சனிக்கிழமை மதியம் சத்துணவை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கூட மைதானத்தில் பம்பரத்தைச் சுழற்றிவிட்டு எங்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தான் சத்தியலிங்கம். அவ்வப்பொழுது பம்பரத்தைத் தரையில் விடாமலே அவன் கைக்கு வரவைத்து உள்ளங்கையிலும் விட்டுக்காட்டுவான். என் கையிலும் சரவணனின் கையிலும் விடுவான். எங்களுக்கும் பம்பரத்தில் கயிற்றை எப்படிச் சுற்றுவது, எப்படித் தரையில் விடாமலே பம்பரத்தைக் கைக்கு இழுப்பது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ரொம்ப நேரமாக அதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தோம். அப்படி பம்பரத்தைச் சுற்றி, கைக்கு இழுக்கும் பொழுது, பம்பரம் கயிற்றில் இருந்து உருவிக் கொண்டு போய் பள்ளிகூடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலியில் பட்டு நின்றது. வேலி மேல் இருந்த ஓணான் ஒன்று துள்ளிக் குதித்து ஓடியது.
அதைப் பார்த்ததும் “டேய் நாம போன வாரம் பொதச்சி வச்ச ஓணானெல்லாம் காசு போட்டிருக்குமாடா?, வாங்கடா போய்ப் பாக்கலாம்” என்று கூறிக் கொண்டே பள்ளிக்கூடத் திண்ணை மேலிருந்து துள்ளிக் குதித்து, பள்ளிக்கூடத்தின் பின்புறம் ஓடினான் சரவணன்.
“அவங்க அவங்க பொதச்சி வச்சதே அவங்களேதா தோண்டனும். எவனாவது மாத்தித் தோண்டனிங்க, அப்புறம் உங்க எவகிட்டயுமே சேரமாட்ட” என்று சொல்லிக் கொண்டே சரவணனின் பின் தொடர்ந்தேன் மூச்சு வாங்கிக் கொண்டே.
ஓணானைப் புதைத்து வைத்த இடத்தில் அடையாளத்திற்காக அதன் மேல் கல்லையும் வைத்திருந்தோம். கல்லைத் தூக்கி எறிந்துவிட்டுக் குச்சியால் தோண்டினோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது எங்களுக்கு. புதைத்து வைத்த ஓணான் காசு போடவில்லை. எலும்புக்கூடாக மாறி இருந்தது. எலும்புக்கூடுகளை மீண்டும் இருந்த இடத்திலேயே மண்ணைப் போட்டு மூடிவிட்டு, சென்ற வாரம் ஓணானைப் பிடிக்கப் பயன்படுத்திய கண்ணிகள், நாங்கள் ஒளித்து வைத்த இடத்திலேயே இருக்கின்றதா என்று கள்ளிச்செடியை ஒதுக்கிப் பார்த்தான் சத்தியலிங்கம்.
மதிய வெயிலுக்குப் புங்கமர நிழலில் இளைப்பாருவதற்காகக் கட்டப்பட்டிருந்த மாட்டின் வால்முடிகளைப் பிடுங்கி திரித்த கண்ணிகள். நீளமான சோளத்தட்டின் நுணியில் கட்டப்பட்ட அக்கண்ணிகள், நாங்கள் வைத்த இடத்திலேயே இருந்ததன. ஓணான் எவ்வளவு உயரமான வேலி மேல் இருந்தாலும் இந்தப் பாசக்கயிற்றைக் கொண்டு அதன் கழுத்தில் மாட்டி இழுத்து விடுவோம். அவற்றைப் பார்த்ததும் மாட்டுக்காரி மாதம்மாளின் ஞாபகம் வந்துவிட்டது எனக்கு.
எங்களைப் பார்த்தவுடன் ஆவேசத்துடன் கையில் ஒரு குச்சியுடன் “ஏன்டா கொல்லையிலெ போனவங்களா, உங்கள மஞ்ச துணியில் பெரட்ட, பாம்பு கடிக்க, அரணாக்கயிற அறுக்க, இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு, மாட்டு வால மொட்டையா பண்ணிட்டானுங்க. சக்காளித்தி பெத்ததுங்க. இதுங்களுக்குச் சாவு கூட வரமாட்டேங்குதே. எமன் இதுங்களுக்கு எங்க பாசக்கயிறெ போட்டுனுகீறானோ தெரியிலியே” என்று வசைப் பாடிக் கொண்டே எங்களைத் துரத்தியக் காட்சி என் கண்ணில் அப்படியே இருந்தது.
