அந்த மரத்தடியின் கீழ் இருந்த மேடையில் அவன் மட்டும் சோகத்துடன் அமர்ந்திருந்தான்.
இலையுதிர் காலம் என்பதால் கீழே உதிர்ந்திருந்த இலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய தலைமுடி எல்லாம் வெளுத்துப் போய் இருந்தது. முகத்தில் நிறைய சுருக்கங்கள் காணப்பட்டன. முகத்தோற்றம் அவனுக்கு அதிக வயதைக் காட்டினாலும் "அவ்வளவாக வயதாகவில்லை" என்பதை அவனுடைய கைகளும் கால்களும் காட்டின.
"தம்பீ! யாரப்பா நீ?. இந்த சுடும் வெயிலில் இங்கே அமர்ந்து கொண்டு என்ன செய்கிறாய் ?"
திடீரென்று கேள்விக்கணைகள் வந்து தாக்கியதும் அவனுடைய சிந்தனை கலைந்தது. நிமிர்ந்து நோக்கினான். ஒரு முதியவர் கையில் ஊன்றுகோல் இல்லாமல் முகத்தில் புன்னைகையுடன் நின்றிருந்தார்.
"உன்னைப் பார்த்தால் எங்கள் நாட்டைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்து வந்துள்ளாய்? யாரைக் காண வேண்டும்? சொன்னால் உனக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன்."முதியவர் விடாப்பிடியாய் கேட்டதும் அவன் கல்மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
"ஐயா! நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன் தான். எனக்கு ஒரு பெரிய குறை உள்ளது. அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டி எங்கள் நாட்டில் பலரிடம் சென்றேன். ஒன்றும் பயனில்லை. தீர்வினைத் தேடிக்கொண்டே வந்ததில் உங்கள் நாட்டிற்குள் வந்துவிட்டேன் போலும்."
"குறையா?. என்ன அது? சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?"
"ஐயா! என் முகத்தைப் பாருங்கள். வயதானவரைப் போல எவ்வளவு சுருக்கங்கள்!. என் தலைமுடியைப் பாருங்கள். முழுவதும் நரைத்துவிட்டது. எனக்கு வயது இருபது தான் ஆகிறது. இதுவே என் குறை ஆகும். இதைப் போக்கும் வழியைத் தேடித்தான் வந்தேன்."
முதியவர் அவனுடைய குறையைக் கேட்டதும் சற்று யோசித்தார். பின் சொன்னார்.
"உன்னுடைய குறையைத் தீர்க்க வல்லவர் எங்கள் நாட்டில் ஒருவர் இருக்கிறார். கல்வி கேள்விகளில் வல்ல புலவர் அவர். பெயர் பிசிராந்தையார். உன்னுடைய குறையைப் போக்கும் வழியை அவரிடத்தில் பெறலாம்."
"பிசிராந்தையாரா?. புலவரா? ஒரு புலவர் எப்படி எனது குறையைத் தீர்க்க முடியும்?"
"தம்பீ! பிசிராந்தையாரை நீ நேரில் காணும்போது இதற்கான விடையினைத் தெரிந்து கொள்வாய். சரி. அவரது வீட்டிற்கான வழியினைச் சொல்லுகிறேன். இவ்வழியாக ஒரு காத தொலைவு சென்றால் ஒரு மக்கள் மன்றம் வரும். அதற்கு வலப்புறமாக ஒரு அரை காத தொலைவு சென்றால் அவரது இல்லம் வரும். அதன் முன்னால் ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு இருக்கும். அதுவே அவரது வீட்டிற்கான அடையாளம் ஆகும்."
"மிக்க நன்றி ஐயா! நான் சென்று அவரைக் கண்டு வருகிறேன்."
நன்றி சொல்லிவிட்டு அவன் நடக்கத் துவங்கினான். வழியில் அந்த மக்கள் மன்றம் வந்தது. அதில் இளைஞரும் முதியவருமாய் பலர் அமர்ந்திருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி நிலவியதை அவன் கவனித்தான். அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து அந்நாட்டு மன்னன் மிகவும் நல்லவன் என்பதைப் புரிந்து கொண்டான்.
மன்றத்தைக் கடந்து செல்ல முயலும் போது ஒரு கல் தடுக்கியது. கீழே விழுந்தான். அடுத்த நொடியில் அவனைப் பல கரங்கள் தூக்கி நிறுத்தின. அவர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தில் அமர்ந்து இருந்தவர்களே என்று அறிந்து ஆச்சரியப்பட்டான்.
"மன்னிக்க வேண்டும் தம்பீ! இனிமேல் சாலையில் கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?. சொன்னால் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்."
ஒரு முதியவர் இவ்வாறு சொன்னதும் மிகவும் அகமகிழ்ந்தான் அவன். "ஆஹா! இந்நாட்டு மக்கள் எவ்வளவு பண்பானவர்கள்! பிறரது துன்பத்தைத் துடைக்க ஓடோடி வந்து உதவும் இவர்கள் அல்லவா சான்றோர்கள்!." மனதில் பாராட்டிக் கொண்டு முதியவரிடம் சொன்னான்.
