ராஜேந்திரனுக்கு கடலூர் ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்ததுமே பேக்கர் கிளார்க் மணி தான் ஞாபகத்திற்கு வந்தார். உடனே கடலூரில் வீடு பார்க்கச் சொல்லி ஒரு தந்தி அடித்து விட்டார்.
அடுத்த ஒரு வாரத்தில் ராஜேந்திரன் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு குடும்பத்துடன் கடலூர் வந்தார். மணி ஏற்கனவே வீடு பார்த்துத் தயாராய் வைத்திருந்தார். வண்டிப்பாளையத்தில் ஊருக்குள் நுழைந்ததும் இடது கை பக்கத்தில் நாலாவது வீடு. எதிர்ப்புறம் மளிகைக் கடை, நூறடி தூரத்தில் நகராட்சித் துவக்கப் பள்ளி என எதற்கும் அலைய வேண்டியிருக்காது. ராஜேந்திரனின் பையன் சேகரைப் பள்ளியில் சேர்க்கவும் ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம் சொல்லி வைத்திருந்தார். இதற்கு மேல் என்ன வேண்டும்.
ராஜேந்திரன் திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை இரவு கிளம்பி காலையில் கடலூர் வந்திருந்தார். மணியும், அவரின் இரட்டைக் குழந்தைகளான நஸீராவும், பர்வீனும், சாமானையெல்லாம் புது வீட்டில் இறக்கி, ஒதுங்க வைக்க உதவினார்கள். மணியின் மனைவி குல்ஜார் அனைவருக்கும் காலையில் இட்லி சுட்டு, கொத்தமல்லி சட்னி செய்து எடுத்து வந்திருந்தாள். “புது வீடு, அது மட்டுமில்லாம மொத மொதல்ல எங்க வீட்டுச் சாப்பாடு சாப்பிடுறீங்க, அதான் இப்பைக்கு மட்டும் சைவம். மதியம் எங்க வீட்டுக்கு எல்லாரும் வந்திருங்க. ஸ்பெஷல் விருந்து இருக்கு” என்றாள்.
சாமானெல்லாம் ஒதுங்க வைத்து அனைவரும் குளித்து முடிக்கவே மதியம் ஒரு மணியாகிவிட்டது. அகோர பசியுடன் அனைவரும் மணி வீட்டிற்கு விருந்துக்குப் போனார்கள். பார்த்தால் குல்ஜார் லெமன் சாதமும் ஆட்டுக்கறி பொரியலும் செய்திருந்தாள். ராஜேந்திரனுக்குக் கிளறிய சாதமென்றாலே பிடிக்காது. அதுவும் லெமன் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் விருந்துக்குப் போன இடத்தில் அதெல்லாம் பார்க்க முடியுமா? ஆனால் ஆட்டுக்கறிப் பொரியல் அருமையாக இருந்தது. பொரிச்ச கறியுடன் இருந்த கெட்டியான குழம்பைத் தொட்டுக் கொண்டு ராஜேந்திரனின் மனைவி ராஜாத்தியும் மகனும், மணி வீட்டாரைப் போல் வெளுத்து வாங்கினார்கள். லெமன் சாதம் பிடிக்காத ராஜேந்திரனுக்குக் கூட அந்த ஆட்டுக்கறி பொரியலுடன் சேர்த்துச் சாப்பிடுவது பிடித்திருந்ததால், சோறு உள்ளே இறங்கியது. ஒரு வேளை அகோரப்பசியும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் அது அந்த வாரத்துடன் முடிந்திருந்தால், பரவாயில்லை என்று ராஜேந்திரன் நிம்மதியடைந்திருப்பார். ராஜேந்திரனின் மனைவி ராஜாத்திக்கு அந்தக் காம்பினேஷனும் குல்ஜார் ஆட்டுக்கறி பொரியல் செய்திருந்த கைப்பக்குவமும் பிடித்து விட்டது. ராஜாத்தி என்னதான் முயன்று பார்த்தும் அந்தச் சுவை வராததால், வாராவாரம் அவர்கள் வீட்டிலிருந்து வரவழைத்துக் கொண்டாள்.
