு கழனிப் பானைக்குள்ளார போட்டுட்டேன். அதத் தன் கொடத்துல ஊத்தையில ஆச்சி கண்டுக்கிடுச்சு.
பெறகு மெதுவா எங்கிட்டவந்து மாட்டுக்கு தின்ன எச்சியெல்லாம் குடுக்கக்கூடாது. இப்பம் நான் இதக்கொண்டு வயல்ல கொட்டிருதேன். இனிமே இப்டி செய்யாதனு சொல்லிச்சு. இப்பம் வர நான் அத மறக்கல.
ரொம்ப நாள் வரைக்கும் நான் அந்த ஆச்சிக்கு யாரும் நாதியில்லனு நெனச்சிக்கிட்டிருந்தேன். பொறவுதான் தெரிஞ்சிச்சு. ஆச்சிக்கு ஒரு மவன் இருக்காம்னு. அவன் பட்டணத்துல அவுக பெரியய்யா வீட்ல தங்கி பெரிய படிப்பு படிச்சாம்போல. இந்த ஊர்ல மொதமொத ஆச்சி வீட்லதான் டி.வி. பொட்டி வந்திச்சு. பட்டணத்துல வேலைக்குச் சேந்த அவ மவன் மொத சம்பளத்துல வேங்கி வச்சான். தெனைக்கும் எல்லாப் பிள்ளேளுவளையும் உக்காத்தி படம் காணிக்கும். ஒருக்க சின்னப்புள்ள படத்தப் பாத்து பயந்து மோண்டிருச்சாம். பொறவு அது படம் காணிக்கத நிப்பாட்டிருச்சு. ஊர்ப்பெரிசுங்க தெனைக்கும் செய்தி பாக்கதுக்காவப் போவாக...” என்றபடி இசக்கியம்மாள் மகராசியைப் பார்க்க,
‘அந்தக்காலத்தில இந்த டிவிபொட்டி ஒண்ணிரண்டு வீட்டிலதான் இருக்கும்... இப்போ இந்த டிவிப்பொட்டி இல்லாத வீடு இல்ல...’ என்று மகராசி இசக்கியம்மாளுக்கு எடுத்துக் கொடுத்தாள்.
“ஆமாம், அப்டிப் போவையில ஒருநாள் இந்திராகாந்தி அம்மாள் செத்த சேதி தெரிஞ்சிச்சு.... அந்த டிவியில அதைப் பார்த்திட்டு, ஊர்ப்பொம்பளைங்க எல்லாம் ஒண்ணுகூடி ஆவுடையாச்சி வீட்டுமுன்ன மாரடிச்சி ஒப்பாரிவச்சி அழுதிச்சுங்க. பொறவு உருவம் கட்டிப் பாடையில வச்சி சங்கு ஊதி மணி அடிச்சு மருவாதியோட ஊர்ச்சனம் சுடுகாடு கொண்டுக்கிட்டுப் போயி எரிச்சாங்க. கல்லுநட்டு படையல் வச்சு ஒரு சடங்கு பாக்கி வைக்கல. நாளைக்குக்கூட நீ பாக்கலாம். வயக்காட்டுத் தெரு முக்குல இருக்க நடுகல்லு முன்ன ஊர்ப் பொம்பளைங்க வகைவகையா பண்டம், பலகாரம் செஞ்சி எடுத்துக்கிட்டுப்போய் படைக்கும்...” என்றாள் இசக்கியம்மாள்.
“அங்க தலையம்மங்கோவில் இருக்கதால்ல எம் மக சொல்லிக்கிட்டிருந்தா. ரொம்ப வீரியமுள்ள அம்மனாமே... அவுக கல்லு உருவத்துல இருக்கதாவும் மனசார வேண்டிக்கிட்டா அரசாங்க வேலை நிச்சயம் கெடைக்கும்னு நேத்திக்குதான் சொல்லிக்கிட்டிருந்தா...” என்று மகராசி சொல்ல,
“இந்திராகாந்தி அம்மா தலைவி இல்லையா... அதான் அவுகளத்தலையம்மனா கும்புடுதாங்க” என்றாள் இசக்கியம்மாள்.
அதைக் கேட்டு ஆச்சரியத்துடன், “இங்க இருக்க ஒவ்வொரு வீட்டுக்கும்தான் கதை உண்டுனு நெனச்சேன். இங்கயிருக்கக் கோவிலுக்கும் இப்படியொரு கதையிருக்குங்கத இப்பந்தான் தெரிஞ்சிக்கிட்டேன். சுவாரசியமா இருக்கு” என்ற மகராசி, “இப்பம் நேரமாகிப்போச்சு. வீட்டுல தேடுவாங்க. நான் வீட்டுக்குப் போறேன்... நாளைக்கு வாரேன்...” என்றபடி அங்கிருந்து சென்றாள்.