தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மைதானத்தை அலங்கரித்த தேசியப்படை மாணவிகளின் அணிவகுப்பைத் தலைமையேற்று, மற்ற மாணவிகளும் அணிவகுப்பைத் தொடர்ந்தனர். கல்லூரி மைதானமே வண்ணமயமாகக் காட்சியளித்தது.
பன்னிரெண்டு துறை மாணவிகளும் ஒரு மாதகாலம் வெயிலையும் பொருட்படுத்தாது காலை தொடங்கி மாலை வரை அணிவகுப்பிற்கான பயிற்சியினை மேற்கொண்டனர்.
பயிற்சியில் இருக்கும் மாணவிகள் தவிர, மற்ற மாணவிகள் வகுப்பில் பாடத்தைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வகுப்பு நேரம் தவிர, இடைவேளை நேரத்தில் மாணவிகளின் அணிவகுப்புப் பயிற்சியை பார்த்தது, யாருக்கு முதல் பரிசு கிடைக்கும் என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள்.
ம்ம்... பன்னிரெண்டு துறையில யார் நல்லா செஞ்சாலும் செய்யாட்டியும் முதல்வருக்கு இங்கிலீஷ் டிபார்ட்மெண்டையும் மைக்ரோ பயாலஜியையும்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இதுல துணை முதல்வர் மைக்ரோ பயாலஜி கேட்கவா வேணும்.
திறமையாவே மத்த டிபார்ட்மென்ட் செஞ்சாலும் ஓர வஞ்சனைதான் காட்டுவாங்க. இது தெரியாமப் பாவம் இவங்க ரொம்ப சிரத்தையுடன் கஷ்டப்படுறாங்க.
இப்படிப் பேசிக்கொண்டாலும் தத்தம் துறைக்கு எப்படியும் பரிசு கிடைக்க வேண்டுமென வாஞ்சை இருந்தது.
எந்தத் துறை மிகச் சிறப்பாக அணிவகுப்பை மேற்கொள்ளுதோ, அந்தத் துறைக்குச் சிறப்பு அணிவகுப்புக்கான பரிசு வழங்கப்படும்.
முதல்வரின் இந்த அறிக்கையைத் துறைத்தலைவர்கள் மாணவிகளுக்கு அப்படியே ஓதினார்கள்.
வரலாற்றுத் துறைத்தலைவர் மட்டும் தம் மாணவிகளிடம், “மாணவிகளே! நம் துறை மாணவிகள் எல்லோரையும் சேர்த்து மொத்தமாகவே இருபத்து எட்டு பேருதான். இதுல பதினேழு பேர் அணிவகுப்புக்குப் போகணும். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவங்க பெயர் கொடுங்க” என்றார்.
துறைத்தலைவர் சொன்னவுடன் மூன்றாமாண்டு மாணவிகள், மேடம் ரெண்டு வருசமா நம்ம துறைக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, நம்ம துறை கண்டிப்பாக் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினால் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நம்ம துறையை ஒரு துறையாகவே மதிக்க மாட்டாங்க. நாங்க பாவம் மேடம்.
ரொம்ப ஏழ்மையில் உள்ள ஸ்டூடண்டும், ஆவலோடு கலந்துகிட்டு ஏமாற்றத்தைத்தான் சந்திக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த துறைத்தலைவர் மனதிலும் இந்தக் கருத்து இருந்தாலும், மாணவர்களிடம் சரிசரி விடுங்க. நாம விட்டுக் கொடுப்பதால்தான் மற்றவர்கள் வளர்கிறார்கள், அதோடு எல்லா நேரமும் நாம் பரிசு பெறவேண்டும் என்று எண்ணுவதும், கிடைக்காமல் போவதும் நிகழலாம் அல்லது கிடைக்கவும் செய்யலாம். எப்படியாயினும் நாம் நெஞ்சுரம் மிக்கவர்களாக விளங்க வேண்டும் மாணவிகளே.
இப்படிப் பல வலிகளையும் வேதனைகளையும் தாண்டி போராடுவதுதான் வாழ்க்கை. அதற்குக் கல்லூரியும் ஒரு களமாக இருக்கிறது.
இந்தத் துணிச்சலை மற்ற மாணவிகள் உணர்வதற்குக் காலமாகும். இதைப் புரிந்து கொண்ட பொருளாதார மாணவிகள் அணிவகுப்பு பயிற்சியில் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டு ஈடுபட்டனர்.
நாட்கள் போனதே தெரியவில்லை. மறுநாள் காலையில் ஆறு நாற்பதுக்கெல்லாம் மாணவிகள் மைதானத்தில் இருக்க வேண்டும்.
பேராசிரியர்கள் அனைவரும் அவங்க அவங்க துறையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அணிவகுப்பில் உள்ளவங்க பரிசு பெறும் மாணவிகள் தவிர, மற்ற எல்லோரும் பந்தலில் உட்கார வேண்டுமென்று கூறிய முதல்வரின் விழா பற்றிய அறிக்கை நீண்டது.
