கொழும்பு 12ல் நீதி மன்றங்கள் உள்ள ஹல்ஸ்டொர்ப் பகுதி, சிறீலங்கா நீதித் துறையின் மையமாக அமைந்துள்ளது. ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் வாழ்ந்த கவர்னரான ஜெராட் பீட்டர்சன் (Jerad Peterson) ஹல்ஸ்டோர்ப்பின் பெயர் இப்பகுதிக்குச் சூட்டப்பட்டது. வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் பல உள்ள இடம். அவர்களது பெயர்ப் பலகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் தொங்குவது ஒரு தனிக் காட்சி. கருப்புக் கோட்டும், வெள்ளை சேர்ட்டும், காற்சட்டையும, கறுப்பு டையோடு ஆடை அணிந்து, கைகளில் பைல்களைச் சுமந்தபடி, வாடிக்கையாளர்களுடன் பேசியபடி வழக்கறிஞர்கள் போவதைக் காணலாம். அவர்களுக்குப் போட்டியாக பெண் வழக்கறிஞர்கள் ஒரு பக்கம் காணலாம். அதோடு பொலீஸ் இலாக்காவைச் சேர்ந்த பொலீஸ்காரர்களும், இன்ஸ்பெக்டர்களும் மறு பக்கம். குற்றவாளிகளும், குற்றமற்றவர்களும் நிறைந்த இடம். அவர்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் இடம் ஹல்ஸ்டொர்ப்.
நீதி வழங்கும் இடத்தில், சடைத்து வளர்ந்த ஒரு அரச மரம். அதன் கீழ் ஒரு புத்தர் சிலை. தமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்று புத்தர் பெருமானை வேண்டி நிற்போரையும் காணலாம். இதை விட பெட்டிசன்கள் எழுதுவோரின் டைப்ரட்டர்களின் சத்தங்கள் ஒரு பக்கம். ரிட்டைரான பல அரச ஊழியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பென்சனோடு அதிக பணம் சம்பாதிக்க, பெட்டிசன் எழுதும் தொழிலைச் செய்தனர். இவர்களில் பலர் நீதி மன்றங்களில் லிகிதர்களாக கடமையாற்றி சட்ட நுனுக்கங்களை அறிந்தவர்கள். வேலை செய்யும் போது பெட்டிசன்கள் எழுதிப் பழக்கப்பட்டவர்கள். சிலர் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதக் கூடியத் திறமைசாலிகள்.
இவர்களில் “பெட்டிசன் பெரி” என்று பலராலும் அழைக்கப்படும் பெரியதம்பியும் ஒருவர். அவருக்கு வயது அறுபத்தைந்து மட்டில் இருக்கும். முப்பத்தைந்து வருடங்கள்; அரசாங்கத்துக்கு மாடாய் உழைத்து ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். பல நீதிமன்றங்களிலும் அட்டேர்னி ஜெனரலின் அலுவலகத்திலும் வேலை செய்த அனுபவசாலி. ரிட்டையரான பின் தொடர்ந்து வேலை செய்யா விட்டால் அவருக்கு ஏதோ பயித்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. மட்டக்களப்பைப் பிறப்பிடமாக கொண்ட பெரியதம்பிக்கு இளப்பாறிய பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விருப்பமில்லை. கொழும்பில் பல வருடங்கள் வாழ்ந்தவர். மூன்று மொழிகளும் நன்றாகத் தெரிந்தவர். மனைவி ஈஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்தவர். தன் மனைவி ஈஸ்வரி, மகன் கணேசன், மகள் சாந்தியோடு பெரியதம்பி கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மூன்று அறைகளைக் கொண்ட அப்பார்ட்மெனடில் வாழ்ந்துவந்தார். அவர் மகன் கணேஷ், மருந்து வகைகளை விற்கும் மெடிக்கல் சேல்ஸ்மன்னாக வேலை பார்த்துவந்தான். பெரிக்கு திருமணமாகாத இரு பிள்ளைகள் தான் உலகம். அவர்களுக்குத் திருமணமாகாததையிட்டு பெரிக்கு பெரும் கவலை. தன் உழைப்பின் ஒரு பகுதியை மகள் சாந்தியின் திருமணத்துக்கு சீதனமாக சேர்த்து வந்தார்.