இங்கே ராஜேந்திரன் காணாததைக் கண்டவர் போல் மீன் பித்து கொண்டு விட்டார். அவர் சொந்த ஊரான சேலத்திலோ பிடிச்சு நாலு நாள் ஆன கடல் மீன் தான் ஐஸ் வைச்சு கிடைக்கும். அது அத்தனை சுவையாக இருக்காது. திருநெல்வேலியிலோ, மதுரையிலோ கடல் மீன் கிடைத்தாலும், ஆற்று மீனை விடச் சற்று விலை கூடுதலாகவே இருந்ததால், அங்கிருந்தவரை அந்தளவுக்கு நாட்டம் செல்லவில்லை. ஆனால் கடலூரிலோ கடல் மீன் விதவிதமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கிடைத்தது. சமயத்தில் பெரிய பெரிய மீன்களெல்லாம் துண்டு போட்டுக் கறி போல் கிடைத்தது. விடுவாரா ராஜேந்திரன். செவ்வாய், வெள்ளி, சனி தவிர மற்ற நான்கு நாட்களும் மீன் வாசனை அடித்துக் கொண்டேயிருந்தது. அது என்னவோ தெரியவில்லை குல்ஜாருக்கு ராஜாத்தி வைக்கும் மீன் குழம்பின் மீது அலாதி ஒட்டுதல். அப்புறமென்ன இங்கிருந்து மீன்குழம்பு செல்ல, அங்கிருந்து லெமன் சாதமும் பொரிச்ச கறியும் வந்து கொண்டிருந்தது.
இப்படியே சந்தோசமாக வாழ்க்கை போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்… என்ன செய்ய ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தூங்கி எழுந்த மணிக்கு ஒரு பக்கமாக கை கால்களை அசைக்கவே முடியவில்லை. வாய் கோணிக் கொண்டு விட்டது. பக்க வாதம்... வீட்டிலிருந்தவர்கள் எல்லோரும் மனசொடிந்து போய்விட்டார்கள். ராஜேந்திரன் தான் பம்பரமாகச் செயல்பட்டார் ஆபீசுக்குச் சொல்லி, ஜெயில் ஆம்புலன்ஸில் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார். ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் பெட்டில் இருக்கச் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் காலும் கையும் வாயும் இழுத்தது இழுத்ததுதான். எக்சைஸ் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவைகளைச் செய்யச் செய்ய ஓரளவுக்கு சரியாகும் என்றார்கள்.
ஆஸ்பத்திரியில் ஒரு மாதமும் குல்ஜார்தான் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டாள். அந்த ஒரு மாதமும் பர்வீனும், நஸீராவும் ராஜேந்திரன் வீட்டில் தான் இருந்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அனைவரும் ஜிப்மர் சென்று வந்தார்கள்.
ஆபீசில் உள்ளவர்களெல்லாம் ஜிப்மருக்கே வந்து பார்த்தார்கள். ஜெயில் சூப்ரெண்டு மணியின் வேலை மீது அலாதி ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர் ஆஸ்பத்திரிக்கே போன் செய்து சீஃப் டாக்டரிடம் பேசியதால் கொஞ்சம் கூடுதல் கவனிப்பும் கிடைத்தது.
இப்படிக் கூட இருந்தவர்களெல்லாம் ஆளாளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு உதவினாலும், மணி வகையிலோ குல்ஜார் வகையிலோ உறவினர்கள் என்று ஒருவரும் எட்டிக் கூட பார்க்கவுமில்லை, ஏன் என்று கேட்கவுமில்லை. உண்மையைச் சொல்லப் போனால் இதுபற்றி கேள்விப்பட்ட ஒரிருவர், சந்தோஷம்கூடப் பட்டார்களாம். எல்லாம் மத வெறி.
மணி திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர். குல்ஜார் முஸ்லீம். ஏற்கனவே குல்ஜாருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்தில் கடலுக்குப் போன அவள் புருஷன் வீடு திரும்பவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் வீட்டு வேலை செய்து பிழைக்க ஆரம்பித்தாள்.
