இந்த வங்கிப் பணியில் சென்னைக்கு மாற்றமாகி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. தினசரி ஆறு மணி வரை ஆகிவிடுகிறது. இன்றும் அப்படித்தான்.
"அப்புறம் என்ன? என்று தனது முக்கால் மணி நேர அரட்டையை மேலும் விரிக்க ஆரம்பித்த சந்திரனை "மணி எத்தனை?" என்கிற முடிவுரையை வாசித்துக் கிளப்பினேன்.
"மணி ஆறு. பார்க்கலாம்" என்றபடி கிளம்பினார் ரவிச்சந்திரன்.
தனது கடைசி வணக்கத்தை எனக்காகச் சேமித்து வைத்திருந்த காவலாளி முரளியிடம் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு அலுவலகத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினேன் எனது ஸ்கூட்டரில்.
எனக்காகவே காத்திருந்த சிக்னல் விழுந்தது. வழக்கம்போல் கடைநிலை மக்கள் காத்திருந்தனர். எனக்கென்னவோ அந்தப் பெயர் பிடிக்கவில்லை. பிச்சைக்காரர் என்கிற வார்த்தை தமிழில் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. என்னதான் வணிக நுணுக்கங்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர நினைத்தாலும் இந்த கடைநிலையாளர்களை மிஞ்ச முடியாது.
காரணம், நான் சில மதிய வேளைகளில் கவனிக்கும் அவர்களின் எண்ணிக்கை காலை மற்றும் மாலை வேளைகளில் சரிபாதியாகக் குறைந்தே இருக்கிறது. காலையின் அவசரத்தில் கோபத்தையும் மாலையில் எரிச்சலையும்தான் வாங்க முடியும் மதிய வேளைகளில்தான் இவர்களின் பசியை ஞாபகப்படுத்த முடியும். அதுவே, அவர்களது வியாபார யுக்தியாகவும் இருக்க முடியும். இறுதியாக இந்த சிக்னல் அம்பானிகள் என்னிடமும் வந்தார்கள். என்னுடனான அவர்களின் டீல் வெறும் இரண்டு ரூபாய்தான்.
அருகிலிருந்த எனது தற்காலிக சகா தனது சமூக அக்கறையை இப்படி வெளிப்படுத்தினார். " சே! இந்த பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியலை... வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் ஒரே பிடுங்கல். டிராபிக் போலீஸ் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று சொல்ல அவருடைய பேச்சுக்கு அங்கிருந்த ஒரு சிலர் ஆமாம் போட வேறு வழியில்லாமல் போலிஸ்காரர் அந்த கடைநிலை மக்களைத் திட்டி விரட்டினார்.
ஆனால் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. கோபப்பட்ட போலீஸ்காரர் தனது லத்திக் கம்பை துணைக்குப் பய்ன்படுத்தி விரட்டத் துவங்கினார்.
நல்லாப் போடுங்க சார் என்று என் அருகிலிருந்த சகா உட்பட பலரும் அந்தப் போலிஸ்காரரை உற்சாகப்படுத்தினர். எனக்கு அதைத் தடுத்துப் பேச வேண்டும் என்று எண்ணம் வந்தாலும் அந்த இடத்தில் எனக்கு அதைச் சொல்ல மனம் வரவில்லை.
ஆனால் அங்கு "என்ன சார் இப்படி அடிக்கிறீங்க... முடிந்தால் காசு போடப் போகிறோம்... இல்லையென்றால் முடியாதுன்னு சொல்லப் போறோம். இதுக்குப் போய் அவங்களை அடித்து விரட்டுறது சரியில்லை" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன்.
அது வேறு யாருமில்லை... என்னுடன் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த காயத்ரி.
இந்தக் காயத்ரியின் பெயரை எனது உதடுகள் மூன்று தடவை உச்சரித்திருக்கலாம். ஆனால் ஆயிரம் முறையாவது எனது பேனா எழுதிக் குவித்திருக்கும். என் காதலியான அவளுக்கு இது தெரிந்திருக்குமா? என் மனம் சற்று கல்லூரி காலத்திற்குத் தாவ சிக்னல் விழுந்தது தெரியாமல் இருக்க எனனை ஓரப்படுத்திவிட்டு மற்ற வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. எனக்குப் பின்னாலிருந்த நபர் தனது ஹார்ன் ஒலியைத் திருப்பித் திருப்பி அழுத்திக் கொண்டிருந்தார். அப்புறம்தான் சுயநினைவு வந்தது.
காயத்ரி முன்னால் போய்க் கொண்டிருந்தாள்.
நானும் எனது ஸ்கூட்டரின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தி காயத்ரி என்கிற எனது குரலையும் அதிகப்படுத்தினேன்.
எனது குரல் ஐந்தாவது தடவை சற்று அதிகமான போதுதான் அவளைச் சென்றடைந்தது. அவள் ஓரமாய் ஒதுங்க நானும் எனது ஸ்கூட்டரை ஓரப்படுத்தினேன்.
"ஓ வாட் எ சர்ப்ரைஸ்?" என்றபடி "எப்படியிருக்க கார்த்தி?" என்று நலம் விசாரித்தாள்.
கார்த்திகேயன் என்கிற எனது பெயரை கார்த்தி என்று எத்தனையோ பேர் அழைத்தாலும் அவள் வாயிலிருந்து வந்தது எனக்குள் ஒரு புதிய இரத்த ஓட்டத்தை தந்தது.