"ஐயா! நான் பிசிராந்தையாரைக் காணச் செல்கிறேன். தாங்கள் இவ்வாறு கேட்டதே எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. நானே சென்று கொள்வேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி"
கீழே விழுந்ததில் அடி ஏதும் படாததால் நடப்பதில் சிரமம் தோன்றவில்லை அவனுக்கு. தூரத்தில் ஒரு வீட்டின் முன்னால் பந்தல் போடப்பட்டு இருப்பதைக் கண்டான். பிசிராந்தையாரின் வீடு அதுவாகத் தான் இருக்கும் என்று எண்ணி வேகமாய் நடந்து வீட்டை அணுகினான். இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்துக் கட்டிய வீடு அது. திண்ணையில் நான்கு பேர் உட்கார்ந்து இருந்ததால் அவன் சற்று தயக்கத்துடன் பந்தல் காலின் ஓரமாக நின்று கொண்டான். அவன் தயங்கியவாறு நிற்பதைக் கண்டதும் ஒருவர் திண்ணையில் இருந்து எழுந்து அவனருகில் வந்தார். கேட்டார்.
"தம்பீ! நான் பிசிராந்தையாரின் மூத்த மகன். தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?"
"ஐயா! நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன். பிசிராந்தையாரைக் கண்டு எனது குறையைக் கூறி போக்கிக் கொள்ள வந்திருக்கிறேன்."
"உள்ளே வாருங்கள் தம்பீ! தந்தை வீட்டில் தான் இருக்கிறார்!"
இப்போது மற்ற மூன்று பேரும் அவனருகே வந்திருந்தார்கள். அவன் கைகால் முகம் அலம்ப ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். துடைத்துக் கொள்ள துணி எடுத்துக் கொடுத்தார் இன்னொருவர். அவனை உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்து விசிறியால் அவனுக்கு வீசினார் இன்னொருவர். குளிர்ந்த காற்று பட்டதும் சற்றே கண் மூடினான் அவன். திடீரென்று ஒரு இனிமையான குரல் கேட்டது.
"இந்த மோர் கலந்த கூழைப் பருகுங்கள்! வெயிலுக்கு மிகவும் நன்றாய் இருக்கும்"
கண்விழித்துப் பார்த்தால் ஒரு பெண்மணி கையில் பாத்திரத்துடனும் முகத்தில் புன்சிரிப்புடனும் அவன் முன்னால் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு கூழைப் பருகி முடித்தான் அவன்.
"வாருங்கள் தம்பீ! தந்தை உங்களுக்காகக் காத்திருக்கிறார்!"
மூத்த மகன் அவனை பிசிராந்தையாரிடம் அழைத்துச் சென்றார். பிசிராந்தையாரைக் கண்டதும் அவனது கண்கள் வியப்பில் விரிந்தன. அவரது வயதை மதிக்க முடியாமல் தடுமாறியவாறு நின்று கொண்டிருந்தவனை அவரது சொற்கள் கலைத்தன.
"தம்பீ! இருக்கையில் அமருங்கள்! நீங்கள் யார் என்று என் மகன் எனக்குச் சொன்னார். தாங்கள் என்னைக் காண வேண்டும் என்று வந்த காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?"
"ஐயா! வந்து.. வந்து.. உங்கள் வயது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"
இதைக் கேட்டதும் பிசிராந்தையார் சிரித்தார். பின் சொன்னார்.
"இதைக் கேட்கவா என்னை வந்து பார்த்தீர்கள்?. எனக்கு வயது எண்பதைத் தாண்டி விட்டது"
"எண்பதைத் தாண்டிவிட்டதா?. என்னால் நம்ப முடியவில்லை ஐயா! உங்கள் தலையில் ஒரு நரைமுடியும் தென்படவில்லை. முகத்தில் ஒரு சுருக்கமும் இன்றி பளபளப்புடன் இருக்கிறீர்கள். இது ... இது ... எப்படிச் சாத்தியம் ஆகும் இந்த வயதில்?."
ஆச்சரியத்துடன் கேட்டவனுக்கு பதிலாக ஒரு பாடல் பாடினார் பிசிராந்தையார்.
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
- புறநானூறு பாடல் எண் - 191
இதன் பொருளானது "ஆண்டுகள் பல ஆனாலும் நரை இல்லாமல் எவ்வாறு இருக்கிறீர்கள் என்று கேட்டீர் என்றால் என் மனைவி (விருந்தோம்பலில்) மாட்சிமை பெற்றவள். என் மக்கள் நற்பண்பு நிறைந்தவர்கள். என் தம்பிகள் எனது எண்ணத்துடன் ஒத்துச் செல்வர். என் நாட்டு மன்னனோ தீமையே செய்யாமல் காப்பவன். அதைவிட இந்த ஊரில் அறிவு நிறைந்த அனுபவம் வாய்ந்த பணிவான சான்றோர்கள் பலர் உள்ளனர்." என்பது ஆகும். இவ்வாறு என் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், மன்னன், பொதுமக்கள் என்று ஐந்து வழிகளாலும் எனக்குக் கவலை என்பதே இல்லை என்பதால் என்னை முதுமை வந்தடையவில்லை என்று நினைக்கிறேன். சரி. உங்களது குறை என்ன என்று கூறுங்கள்.?
"ஐயா! முதுமையான முகத்தோற்றமே எனது சிக்கல் ஆகும். திருமணமே ஆகாத இந்த இளம் வயதில் முதுமைத் தோற்றம் ஏன் வந்தது என்று கேட்கவே தங்களிடம் வந்தேன். தங்களது பதிலில் இருந்து அதற்கான விடையினைப் புரிந்து கொண்டேன். இனி அதற்கான செயலில் இறங்கி என் குறையைப் போக்கிக்கொள்வேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. நான் வருகிறேன்."
கைகூப்பி அவரைத் தொழுது விட்டு நடந்து வரும் போது அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.