நேத்தைக்கு ஓதுவாரப்பத்தி சொல்லுதேம்னு சொன்னீயளே என மகராசியம்மாள் ஞாபகப்படுத்த சொல்லத் தொடங்கினாள் இசக்கி ஆச்சி.
இசக்கியம்மாள் முத்தத்தில வந்து உட்கார, அங்கு மகராசியம்மாள் வரவும் சரியா இருந்தது.
“என்ன மகராசி, இன்னைக்கு விரசா வந்துட்டியே, நான் இப்பத்தான் இங்கன வந்து உக்காந்தேன்’ என்று இசக்கியம்மாள் மகராசியிடம் சொன்னாள்.
“இன்னைக்கு காலையில வெறும் ரசத்தோட சமையல் முடிச்சாச்சு, அதான் வந்துட்டேன்”
“அப்படியா?” என்றபடி இசக்கியம்மள் தன் கதையைத் தொடங்கினாள்.
கிழக்குத் தெருவில இருக்கிற பிச்சையா ஐயா சிவன் கோவில்ல ஓதுவாரா இருந்தவரு.
தோடுடைய செவியன் ... ... ... ... ... அப்டினு அவர் தெனைக்கும் பாடிக்கிட்டேத் தான் போவாரு வருவாரு... அவர் நடந்து போகையில தெரு முக்கு ஊருணியில எரும மாடு குளிப்பாட்டிட்டு அது மேல ஏறி உக்காந்து ஓட்டிக்கிட்டு வருவானுகல்ல சேட்டக்கார பயலுக... அந்தப் பயலுவ கூட எறங்கி நின்னு மரியாதையாக் கும்பிடுவானுவ. மத்த யாரும் அந்தப் பயலுவ கிட்ட வம்பு வச்சிக்கிடமுடியாது. வச்சான் ஓஞ்சான் அவ்ளோதான். மாட்டோட வாலப் பைய முறுக்கி உட்ருவானுவ பெறகு மாடு தரிகெட்டு ஓடும்லா. உனக்குதான் தெரியுமே. மாடு தலதெரிக்க ஓடிச்சின்னா என்ன ஆவும்னு.
தெனைக்கும் அவரு அந்தப் பயலுவ கிட்ட சொல்லுவாரு. மாடுகள பின்பக்கத்தெரு வழியா ஓட்டிக்கிட்டுப் போங்கனு. இந்த வீதியில மாடுகள் போடுத சாணிய மிதிச்சிக்கிட்டுதான் சாமி பல்லாக்கு தூக்குதவங்க நடக்கவேண்டி கெடக்கு. அது போவ வாசல்ல போடுத கோலத்துமேல மோண்டு வச்சிட்டுப் போயிடுதுக. அதனால தான் சொல்லுதேன். பொறுமையா அவரு சொல்லிமுடிச்சவொடனேபயலுவ மேலயும் கீழயும் தலய ஆட்டிப்போட்டு மறுநாளும் அதையே செய்வானுவ. அவருக்குக் கோவம் வந்து நான் பாத்ததே கெடையாது. ஊர் முழுக்க நல்ல பேரு. அவரு வீடு கோவிலுக்கு பின்பக்கம் இருந்திச்சு...
அவரோட நல்ல கொணத்த மதிச்சி சில சமயம் பஞ்சாயத்து பண்ணுததுக்கும் கூப்பிடுவாக. எப்பமும் நாயமாத்தான் பேசுவாரு.
இசக்கியம்மாள் சொல்லச் சொல்ல மகராசியம்மாள் மனக்கண்முன் அந்தக் காட்சிகள் விரியத் தொடங்கின.
மீசய முறுக்கிட்டு நிக்குத ஒருத்தரு ஆரம்பிக்காரு.
இப்ப நாம பிச்சையா ஐயாவ நம்பி வந்துருக்கோம். ரெண்டு பக்கத்து நாயத்தக் கேட்ட பொறவு அவரு என்ன முடிவு சொன்னாலும் நாம ஏத்துக்கிடணும். எல்லாருக்கும் சம்மதம்னா ஆரம்பிக்கலாம்.
அனைவரும் சம்மதம் எனத் தலையாட்டுகின்றனர்.
நம்ம சண்முகம் மவ நல்லகண்ணுவும் அய்யாசாமி மவ தங்கமணியும் கோவிலுக்கு போயிருக்காவ. போன எடத்துல நல்லகண்ணுவோட சங்கிலிய அத்துட்டு ஓடிட்டான் இந்த மூக்கண்ணன். பொறத்தால அவன் நின்னதால இன்னாருனு அவளுக்குத் தெரியல. ஆனா தங்கமணி பாத்துட்டா. இப்பம் அவ சொன்னத வச்சி மூக்கண்ணனப் பிடிச்சி இங்க கூட்டியாந்திருக்கோம்.
இப்ப என்னடான்னா மூக்கண்ணனோட ஆத்தா அவன் வெவரங்கெட்டவன். சூதுவாது தெரியாது. அப்டியெல்லாம் செஞ்சிருக்கமாட்டான்னு அழுதா. மூணு பேரும் நம்ம ஊருதான். அதனால விசயத்த பதனமா தான் கேட்டுச்செய்யணும். இப்பம் ஐயா நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம்னு.
