“ஹலோ! என்னது குழந்தையே அம்மாவ கொன்னுடுச்சா... துப்பாக்கியால சுட்டுருச்சா நோ சான்ஸ். நீங்க எதையும் கலைக்காம அப்படியே வச்சிருங்க. ஹஸ்பன்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா... குட் குழந்தைய டிஸ்டர்ப் பண்ணாதிங்க. நா உடனே வரேன்”
பத்து நிமிடத்தில் போய்ச் சேர்ந்தேன். அதற்குள் கும்பல் கூடியிருந்தது. பெரும்பாலும் அக்கம்பக்கத்து பிளாட் பெண்கள். நல்ல வேளை யாரும் ரூமிற்குள் நுழையவில்லை. அந்தப் பெண் சோபாவில் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தாள். இடது கையில் கதைப் புத்தகம் இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே சுடப்பட்டிருக்கிறாள். அவளுக்குத் தெரியாமல் ஆனால் மிக அருகிலிருந்து சுட்டிருக்க வேண்டும்.
“கொலையை யார் மொதல்ல பார்த்தது?”
“நான் தான் சார்” என்றபடி ஐம்பது வயது முஸ்லிம் பெண் முன் வந்தார்.
“நடந்ததை சுருக்கமாச் சொல்லுங்க”
“எதிர் பிளாட்ல குடியிருக்கறேன் சார். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தீடீர்னு துப்பாக்கி சத்தம் கேட்டுச்சி. அப்ப நான் பாத்ரூம்ல துணி துவைச்சுகிட்டிருந்தேன். ஒடி வந்து பாத்தா இந்தப் பொண்ணு குண்டடிபட்டுக் கிடக்குது. குழந்தை கையில துப்பாக்கி இருந்துச்சி. அதுல இருந்து புகை கூட வந்துகிட்டு இருந்துச்சு.”
“நீங்க வரும் போது யாராவது போற சத்தமோ, வேற ஏதாவதோ வித்தியாசமாகத் தெரிஞ்சுதா”
“அப்படி எதுவும் இல்ல சார்”
ஒன்றும் பிடிபடிவில்லை.
“ஆமா, நீங்க வந்து பாக்கும் போது குழந்தை எங்க நின்னுகிட்டு இருந்துச்சி”
“இப்ப துப்பாக்கி வச்சிருக்கற இடத்துல தான் சார் நின்னுகிட்டு இருந்துச்சி”
துப்பாக்கி இறந்தவளின் வலதுபக்கத்தில் சற்று தள்ளி இருந்தது. குண்டோ இடது பக்கம் பாய்ந்திருந்தது. ஸோ கொளையாளி சுட்டுவிட்டு துப்பாக்கியைக் குழந்தை கையில் கொடுத்திருக்கிறான். குழந்தையிடம் பேசிப் பார்த்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம். பேசுமா?
“குழந்தை எங்க”
“குழந்தை அழுவுதுன்னு இப்பதான் மேல்வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிருக்காங்க”
“கூட்டிகிட்டுவாங்க”
நான் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தை பெரியதல்ல. இரண்டு வயசுதானிருக்கும். வரும்போதே வீலெனக் கத்திக்கொண்டே வந்தது. என்னைக் கண்டதும் பேயைக் கண்டது போல் இன்னும் வேகமாக அலறியது. அவளுடய தாய் சோறூட்டும் போது பேய்க்கு பதிலாக போலீஸ்காரனைக் காட்டி மிரட்டியிருப்பாளோ என்னவோ?
அங்கு நின்ற மற்றவர்களிடம் விசாரித்தேன். அனைவரும் அந்தப் பெண் சொன்னதைத் தான் சொன்னார்கள். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். மொத்தம் நான்கு வீடுகள் மட்டுமே உள்ள குடியிருப்பு. கீழே இரண்டு, மேலே இரண்டு. எதிர் எதிர் வீடுகள். வீட்டைச் சுற்றி நான்கு புறமும் இடைவெளி விட்டிருந்தார்கள். கான்கிரீட் தளம். சுத்தமாக இருந்தது. கொலை நடந்தபோது அந்த வீட்டில் மொத்தம் நான்கு பேர்தான் இருந்திருக்கிறார்கள். கீழ்வீட்டில் ஐம்பது வயது முஸ்லீம் பெண் மட்டும் இருந்திருக்கிறார். அவர்தான் சத்தம் கேட்டு முதலில் வந்தவர். மேல்வீட்டில் ஒரு வீட்டில் இருபத்து ஐந்து வயது பெண்ணும் இன்னொரு வீட்டில் நாற்பது வயது பெண்ணும் அவருடைய மகளுடைய இருபது வயது தோழியும் தான் இருந்திருக்கிறார்கள். வீட்டுக்கு எதிரே இஸ்திரிபோட்டுக்கொண்டிருந்த கணவனும் மனைவியும் அந்த சமயத்தில் யாரும் உள்ளே மட்டுமல்ல அந்த தெருவிலே கூட வரவில்லை என்று சொன்னார்கள். வேறு வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லையா என உறுதி செய்ய வேண்டும்.