மணிக்கு அப்போது தான் பேக்கர் கிளார்க்காக பாளையங்கோட்டை ஜெயிலில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் அப்பா அம்மா தம்பி தங்கை எல்லாம் கோவில்பட்டியில் குடி இருந்தார்கள். அதனால் அவர் பாளை மார்க்கெட் அருகிலேயே ஒரு வீட்டின் ஒற்றை மாடி அறையில் குடியேறினார். அதே வீட்டில் கீழ் போர்சனில் குடியிருந்தவர்கள் வீட்டில் தான் குல்ஜார் வேலை செய்தாள்.
திடீரென்று ஓட்டல் சாப்பாடு சாப்பிட ஆரம்பித்ததால் மணிக்கு வயிறு ஒத்துக் கொள்ளாமல் அல்சர் வந்துவிட்டது. டாக்டர் கட்டாயம் ஓட்டல் சாப்பாட்டை நிறுத்தச் சொல்லிவிட்டார். மணி வேறு வழியில்லாமல் சமையல் சாமானெல்லாம் வாங்கித் தானே சமையல் செய்ய ஆரம்பித்தார். வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும், பழக்கமில்லாததாலும், தினமும் எதையாவது ஒன்றுகிடக்க ஒன்று செய்து வைப்பார். ஒன்று தீயவைத்துவிடுவார். அல்லது வேகாமல் எடுத்துவிடுவார். இப்படி அவர் கஷ்டப்படுவதைப் பார்த்த கீழ் வீட்டுக்காரர்கள், குல்ஜாரையே அவருக்கும் சமையல் வேலைக்குப் பேசி விட்டனர். முதலில் குல்ஜாரின் சமையல் மணிக்குப் பிடித்துப் போனது, பின்னர் குல்ஜாரையே பிடித்துப் போனது.
அப்புறமென்ன, இரு பெண் குழந்தைகளுடன் குல்ஜாரை கைப்பிடித்தார் மணி. அவர் வீட்டாரும், குல்ஜார் வீட்டாரும், இருவரையும் வெட்டாத குறைதான். அதையும் செய்திருப்பார்கள், இரு பிஞ்சு குழந்தைகள் இருந்ததால், எங்கேயோ போய் எக்கேடும் கெட்டு ஒழியுங்கள் என்று விட்டு விட்டார்கள். அதனாலேயே மணி உடனேயே கடலூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் இங்கு வந்துவிட்டார். குல்ஜாரின் குழந்தைகளையேத் தன் குழந்தைகளாகப் பாவித்துக் கொண்டார். அதனால் தனக்கென வேறு குழந்தைகள் வேண்டாமென முடிவெடுத்து, சொல்லாமல் கொள்ளாமல் போய் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் கூட செய்து கொண்டு வந்துவிட்டார்.
இங்கே கடலூரில் யாருக்கும் இவரின் முழுக்கதையும் தெரியாது. குல்ஜாரும் மணியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். மணியுடன் ஒன்றாக வேளைக்குச் சேர்ந்ததால், ராஜேந்திரனுக்கு மட்டும் அவரின் முழுக்கதையும் தெரியும்.
பாளையங்கோட்டையில் மணியுடன் வேலைக்குச் சேர்ந்த ராஜேந்திரன் மூன்று வருடம் அங்கிருந்துவிட்டு, அடுத்த மூன்று வருடம் மதுரையிலும், நான்கு வருடம் சேலத்திலும் வேலை பார்த்துவிட்டு மீண்டும் பாளையங்கோட்டைக்கே வந்து மூன்றாண்டுகள் கழித்து இப்போது கடலூருக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்தார்.
ஆனால் மணி வீட்டுச் சொந்தங்களின் தொந்தரவு தாங்காமல் கடலூருக்கு வந்து ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. நல்ல வேலைக்காரர் என்பதால் அவரை அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்யாமல் வைத்திருந்தார்கள். மேலும் கடலூர் என்றாலே வேறு யாரும் டிரான்ஸ்பர் ஆகி அங்கு வரவேப் பயந்தார்கள். அந்த அளவுக்கு கொசு பயமும், யானைக்கால் வியாதி பயமும் இருந்தது.