நல்லவேளை போனவாரம் சனிக்கிழமை எங்களுக்கு நல்ல நாள். அவள் கையில் மாட்டவில்லை. மாட்டிடம் வாங்கிய உதையோடு தப்பித்தோம். கண்ணியைப் பத்திரமாகப் புதருக்குள் அவை இருந்த இடத்திலேயே மீண்டும் ஒளித்து வைத்துவிட்டுத் திருப்பினோம்.
திரும்பியவர்கள் கண்களில், பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள சாமை அறுவடை செய்துவிட்ட கொல்லையில் எக்கச்சக்கமான வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகளும் தும்பிகளும் தென்பட்டன. அவை கூட்டம் கூட்டமாக அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தவுடன் எங்கள் மனங்கள் பரவசம் அடைந்தன; இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன.
எங்களை அறியாமலே, தும்பிகள் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சாமைக் காட்டிற்கு ஓடினோம். தும்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் பறந்துக் கொண்டிருந்தன. பறந்துக் கொண்டிருந்த தும்பிகளைத் துரத்தியபடி நாங்கள் வட்டமடித்தோம். சாமை அறுத்து விடப்பட்ட மோட்டுகளும் முற்களும் எங்கள் பாதங்களைப் பதம் பார்த்தன. என் பாதத்திலும் முள் குத்தி இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. இரத்தம் வரும் இடங்களில் மண்ணைத் தெள்ளிப் போட்டுக் கொண்டேன். இருப்பினும் வலி வெடுக்வெடுக்கென என் தலைக்கு ஏறியது.
நான் உட்கார்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே ஒரு ஊசி தும்பி உட்காருவதைப் பார்த்தவுடன் எனக்கு மீண்டும் புத்துணர்ச்சி வந்தது. ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் ஒன்றாகச் சேர்த்து அந்த தும்பியைப் பிடிக்க முயற்சித்தேன். என் கை அதன் வாலருகே செல்லும் போது, அது பறந்து போய் பக்கத்தில் இருந்த குச்சி மேல் உட்கார்ந்து கொண்டது.
இந்தமுறை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று மெதுவாகக் காலை எடுத்து வைத்து அதன் அருகில் சென்றேன். அதன் அருகில் நெருங்க நெருங்க திடீர் என்று கரும்பச்சை நிறத்தில் பெரிய நீண்ட இறக்கையுடைய தும்பி வந்து அதே குச்சியின்மேல் உட்கார்ந்துக் கொண்டது.
அதைப் பிடிக்கும் முயற்சியில் நான் ஆயத்தமானேன். “டேய்..! திருமுருகா இருடா நீ அதைப் பிடிக்கமாட்ட..! அது கழுத தும்பிடா..! ரொம்ப நேக்கா பாத்துப் புடிக்கனும். இல்லனா ஓடிப்போயிரும். அது என்னை ரொம்ப நேரமா ஏமாத்துது”. சத்தியலிங்கத்தின் குரல் கேட்டு ஆடாமல் அசையாமல் நின்றுக் கொண்டேன்.
அதன் வாலருகில் மெதுவாகக் கையைக் கொண்டு போனான் சத்தியலிங்கம். அவன் பெருவிரலின் நகம் சற்று நீண்டு இருந்ததால் அவனை அறியாமலே அதன் வாலுக்கு தாங்கிவிட்டது. நகம்பட்டவுடன் அது பறந்துவிட்டது. நின்றவாறே, அது மீண்டும் எங்கு போய் உட்கருகிறது என்று இருவரும் கவனித்தோம். ஒரு வட்டம் அடித்துக் கொண்டு மீண்டும் அதே குச்சி மேல் வந்து உட்கார்ந்தது. எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இந்தமுறை எப்படியும் பிடித்துவிடலாம் என்று. கண் மூடி, கண் திறக்கும் நேரத்தில் அவன் விரல்களுக்கு இடையில் அதன் வால் அகப்பட்டுக் கொண்டது.
