மாலை ஆறு மணி. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் வித்யா. வரும் வழியில் கோவிலில் ஒட்டியிருந்த அறிவிப்பு அவள் கண்களில் பட்டது. அதைப் பார்த்தவுடன் சீக்கிரம் போய்த் தன் மாமியாரை அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்த அந்நொடியில் அவள் கால்களை வீசி வேகமாக நடக்கத் தொடங்கினாள். வித்யா இருபத்தாறு வயதுக்குச் சொந்தக்காரி. தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவள். அனைவரையும் அனுசரித்துப் போகும் பண்புள்ளவள்.
மிகவும் களைத்துப்போய் வந்திருக்கும் மருமகளுக்குப் பரிவோடு காபி கலந்து கொடுத்தார் கெளரி அம்மாள். கணவனை இழந்த அவளின் ஒரே ஒரு ஆறுதல் அவளின் மகன் கிரி. எனவே மருமகளையும் மறு மகளாகவே நடத்தி வந்த அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. காபியைக் குடித்தவாறே, “அம்மா! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலில் திருச்சி கல்யாணராமன் பாரதக் கதையைச் சொல்றார். நீங்க சீக்கிரம் கிளம்புங்க! நான் சமையலைக் கவனிச்சுக்கறேன்”
“சரிம்மா! சாதம் வடிச்சு ஒரு ரசம் மட்டும் வை, போதும். தொட்டுக்க சிப்ஸ் இருக்கு” என்று கூறிவிட்டு உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டார் .
முகம், கை, கால் கழுவி சாமி விளக்கை ஏற்றினாள் வித்யா. பின் அரிசி களைந்து குக்கரை வைத்தாள். மிளகு, சீரகத்தைப் பொடி செய்து ஒரு ரஸத்தையும் வைத்தாள். அதற்குள் அவளது கணவன் கிரியும் வேலையை முடித்துக் கொண்டு வந்துவிடவே காபியோடு தன் கணவனை வரவேற்றாள். பின் ஹாலுக்கு வந்தவள் டிவியை இயக்க, ஒரு சகோதரி எளிய முறையில் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் மனம் லயிக்கதாவளாய் அங்கிருந்து எழுந்து தன் அலமாரியில் இருந்து தன் சிகப்பு வண்ண டயரியைப் புரட்டினாள். அப்போது அவளது பார்வை போன மாதம் 10ஆம் தேதியைச் சுற்றி வட்டம் போட்டிருந்ததில் பதிய ஓ! இன்று தேதி 30 ஆகிவிட்டதே! என்றவாறு தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன. யாருக்கும் தெரியாமல் மருத்துவரைப் பார்த்துவிட்டுத் தான் தாயாகும் நல்ல சேதியை உறுதிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள். தன் அருகே வாய் நிறைய சிரிப்பும், முகம் நிறைய மலர்ச்சியுமாய் நின்றவளைப் பார்த்து, “ஹாய்! வித்தூ குட்டி! என்னடா! இன்னிக்கு ஏக சந்தோஷமாய் இருக்கே! என்ன செய்தி?” என்று கண்களைக் குறும்புடன் சிமிட்டித் தன் மனைவியைத் தன் அருகே இழுத்துக் கொண்டான் கிரி.
வெட்கத்துடன் முகம் சிவக்க விஷயத்தைச் சொன்னதும் அவளை அப்படியே ஒரு சுழற்று சுழற்றி அவளது கன்னத்தில் தன் கன்னத்தைப் பதித்தான். அம்மா கிட்டே சொல்லிட்டியா? இல்லே! முதலில் உங்க கிட்டே சொல்லிட்டு என்று இழுத்தவளை மீண்டும் தன் அருகே இழுத்து முத்தமிட்டான்.