விடுதியில் தங்கியுள்ள பேராசிரியர்களின் தூக்கங்களை விளையாட்டு விழா வென்றது. விடிய விடியக் குளிப்பதும் மேக்கப் போடுவதும் அரங்கேறியது. அப்படி அரங்கேறிய அணிகள்தான் பல வண்ணங்களாக இன்று மைதானத்தில்...
தமிழ்த்துறையினரின் அணிவகுப்பு பற்றிய வர்ணணை மேலும் மெருகேற்றியது.
தேசிய மாணவப்படையின் காக்கி நிறத்தில் தொடங்கி ஊதாவாக, பச்சையாக, சிவப்பாக அடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அணியையும் அணித்தலைவியையும் பாராட்டிய வர்ணனையாளர்கள், இதோ கணிதத்துறையைத் தொடர்ந்து வீர வணக்கத்துடன் அணிவகுத்துக் கொண்டிருப்பவர்கள் பொருளாதாரத்துறை மாணவிகள். இத்துறையின் அணிவகுப்புத் தலைவி சஞ்சனா மாநில அளவில் கோகோ போட்டியில் வெற்றி பெற்றவர். ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றவள் என்ற வர்ணனையாளர்களின் வார்த்தைகளைத் தாண்டி மாணவிகளின் கைத்தட்டல் பெருமிதத்தையும் மகிழ்வையும் அத்துறைக்கு ஏற்படுத்தியது.
வண்ணமயமாக விளங்கிய மைதானத்தையும் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டது நிர்வாகம்.
மேலும் அன்றைய சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மாவட்ட வருவாய் அலுவலரும் அணிவகுப்பு மரொயாதையை ஏற்றுக்கொண்டார்.
மைதானத்தில் உள்ள மாணவிகளின் செயல்களில் கண்கள் பதிந்தாலும், அவருடைய காதுகளில் முதல்வர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
விளையாட்டு விழாவின் நாயகர், தாம் மட்டும்தான் என்பது போலவே நடந்து கொண்டார். சிறப்பு விருந்தினரைப் பொம்மை போலவே தலையாட்ட வைத்தார்.
அனைவரின் கவனத்திற்குச் சற்று நேரத்தில் சிறப்பு விருந்தினர் பரிசு வழங்க இருக்கிறார். பரிசு பெறும் மாணவிகள் அனைவரும் மேடைக்கு அருகில் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாணவிகள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தார்கள். முதலில் நானூறு மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி முகில், அவர்களைத் தொடர்ந்து மாணவி திவ்யா இப்படியேப் பரிசுப் பட்டியல் நீண்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் யாருக்கு என்ற ஆவல் ஒருபுறமிருக்க அடுத்து அணிவகுப்பிற்கான பரிசு அறிவிப்பு அரங்கேறியது.
முதல்வர் தமது பணியை இந்த முறையையும் சரியாகச் செய்துவிட்டதாக நினைத்தார்.
சிறப்பு விருந்தினர், “மாணவிகளே, நீங்கள் ஆவலுடன் அணிவகுப்பிற்கான ரிசல்ட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் தேர்வு செய்ய வேண்டிய பணியைச் சுலபமாக்கிக் கொடுத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இருந்தாலும் இத்தருணத்தில் அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவிகளுக்காகச் சில வார்த்தைகள் நீங்கள் அனைவரும் அணிவகுப்பில் நேர்த்தியான பங்களிப்பினைக் கொடுத்தீர்கள். இதற்காக நேரம் காலம் பாராமல் பயிற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்களின் உழைப்பும் எதிர்பார்ப்பும் பயனை ஈட்டித்தரும். இத்தகைய அழகான அணிவகுப்பினைக் காண்பதற்கும், உங்களின் திறமைகளுக்கான அங்கீகாரம் தருவதற்கும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு பரிசுகளை அறிவிக்கப் போகிறேன்” என்றார்.
மாணவிகளின் ஆர்வம் அதிகமானது. எந்தத் துறைக்கு முதலிடம், இரண்டாமிடம் என்ற ஆர்வத்தினை எதிர்பார்ப்போருக்கு சிறப்பு விருந்தினரின் அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்தது.
அனைவரின் திறமையை நிர்வாகமும், கல்லூரி முதல்வரும், போற்றும் வகையில் அணிவகுப்பில் கலந்து கொண்ட அனைத்துத் துறைகளுக்கும் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
நான் ஒரு மனதாக முடிவெடுத்தாலும் நிர்வாகமும் கல்லூரி முதல்வரும் அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் பரிசு அறிவிப்பில் மைதானமே கைதட்டலில் நிரம்பியது.
மேடையை விட்டு இறங்கும்போது முதல்வரின் தெரிவு செய்யும் பணியை மேடையிலேயே தொலைத்தவராக...