படபடவென அதன் கண்ணாடிப் போன்ற இறக்கையை அடித்துக் கொண்டே அவன் ஆள்காட்டி விரலைக் கரண்டியது. “ம்… மகனதே…. என்னையே கடிக்கிறியா…?!” என்று கூறிக்கொண்டே அதன் இறக்கைகளைச் சேர்த்து வலது கையின் விரலால் பிடித்துக் கொண்டான். “டேய்…! இங்க பாருங்கடா.., தும்பி பிய் பேண்டுருச்சி” என்று சொல்லிக் கொண்டே அவன் மூக்கருகில் விரலை வைத்து முகந்து பார்த்தான். மஞ்சள் நிறத்தில் பிசுபிசு என்று இருந்ததை.
எங்கள் மூக்கருகிலும் விரலை வைத்துக் காட்டினான். முகர்ந்து பார்த்தவாரே மீண்டும் பள்ளிக்கூடத் திண்ணைக்கு வந்தோம். சத்தியலிங்கம் மூன்று சிறு சிறு கற்களைக் கூடவே பொறுக்கி வந்தான்.
“இது உனக்கு, இது எனக்கு, அது சரவணனுக்கு” என்று கல்லைப் பிரித்துப் பள்ளிக்கூடத் திண்ணைமேல் முக்கோண வடிவில் வைத்துக் கொண்டோம். ஒவ்வொருத்தர் கல்லாகத் தும்பியை வைத்துத் தூக்க வைத்தோம். தும்பியின் இறக்கையைப் பிடித்துக்கொண்டு கற்களை அதன் கால்களால் தூக்க வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
முதலில் அவன் கல்லைத் தூக்க வைத்தான் சத்தியலிங்கம். அதன் கால்களால் கல்லைக் கவ்விப் பிடித்தவுடன் இறக்கையைப் பிடித்திருந்த கையை உயர்த்தினான். அது அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்தது. “அய்..யா…! நான் இந்த வருசம் பாஸ் பண்ணிடுவேன்” என்றான் சத்தியலிங்கம் மகிழ்ச்சிப் பொங்க. சரவணனின் கல்லையும் தூக்கியது. என் கல்லை அதனால் தூக்க முடியவில்லை. அவர்களின் கல்லை விட சற்று கனமாக இருந்ததால். “நீ இந்த வருசம் பெயிலுடா…! தும்பி உன் கல்லை தூக்க மாட்டேங்குது” என்று சொல்லி பல்லை இளித்தார்கள் இருவரும்.
“நான் இந்த விளையாட்டை ஒத்துக்க மாட்டேன். நான் இந்த விளையாட்டுக்கு வரமாட்டேன்” என்று பிணங்கிக் கொண்டேன்.
“சரி. இந்த விளையாட்டு வேணா. வேற விளையாட்டு விளையாடலாம் வாடா…” என்று என்னிடம் கெஞ்சினார்கள். சரி என்று ஒரு வழியாக ஒத்துக் கொண்டேன். பிறகு தும்பியின் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்டு ரொம்ப நேரம் விளையாடினோம் பொழுது சாயும் வரை.
வயக்காட்டு வேலைக்குப் போனவர்கள் ஊருக்குள் இட்டுகடை வழியாக வந்துக் கொண்டிருந்தார்கள். சரவணனின் அக்காவும் அம்மாவும் தலைமேல் மக்காரியுடன் வருவதைப் பார்த்தவுடன் “அய்…யா..! அம்மா வந்துருச்சே…!” என்று சொல்லிக் கொண்டே கன்றுகுட்டி போல அம்மாவை நோக்கி ஓடினான் சரவணன்.
அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமைக் காலையில் எங்களுக்கு முன் பள்ளிகூடத் திண்ணை மேல் உட்கார்ந்துக் கொண்டிருந்தான் சரவணன் கையில் பாலிதின் கவருடன்.
சத்தியலிங்கத்திற்குக் காட்டுவழி அத்துப்படி. விடுமுறை நாட்களில் அவன் அண்ணனுடன் காட்டுக்குச் சென்றிருக்கான் ஆடுமேய்க்க. எங்கள் ஊருக்கும் காட்டுக்கும் இரண்டு மைல்கள் தூரம் இருக்கும். அவனுடன் நாங்களும் ஓணி வழியாக நடந்தே சென்றோம் காட்டுக்கு. காட்டிற்குள் ஊஞ்ச மரங்களில் பொன்வண்டுகளைத் தேடித் தேடிப் பிடித்தோம்.