தான் வந்த ஸ்கூட்டரைக் கீழே போட்டுவிட்டு கதறியபடி அவள் புருஷன் சுரேஷ் வந்தான். முப்பது வயதிருக்கும். அவன் கதறிய கதறல் என் கல் மனத்தைக் கூட கரைத்தது.
போரன்ஸிக் ஆட்கள் வந்ததும், பிங்கர் பிரின்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு பாடியை போஸ்மார்டத்துக்கு அனுப்பினேன். அங்கு நின்றவர்கள் அனைவரிடமும் நாளை மீண்டும் வந்து விசாரிப்பதாகவும் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய அல்லது சந்தேகப்படும் அனைத்துத் தகவல்களையும் யோசித்து வைத்து அப்போது தெரிவிக்கும்படி கூறிவிட்டு ஸ்டேசனுக்கு கிளம்பினேன்.
அடுத்தநாள் போன போது கணவன் ஓரளவுக்குத் தெளிந்திருந்தான். அமைதியாகப் பேசினான். காதல் திருமணமாம். எந்தப்பிரச்சனையும் இல்லையாம். ஆபிஸிலும் எதிரிகள் எவரும் இல்லை என்றான். மனைவிக்கும் எதிரிகள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை, அதுவும் கொலை செய்யும் அளவுக்கு என்றான். மனைவிக்கு ஏதாவது வேறு தொடர்புகள் இருக்குமோ என்ற கேள்விக்கும் சத்தியமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றான். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அவளை நன்றாகத் தெரியும் என்றான். வேண்டுமானால் மேல் வீட்டில் இருக்கும் சுகுணாவைக் கூட கேட்டுப்பாருங்கள் என்றான். ஆனால் அவன் சொன்ன ஒரு விசயம் தான் இடித்தது. அதாவது கொலை செய்ய உபயோகப்படுத்தியது அவனுடைய துப்பாக்கிதானாம் டேபிள் டிராயரில் தான் இருந்ததாம். அப்படியானால் கொலையாளி முன்பே துப்பாக்கியை எடுத்து வைத்திருக்க வேண்டும். அவனிடம் அவன் வீட்டுக்கு கடந்த இரண்டு நாட்களில் வந்தவர்களைப் பற்றி கேட்டேன். கடந்த ஒரு வாரமாகவே யாரும் வரவில்லை என்று சொன்னான்.
குழந்தையிடம் யார் துப்பாக்கியைக் கொடுத்தது என்று கேட்டதற்கு “மூணு கண்ணா” என்று பதில் சொன்னதாம். குழந்தையை மிரட்டுவதற்காக மூணு கண்ணா வந்துடுவான் என்று சொல்லுவார்களாம். இப்போது குழந்தை சொல்வதைப் பார்த்தால் வந்தவன் முகமூடி அணிந்திருக்கலாம் என்று தோன்றியது.
மற்றவர்களை விசாரித்தேன். முதலில் மேல் வீட்டு சுகுணா. அவளும் இறந்தவளும் வகுப்புத் தோழிகள்தான் என்றாள். சுரேஷ் சொன்னதையே தான் அவளும் சொன்னாள். மற்றொரு வீட்டில் இருந்த இருவரையும் விசாரித்தேன். வீட்டுக்காரப் பெண்மணி பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாளாம். அவளுடைய மகளின் தோழி கிரண் சத்தமாக டீவி பாத்துக்கொண்டிருந்தாளாம். ஆகவே ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சென்று கொலை செய்வது சாத்தியமில்லை. ஏனென்றால் துப்பாக்கி சத்தம் கேட்டு இருவரும் தான் ஒன்றாக ஓடியிருக்கிறார்கள். சுகுணா இவர்களுக்கு முன்பே ஓடியிருக்கிறாள்.