ஆரம்பத்தில் மணிக்காக வீட்டில் சைவம் மட்டுமே சமைத்தார்கள். அப்புறம் குழந்தைகள் பெரிசாக பெரிசாக குல்ஜாருக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அசைவமும் சமைத்தார்கள். குழந்தைகளுக்கு ஊட்ட ஆரம்பித்தார் மணி. ஒவ்வொரு சமயம் குழந்தைகள் அவருக்கு ஊட்டி விட்டு விடும். முதலில் துப்பினார். பின்னர் வாசனைப் பழகிப் பழகி, அன்புக்கு அடிமையாகி, படிப்படியாக நாக்கும் அசைவத்திற்குப் பழகி விட்டது.
ஆறு மாதத்தில் மணி ஓரளவுக்கு இழுத்துக் கொண்ட வலது கையால் கையெழுத்து போடவும், கிறுக்கலுடனாவது எழுதவும் பழகியிருந்தார். எல்லாம் குல்ஜார் குடுத்த டிரெயினிங். என்ன செய்ய அவர் ஆபீஸ் போனால் தானே வீட்டில் வருமானம். மணி கொஞ்சம் தடித்த உருவமென்பதால் நடை தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் ராஜேந்திரன் தினமும் சைக்கிளில் ஆபீஸ் கொண்டு விடுவதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் நல்லவர்களுக்குத் தாங்கமுடியாத கஷ்டத்தைக் கொடுக்கும் ஆண்டவனே, ஒரு வேளை இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்து விட்டோமே என்று மனமிரங்கியோ என்னவோ, தெரிந்தோ தெரியாமலோ சில நல்லதுகளையும் செய்து விடுகிறான். அப்படித்தான் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை ராஜேந்திரன் வண்டிப்பாளையத்திலிருந்து மணியுடன் சைக்கிளில் அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு ஜெயில் மேட்டை ஏறிக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ஜெயில் சூப்பிரெண்டு அவர்களைப் பார்த்து விட்டார். அன்றைக்கு ரோல்கால் என்பதால் அவர் சீக்கிரமே வந்திருந்தார். அலுவலகம் சென்ற அவர், ஜெயிலுக்கு பால் கொண்டு வரும் வேனில் காலையில் மணியை ஏற்றி வரவும், மாலையில் அதே போல் பால் ஊற்றி விட்டு செல்லும் வேனில் கொண்டு போய் வீட்டில் விட்டு விடவும் ஏற்பாடு செய்தார். அட்கின்சன் என்ற அந்த அதிகாரி பாளையங்கோட்டையில் சூப்பிரெண்டாக இருந்த போதுதான் தான் மணியும் ராஜேந்திரனும் முதன்முதலாக வேளைக்குச் சேர்ந்தார்கள். அவர் வெள்ளைக்காரரென்றாலும், அதிகாரத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் செயலாற்றினார். கடவுள் என்று தனியாக வர வேண்டுமா என்ன?
தை மாதம் பிறந்ததும், ராஜாத்தி சைவம் என்பதால் மணி வீட்டிலிருந்து ஒரு மாதம் அசைவ சாப்பாடு வருவது நின்றிருந்தது. ராஜாத்தி வீட்டு வகையறாவினர், தைமாதம் பூசம் முடிந்த பிறகு அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து நடைப்பயணமாக பழனிக்குக் காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் காவடி ஒருநாள் மலையில் இரவு தங்கும். அப்போது அவர்கள் இனமான பருவதராஜகுலத்தவர் (மீனவர்) மட்டுமல்லாத பிற இனத்தவரும் அவர்களுடன் சேர்ந்து பழநி மலையில் இரவு தங்கலாம். வருடத்தில் அந்த ஒரு நாள் மட்டும் மலையில் இரவு தங்குவதற்கு அவர்கள் இனத்தாருக்கு மட்டும் அனுமதி உண்டு. அது பல நூற்றாண்டுகளாக வழி வழியாக நடந்து வருகிறது. இன்றளவும் அமலில் உள்ளது.