அழகழகான பொன்வண்டுகள். தங்கப் பொண்வண்டு, குதிரைப் பொன்வண்டு, கழுதைப் பொன்வண்டு என வண்ண வண்ணப் பொன் வண்டுகளைப் பிடித்தோம். அவற்றின் மீது கொண்ட அன்பால் அப்பொன்வண்டுகளுக்கு முத்தம் கொடுத்தோம். ஊஞ்ச இலைகளை உருவி அதற்கு உணவும் ஊட்டினோம். பிறகு நாங்கள் மூவரும் ஆளுக்கு மூன்று வீதம் பொன்வண்டுகளைப் பிரித்து எடுத்துக்கொண்டு இருட்டுவதற்குள் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
என்னிடம் இருந்த பாலிதின் கவருக்குள்ளும் தீப்பெட்டிக்குள்ளும் ஊஞ்ச இலையைப் போட்டு அதன் மேல் பொன்வண்டை வைத்து மூடி என் தலைமாட்டுக்கு அருகில் பத்திரமாக வைத்துப் படுத்துக் கொண்டேன் அன்று இரவு.
ஒரு பொன்வண்டு காட்டுப்பக்கம் பறந்து ஓடியது. நான் அதை மேலே பார்த்தபடியே துரத்திக் கொண்டு ஓடும் பொழுது காலுக்கு கல் இடித்து ஒரு குழியில் விழுந்துவிட்டேன். விழுந்தவுடன் திக்கென்று விழித்துக் கொண்டேன்.
பிறகு படுத்தவாறே பொன்வண்டுகள் வைத்த இடத்திலேயே இருக்கின்றதா என்று அரைத் தூக்கத்திலேயே கை வைத்துப் பார்த்தேன்; வைத்த இடத்திலேயே இருந்தன. மீண்டும் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டேன்.
“பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சி…திங்கள் கிழமையும் அதுவுமா இன்னும் தூங்குறா பாரு” என்று சொல்லிக் கொண்டே ஊதாங்குழலால் இரண்டு தட்டுத் தட்டினாள் என் அம்மா கோபமாக. நான் முணு முணுத்தவாறு கண்ணைத் தேய்த்துக்கொண்டே வீட்டிற்கு வெளியே சென்றேன்.
“பிறகு காலைக்கடனை முடித்து, பல் துலக்கி, குளித்து, வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு, புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வேகவேகமாகப் பள்ளிக்கூடம் நோக்கி ஓடினேன்.
ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளெல்லாம், திண்ணை மேல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த வாத்தியாரிடம் வீட்டுப்பாடம் காட்டிக் கொண்டிருந்தார்கள் வரிசையாக நின்றுகொண்டு.
மெதுவாகப் பூனைப் போல போய், வாத்தியார் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, அவர் ஏமாந்த நேரம் பார்த்து, அந்த வரிசையில் நானும் நின்றுகொண்டேன். எனக்கு முன் சத்தியலிங்கமும் சரவணனும் நின்று கொண்டிருந்தார்கள்.
சத்தியலிங்கம் வீட்டுப் பாடத்தைக் காட்டிவிட்டு உட்கார்ந்துக்கொ ண்டான். நாங்கள் இருவரும் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை; மாட்டிக் கொண்டோம். எங்களை முட்டிப்போட்டு உட்காரச் சொல்லிவிட்டார் வாத்தியார்.
“மலர்விழி..!, நீ பெருக்கல் வாய்ப்பாடு பத்துல இருந்து பதினாறாவது வாய்ப்பாடு வரைக்கும் சொல்லு. இவ சொல்லி முடிக்கிற வரைக்கும் அப்படியே ஆடாம அசையாம இருக்கனும். இவ சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லுங்க. எவனாவது குறும்பு கிறும்பு பண்ணீங்க, தோல உறுச்சி தொங்கப் போட்டுறுவேன். என்று சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார் வாத்தியார்.
“ஓர் பைத் பைத்தே
ஈர் பைத் இருபதே
மூ பைத் முப்பதே”
என்று மலர்விழி சொல்லச் சொல்ல அனைவரும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவள் சொல்வதை அசைப்போட்டுக் கொண்டிருந்தன என் உதடுகள்.