கீழ்வீட்டு முஸ்லிம் பெண் கூறிய ஒரு சாதாரண தகவல்கள் தான் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. அன்று அந்த அம்மாள் கொலை நடப்பதற்கு முன்புதான் பாதித் துணிகளை உலர்த்திவிட்டு மீதித் துணிகளை துவைக்கப் போயிருந்ததாம். ஆனால் மாலையில் துணிகள் காய்ந்ததும் எடுக்கும்போது தான் பார்த்தார்களாம் பர்தா மட்டும் திருப்பிக் கிடந்ததாம். காலையில் துணியை திருப்பிப் போடவில்லை என்று அடித்துச் சொன்னார்கள். ஒரு வேளை அந்தப் பர்தாவைப் போட்டுக் கொண்டு தான் கொலைகாரன் வந்திருப்பானோ? அதைப் பார்த்துத்தான் குழந்தை மூணுக்கண்ணா என்று கூறுகிறதோ? அதனைச் சோதித்துப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்து பர்தாவை போட்டு முகத்தை நன்கு மறைத்துக் கொண்டு வரும்படி அந்தம்மாவைச் சொன்னேன். என் துப்பாக்கியைக் கொடுத்து குழந்தை முன் சென்று நிற்கும்படி சொன்னேன். அவ்வளவுதான் குழந்தை வீல் என அலற ஆரம்பித்தது. குழந்தையின் அப்பாவிடம் குழந்தையைச் சாமாதனப்படுத்தி ஏன் அழுகிறாய் எனக் கேட்கச் சொன்னேன். குழந்தை “முணுக்கண்ணா வந்துட்டான்” எனத் தெளிவாகச் சொன்னது.
இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. கொலையாளி இந்த காம்பவுன்டுக்குள் வந்து பர்தாவை அணிந்து கொண்டுதான் உள்ளே போயிருக்கிறான். கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் போது அவசரத்தில் பர்தாவை தூக்கிக் கொடியில் போட்டுவிட்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் எப்படி அவனால் டிராயரில் இருந்த துப்பாக்கியை எடுக்க முடிந்தது. அதற்கு ஒரே வாய்ப்புதான் இருந்தது. கொலைக்கு சற்று முன் அந்த பெண் உள்ளே சென்றிருக்க வேண்டும். அதனைப் பயன்படுத்தி துப்பாக்கியை எடுத்திருக்க வேண்டும். அப்படியானால் கொலையாளிக்கு துப்பாக்கி இருக்கும் இடம் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ஆகவே கொலையாளி வெளியாள் இல்லை. அடிக்கடி வீட்டிற்கு வந்து போகிறவன். யாராய் இருக்கும். விசாரணை தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டதே. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது யாரோ சாமர்த்தியமாகக் கொலை செய்திருக்கிறார்கள்.
சுரேஷின் ஆபிஸில் ரகசியமாக விசாரித்தேன். யாரும் அவனைப் பற்றி தவறாகக் கூறவில்லை. கொலை நடந்த அன்று அவன் அலுவலகத்தில்தான் இருந்திருக்கிறான். எதற்கும் இறந்தவளின் பூர்வீகத்தைச் சற்று அலசி விடுவோமே யென்று திருச்சிக்குப் போனேன். அவளுடைய அம்மா வீட்டிலும் தெரிந்தவர்கள் நண்பர்களிடமும் விசாரித்தேன். அவளும் சுரேஷும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து இருவீட்டுச் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே பிரச்சனை ஒன்றும் இல்லை என அனைவரும் ஒரே மாதிரி சொன்னார்கள். ஆனால் ராஜியின் தோழி ஒருத்தி மட்டும் சற்று வித்தியாசமான ஒரு தகவலைச் சொன்னாள். எனக்கு ஒரளவுக்கு விஷயம் புரிந்தது போலிருந்தது.
சென்னைத் திரும்பியதும் மேல் வீட்டு சுகுணாவை ஸ்டேசனுக்கு வரச் சொன்னேன். நீ தான் கொலை செய்தாய் என்று தெரிந்துவிட்டது உண்மையை ஒத்துக்கொள் என்று மிரட்டினேன்.
“நான் போயி என் குளோஸ் பிரண்டைக் கொள்வேனா” என்று அழுதாள்.