அந்த மாலை வேளையிலும் என் முகம் வியர்த்தது. அவள் தன் கர்சீப்பைக் கொடுத்து என் முகத்தைத் துடைத்துக் கொள்ளச் சொன்னாள்.
என்னுடைய வியர்வைத் துளிகள் அவளது கர்சீப்பால் ஒற்றி எடுக்கப்பட்டது.
கார்த்தி உங்க ஒய்ப் என்ன பண்றாங்க? பிள்ளைங்க எத்தனை? எங்க ஒர்க் பண்றீங்க? என்று கேள்விகளை ஒரே சமயத்தில் அடுக்க " நான் காலேஜில் கோல்டு மெடலிஸ்ட்தான் அதுக்காக இப்படி ஒரே சமயத்தில் இத்தனை கேள்விகளா?" என்று சொல்ல எதோ நகைச்சுவையைக் கேட்டது போல் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள்.
நான் பேங்கில் ஒர்க் பண்றேன். சென்னைக்கு மாற்றமாகி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. என்னோட மனைவி பெயர் மாலா. ஒரே பெண் சித்ரா அவ பிளஸ் டூ படிக்கிறா." என்றபடி "ஆமாம் காயத்ரி, உன்னோட கணவர் என்ன பண்றார்? உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று எனது விசாரணையைத் தொடர்ந்தேன்.
"நானும் அவரும் இங்க ஒரே பேங்கில்தான் வேலை பார்க்கிறோம். இரண்டு குழந்தைங்க. பையன் கணேஷ் இன்சினியரிங் பைனல் இயர். பொண்ணு பிளஸ் டூ." என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
சுந்தரேசனைப் பார்த்தேன். அவர்கிட்ட உன்னை விசாரித்தேன். சொன்னாரா?" என்கிற என் மீதான அவளுடைய அக்கறையை நினைவு படுத்தினாள்.
"உம். சொன்னான்." என்ற எனது பதிலுக்கு இடைமறித்து "என்ன சொன்னார்? " என்றாள்.
காயத்ரி சென்னையில்தான் பேங்க்கில் வேலை பார்க்கிறாள். அவளோட கணவர் கூட அதே பேங்கிலதான் வேலை செய்றாராம். இரண்டு குழந்தைகளோட சந்தோசமா இருக்காங்களாம்னு சொன்னார்.
அவளுக்கு நேரமாகிறது என்பது போல் வாட்சைப் பார்த்து "அப்புறம் வருகிறேன்" என்பது போல் பார்க்க நான் என்ன நேரமாயிட்டுதா? என்று கேட்டேன்.
"ஆமாம். அவரு இங்க பக்கத்தில இருக்கிற பிரண்டு வீட்டுக்குப் போயிருக்கிறார். இந்நேரம் வந்திருப்பார். சுந்தரேசன் சொல்லியிருப்பாரே அவரு பயங்கரக் கோபக்காரர்." என்று சொன்ன காயத்ரியின் பேச்சைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. ஆமாம். காயத்ரிக்கு பொய் சொல்லக் கூடத் தெரியவில்லை.
அவள் சொன்ன சுந்தரேசன் எனக்கும் நண்பன்தான்.
"மாப்ளே, காயத்ரிக்கு கல்யாணம் ஆகலடா... உன்னைப் பத்திக் கேட்டா...உனக்குக் கல்யாணம் ஆகலைன்னு சொல்லிட்டேன். ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆயிட்டுதுன்னு சொல்லச் சொன்னா. எனக்கு உன்கிட்ட பொய் சொல்ல மனசு கேட்கல..." என்று போன மாதம் சொன்னது இன்னும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் மனம் காயப்படக் கூடாது என்று அவளும் அவள் மனம் பாதிக்கக் கூடாது என்று நானும் பொய் சொல்லியிருந்தாலும் ஒருவருக்கொருவர் உண்மையைக் காட்டிக் கொள்ளவில்லை.
" சரி புறப்படு காயத்ரி" என்று அவளுடைய திரிவீலரைப் பார்த்தேன். அவள் கிளம்பிப் போய்விட்டாள்.
என் காயத்ரியின் காலைப் பார்த்தால் காலிருப்பவர்கள் எனக்கு ஊனமாகத் தெரிவார்கள். எங்கள் கல்லூரி முதல்வர் எங்களுக்கு ஊக்கமளிப்பதற்காக " கடவுள் உங்கள் விஷயத்தில் சிறு தவறு செய்து விட்டார். மற்றபடி உங்களிடம் குறையெதுவுமில்லை." என்பார்.
காயத்ரி கூட தன் தோழியிடம், " நம்ம கார்த்திகேயனுடைய திறமையைப் பார்த்தால் நாங்கள் சிறந்த படைப்புதான். காலிருப்பவர்கள்தான் தவறிய படைப்புன்னு தோணுது..." என்று சொல்லும் போது நானும் கேட்டிருக்கிறேன்.
அவள் என்னைக் காதலிப்பதும், நான் அவளைக் காதலிப்பதும் எங்களுக்குள் தெரிந்தாலும் ஒருவருக்கொருவர் இதை மட்டும் மறைத்து வைத்து விட்டோம். எங்கள் நண்பர்கள் "இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே"என்று வற்புறுத்திய போதும் திருமணம் என்கிற பெயரில் ஒருவருக்கொருவர் பாரமாக இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு ஊனம் என்கிற ஒரு குறை இருந்தாலும் அது ஒருவருக்கொருவர் சுமையாகி விடக்கூடாது என்று இன்னும் ஒருவருக்கொருவர் காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படிங்க எங்க காதல்?