“ஏன் இசக்கி ஆச்சி என் வீட்டுக்கு நாலுவீடு தள்ளி ஒரு கெழவி ஒத்தேல பொங்கித் தின்னுக்கிட்டு கெடக்குல்ல. எப்பமும் பொலம்பிக்கிட்டே கெடக்கும். ஒட்டு ஒறவு ஏதும் இல்லயோ...” மகராசியம்மாள் இசக்கியம்மாளிடம் கேட்டார்.
“மகராசி ஒண்ணு தெரிஞ்சுக்கிடு. ஒலகத்தையே உருட்டி கையில குடுத்தாலும் புத்திகெட்ட சுயநலங்களுக்கு அது பெரிய விசயமாத் தெரியாது. பொலம்பிக்கிட்டுத்தான் திரியுவாக. இது அவுக விதி. அவ கதையக் கேட்டாதான் நான் என்ன சொல்லுதேம்னு புரியும். அந்தக் கெழவிக்கு இப்பம் வயசுதொண்ணூத்திரெண்டு இருக்கும். என் கட்டாம்பட்டி பெரியாத்தாளோட ஒட்ட. அவுக பேரு வெங்காத்தா. என் ஆத்தா அவளப்பத்தி கதையாச் சொல்லும். வெங்காத்தா கலியாணம் முடிச்சு நல்லாத்தான் குடித்தனம் நடத்திச்சாம். பொறந்தவீட்டுப் பெருமையயேப் பாடிக்கிட்டுத் திரியுமாம். என் வீட்ல நான் அப்டி இருந்தேன், இப்டி இருந்தேன். இங்ஙன கொண்டு கட்டி வச்சிட்டாகளேன்னு அளப்பற பண்ணிக்கிட்டே இருக்கும்போல. அவ மாமியா நல்லவ. பெரிசா எடுத்துக்கிடல. ஒரே தெருவுல தனிக்குடித்தனம் வச்சி நல்லாப் பாத்துக்கிட்டா. இது அவ புருசன மாமியா வீட்டுக்கும் அவுக சொந்தபந்தம் வீட்டுக்கும் போவக்கூடாதுனு மிரட்டிக்கிட்டேத் திரியுமாம். நாலுவருசம் கழிச்சு அவளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்துச்சு. அதுக்குப்பொறவு எம்ப்பிள்ளைய உட்டா ஒலகத்துல இல்லனு ஆட்டிக்கிட்டு இருந்திருப்பா போல. அவ பிள்ளையும் பெரிசாகி கல்யாணம் முடிச்ச பொறவு திரும்ப வினை தொடங்கிருச்சு. கொஞ்சநாள்ல வெங்காத்தாவோட புருசன் இறந்துட்டாரு. பொறவு வேற கதியில்லாம மகன்கூட இருக்க வேண்டி வந்திச்சு.அப்பறம் என்ன நடந்திச்சு தெரியுமா...” என்று இசக்கியம்மாள் இழுக்க...
அவையெல்லாம் மகராசியின் மனக்கண்முன் விரியத் தொடங்கியது...
“ஏல நாம் பெத்த மவனே. எனக்கு உடுக்க சீலயே இல்ல. டவுண் கடைக்கு கூட்டிப்போயி எடுத்துக்குடு. என்னய மட்டும் கூட்டிக்கிட்டு போ. நீ கட்டிக்கிட்ட ராங்கி பிடிச்சவள கூட்டியாராத. உம் பொஞ்சாதிக்கு எங்கிட்ட மருவாதியே இல்ல. தெனைக்கும் நாய்க்கு சோறு வைக்கது கணக்கா வைக்கா. வீட்டுக்குள்ளார பொருந்தவே மாட்டேக்கு. அடுப்பு சோலி முடிஞ்சபொறவு அந்தாக்ல போட்டுட்டு பாடு பேசப் போயிடுதா. நம்ம வீட்டு விசயத்த நாலு வீட்டுக்குச் சொல்லலாமா. தப்பு இல்லயா. பொம்பளன்னா இப்டித்தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்குல்லா. அவ ஆத்தா அப்பன், அவள நல்லா வளக்கல. ஒனக்கு ஒரு புள்ள பொறந்துச்சுன்னா உன்னய வளத்தா மாரி என் ஆயுசுக்குள்ள வளத்து உட்டுருதேன்”
மொதல்ல அவ மவன் ஆஹா! என் ஆத்தாளுக்கு எம்மேல எம்புட்டுக் கரிசனம்னு சந்தோசப்பட்டான்.