மலையில் தங்கும் போது அவர்களே பஞ்சாமிர்தம் பிசைந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். அதே போல் புடம் போட்ட சாண உருண்டைகளிலிருந்து அவர்களே திருநீறும் செய்து அதனை முருகனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அளிப்பார்கள். அவ்வாறு நடைப்பயணம் செல்பவர்கள் திரும்பி ஊர் வந்து சேரும் வரை அவ்வூர்க்காரர்கள் யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சுத்த பத்தமாக இருப்பார்கள். காவடியுடன், பஞ்சாமிர்தமும், திருநீறும் வந்து வீட்டில் வைத்து படைத்த பிறகுதான் அவர்கள் விரதம் முடிவுக்கு வரும்.
சனிக்கிழமை ராஜேந்திரனின் மாமியார் பழனி பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டு கடலூர் வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை டிபன் முடிந்ததும், ராஜாத்தி பஞ்சாமிர்தத்தை ஒரு புதிய எவர்சில்வர் டப்பாவில் போட்டுக் கொடுத்தாள். அப்படியேக் கொஞ்சம் அபிஷேகத் திருநீரையும் ஒரு பேப்பரில் கட்டிக் கொடுத்தாள். “மணி சார்கிட்ட மறக்காம திருநீற கையிலேயும் கால்லேயும் பூசிக்கச் சொல்லுங்க” என்று சொல்லியனுப்பினாள்.
ஆனால் மணி வீட்டுக்குப் போன ராஜேந்திரன் பஞ்சாமிருதத்தையும் திருநீரையும் கொடுத்ததுமே, குல்ஜார் அவர் சொல்லாமலேயே திருநீறு பொட்டலத்தைப் பிரித்து தன் கையால் திருநீறு எடுத்து மணியின் நெற்றியில் பட்டை அடித்ததோடு கைகளிலும் கால்களிலும் தடவி விட்டாள். பார்த்த ராஜேந்திரனுக்கு கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அதே நேரம் உள் ரூமிலிருந்து ரெட்டையரான நஸீராவும் பர்வீனும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு ஓடி வந்து, “அம்மா எனக்கு” “அம்மா எனக்கு” என்று போட்டி போட்டுக் கொண்டு நெற்றியைக் காட்டினார்கள். குல்ஜாரும் சிரித்துக் கொண்டே இருவர் நெற்றியிலும் திருநீறு இட்டு விட்டாள். ராஜேந்திரன் அதிசயமாய் பார்ப்பதைப் பார்த்த சின்ன சுட்டி பர்வீன், “என்ன மாமா அப்படிப் பார்க்கிறீங்க… அம்மாவுக்காக பர்தா, அப்பாவுக்காக திருநீறு அவ்ளோதான்” என்று சிரித்தபடி கூறிவிட்டு, அவள் அம்மாவிடம், “சீக்கிரம் பஞ்சாமிர்தத்தைக் குடும்மா” என்று நச்சரிக்கத் தொடங்கினாள். குல்ஜார் மூன்று பேருக்கும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தாள். மிச்சமிருந்ததை தான் சாப்பிடத் தொடங்கினாள். பர்வீன் தன் கிண்ணத்தைக் காலி செய்துவிட்டு மணியிடம் போய் கொஞ்சுபவள் போல அவர் கிண்ணத்தில் இருந்ததிலும் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு உள்ளே ஓடினாள்.
சிரித்து கொண்டே கிளம்பத் தயாரான ராஜேந்திரனிடம் குல்ஜார், “அண்ணாச்சி, பஞ்சாமிருதமெல்லாம் வந்திருச்சில்ல இன்னிக்காச்சும் மட்டன் சாப்பிடுவீங்கள்ள…” என்றாள். ராஜேந்திரன் தலையாட்டவே… ”மத்தியானம் நஸீரா கிட்ட மட்டன் கொடுத்து விடறேன்… உங்க வீட்ல என்ன இன்னிக்கும் எப்பயும் போல மீன்தானே” என்றாள். அதற்கும் தலையாட்டி விட்டு வெளியே வந்த ராஜேந்திரன் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்… லெமன் சாதத்திற்கும் பொரிச்ச கறிக்கும் என்ன ஒற்றுமையோ… மனதுக்கு பிடித்து விட்டால் எல்லாமே சுவையானது தான், இதில் உணவென்ன, மதமென்ன?