மறுநாள் மதியம் 12 மணி. ஆதவனின் உக்கிரத்தை வழக்கம்போல் துரத்திவிட்டுக் குளுமையாக இருந்தது ஊட்டி. விசாரணை முடிந்து கோர்ட்டில் இருந்து ஜோடியாக வெளியேறினர் ஆனந்தும் அமுதாவும்! அவர்களுக்குப் பின்னால் கையை பிசைந்தபடி வந்தாள் ஷ்ரவ்யா.
அவளது முகத்தில் ஏகத்துக்கும் குழப்ப ரேகை ஓடியது. லேசாக வீங்கிப்போய் இருந்த அவளது கன்னங்கள், முந்தைய இரவு அவள் தூக்கத்தை தொலைத்திருந்ததை உறுதி செய்தன. ஆனாலும், அவளது கண்களில் லேசான நம்பிக்கை இழையோடியது. ஆனந்த் தனக்கு கிடைத்து விடுவான் என்கிற அந்த நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது என்று அடிக்கடி தனது இஷ்ட தெய்வம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டாள்.
அமைதியாக ஆனந்துடன் நடந்து வந்த அமுதாவின் முகத்தில் நல்ல தெளிவு இருந்தது. அவளும் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தாள். அதுவும் சரியாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனந்த் தான் எந்த முடிவு எடுப்பது என்று தவித்துக் கொண்டிருந்தான்.
கோர்ட்டுக்கு முன்பு பிரமாண்டமாய் வளர்ந்திருந்த யூகலிப்டஸ் மரத்துக்கு அருகில் வந்துசேர்ந்த ஆனந்தையும் அமுதாவையும் குறுக்கிட்டு மறித்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.
“வாழ்த்துக்கள் ஆனந்த். நான் நினைச்ச மாதிரியே நடந்திருச்சு. எல்லாமே உங்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கு. நீங்க இன்னிக்கே சென்னைக்குப் போயிடலாம். ஒரு மாசத்துக்கு மட்டும் தினமும் எக்மோர்ல இருக்கற கோர்ட்ல சைன் போட வேண்டியிருக்கும். அடுத்த மாதம் இந்த வழக்குல இருந்து நீங்க முழுமையா விடுதலை ஆயிடுவீங்க. அப்படியொரு சம்பவம் நடக்கும்போது, நீங்க யாருக்காவது நன்றி சொல்லணும்னு நினைச்சா... நீங்க அழைச்சுட்டு வந்த ஷ்ரவ்யாவுக்கும், குறிப்பா அமுதாவுக்கும் சொல்லுங்க. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும்தான் உங்களுக்குச் சாதகமா வாதிட்டு இருக்காங்க. குணசீலன் தரப்பு பத்தின எங்களோட விசாரணையில, அவன் தவறான வழிகள்ல போனது உறுதி செய்யப்பட்டு விட்டதால், இந்த வழக்குல இருந்து நீங்க முழுமையாக வெளியே வந்திடலாம். இந்த சந்தோஷமான நேரத்துல, அமுதாவுடனான உங்களோட இல்லற வாழ்க்கை இனிக்க மறுபடியும் என்னோட வாழ்த்துக்கள்...” என்று சொன்னவர், சிரித்தபடியே அங்கிருந்து அகன்றார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷ்ரவ்யாவின் முகத்தில் திடீர் மாற்றம். தொலைக்கக் கூடாத ஏதோ ஒன்றைத் தொலைத்து விட்டதாக உணர்ந்தாள். அவள் முகக்குறிப்பை அறிந்து கொண்டு விட்டாள் அமுதா. அவள் அருகில் சென்றவள், அவளைக் கரம் பற்றி ஆனந்த் அருகில் அழைத்து வந்தாள்.
“ஷ்ரவ்யா..! வாழ்க்கையில நாம நினைக்கற எல்லா விஷயங்களும் நடந்துட்டா, நம்மளச் சுத்தி இருக்கறவங்கள மட்டுமில்ல, அந்தக் கடவுளையே மறந்துடுவோம். அதனாலதான் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் வெற்றி-தோல்விகள். நான், ஆனந்தைக் காதலிச்சப்போ, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேருவோம்ங்கற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, விதி வேற மாதிரி விளையாடி, இன்னிக்கு என்னென்னமோ நடந்து, இங்கே இப்படி நிக்கறோம். அந்த விதி, என்னோட வாழ்க்கையில மட்டுமில்ல, உங்களோட வாழ்க்கையிலேயே விளையாடி, உங்களையும் இங்கே கொண்டுவந்து இருக்கு. இந்தக் கேஸை விசாரிக்க இன்ஸ்பெக்டர், நானும் ஆனந்தும் மறுபடியும் சேர்ந்து வாழணும்னு வாழ்த்திட்டுப் போறாரு. அவரோட வாழ்த்தைக் கேட்டப்போ, நான் என்னையே மறந்துட்டேன். என்னோட வாழ்க்கை முடிஞ்சிப் போச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, இனிதான் ஆரம்பிக்கப் போகுதுன்னு இப்போ தெரியுது. நீங்க என்ன சொல்றீங்க ஷ்ரவ்யா?”
“எனக்கும் அப்படித்தான் தோணுது. சூழ்நிலைகளால பிரிஞ்ச நீங்க இனி, ஒண்ணா... கணவன் - மனைவியா வாழப் போறீங்க. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கப் போகுது. உங்களோட வாழ்க்கை சந்தோசமா அமைய என்னோட வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு.”