மடித்து வைக்கக் கூடிய மேசையை, தினமும் வேலை செய்யும் இடத்தில, பெரி பிரித்து வைத்தார். அந்த மேசையை வேலை முடிந்து வீடு திரும்ப முன் மடித்து அருகில் உள்ள சோமசிரியின் தேனீர் கடையில் ஓரமாக வைத்துவிட்டு போவார். சோமசிரியை பெரிக்கு வேலை செய்த நாட்கள் முதல் கொண்டே தெரியும். வேறு எவரையும் தான் வேலை செய்யும் இடத்தை ஆக்கிரமிக்க விடமாட்டார். இலகுவில் கையில் எடுத்துச்செல்லக் கூடிய, இரைச்சல் இல்லாத, பல வருடங்கள பாவித்த ரெமிங்டன் டைப்ரட்டரையும் தேவையான பேப்பர்களையும், கார்பனையும் எடுத்து மேசையில் வைத்தார். ரெமிங்டன் டைப்ரட்டர், அவர் ரிட்டையரான போது, அவரோடு வேலை செய்தவர்கள் தங்கள் அன்பளிப்பாக அவருக்கு கொடுத்தது.
பெரி வந்ததைக் கண்ட சோமசிரியின் தேனீர்கடையில் வேலை செய்யும் பையன் சிறிசேனா வழக்கம் போல் பெரிக்கு பிடித்தமான இஞ்சி போட்டத் தேனீருடன் அவரிடம் வந்தான். சிறிசேனா கொடுத்த தேனீரை அருந்திவிட்டுப் பெட்டிசன் எழுதப் பெரி தயாரானார்.
ஏற்கனவே அவரிடம் பெட்டிசன் எழுதுவதற்காக ஒருவர் காத்து நின்றார். ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து பெயராவது பெட்டிசன் எழுதித் தரும்படி பெரியிடம் வருவார்கள். அதனால் அவருக்கு சில நாட்களில் குறைந்தது ஐந்நூறு ரூபாய்களுக்கு மேல் வருமானம் கிடைத்தது. பெட்டிசன் எழுதி, மாதாந்தம் கிடைக்கும் வருமானம் சில மாதங்களில் பெரிக்கு கிடைக்கும் விட அதிகமாகவும் இருக்கும். மனுக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இலக்கணப் பிழையின்றி சட்டரீதியாக எழுதும் திறமை படைத்தவர். மனுக்கள் மட்டுமன்றி சில முக்கியப் பத்திரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதிலும் கை தேர்ந்தவர்.
பெரிக்கு தான் மனுக்கள் எழுதி வென்ற கேசுகளைப் பற்றி அடிக்கடி நண்பர்களுக்குச் சொல்லிக் காட்டுவதில் மனத்திருப்தி. அதில் ஒரு கேஸ், அவரோடு வேலை செய்த பர்னாந்தோவுடையது. கோபக்காரனான பர்னாந்தோ பெரியோடு நெருங்கிய சினேகிதன். 1983ஆம் நடந்த இனக்கலவரத்தின் போது பெரியைப் பாதுகாப்பாக அவர் வீட்டுக்கு ஆபிசில் இருந்து கூட்டிச் சென்றவன் பர்னாந்து. அந்த உதவியைப் பெரி மறக்கவில்லை. அதுமட்டுமல்ல, தான் எழுதிய கடிதங்களை பெரிக்குக் காட்டி அபிப்பிராயம் கேட்காவிட்டால் பர்னாந்தோவுக்கு திருப்தியில்லை.