அம்மா! அம்மா! என்று கூவியவாறே கீழே இறங்க, அவனைத் தொடர்ந்து வித்யாவும் கீழே இறங்கினாள். விஷயத்தைக் கேட்ட கெளரி பரவசத்துடன் மருமகளை அணைத்துக் கொண்டாள். கொஞ்ச நாள் போகட்டும் அப்புறமா எல்லாருக்கும் சொல்லலாம். வித்யா அக்காவிற்கு மட்டும் இந்த சந்தோஷச் செய்தியைச் சொல்லிடு கிரி!
வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுத் தன் கணவனின் அருகில் அமர்ந்த வித்யா, “ஏங்க!” என்றாள். இனி நீ எதற்கும் ஏங்கக் கூடாது என்று அவளைத் தன் அருகில் ஆசையுடன் அணைத்தான். இது வேற ஏங்க! என்று புன்னகையுடன் நமக்கு முதலில் பிறக்கும் குழந்தை “பெண்ணா! பிள்ளையா! எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க! உங்க அம்மா மாதிரின்னா பிள்ளை. எங்க அம்மா மாதிரின்னா பொண்ணு இல்லையா?”
“அசடு! ஆணோ, பெண்ணோ! எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே கண்மணி. முதல் குழந்தையை நாம சந்தோஷமா வரவேற்போம். என்ன? இனிமே நீ இதைப் பற்றி கவலைப்படக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. தவிர என் குட்டி ராணிக்கு ஆகாது! ராணியா...? இல்லே இல்லே ராஜாவுக்கு ஆகாது, சரியா? நீ கவலைப்படாம நல்லா ஓய்வு எடு. என்று அவளை மென்மையாக வருடித் தந்து படுக்க வைத்தான். ஆனால் வித்யா அத்தோடு விட்டால்தானே! மெதுவாக மாமியார் அருகில் சென்று அத்தை என்றாள்.
மகாபாரதத்தைப் படித்துக் கொண்டிருந்த கெளரி, “என்னம்மா! உடம்பு சரியில்லையா?” என்று பரிவுடன் கேட்டாள்.
“உடம்புக்கு ஒண்ணுமில்லே அம்மா! மனசுதான்…” என்று இழுத்தாள்.
“அம்மா! எனக்கு என்ன குழந்தை பிறக்கும்?”
நம்ப கையிலே என்னம்மா இருக்கு! எல்லாம் பகவானோட சித்தப்படிதான் நடக்கும். நீ அதைப் பற்றி எல்லாம் மனசைப் போட்டு குழப்பிக்காதே! நல்ல சிந்தனைகளை மனசுலே வைத்துக் கொள். கடவுளையே எப்போவும் நினை. ஞானசம்பாந்தரோட நன்றுடையானை என்ற பதிகத்தை நீ தினம் சொல்லு. சுகப் பிரசவம் ஆகும். நேரமாச்சு! நீ போய் படுத்துக்கோ! காலைலே மெதுவா எழுந்திருந்தா போதும்” என்று அவளை அனுப்பி வைத்தார்.
வித்யா இதில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் கணவரிடம் இது பற்றியேப் பேசி வந்தாள். ஒரு நாள் கிரி அவளைத் தன் அருகில் அணைத்தவாறு ‘’என்ன! நீ! எப்போதுமே இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாய்! பிரபல டென்னீஸ் வீராங்கனை மார்ட்டினா நவரோத்லாவோட கோச் ஆணா இருந்து பெண்ணா மாறியவதான். நீ ஏன் ஆண் பெண் என்று மருகுகிறாய்! எனக்கு எந்தக் குழந்தையும் ஓகேதானு சொல்லிட்டேனே! நீ தான் எனக்கு முக்கியம். இனிமே இதைப் பற்றி நீ பேசக் கூடாது” என்று அவளது உதட்டைத் தன் உதடால் பூட்டி விட்டான்.