சிறிது நேரத்தில் அனைவரும் நடந்து சிவன் கோவில் வாசலை அடைகின்றனர்.
இந்த வாசப்படியில நான் மூணுமட்டம் கற்பூரத்தக் கொளுத்திப் போடுதேன். ஒவ்வொருத்தரா கற்பூரத்த அணச்சி சத்தியம் செய்யணும். நான் சொல்லுததெல்லாம் உண்மதான்னு. அப்டி யாரும் பொய்ச்சத்தியம் செஞ்சீங்கன்னா சிவன் உங்க சொத்து பூரா அழிச்சி பண்டாரமா தெருல அலைய உட்ருவாரு பாத்துக்கிடுங்க. மூணு புள்ளைங்களும் ஒருமட்டம் அவுகவுக அப்பன் ஆத்தாள் கிட்ட பேசிட்டு பெறகு சத்தியம் பண்ண வாங்க. இது பிச்சையா ஐயா.
மொத ரெண்டு பிள்ளைகளும் சத்தியம் செய்யுதுங்க. மூக்கண்ணன் மட்டும் நட்டமா நிக்கான். அவன் ஆத்தா அழுதுகிட்டே கீழ விழுந்து ஒத்துக்கிடுதா. எம்மவன் தெரியாம செஞ்சிட்டான். மன்னிச்சிக்கிடுங்க. நான் சங்கிலியக் கொண்டுவந்து குடுத்துடுதேன்னு.
இவ்ளோ நல்ல மனுசரான இவருக்கு என்ன கதி வந்திச்சி தெரியுமா? இசக்கியம்மாள் சொல்ல, அதத்தான் சொல்லுங்களேன் என்றாள் மகராசியம்மாள்.
இவரோட ஒத்த புள்ள படிப்பு சரியா வராம டவுண் கம்பெனியில போய் வேலைக்குச் சேர்ந்தான். அது அடமானத்துக்குப் பணம் கொடுக்குற கம்பெனி போல. அங்க நெளிவு சுளிவு கத்துக்கிட்டு வந்து இந்த ஊருல அவன் அப்பாக்கு இருக்க நல்ல பேர ஒபயோகிச்சி அடமானம் வச்சிக்குடுக்கேன்னு நாலுபேருகிட்டேந்து இருநூறு களஞ்சி நகைய வாங்கிட்டு டவுணுக்குப் போனவன் திரும்பவே இல்ல. வந்தவுகளுக்குப் பதில் சொல்ல முடியாம மானப்பட்டு ஐயாவும் அவரு பொஞ்சாதியும் மருந்து குடிச்சி செத்தே போயிட்டாங்க.
திருடிட்டுப் போனவன் எங்க போயி என்ன செஞ்சானோ தெரியல இப்பம் நாப்பது வருசத்துக்குப் பொறவு கெழவனா வந்து இந்த ஊருலதான் இருக்கான். அவ்ளோ நல்லவரு தம்மவன ஏன் சரியா வளக்கலனு நீ யோசிக்கலாம். அது அவரு சம்சாரத்தோட தப்பு. பிள்ளைங்க நாம என்னசொல்லிக் கொடுக்கோமோ அதப் படிச்சிக்கிடும். அந்தப் பய சின்னவனா இருக்கையில இங்ஙனதான் கோலிக்கா வெளையாடுவான். அப்பம் யாரும் உட்டுட்டுப் போன கோலிக்கா அவனுக்குக் கெடச்சிச்சின்னா அத எடுத்து வச்சிக்கிட்டு தன்னோடுதுனு சொல்லிடுவான். மொதத் தடவ அவன் அப்டி அதிகமா கொண்டு வரையில அவன் ஆத்தா பாத்து
நான் வேங்கிக் குடுக்காதப்போ இது எப்டி வந்திச்சின்னு கேட்டிருந்தான்னா அந்தப் பழக்கம் கெட்டதுனு புரிஞ்சிருக்கும். இப்டி சின்ன வயசில சின்னச்சின்னதா ஆரம்பிச்சதுதான் தனக்குத் தேவையான பொருள் அடுத்தவங்கிட்ட இருந்திச்சின்னா அத எடுத்துவச்சிக்கிடுதது தப்பில்லன்னு தோணிப்போச்சு.
ஊர்முழுக்க பேசிக்கிட்டுத் திரிஞ்ச ஐயாவும் தம் பிள்ளைகிட்ட உக்காந்து பேசி வெளையாடல. அதனால வந்த வினைதான் இது.
இப்பம் புரிஞ்சிதா. நான் தலவிதினு சொன்னதப்பத்தி. இப்பம் அவன் என்ன வேல செய்யுதான் தெரியுமா. அவன் அப்பா ஓதுவாரா இருந்த அதே கோயில கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துத வேலதான். கண்ணு போன பொறவு சூரிய நமஸ்காரம் செய்யுததுனு சொல்லுவாக இல்ல, அதுகணக்கா இப்பம் ஆடி அடங்குத வயசுல அவனுக்குப் புத்தி தெளிஞ்சிட்டுது. நல்லவனா வாழ மொனையுதான்.
சரி ஆச்சி. வானம் இருண்டுகிட்டு வருது. காஞ்ச துணியெடுத்து உள்ளார போடணும். நான் வாரேன் என்றபடி அங்கிருந்து எழுந்து சென்றாள் மகராசியம்மாள்.