"சோறு பொங்கியாச்சா? சோலியெல்லாம் முடிஞ்சிச்சா?" கேட்டுக்கொண்டே திண்ணைக்கு வந்த மகராசியம்மாளைப் பார்த்து, அந்தா பாரு. வடிவு மவன் வீட்டுக்கு அடுத்த வீட்ல உக்காந்திருக்காருல்ல அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒண்ணு இவுரு கட்டிக்கிட்டது. இன்னொண்ணு இவரு தலையில கட்டி வச்சது. அது எப்டி முடியும்னு ரோசன பண்ணுதயோ? இரு சொல்லுதேன் என்று ஆரம்பித்தாள் இசக்கியம்மாள்.
அந்த வீட்ல இருந்த பூலான்ங்குத பெரியவரு மவன்தான் இவரு. இவரு கூடப் பொறந்த அக்காள் இவர விட பதினெட்டு வயசு மூத்தது. இவர ரொம்ப செல்லமாத்தான் வளத்தாங்க. அப்பமே இவரு ஊரவிட்டு வெளிய போய் ரப்பர் கம்பனியில வேல செஞ்சாரு. வெளிய வாசல்ல போனதால தானேபுள்ளயப் பாத்த பெறகுதான் கலியாணம் முடிப்பேன்னு சொல்லிட்டாராம். அப்டிதான் அய்யா, ஆத்தா சம்மதத்தோட இவரு கூட வேலபாத்த சொர்ணத்துக்கும் இவருக்கும் கலியாணம் நடந்திச்சு. பந்தக்கால் நாட்டும்போதே இவரு அக்கா இங்ஙன தான் உக்காந்து தேவரய்யா சம்சாரத்துக்கிட்ட ஒப்பாரி வச்சிக்கிட்டிருந்திச்சு.
எம் புள்ளய கட்டி வைக்கலாம்னு இருந்தேனே இப்டி பண்ணிட்டானே. இந்த ஆத்தாளுக்குதான் புத்தி எங்க போச்சுனு.
அடுத்த தெருலதான் குடியிருந்ததால வசமா தெனைக்கும் வந்து மூட்டி உட்டுட்டுப் போகும். அவ மகளும் நல்ல எடத்துலதான் வாக்கப்பட்டுப் போனா. ஆனா இந்த பொச கெட்டவ அவள வாழவே உடல. இவளுக்கு மனசு பூரா தம்பிக்கு கெட்டிக்குடுக்கலயேன்னு.
தெனைக்கும் அந்த புள்ள வாழுத வீட்டுக்கு நடயா நடந்து இல்லாததும் பொல்லாததும் சொல்லி சண்ட மூட்டி உட்டு அவள ஒரு வாரத்துக்குள்ளார கூட்டியாந்துட்டா.
ஊரே சொல்லிச்சு. இப்டி பெத்த மவ வாழ்க்கைய அழிச்சுட்டாளேன்னு. அவளுக்கு எந்த வருத்தமும் இல்ல.
தெனைக்கும் விதவிதமா சோறு பொங்கி தம்பி வீட்டுக்கு வாழாவெட்டியா வந்தவளக் கொண்டு குடுக்கச் சொல்லிக் கிட்டிருந்தா. இப்டியே கொஞ்ச நாள் போச்சு. பொறவு மறுக்க ஏலாம தெனைக்கும் இவ கொண்டு வருததயே திங்க ஆரம்பிச்சான் தம்பி. ஆத்தாளும் அப்பனும் சாவுத வர வந்து போயிக்கிட்டிருந்தவ அவுக காலத்துக்குப் பொறவு மவளோட தம்பி வீட்லயெ ராப்பொழுது கழிக்க ஆரம்பிச்சா. சொர்ணமும் வேலைக்கு போய்க்கிட்டே இருந்ததால பெரிசா ஒண்ணும் கண்டுக்கிடல.
இவ வீட்ட தூத்து மொழுவி சுத்தமா வச்சி சோறும் பொங்கி குடுத்ததால சொர்ணத்துக்கு சுளுவா இருந்துச்சு. கலியாணம் முடிஞ்சு அஞ்சாறு வருசம் ஆகியும் பிள்ள இல்லங்குத காரணத்த சொல்லிக் காட்டிக்கிட்டே கெடந்தா. அப்பம்பாக்க சொர்ணத்தோட ஆத்தா செத்துப்போச்சு. அவ பத்து நாள் ஆத்தா வீட்டுக்குபோயிருந்த சமயம் தம் மவள தம்பி ரூமுக்குள்ளார அனுப்பி வெளில தாளப் போட்டு ஊரக்கூட்டிட்டா. என் தம்பி எம் மவளக் கெடுத்துப்போட்டான். நியாயம் வேணும்னு.
அவ பசப்புதான்னு ஊருக்கே தெரிஞ்சாலும் தேவரய்யா போயி பஞ்சாயத்து பண்ணி வச்சி சொர்ணத்தோட சம்மதத்தோட ரெண்டாம் கலியாணம் முடிச்சி வச்சாரு. அவ வயித்துலயும் பூச்சி புழு இல்ல. இப்பம் இவரு ரெண்டு பொண்டாட்டியோட பிள்ளகுட்டி இல்லாம திண்டாடிக்கிட்டிருக்காரு. சொத்துசொகம் நெறைய தேருமில்ல. ஊர்ச்சனம் சும்மா இருக்குமா. பிள்ளையில்லாச் சொத்துக்காக தெனைக்கும் சொந்தக்காரன் சோக்காரன் பண்டம் பலகாரம் எடுத்துக்கிட்டு வந்துசோறு பொங்கி போட்டு ஒறவு கொண்டாடிக்கிட்டு கெடக்கான்.
கடைசியில நம்ம மேற்குத்தெரு ராசய்யா இருக்காம்ல அவனதான் தத்து எடுத்துக்கிடப்போவதா பேசிக்கிட்டாங்க.
யார்கிட்ட போனா நமக்கென்ன.. பொறுத்துக்கெடந்து பாக்கலாம்”
என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் இசக்கியம்மாள்.
இசக்கியம்மாள் எப்படித்தான் ஊருக்குள்ள நடக்குற விசயங்களில் இவ்வளவு விசயத்தைத் தெரிஞ்சு வைத்திருக்காரோ... என்று மகராசியம்மாளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏதோ மகள் வீட்டுக்கு வந்த வேளையில் எப்படிப் பொழுது போகப்போகிறதோ என்று அந்த ஊருக்கு வந்த போது நினைத்தாலும், இசக்கியம்மாள் நாளுக்கொரு கதை சொல்றதும், அந்தக் கதையைக் கேட்கிறதிலும் பொழுது போவதால் மகன் வீட்டு நினைப்பு இல்லாமலிருந்தது மகராசிக்கு...