அன்றைக்கு அவசரமாய் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய கதை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த போது என் மகன் ஓடிவந்தான்."அப்பா! பக்கத்து வீட்டு மாமா அவசரமா ஸ்குரூ ட்ரைவர் கேக்கறார்பா!"எரிச்சல் மேலிட அவனிடம் கத்தினேன்."போடா ராஸ்கல்! இங்கே வச்சிருந்த ஒரு கவரைக் காணாம ரொம்ப நேரமா தேடிக்கிட்டு அல்லாடறேன்....போடா போ!" - மகனைத்திட்டி அனுப்பியதோடல்லாமல், ஸ்குரூ ட்ரைவர் இரவல் கேட்டு வாசலில் வந்து நின்றிருந்த பக்கத்து வீட்டுச் சிறுவனை விரட்டினேன்."ஏன்டா.....இரவல் வாங்கறதுக்குன்னு ஒரு நேரம் காலம் இல்லையா?.....இப்படி காலை நேரத்துல வந்து தொந்தரவு பண்ணுறீங்க?"
அவன் சொன்னான்: "இத பாருங்க அங்கிள், ரொம்பத்தான் வெரட்டாதீங்க!.......நான் வாங்க வந்தது உங்க வீட்டு ஸ்குரூ ட்ரைவர் இல்லே! நீங்க போனவாரம் எங்க வீட்டுலே இரவல் வாங்கிட்டு வந்தீங்களே...அதைத்தான்!" என் தலையில் அடித்தாற் போன்றிருந்த அவனது வார்த்தைகள் என் நினைவைக் கிளப்பி விட்டன.
'நம்ம வீட்டுல அது இல்லாமத்தான் அடிக்கடி பக்கத்து வீட்டுல இரவல் வாங்கறோம்.....பதட்டத்துல இப்படி பேசியிருக்கக் கூடாது!' என்று நான் மனத்துக்குள் என்னையே திட்டிக்கொண்டாலும், அதை வெளியில் காட்ட முடியாதே! "ஏன்டா ரவி, பக்கத்துல ஒரு பொருள் இரவல் வாங்கிட்டு வந்தா அதை உடனே திருப்பிக் குடுக்கற வழக்கமே இந்த வீட்டுல இல்லையா?....ச்சே! எல்லாம் பொறுப்பில்லாத ஜென்மங்கள்!"
(அவசரத்தில், படபடப்பில், ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா, இப்படித்தான் சார் சமாளிக்கணும்! ... ... என்கிட்ட கத்துக்குங்கோ!)