ஒரு நாள் பிரதம லிகிதர் மகிந்தா, பர்னாந்தோ முக்கிய பைல் ஒன்றைத் தொலைத்து விட்டதற்காக, பலருக்கு முன், அவரைத் தாறுமாறாகப் பேசினார். இருவருக்கு மிடையேயான வாக்குவாதம் முற்றிய போது பர்னாந்தோ கோபம் மீறி பேப்பர் வெயிட்டால் பிரதம லிகிதர் மகிந்தாவை தாக்கினான். இச்சம்பவத்தால், பர்னாந்தோ தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டான். பர்னாந்தோவை தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தியதை ஆட்சேபித்து மேலிடத்துக்குத் தக்க காரணங்களோடு மனு எழுதி, திரும்பவும் பர்னாந்தோவுக்கு வேலை எடுத்துக் கொடுத்தவர் பெரி.
சுங்க இலாக்காவைச் சேர்ந்த அதிகாரியான சுமதிபாலா, வணிகர் ஒருவரிடம் லஞ்சம் வாக்கியதற்காக வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டான். மேலிடத்துக்கு அப்பீல் செய்து சுமதிபாலா வேலையைத் திரும்பவும் பெற அப்பீல் கடிதம் எழுதிக் கொடுத்தவர் பெரி. இப்படி ஒவ்வொன்றும் ஒவவொரு விதமான கேசுகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர் பெரி. பல வழக்கறிஞர்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.
பெரியோடு பேசக் காத்திருந்தவரின் நெற்றியில் இருந்த திருநீறும், சந்தனப்பொட்டும் , அவரைத் தமிழன் எனக் காட்டிக் கொடுத்து விட்டது. அவரோடு பெரி தமிழில் பேசத் தொடங்கினார்.
“என்னோடு என்ன விஷயமாக பேச நிற்கிறீர்?” பெரி வந்தவரைப் பார்த்துக் கேட்டார்.
“ஐயா, என்றை பெயர் தங்கராசா. நான் இருப்பது வெள்ளவத்தையில். பெற்றாவில் ஏற்றுமதி, இறக்குமதி பிஸ்னஸ் செய்கிறன். நீங்கள் பெட்டிசன் எழுதுவதில் கெட்டிக்காரர் என்று லோயர் லோகேந்திரன் சொன்னவர். அது தான் ஒரு பெட்டிசன் எழுத உதவி கேட்டு உங்களிடம் வந்தனான். நீங்கள் தானே பெரியதம்பி ” வந்தவர் பணிவோடுக் கேட்டார்.
“லோயர் லோகேந்திரனா, உம்மை என்னைப் போய்ப் பார்க்கச் சொன்னவர்”? பெரி வந்தவரைக் கேட்டார்.
“ஓம் ஐயா, அவர்தான் என்றை லோயர். லோயர் லோகேந்திரன் என் அண்ணருடைய மருமகன்”
“அப்படியா? ஓம், நான்தான் பெரி என்ற பெரியதம்பி. என்ன விஷயம் சொல்லும்”
“விஷயம், என் மகள் ராணியைப் பற்றியது. அவளைக் கலியாணம் செய்வதாகச் சொல்லி ஒருத்தன் ஏமாற்றிப் போட்டான். ராணியைப் போல இன்னொருத்தியையும் ஏமாத்திப் போட்டான். அவனுக்கு எதிராக ஒரு பெட்டிசன் எழுத வேண்டும்”
“அப்படியா. நான் இரண்டு பக்கத்தில் பெட்டிசன் எழுதக் குறைந்தது நூறு ரூபாய் எடுப்பன். பெட்டிசன் இரண்டு பக்கக்துக்கு மேலே எண்டால், அதிக பக்கங்களுக்கு, பக்கத்துக்கு இருபது ரூபாய் வீதம் சேர்ந்து எடுப்பன்” பெரி தனது பெட்டிசன் எழுதும் கட்டணத்தை வந்தவருக்கு சொன்னார்.
“காசைப் பற்றிக் கவலைப் படாதையுங்கோ ஐயா. எனக்கு என் மகளை ஏமாற்றியவனுக்கு நல்ல பாடம் படிப்பித்தால் போதும்”
“சரி, முழுக்கதையையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்” பெரி தனது நோட் புத்தகத்தைத் திறந்து, பேனாவோடு குறிப்பெடுக்க ஆயத்தமானார்.
