அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள்.
நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க, அத்தை தயங்கினாள்.
என்ன அத்தை என்றேன்.
"திங்கள் கிழமையில்ல இன்னைக்கு" என்றாள்.
"அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். நீங்க போயிட்டு வாங்க" என்றேன்.
"இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?"
"ராவுகாலமா இன்னைக்கெங்க, அதலாம் நேத்துதான் இன்னைக்கு செவ்வாய்க் கிழமை அத்தை"
"செவ்வாயா? ஐயோ காலையில கோவிலுக்கு போகலையே குமுதா?"
"அதலாம் சாந்திரம் போய்க்கலாம் அத்தை உங்களுக்கு நேரமாச்சி புறப்படுங்க" என்றேன்.
அவள், சற்று தயங்கிவிட்டு, "சரி சரி, போகுமிடம் எப்படி இருக்குமோ என்று புலம்பிக் கொண்டே குளியலறைக்குள் போக...
என் கையிலிருந்த - அவள் வாடிக்கையாகத் தேநீர் அருந்தும் பழைய கண்ணாடிக் குவளை ஒன்று தவறி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.
க்லீங்........... எனும் சப்தம் குளியலறைக்குள் கேட்டு விட்டது போல் அத்தை அவசர அவசரமாக காலில் நீர் ஊற்றிக் கொண்டு வெளியே வருவதற்குள் - நான் மொத்த கண்ணாடி சில்லுகளையும் சட்டென பொருக்கி மறைத்துவிட -
அத்தை கதவு திறக்கும் முன்பாகவே, "என்னாடி...... என்ன கண்ணாடியா ஒடைஞ்சிது, ஐயோ நல்ல காரியத்துக்கு போறேனே" என்று புலம்பிக் கொண்டே வெளியே வர...
"அட நீ வேற அத்தை; அது டிவில கதை போவுது, அதோட சத்தம், நீ போ உனக்கு நேரம் ஆச்சி பாரு -நல்லகாலம் முடிஞ்சிடும்" என்று சொல்ல
அவள் 'அப்படியா - நான் பயந்தே போனேண்டி' என்றொரு ராகத்தை இழுத்து விட்டுப் போனாள்.
வருகையில் வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு வந்தாள்.
”என்ன அத்தை” என்றேன், "நல்ல சகுனம்டி போனது நான் நினைத்ததை விட - இரண்டு மடங்கு விலைக்குப் போச்சு"
”அப்படியா! இரு” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே உள்ளே போனேன். அத்தைக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
"ஏன்டி குமுதா.., இன்னைக்கு திங்கள் கிழமையாமே, பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்குடம் போச்சே" என்றாள்.
”அப்படியா அத்தை...?" என்று நான் ஒன்றும் தெரியாதவள் போல் அங்கிருந்து நகர,
"ஆமாம், என்னத்த சகுனம், பெரிய சகுனம்; மண்ணாங்கட்டி சகுனம். எது நடக்கனுமோ; அதுதான் நடக்குது, இப்பல்லாம் எனக்கு நம்பிக்கையே போச்சு குமுதா" என்று சொல்லிக் கொண்டே தேநீர் கேட்டாள் அத்தை.
எனக்கு ஆச்சர்யம் ஒரு புறம், இப்பொழுது அந்த பழைய கண்ணாடி குவளைக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஒரு புறமிருக்க, அதை வெளிக் காட்டிக் கொள்ளாதவளைப் போல உள்ளே போனேன்.
தேநிரிட்டு வேறு புதிய குவளை ஒன்றில் ஊற்றி அவளிடம் கொண்டுபோய் மிக இயல்பாக இருப்பது போல் கொடுத்தேன்.
அவள் அந்த புதிய குவளையை பார்த்தாள்.
எங்கு தூக்கி அடித்துவிட்டு, போ, போய் அதில் பழைய குவளையில் கொண்டு வா என்பாளோ என்றொரு படபடப்பு எனக்கு. ஆனால், இன்று அவள் அந்த பழைய கண்ணாடி குவளையை என்னானதென்று கூட கேட்கவில்லை, நானும் அது காலையில் தானே உடைந்ததென்று சொல்லவுமில்லை.
உள்ளே சென்று புதிய குவளையை கழுவி வைத்துவிட்டு மறைத்து வைத்திருந்த அந்த உடைந்த கண்ணாடி சில்லுகளை எடுத்துப் பார்த்தேன். அதில், அவளின் மூடத்தனமும் கொஞ்சம், உடைந்து விழப்பட்டிருந்தது.
வாரிக் கொண்டுபோய் அவைகளை தெருவில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன்.
எறிந்துவிட்டு திரும்பினால், அத்தை வாசலில் நின்றிருந்தாள். திடுக்கிட்டுப் போனேன்.
அவள், வாசலிலிருந்து ஒருபடி வெளியே வந்து, இலேசாக எனைப் பார்த்து புன்னகைத்தவாறு, “இந்தா இதையும் சேர்த்து எறிந்துவிடு” என்று சொல்லி ராகுகாலம் குறிக்கப் பட்ட அந்த நாள்காட்டியையும் கொடுத்தாள்.
காலம் கண்மூடிக் கொண்டே இருப்பதில்லை. ஒருநாள் எல்லோரின் அறிவையும் சேர்த்துக் கொண்டு காலமும் விழித்துக் கொள்ளத்தான் போகிறது.
அன்று, ஏதேதோ சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி மன உளைச்சலுற வைத்து வாழ்வின் வெற்றிக்கான நேரங்களையும் வாய்ப்புகளையும் வீணே தொலைத்துக் கொண்டிருந்தமையின் வருத்தம் குறித்தும் நாளைய நாள்காட்டிகளின் பின்பக்கத்தில் எழுதப் படலாம்.