மாமியாரும், கணவரும் மாறி மாறி அவளைத் தாங்கினர். தன் தாய் இல்லையே என்ற குறை தெரியாமல் அவளைக் கெளரி அன்புடன் அரவணைத்து வந்தார். ஆனாலும் வித்யா நாளுக்கு நாள் இளைத்துப் போனாள். தன் வாய்க்குப் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் சமைக்கும் மாமியாரின் கரிசனத்தில் வித்யா கரைந்து போனாள்.
மாலை நேரம் ஆனதும் கிரியுடன் சேர்ந்து சற்று நடைப் பயிற்சி செய்து வந்தாள். எத்தனை கணவன்மார்கள் மனைவி தாய்மைப் பேற்றை அடைந்ததும் அவளுக்குத் துணையாக, இணையாக நடந்து வருவார்கள்? அந்த வகையில் தன் கணவன் தன்னுடன் நடக்கையில், தன் கணவனைக் காதல் பார்வை பார்த்து அவனைக் கணவனாகத் தந்த கடவுளுக்குத் தன் நன்றியைச் சொல்வாள்.
தனக்கு இத்தனை அதிர்ஷ்டமா! தாயே மறு பிறவி எடுத்தாற்போல் அருமையான மாமியார். பாசத்தைத் தவிர வேறு எதையுமே காட்டத் தெரியாத அன்புக் கணவர். இனி வேறென்ன வேண்டும் எனக்கு! என மனமுருகி இறைவனைத் தன் நன்றி மலர்களால் அர்ச்சிப்பாள்.
ஒருநாள் வித்யா இல்லாத நேரம். அம்மா என்று அழைத்தவாறு தன் அருகில் வந்த மகனைப் பார்வையாலேயே என்ன என்றார் கெளரி. அம்மா! வித்யா நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே போகிறாள். அவளுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசை போலிருக்கு. பொண்ணு பிறந்திட்டா அவ தாங்கமாட்டா போலிருக்கு. அதைத் தன் மனசிலேயே பூட்டி வைத்திருக்கிறாள் என்று நினைக்கிறேன்.
“ஆமாம் கிரி! இதைப் பற்றி நானே உன்னிடம் பேசலாம்” என்று இருந்தேன். “பாவம்டா! அவ! தாயில்லாக் குழந்தே! இந்த மாதிரி சமயத்திலே நாம தான் அவளிடம் அன்பா, அனுசரனையா நடந்துக்கணும்”
“அம்மா! உனக்குத் தான் அவ மேல எத்தனை பிரியம்! அவளும் உன் மேலே உசிரையே வச்சிருக்கா! ஒவ்வொருத்தர் வீட்டிலே மாமியார், மருமகள்னா ஏதோ ஜென்மப் பகையாளியா நெனச்சு வீட்டையே போர்க்களமா மாத்திடறா! ஆனா நீ இங்கே கோவிலா வைச்சுருக்கியே! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்ற தன் மகனைப் பார்த்து, “போதும்! போதும்! நிறுத்து” என்று சொல்லிச் சிரித்தார் கெளரி.
ஆ! இடுப்பில் என்ன! யாரோ சாட்டையால் அடிப்பது போல் பளீர் பளீர் என வலிக்கிறதே! அம்மா! என்று வலி பொறுக்காது துடித்தாள் வித்யா. வித்யா! இப்படி சாய்ந்து உட்கார்! கிரி! இடுப்பு வலி எடுத்தாச்சு. சீக்கிரம் ஒரு டாக்ஸியைக் கூப்பிடு. வர்ர வழியிலே வித்யாவோட அக்கா வசந்திக்கும் தகவல் சொல்லி அழைச்சிட்டு வந்திடு என மட மடவென உத்தரவுகளைப் பிறப்பித்தவர் தாயுமானவரே! நீ தான் தாயையும், குழந்தையையும் பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லியபடி சாமி அறையிலிருந்து விபூதியை எடுத்து வித்யாவின் நெற்றியில் இட்டார் கொல்லைப்புறம் சென்று ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து அவளின் தலையில் செருகி காப்பாக இட்டார்.