பொன்வண்டின் பின் கால் ஒன்றை ஒடித்து, அருகம்புல்லின் வேரை இரண்டாக மடித்து அதன் காலில் சொருகி, வேர் உருவாமல் இருப்பதற்காக அதன்மேல் ஒரு முள்ளைச் சொருகி அதைக் குச்சியில் கோர்த்து, இரண்டு கைகளாலும் பிடித்து சுற்றிக் கொண்டிருந்ததை இரசித்துக் கொண்டிருந்தது எனது மனம். அன்று முழுவதும் நான் என்னுடைய கனவுலகத்திலேயே இருந்தேன். லாங்பெல் அடித்தவுடன், பள்ளிக்கூடக் கதவில் முட்டி மோதிக்கொண்டு தலைத்தெறிக்க ஓடினார்கள் மாணவ மாணவிகள்.
நான் வீட்டிற்குச் சென்று ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு, பொன்வண்டுகளின் இரவு உணவிற்காக துரிஞ்சித் தழை பிடுங்குவதற்காகப் பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள கொல்லையின் வரப்பில் இருந்த துரிஞ்சிச் செடியில் உருவிக் கொண்டிருந்தேன் வேக வேகமாக. சிறிது நேரத்தில் சத்தியலிங்கமும் சரவணனும் வந்துச் சேர்ந்தார்கள்.
சத்தியலிங்கம் கையை நன்றாக உள்ளே புதருக்குள் விட்டு நல்ல செருக்கான துரிஞ்சித் தழைகளை உருவினான். திடீர் என்று “அய்யோ… பாம்பு…! பாம்பு..!” என்று அலறிக்கொண்டு புதரிலிருந்து கையை இழுத்தான். சரவணன் பயத்தில் காலோடு மூத்திரம் விட்டுவிட்டான். நான் ஊருக்குள் வேகமாக ஓடிச் சென்று சத்தியலிங்கம் அப்பாவிடம் சொன்னேன்.
அவர் ஓடி வந்து, அவனைத் தூக்கிக் கொண்டு போய், எங்கள் ஊர் நாட்டு வைத்தியரிடம் காட்டினார். அவர் பாம்பு கடித்த இடத்தில் பல் வரிசையைப் பார்த்து “இது பயப்படறதுக்கு ஒன்னுமில்லெ. பச்சப் பாம்புதான் கடிச்சிருக்கு சூரணம் சாப்பிட்டா சரியாகிவிடும்” என்றார். பிறகு கடித்த இடத்தை லேசாக பிளேடால் கீறி ஒரு சிறிய குழல் வைத்து இரத்ததை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாரும் கூடிவிட்டார்கள்! என் அப்பாவும் அங்கு வந்து விட்டார்.
“வாப்பா… ராமசாமி. உங்க பையனோட சேந்து காடுமேடெல்லாம் சுத்தினதால்தான் என் பையனுக்கு இந்த கதி வந்திருக்கு” என்று என் அப்பாவைப் பார்த்து கோபத்துடன் சொன்னார் சத்தியலிங்கத்தின் அப்பா. குடிபோதையில் இருந்த அவர் கண்களும் நன்றாகச் சிவந்திருந்தது.
அவர் சொல்லச் சொல்ல என் குடுமி என் அப்பாவின் கையில் மாட்டிக்கொண்டது. வீடுவரை இழுத்துச் சென்று, வீட்டுக் கூரையில் சொருகி வைத்திருந்த சாட்டைக்கோலை உருவி எடுத்து வெளு வெளு என, அவர் கோபம் தீரும் வரை வெளுத்தார். என் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த என் அம்மா, அப்பாவிடம் இருந்த சாட்டைக்கோலைப் பிடுங்கிக் கொண்டாள். என் குடுமியை ஒரு வழியாக அவர் கையில் இருந்து விடுவித்தாள். அம்மாவின் கண் கலங்கியது, என் கண்ணிரைப் பார்த்து.