“எண்டை மகள் ராணி, அக்கொவுண்டானாக வேலை செய்வது சிலேவ் ஐலண்டில் உள்ள கவ்வி இலாக்காவில். வேலைக்குத் தினமும் பஸ்சில் போய் வருவாள். ஒருநாள் பஸ் ஸ்டான்டில் அக்கொவுண்டானாக லிவர் பிரதர்சில் வேலை செய்யும் ரமேஷ் என்ற இராமலிங்கத்தை ஒரு நாள் ராணி சந்திக்க நேர்ந்தது. தான் ஒரு சார்டட் அக்கொவுண்டன் என்று தன்னைப் பற்றி ராணிக்குப் புழுகியிருக்கிறான். ராணியும் லண்டன சி.எம்.ஏ சோதனைக்குப் படிப்பதால் ரமேஷின் உதவியைத் தன் படிப்புக்காக நாடியிருக்கிறாள். ரமேஷின் பேச்சில் மயங்கிய ராணி, அவன் விரித்த வலையில விழுந்தாள். தனது அக்கொவுண்டன்சி நோட்சுகளை தருவதாகச் சொல்லி ராணியை ஏமாற்றி தான் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் ரமேஷ். ராணியும் படிப்புக்காக அவனை நம்பி அவன் அறைக்குப் போனாள்.
சில நாட்களாக ராணி வீட்டுக்குத் தாமதமாக வரத் தொடங்கினாள். ஏன் தாமதமாய் வாராய் என்று என் மனைவி கேட்டதுக்குத் தனக்கு ஆபிசிலை வேலை அதிகம். அது முடித்துப் போட்டு வர நேரமாகிறது என்று தாயுக்குப் பொய் சொல்லியிருக்கிறாள். ரமேசோடை தான் கொண்ட உறவு ஆபத்தில் போய் முடியுமேன அவள் அறியவில்லை. தான் ரமேசின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறதை அறிந்ததும் ரமேசிடம் தன்னைக் கலியாணம் செய்யும்படி கேட்டிருக்கிறாள். அவன் முடியாது என்று மறுத்துவிட்டான். ராணியோடு ஒன்றாக வேலை செய்யும் லதா என்ற சிங்களப் பெண், தன் சினேகிதியையும் ரமேஷ ஏமாற்றியவன் என்று ராணிக்குச் சொல்லியிருக்கிறாள்.
“ மேலே நடந்ததை விளக்கமாய் சொல்லும்” பெரி வந்தவரிடம் விபரம் கேட்டார்.
“எனக்குத் தெரியாமல், எங்கள் குடும்பவைத்தியரிடம் போய் தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க உதவும் படி ராணி கேட்டிருக்கிறாள். அவர் மறுத்ததும், ரத்தினம் வைத்தியசாலைக்குப் போய் கருவைக் கலைத்திருக்கிறாள். இதெல்லாம் எனக்கும் என் மனைவிக்கும் தெரியாமல் இது நடந்திருக்கிறது. ஒரு நாள், நான் எனது குடும்பவைத்தியரைச் சந்திக்க நேர்ந்தபோது போது ராணி தன்னிடம் வந்து, தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கும்படி கேட்டதாகச் சொன்னார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ராணியை விசாரித்த போது, நடந்த கதை முழுவதையும் சொல்லி அழுதாள்” என்றார் தங்கராசு.
“பிறகு நடந்தது என்ன”? பெரி ஆவலுடன் கேட்டார்.
“ கலியாணத்தரகர் தம்பையாவிடம் ரமேஸைப் பற்றி நான் விசாரித்த போது, ரமேசைத் தனக்குத் தெரியுமென்றும், அவனுக்குத் தான் ஒரு பெரிய இடத்தில் கலியாணம் பேசி நடக்கவிருக்கிறது என்றார். ரமேஷ் இன்னும் பல பெண்களை, ராணியைப் போல் ஏமாற்றக் கூடாது என்பதற்காக அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவனுக்கு எதிராக, அவன் வேலை செய்யும் இடத்துக்கும், அவனுக்கு கலியாணம் பேசி முடிவான பெண் வீட்டாருக்கும், ரமேசைப் பற்றி விபரமாய் பெட்டிசன் ஒன்று எழுத வேண்டும். அதுக்குத்தான் உங்களிடம் வந்தன்” என்றார் பெருமூச்சுடன் வந்தவர்.