பின்பு ஏற்கனவே தயாராகத் தேவையானவற்றை எல்லாம் ஒரு கூடையில் வைத்திருந்ததை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டார். சூடாக ஹார்லிக்ஸ் கலந்து வித்யாவிற்குக் கொடுத்து அவளைத் தன் மடியில் சாய்த்து அவளது தலையை இதமாகக் கோதிவிட்டார். மேடிட்ட அவளின் வயிற்றைத் தடவியபடி, வித்யா! கவலையே படக்கூடாது. சமர்த்தா அழகா ஒரு தங்க விக்ரஹத்தைப் பெத்துக் கொடுப்பியாம் எங்கே! சிரி!
“அம்மா! என்று அவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு எனக்கு பயமா இருக்கு!” என்று கண்கள் கலங்க, அதைப் பார்த்த கெளரி, “என்ன வித்யா! அழக் கூடாது! இதோ! உன் அக்கா இப்போ வந்திடுவா! தைரியமா இரு!” என்று அவளை அணைத்துக் கொண்டார்.
“அம்மா” என்று வசந்தியுடன் கிரி உள்ளே நுழைந்தான். “வா! வசந்தி! நீ பெரியம்மா ஆகப்போறே! ” என்று முகம் மலர அவளை வரவேற்றார் கெளரி. மாமி! நீங்க எப்படி இருக்கேள்! எங்க வித்யா ரொம்ப வேலை வாங்கிட்டாளா! என்றவாறு தங்கையின் அருகில் வந்தாள்.
“அக்கா! வந்துட்டியா! எனக்குப் பொண்ணு… உஷ்! வித்யா! கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை ஏத்துக்கணும். அடடா! என்ன அழுகை! ம்.,. நீ தைரியசாலின்னு நான் நெனச்சேன். மேடையிலே ஏறி ஆணித்தராமா பேசி எதிரணியை நடுங்க வைக்கிற என் வித்துவா இப்படி.. அசடு.அசடு. எல்லாம் உன் மனசு போலத்தான் நடக்கும், வா! மெதுவா.. பாத்து” என்று அவளை டாக்ஸியில் ஏற்ற அது மருத்துவமனையை நோக்கி விரைந்தது.
வீட்டில் இருந்த கெளரி அம்மாளுக்கு இருப்பே கொள்ளவில்லை. பாலைக் காய்ச்சினாள். டிகாஷனைப் போட்டாள். வேலையில் அவரது மனம் பதியவே இல்லை. அன்று வித்யா பேசிய பேச்சே அவரது நினைவில் இருந்தது. அந்த காட்சி அவர் மனத்தில் தெரிய அந்த கனத்த நேரத்திலும் அவருக்கு சிரிப்புத்தான் வந்தது. இந்தப் பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறேனே! என்று தன்னையே சற்று நொந்தும் கொண்டார். ஆஸ்பத்திரியிலி இருந்து கிரி களைத்து வந்தான். டாக்டர் என்ன சொல்றார்? இன்னும் 2 மணி நேரத்திலே டெலிவரி ஆயிடும்னார். அம்மா! ப்ளீஸ்! சூடா காபி தாமா! தலை வலிக்கிறது. தனக்கு ஒரு டம்பளரும், கிரிக்கு இரு டம்பளருமாய் காபியைக் கலந்து கொண்டு வந்தார். பின் ஒரு ஃபிளாஸ்க்கில் காபி கலந்து வசந்திக்குக் கொடு என்று அவனை அனுப்பி வைத்தார்.
மனம் ஒரு நிலையில் இருக்க செளந்தர்ய லஹரியைச் சொல்லலானார். அம்மா! பொண்ணு பிறந்திருக்கு! என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டே கிரி நுழைந்தான். “எனக்கு ரொம்ம சந்தோஷம்மா! ஆனா வித்யாக்கு இன்னும் மயக்கம் தெளியலே! அதான் … சரி.சரி. எனக்கும் சந்தோஷம். நார்மல் டெலிவரிதானே! இரு ! நானும் வரேன்” என்று வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டார்.