பொண்டாட்டி சொல்பேச்சு எதுவும் காதுல ஏறல. அவன் பொண்டாட்டி படிச்சவ. அதிகம் பேசமாட்டா. நாகரிகமா நடந்துக்கிடுவா. சொல்லிச் சொல்லிப் பாத்த அவ இது சரிப்பட்டு வாராதுன்னு பள்ளியூடத்துல டீச்சர் வேலைக்கு சேந்துட்டா. வேலைக்குப் போவ முன்னயும், போய் வந்த பொறவும் அவளேதான் வீட்டுச்சோலி பாக்கணும். வெங்காத்தா ஒரு சோலி பாக்கமாட்டா. மவன கைக்குள்ளார வச்சிக்கிடுதுக்காக எட்டுவியாதி சொல்லிக்கிட்டுத் திரியுவா. பொறவு அவுனுக்கு ஒரு மவன் பொறந்தான். அந்தப் பச்சப் பிள்ளயப் பாத்துக்கிடுததுக்கு வெங்காத்தா படுத்தின பாடு ஊர் முழுக்க பரவிப்போச்சு. பிள்ள அழுத நேரம் பாலக்காச்சி குடுக்க மாட்டா. யாரும் பள்ளியூடத்துக்குப் போயி தகவல் சொல்லி அவ மருமவ வந்து காச்சிக்குடுத்தா உண்டு. சாயங்காலம் மவன் கேட்டாம்னா எனக்கு மேல்வலி, கால்வலி, தலயச் சுத்துதுனு அவன ஆஸ்பத்திரிக்கு அலைக்கழிப்பா. ஒண்ணுமில்லன்னா நல்லா இருக்க பல்லுல வலினு சொல்லி பல் டாக்டர்கிட்ட கூட்டிப்போவச் சொல்லுவா. ஒரு கட்டத்துல இப்பம் என்னய என்ன செய்யச் சொல்லுதன்னு மவன் கேட்டப்போ குடியக் கெடுத்தவள உட்டுப்போட்டு பெத்த ஆத்தாகூட வந்துடு. ஆத்தா நான் இன்னிக்கு செத்துட்டேம்னா ஒனக்கு ஏன்னு கேக்க நாதி கெடையாது தெரிஞ்சுக்கோ. என்பாள். பத்து வருசமா மருமவளப்பத்தி எதுவுமே தெரிஞ்சுக்கிடாமயே ஆத்தா இப்டி திட்டிக்கிட்டே கெடக்கேன்னு அவன் வருத்தப்பட ஆரம்பிச்சான்.

அதோட நிக்காம வருசம் ஆவ ஆவ பிள்ளையோட பிஸ்கட் எடுத்து ஒளிச்சுவச்சு சாப்பிடவுடாம செய்யுதது, மருமவ சாப்பிட ஒக்காந்த நேரம்பாத்து எனக்கு ஒருவாய்ச் சோறு உள்ள போமாட்டேக்கு அவ எப்டித்தான் ஒருதட்டு சோத்த திங்காளோன்னு ஏசுதது அதிகமாகிக்கிட்டே போச்சு. இதையெல்லாம் பாத்து சலிச்சுப் போயி அவ பிள்ள அவள தனி வீட்டுல பக்கத்துலயே குடித்தனம் வச்சிட்டான். தெனைக்கும் அவுக வீட்லேந்து மூணு வேளச் சாப்பாடு போவும். அவ பேசுததக் காதுலயே போட்டுக்கிடமாட்டான். அவளுக்கு வேண்டியதச்செய்வான்.
இப்பமும் அது நடந்துக்கிட்டுதான் இருக்கு. அவன் அடுத்ததெருவுல இருக்கான். அவனுக்கு ரெண்டு புள்ளேளுவ. யார் மேலயும் கெழவிக்குப் பாசம் கெடையாது. எப்பமும் கரிச்சுக்கொட்டிக்கிட்டேக் கெடக்கும். மருமவ வந்து இருபது வருசம் ஆனாலும் அவள நேத்தைக்கு வந்தவன்னு தான் சொல்லும். ஒருவகையில இந்த மாரி பிறவிங்க யார்கிட்டயும் ஒட்டாம தனியா இருக்கதான் விரும்புவாக. சமூகத்துக்காக கலியாணம் முடிச்ச இவுகளுக்கு புருசன், பிள்ளேளுவனு உறவுக வந்தாலும் யார் கூடயும் ஒட்டமுடியாது. இந்த மாரி குடும்பத்துக்காக தன்னய அர்ப்பணிச்சிக்கிடுத குணம் இல்லாதவங்க கலியாணம் செஞ்சிக்கிடாம படிச்சு பெரிய பதவியில வந்தாங்கன்னா அது அவங்களுக்குப் பொருத்தமா இருக்கும் போல. இல்ல ஒண்ணு மவனப் பைத்தியமா ஆக்கிவுட்டுருவாக, அல்லது மருமவ விட்டாபோதும்னு அவ வீட்டுக்குப் போயிடுவா.
ஆமா ஆச்சி. எப்பமும் அவ மருமவளக் கொறசொல்லி பொலம்பிக்கிட்டே கெடப்பா. நான் கூட பரிதாபப்பட்டேன். இப்பந்தானே உண்ம தெரியுது. உங்ககூட பேசுததுல நெறைய பேரோட உண்மை நிறம் தெரிய வருது. தெனைக்கும் இந்தமாரி இங்ஙனகூடி இருக்கவுகளப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதச் சொல்லுங்க. அப்பந்தான் என்னய மாரி வெளியூர்க்காரவுகளுக்கு எருக்கம்பாலுக்கும் மாட்டுப்பாலுக்கும் வித்தியாசம் புரியும் இசக்கி ஆச்சியை உற்சாகப்படுத்தினாள் மகராசியம்மாள்.