“பையனாடி பெத்து வச்சிருக்க. தறுதல…தறுதல. போய் ஒழுங்கா படிச்சிட்டு வாடான்னா.. இவன் என்னடான்னா… கண்ட கண்ட பசங்களோட சேந்து குருவி பிடிக்கிறது, குளவி பிடிக்கிறது, ஒடக்கான் பிடிக்கிறது…! இதுவாடி படிக்கிற பசங்களோட லட்சணம்…? இவனெல்லாம் உருப்பட மாட்டான்…! நாட்டாராட்டும் நாமளும் இவன ஆடு மாடு மேய்க்க அனுப்புனாத்தான்டி மாப்பிளைக்குத் தெரியும். பொனாய்ல கூழ எடுத்துட்டு, கோவணத்தோடு காடுமேடெல்லாம் அலஞ்சி திரிஞ்சாதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்”
“போதும் போதும் எம் பைய என்ன ஊருல உலகத்துல செய்யாத தப்பெ செஞ்ச மாதிரி..! இதப் புடிங்க என்று ஒரு சொம்பை நீட்டினாள் அம்மா” மொட மொடன்னு ஒரு சொம்பு தண்ணீரைக் குடித்ததும், உச்சந்தலைக்கு ஏரிய சூடு குறைந்தது அப்பாவுக்கு. சற்று நேரம் அமைதியாகக் காணப்பட்டார்.
“இன்னொரு முறை யவனோடையாவது சேந்து சுத்தரத பாத்தே…அன்னைக்கே உன்னெ காட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பிடுவ…” என்று என்னை எச்சரித்து விட்டு தென்னந்தோப்புக்குச் சென்றுவிட்டார்.
வீட்டு மூலையில் உட்கார்ந்து அழுதுக்கொண்டே இருந்தேன். அம்மாவின் கெஞ்சலுக்கும் நான் மசியவில்லை. இரவு உணவு சாப்பிடாமலே தூங்கிவிட்டேன்.
அப்பா கள்ளைக் குடித்துவிட்டு வந்து போதையில் மீண்டும் ஏதோ உளறினார். அரைக்குறை தூக்கத்தில் இருந்த நான் அதைக் கேட்டுப் படுக்கையலேயே ஒண்ணுக்கு இருந்துவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் லேசாக நொண்டியடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்தின் வாசற்படியின் முன் நின்றேன்.
“என்னடா லேட்டு..?” என்று கேட்டார் வாத்தியார்.
நான் எதும் சொல்லாமல் நின்றேன்.
“சரி… சரி.. திருதிருன்னு முழிக்காத .. போய் உக்காரு” என்றார் வாத்தியார்.
சரவணன் கொஞ்சம் நகர்ந்து அவனுக்கு அருகில் எனக்கு இடம் விட்டான். சப்பனங்கால் போட்டு உக்கார முயற்சித்தேன், முடியவில்லை. இரண்டு கால்களின் மடிப்பிலும் சாட்டைக்கோல் பதம் பார்த்து இருந்தது. சிரமப்பட்டு காலை சற்று நீட்டியவாறே உட்கார்ந்துக்கொண்டேன்.
சரவணனின் புறங்கைகள் வீங்கி இருந்தன. கண்ணத்திலும் முதுகிலும் அவன் அம்மாவின் கைவிரல்கள் பதிந்திருந்தன. சட்டையைக் கழட்டி காட்டினான் கண்ணீரோடு..!
சத்தியலிங்கம், அந்த வாரம் முழுவதும் பள்ளிக்கூடம் வரவில்லை. ஒருவாரம் கழித்து காலை நேரம், நான் பள்ளிக்கூடம் போகும்போது, அவன் ஆடு ஓட்டிக்கொண்டு போவதைப் பார்த்தேன்.
“சத்தியலிங்கம்… ! சத்தியலிங்கம்..!” என்று கூப்பிட்டேன். அவன் என் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
“சத்தியலிங்கம்.. ! நீ ஸ்கூலுக்கு வரமாட்டியா..?”
”ஊ..கும்..” என்று தலையை ஆட்டி “வரமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே ஆடுகளைக் காட்டை நோக்கி ஓட்டிச் சென்றான்.
என் கண்களிலும் கண்ணீர்..! அவன் கண்களிலும் கண்ணீர்..! அவன் என் கண்களிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
பள்ளிக்கூடத்தின் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், வேகவேகமாகப் பள்ளிக்கூடத்தை நோக்கி நான் ஓடத் தொடங்கினேன்.
அந்த நாள் முதல் எங்கள் இருவரின் வாழ்க்கைப் பயணத்தின் பாதைகள் வெறு வேறு திசைகளாக மாறிப் போயிற்று.