வித்யாவின் பக்கத்தில் ரோஜாப்பூ நிறத்தில் குண்டு கன்னமும், தலை கொள்ளாத முடியுமாய்த் தங்க விக்ரஹம் போல் இருக்கும் குட்டி வித்யாவை வாரி அணைத்துக் கொண்டார். பின் மெதுவாக மருமகளைப் பார்த்தார்.
“என்ன ஆச்சர்யம்! லவலேசமும் வருத்தமே இவள் முகத்தில் இல்லையே! இத்தனை பூரிப்பு இவள் முகத்தில் ஏது? கடவுளே! ஒருவேளை தாய்மை தந்த பூரிப்பா! இல்லை... வேறு ஏதோ! தான் நினைத்ததைச் சாதித்ததைப் போல் ஒரு பூரிப்பை நான் இவளிடம் காண்கின்றேனே!”
“அம்மா! பொண்ணு பெத்துக் கொடுத்துட்டேன்னு வருத்தமா?”
“என்ன! வருத்தமா! எனக்கா! நல்லா இருக்கு போ... நீ வருத்தப்படுவியோன்னு நாங்க எல்லோரும் வேண்டாத தெய்வத்தை வேண்டிண்டு வந்தா நீ என்னவோ ஏதோ நினைச்சதை சாதித்த பெருமையிலே பூரிச்சுப் போயிருகே... எனக்கு ஒண்ணுமே புரியலே!”
“அம்மா! நம்ம நாட்டிலே பெண்களைத் தெய்வமா வழிபடறோம், அது மட்டுமா? நதிகளுக்கெல்லாம் பெண்கள் பேரை வைத்து ஓஹோன்னு கொண்டாடறோம். ஆனால், பெண் குழந்தை பிறந்தா மட்டும் குறைவா நெனைக்கிறோம். ஆரம்பத்திலேயே அதுக்கு சமாதியும் கட்டறோம் என்றவள் மேலே பேசமுடியாமல் தன் அக்காவைப் பார்க்க வசந்தி தொடர்ந்தாள். அதனால நாங்க இரண்டு பேரும் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டோம் நமக்கு முதல் குழந்தை பொண்ணாத்தான் பிறக்கணும். அதை ஓஹோன்னு எல்லோரும் ஆச்சரியப்படற அளவு வளர்க்கணும். பொண்ணுன்னு குறைஞ்சுக்கக் கூடாது. அதேபோல எனக்குப் பொண்ணு தான் பிறந்தது. எங்கே தனக்குப் பொண்ணு பிறக்காட்ட என்ன பண்றதுன்னு பயந்து, தவியா தவிச்சுப் போயிட்டா என்றவளை இடையில் கெளரி குறுக்கிட்டு, “அதுக்குத்தான் ஆரம்பத்திலே அவ்வளவு துடிதுடிச்சியா? நல்ல கூத்துதான்... விஷயத்தைப் பட்டுன்னு வெளியே சொல்லாம உள்ளுக்குள்ளே நீ மருக, நாங்க அதை வேறவிதமா நெனைக்க... அட, என் அசட்டு மருமகளே! இல்லே இல்லே சமத்தா நீ விரும்பின மாதிரி பெண்ணைப் பெத்த மகராசியே!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
தான் பெற்றெடுத்த சின்னப் பூவைப் பெருமிதத்துடன் பார்த்துப் புன்னகை பூக்கும் தன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்த கிரியை, “சரிதாண்டா! அப்புறமா ஆற அமர அவளை பார்க்கலாம்,வா! அவ நல்லா ஓய்வெடுக்கட்டும்” என்று சிரித்தபடி கெளரி சென்றார். கிரி தாயைத் தொடர்ந்த் சென்றான்.