பெரி முழுக்கதையையும் கேட்டதும், தங்கராசாவின் மகள் மேல் அனுதாபப்பட்டார்.
“நீர் சொன்ன கதையைக் கேட்டேன். பெட்டிசனை தாயார் செய்கிறேன். எனக்கு மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் உம்மோடு தொடர்பு கொள்ளுகிறேன். உமது டேலிபோன் நம்பரைத் தாரும்” என்று தங்கராசாவிடம் டெலிபோன் நம்பரைக் கேட்டு, தன நோட் புத்தகத்தில குறித்துக் கொண்டார்.
“ஐயா. எப்ப நான் திரும்பி வர...”
“இன்று திங்கட்கிழமை. நீர் புதன்கிழமை காலை பதினொரு மணிக்கு வந்து என்னைச் சந்தியும். பெட்டிசனைத் தயாராக வைத்திருக்கிறன். உமக்கும் சேர்த்து மூன்று கொப்பிகள் எடுத்துவைக்கிறன். போதும் தானே...”
“அது போதும். பெட்டிசனிலை ராணியின்றை பெயர், என்றை பெயர், வீட்டு விலாசம் போடவேண்டாம், அதை நான் எழுதிக்கொள்ளுகிறன். திகதியை மட்டும் குறிப்பிடுங்கள்...”
“ரமேஷ் வேலை செய்யும் லிவர் பிரதர்சின் விலாசத்தையும், ரமேசுக்குக் கலியாணம் ஒழுங்கான பெண் வீட்டாரின் விலாசத்தையும் நீரே எழுதிக் கொள்ளும். என்ன சரிதானே?”
“நல்லது ஐயா. ரமேசுக்கு ஒரு பாடம் படிப்பித்தால் அது எனக்குப் போதும். இந்தாருக்கு அட்வான்சாக பணம்” என்று நூறு ருபாய் நோட்டை பெரியிடம் நீட்டினார் தங்கராசு.
“நீர் சரியான பிஸ்னஸ்மன் என்று காட்டிப் போட்டீர்” என்றார் சிரித்தபடி பணத்தை வாங்கிய பெரி.
“நீங்கள் ஆரம்பத்தில் சொன்னபடி மேலதிகப் பணம் தேவையானால் பெட்டிசனை வாங்கும் போது தாரன்” என்றார் தங்கராசு.
“நல்லது. நான் சொன்ன மாதிரி மறக்காமல் புதன்கிழமை வந்து பெடடிசனை வாங்கிக் கொள்ளும். நான் ரெடியாய் வைச்சிருப்பன்”
“உங்ளைச் சந்தித்ததில் எனக்கு நல்ல சந்தோஷம். எனக்குத் தெரிந்த வேறு எவருக்காவது பெட்டிசன் எழுத வேண்டியிருந்தால் உங்களிடம் அவையளை அனுப்புகிறன்” என்று பெரியை பாராட்டி விட்டுச் சென்றார் தங்கராசா.
*****
அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரிக்கு ஓய்வு நாள். பெரியின் சகோதரியின் கணவர் மாணிக்கம், பெரியோடு அவசரமாய் பேச வேண்டும் என்று இரண்டு தடவை போன் செய்ததாக சாந்தி சொன்னாள்.
பெரிக்கும் அவருடைய மைத்துனர் மாணிக்கத்துக்கும் பல காலமாய்ப் பேச்சுவார்த்தையில்லை. தன்றை மகன் கணேசை மாணிக்கத்தின் மகளுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்ன என்று மாணிக்கத்திடம் பெரி கேட்டபோது, அவர் சொன்ன பதில் பெரியின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது.