நானும் விடாமல் கேட்டேன் “குளோஸ் பிரண்டுன்னு சொல்றியே பின்னே ஏன் அவ கல்யாணத்துக்கு கூட போகலை”
“ரிசப்ஸனுக்கு போனேனே” என உடனே சொன்னாள்.
ஆனால் இடைப்பட்ட நேரத்தில் அவள் முகம் ஒரு கணம் சுருக்கியதை நான் கவனிக்கத் தவறவில்லை. “கல்யாணத்துக்கு அப்புறம் அவளைப் பாக்கவேயில்லையாமே ஏன்?”
அவள் காரணத்தை உடனே சொல்லமுடியாமல் திணறியது, அவளை மேலும் காட்டிக் கொடுத்தது. பின்னர் பெண் போலீஸை விட்டு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டு நடந்ததைச் சொன்னாள்.
கல்லூரியில் படிக்கும்போது இருவரும் சுரேஷை விரும்பினார்களாம். அதனால் ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்களாம். யாரை சுரேஷ் காதலிக்கிறானோ அவரே தொடர்ந்து காதலிப்பது என்றும் மற்றவர் யாருக்கும் தெரியாமல் ஒதுங்கிவிடவேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.
சுரேஷ் ராஜியைக் காதலிப்பது தெரிந்ததும் சுகுணா ஒப்பந்தப்படி யாருக்கும் தெரியாமல் ஒதுங்கிக்கொண்டாளாம். ராஜி திருமணம் நடந்து ஒருவருடத்தில் தானும் வேறு திருமணம் செய்துகொண்டு கோவைக்கு சென்றுவிட்டாளாம்.
இரு மாதத்துக்கு முன்தான் அவள் கணவனுக்கு சென்னை மாற்றலாகி வந்தாளாம். குடி வந்த பிறகுதான் கீழ்வீட்டில் ராஜி இருப்பது தெரிந்ததாம்.
இருவரும் பழைய நட்பைப் புதுப்பித்தாலும் சுகுணாவுக்கு மட்டும் தான் தோற்றுப் போய் விட்டோமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததாம்.
சுகுணாவுக்குக் குழந்தையில்லாத நிலையில் ராஜி குழந்தையோடு சந்தோஷமாக வாழ்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. தனக்கு கிடைக்காத அந்த வாழ்வு ராஜிக்கும் கிடைக்கக் கூடாதொன்று அவளைக் கொலை செய்ய முடிவு செய்தாளாம்.
கொலை நடந்த அன்று காலையில் சுகுணா காபிபொடி வாங்கும் சாக்கில் ராஜி வீட்டிற்குப் போனாளாம். ராஜி சமையலறைக்குப் போன சமயத்தில் துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டாளாம். பின்னர் எல்லோரும் போன பிறகு பத்தரை மணிவாக்கில் கீழே வந்து கொடியில் தொங்கிய பர்தாவை எடுத்துப் போட்டுக் கொண்டு போனாளாம்.
சத்தம் போடாமல் கதவைத் திறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ராஜியை சுட்டுவிட்டு துப்பாக்கியை குழந்தை கையில் திணித்துவிட்டாளாம். பிறகு ஒரே ஓட்டமாக போய் பர்தாவை கொடியில் கடாசிவிட்டு படிக்கு அடியில் ஒளிந்து கொண்டாளாம்.
சத்தம் கேட்டு முஸ்லிம் பெண் வந்த பிறகு யாருக்கும் தெரியாமல் படியடியிலிருந்து வெளியே வந்து அவளும் ஓடி வருவது போல் ஓடி வந்தாளாம்.
பின் நிகழ்வுகள்
முன்றே மாதத்தில் கேஸ் முடிந்து சுகுணாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
உண்மைக் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்ததற்காக இன்ஸ்பெக்டருக்கு டி.எஸ்.பி. பிரமோஷன் கிடைத்தது.
ஆறு மாதம் கழித்து சுரேஷ் குழந்தையைக் காரணம் காட்டி தன்னுடன் வேலை செய்த பெண்ணை (தன் புதிய ரகசியக் காதலியைத் தான் போட்டத் திட்டப்படி) மணந்து கொண்டான் (யாரும் சந்தேகிக்கவில்லை)
ராஜியை கொலை செய்வதில் தான் பாவம் சுகுணா, சுரேஷை முந்திக் கொண்டாள்.