“ஒரு நிமிஷம் ஷ்ரவ்யா... நீங்க சொல்றத பார்த்தா, மனப்பூர்வமா என்னை வாழ்த்துற மாதிரி தெரியலீயே...”
“அய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நடந்த பிரச்னைகளால நானும் மன அளவுல பாதிக்கப்பட்டு இருக்கேன் இல்லீயா? அதுதான், உங்களுக்கு அப்படித் தோணுதுன்னு நினைக்கிறேன்.”
“அதெல்லாம் இல்ல ஷ்ரவ்யா. உங்க மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு இருக்கு. அதை மறைக்கறீங்க.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல அமுதா. நான் ஆனந்தோட கால் கேர்ளாத்தான் இங்கே வந்தேன். ஆனா, அவர் அப்படியொரு தப்பான எண்ணத்தோடு என்னிடம் பழகல. ஹீ இஸ் எ ஜென்டில்மென். அவரோட வாழ்க்கை, அவரை விரும்புற பொண்ணுகூட அமையப் போகுறதுல எனக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்குமா?”
“உங்களைப் பார்த்தா அப்படி தெரியலீயே... நீங்களும் அவரை லவ் பண்ணுற மாதிரி அல்லவா தெரியுது.”
“அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஒரு நல்லவரோட கொஞ்ச நாள் பழகுறதுக்கு கிடைச்ச வாய்ப்பே எனக்கு போதும்!”
“திரும்பத் திரும்பப் பொய் சொல்றீங்க ஷ்ரவ்யா. உங்க உதடு பொய் சொன்னாலும், உங்க கண்கள் உண்மையை சொல்லிக்கிட்டே இருக்குது. உண்மையைச் சொல்லணும்னா... ஆனந்தைப் பிரியற நிலைமையில நீங்க இல்ல. அப்படியே நீங்க பிரிஞ்சா... தற்கொலை முடிவைக் கூட நீங்க எடுத்துடுவீங்களோன்னு நான் பயப்படுறேன்.”
அமுதா இப்படிச் சொன்னதும்தான் தாமதம், அதுவரை கண்களுக்குள் அடக்கி வைத்திருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நழுவ விட்டாள் ஷ்ரவ்யா. அமுதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதாள். அவளைத் தேற்றினாள் அமுதா.
”அழாதீங்க ஷ்ரவ்யா. உங்க மனசுக்குள்ள என்ன இருக்குங்கறத வெளியே கொண்டுவரத்தான் இப்படியெல்லாம் பேசினேன். எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி, என்னவெல்லாமோ நடந்து விட்டதே..! இனி, நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கைதான் அமையணும். ஆனந்தோட வாழ நான் ஆசைப்பட்டாலும், அவரோடு மனசுல நான் இருந்த இடத்துல நீங்க படிப்படியா குடியேறிட்டீங்க. அங்கே, புதிய தாஜ்மஹாலை எழுப்பிட்டீங்க. அதனால, நீங்களும் ஆனந்தும் சேர்ந்து வாழ்றதுதான் முறை. நீங்க மட்டுமில்ல, ஆனந்த் ஆசைப்படுறதும் இதைத்தான்.”
அமுதா இப்படிச் சொல்லவும், இன்ப அதிர்ச்சியில் ஆனந்தைப் பார்த்தாள் ஷ்ரவ்யா. அவனும் ஆமாம் என்பது போல் இலேசாகப் புன்னகைத்தான். ஆனால், பேச்சுதான் வரவில்லை.
ஷ்ரவ்யாவின் கையைப் பிடித்து ஆனந்திடம் அழைத்துச் சென்ற அமுதா, ஆனந்தையும் அவளையும் கைகோர்த்து சேர்த்து வைத்தாள். ஆசைப்பட்ட காதல் ஜோடியை சேர்த்து வைத்த திருப்தி இருந்தாலும், அவள் மனம் ஏனோ வலிக்கத்தான் செய்தது.
3 மாதங்களுக்குப் பிறகு...
ஆனந்தின் மச்சான் கார்த்தி, அதாவது... ஷ்ரவ்யாவின் தம்பி வேகமாக ஓடிவந்தான்.
“அத்தான்... இந்தாங்க ப்ளைட் டிக்கெட். நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் கொண்டாட எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. ஒன் வீக் பேக்கேஜ் டூர் இது. ட்ரெயின் எல்லாம் கிடையாது. நீங்க அங்கே போறதும், வர்றதும் ப்ளைட்தான்!”
கார்த்தி தந்த பேக்கேஜ் டூர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தான் ஆனந்த். கோவா செல்வதற்கான டிக்கெட் அது.
அடுத்த நாள் அதிகாலையே எழுந்து குளித்து, ஆனந்தும் ஷ்ரவ்யாவும் சென்றார்கள், இரண்டாம் தேனிலவு!
முத்துக்கமலம் இணைய இதழ் வாசகர்களுக்கு... நெல்லை விவேகநந்தாவின் அன்பான வணக்கங்கள். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை இந்தத் தொடர் மூலம் உங்களோடு இணைந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தத் தொடருக்கான வாய்ப்பு நல்கிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியரும், எப்போதும் என் நலம் விரும்பும் எனது அருமை நண்பருமான தேனி எம்.சுப்பிரமணி அவர்களுக்கும், நாவலை ஆவலோடு வாசித்து மகிழ்ந்த வாசகர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள்! மறுபடியும், இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களோடு இணைகிறேன்.- நெல்லை விவேகநந்தா.