“மச்சான், உம்முடைய மகன் ஏதோ பெரிய வேலை செய்கிறமாதிரி எண்டை மகளுக்கு கலியாணம் பேசுகிறீர். அவன் கணேஷ் என்ன சாதாரண சேல்ஸ்மன் தானே. படித்துப் பட்டமும் பெறவில்லை. எண்டை மகள் ஒரு பி ஏ பட்டதாரி. அதோடை வேலையும் செய்கிறாள். அவளுக்கு டொக்டர், என்ஜினியர், அக்கொவுண்டன் என்று பல இடங்களில் இருந்து பேசி வநதிருக்குது. ஒரு சேல்ஸ்மென்னுக்கு என் மகளைக் கலியாணம் செய்து கொடுக்க நான் என்ன மடையனே. அதோடை மச்சானுக்கும் மச்சாளுக்கும் இடையே கலியாணம் செய்வது நல்லதல்ல“ என்று முற்றாக மறுத்துவிட்டார் மாணிக்கம்.
“மாணிகத்துக்குப் பணம் இருக்கிற திமிர், அவரை அப்படிப் பேச வைத்துவிட்டது. இப்ப அவருக்கு என்னோடை என்னவாம் கதைக்க வேண்டியிருக்கு?” என்றார் மகள் சாந்தியிடம்.
“ அப்பா, மாணிக்கம் மாமா வந்து உங்களோடை பேசட்டும். என்னவெண்டு அவர் சொல்லப் போவதைப் பொறுமையாய் கேளுங்கோவன். கிட்டத்துச் சொந்தக்காரர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. ஒன்றென்றால் ஓடிவருவினம்” என்றாள் சாந்தி. பெரியின் மனைவி ஈஸ்வரியும் மகள் சொல்வதை ஆமோதித்தாள்.
வேறு வழியின்றி “சரி சரி அவரை வரச் சொல் “ என்றார் வெறுப்போடு பெரி.
மதிய உணவை முடித்துவிட்டு அன்றைய டெய்லி நியூஸ் ஆங்கிலப் பேப்பரை வாசித்தபடி, சாய்மானக் கதிரையில் படுத்திருந்தார் பெரி.
“அப்பா, மாணிக்கம் மாமாவும் மாமியும் வந்திருக்கினம், என்று சாந்தி சொல்லிவாய் மூட முன்பே:
“டேய் பெரி, என்னை என்ன நினைத்துக் கொண்டாய்” என்ற மாணிக்கத்தின் கோபக் குரல் கேட்டது. டேய் என்று பெரியை மாணிக்கம் அழைத்தது அது தான் முதற்தடவை.
கணவனோடு ஒத்துப் பாடுவது போல் ”அண்ணை உனக்கேன் இந்த பெட்டிசன் எழுதுகிற வேலை. உனக்கு எங்களிலை கோபம் எண்டால் எங்களுக்கு எதிராகப் பெட்டிசமே எழுதுகிறது. வந்து நேரடியாகக் கதையன்? என்றாள் பெரியின் சகோதரி.
பெரிக்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.
“ஏன் வீணாகக் கத்துரியல். அப்படி என்ன நடந்தது. விஷயத்தைச் சொல்லுங்கோவன்?” பெரியும் பதிலுக்கு சற்று கோபத்தோடு தன் குரலை உயர்த்திச் சொன்னார்.
“இங்கைபார், இந்தக் கடிதத்தை. நீ தானே எழுதி உண்டை டைப்பிரயிட்டரிலை டைப் செய்தது? முந்தி எண்டை நண்பனுக்கு நீ எழுதின பெட்டிசனோடு ஒப்பிட்டுப் பார்த்தனான். அதே அச்சுக்கள். அதே ரைட்டிங் ஸ்டைல்.” தான் கொண்டு வந்த கடிதத்தைப் பெரி பார்ப்பதற்கு மாணிக்கம் நீட்டினார்.
கடிதத்தை வாங்கி முதல் நான்கு வரிகளை வாசித்தவுடனேயே பெரிக்கு விஷயம் விளங்கிவிட்டது. அது ரமேஷைப் பற்றி தங்கராசாவுக்கு தான் எழுதிக் கொடுத்த பெட்டிசன் அதுவென்று. பெட்டிசனில் தங்கராசாவின் பெயர் இல்லாமல் “பெரியசாமி” என்று தன் பெயரை மாற்றி கையொப்பமிட்டிருந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. இப்படித் தங்கராசு தன்னை மோசம் செய்வான் என்று தெரிந்திருந்தால் அவன் பெயரைப் போடாமல் கொடுத்திருக்க மாட்டேன், அப்படி செய்தது நான் விட்ட பிழை. அவனை நம்பி விட்டேன். வாயில் விரலை வைத்து யோசித்தார் பெரி.
“என்ன மச்சான் யோசிக்கிறீர்? செய்வதையும் செய்துவிட்டு யோசனை வேறா? உந்தக் கடிதத்திலை குறிப்பிட்ட அக்கொவுண்டன் ரமேசுக்கும் என்றை மகள் சுகந்திக்கும் கலியாணம் பேசி ஒழுங்காயிற்று. அதை அறிந்த உமக்கு வயித்தெரிச்சல். அதுக்கு, இப்படியே இல்லாததும் பொல்லாததுமாய் அந்தப் பெடியனைப் பற்றி எழுதுகிறது. உம்மடைய மகனுக்கு எண்டை மகளைக் கொடுக்க நான் சம்மதிக்கவில்லை என்ற ஆத்திரம் உமக்கு”, மாணிக்கத்தின் குரல் பக்கத்து வீட்டுக்குக் கேட்கும் அளவுக்கு இருந்தது.
“அண்ணை உனக்கும் எங்களைப் போல ஒரு மகள் கலியாணம் செய்ய இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே. சுகந்திக்குப் பேசி வந்த சம்பந்தம் பெரிய இடத்துச் சம்பத்தம். பெடியனும் நல்ல குணமுள்ள, படித்த பெடியன். நல்ல கொம்பெனியிலை வேலை. பெரிய சம்பளமும் எடுக்கிறான். இதையெல்லாம் தெரிஞ்சுதானே உனக்கு வைத்தெரிச்சல்”, பெரியின் சகோதரி என்றுமில்லாதவாறு பெரிமேல் பொரிந்து தள்ளினாள். பெரி மனைவியிடம் கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடித்தார் .
“மாணிக்கம் உந்த கடிதம் நான் தங்கராசா என்ற வாடிக்கையாளன் ஒருவனுக்கு எழுதிகொடுத்த கடிதம். அனை நம்பி, பெயரையும் விலாசத்தையும் அவன் கேட்டபடி நான் போடவில்லை. அதில் தான் கையொப்பம் இடுவதாகச் சொன்னான். எனக்குத் தெரியாது ரமேசை உண்டை மகளுக்கு பேசியருக்கிறது எண்டு” தான் பெட்டிசனை எழுதி ஒரு வாடிக்காயாளனுக்குக் கொடுத்ததை பெரி ஒப்புக்கொண்டார்.
பெரியிடம் இருந்து கடிதத்தை விறுக்கென பறித்தபடி “உந்தக் கடிதத்திலை என்ன எழுதியிருந்தாலும் நான் நம்புவதாக இல்லை. இதல்லாம் எண்டை குடும்பத்தின் மேல் உனக்கு உள்ள பொறாமையினால் நீ செய்த வேலை. என்ன பெட்டிசன் நீ எழுதினாலும் என்றை மகளுக்கும், ரமேசுக்கும் கலியாணம் நடந்தே தீரும்“ என்று கோபத்தோடு தனது முடிவைச் சொல்லிவிட்டு மாணிக்கம் போனார். மாணிக்கத்தின் மனைவி தன் அண்ணி ஈஸ்வரியோடு ஒருவார்த்தை கூடப் பேசாமல் கணவனைப் பின் தொடர்ந்தாள்.
“எது எது, எப்ப எப்ப, எப்படி எப்படி, நடக்க வேண்டுமோ, அது அது, அப்ப அப்ப, அப்படி அப்படி நடக்கும். எல்லாமே தலை விதிப்படியே.” என்று தன் வாயுக்குள் முணுமுணுத்தார் பெரி.