சூரியன் ஏன் வெப்பத்தக் கொட்டி எல்லாரையும் வாட்டி வதைக்கிறான்... தெரியுமா...? அதேமாதிரி சந்திரன்... நிலா ஏன் குளிர்ச்சியா இருக்கறான்... தெரியுமா...? அதுக்கும் ஒரு நாட்டுப்புறக் கதையொண்ணு வழக்கத்தில இருக்கிறது. அதக்கேட்டா எல்லாருமே ஆச்சரியப்படுவாங்க... இந்தக் கதை புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகளில் ஒன்றாக இருக்கிறது.
கதையைத் தெரிஞ்சுக்குவோமா...?
ஒரு ஊர்ல ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ஒளவையாருன்னு பேரு. அவங்களுக்கு ரெண்டு பசங்க. அந்த ரெண்டு பசங்களுக்கும் அப்பா இல்லை. அவங்க அம்மா ரெண்டு பசங்களையும் நல்லா அன்போடு வளர்த்தாங்க. அதிலே மூத்தவன் பேரு சூரியன்; சின்னவன் பேரு சந்திரன். காட்டு வேலைகளுக்குப் போயி கஷ்டம்னா என்னான்னு கூடத் தெரியாதது மாதிரி அந்தப் பசங்கள அந்தம்மா வளர்த்தாங்க.
அந்தப் பசங்களும் அவங்க அம்மா மேல அப்படியொரு பாசம் வச்சிருந்தாங்க. மூத்த பையனைக் காட்டிலும் இளைய பையன் கொஞ்ச நோஞ்சானா இருக்கறதால அந்தப் பையனை அந்த அம்மா கொஞ்சம் அதிகமாகக் கவனிச்சிக்கிட்டாங்க... இருந்தாலும், ரெண்டு பசங்களும் அம்மாமேல ரெம்ப உசுரா இருந்தாங்க.
இப்படி இருக்கறபோது ஒருநாள் ஒளவையாரம்மாவுக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. அவங்களால வேலைக்குப் போக முடியல. இந்தப் பசங்க ரெண்டுபேரும் வைத்தியருக்கிட்ட மருந்து வாங்கிக் கொடுத்து அந்தம்மாவை நல்லாப் பாத்துக்கிட்டாங்க... அவங்க வேலைக்குப் போக முடியாதனால வீட்டுல யாருக்கும் சாப்பாடு இல்லாமப் போயிருச்சு.
அப்பப் பாத்து அந்த ஊருல கோயில்ல ஊருக்காரவுக எல்லாரும் சேர்ந்து எல்லாருக்கும் அன்னதானம் செஞ்சாங்க. இந்தப் பயலுக ரெண்டுபேரும் அந்த விருந்துக்குப் போயி சாப்புட்டுட்டு அம்மாவுக்கும் சாப்பாட்ட வாங்கிக்கிட்டு வரலாம்ணு நெனச்சு அவங்க அம்மாகிட்ட கேட்டாங்க...
அவங்க அம்மாவும் சரி போயிட்டு வாங்கடான்னு அனுப்புனாங்க... ரெண்டுபேரும் விருந்து நடக்கிற இடத்துக்குப் போயிச் சாப்புட்டாங்க... கூட்டமான கூட்டம். விலகக் கூட முடியல... இருந்தாலும், இந்தப் பயலுக ரெண்டுபேரும் முண்டியடிச்சுக்கிட்டுப் போயி எடத்தப் புடிச்சுச் சாப்புட ஆரம்பிச்சாங்க...
மூத்தவனுக்குப் பசி அதிகமா இருந்ததால அவன்பாட்டுக்குச் சாப்பிட்டுக்கிட்டே இருந்தான். சந்திரனும் சாப்புட்டான். ஆனா அம்மாவுக்கு எப்படியாவது யாருக்கும் தெரியாம சோறு கொண்டுபோயிக் கொடுக்கணும்னு நெனச்சிக்கிட்டே சாப்புட்டான். எல்லாரும் அவனக் கவனிக்காதபோது அவன் தன்னோட நெகக் கண்ணுல சோத்தையும் வெஞ்சனத்தையும் கொழம்பையும் மறைச்சி எடுத்துக்கிட்டு வந்தான்.
ரெண்டுபேரும் வேக வேகமா வீட்டுக்கு வந்தாங்க. அவங்க அம்மா, என்னப்பா ரெண்டு பசங்களும் நல்லாச் சாப்புட்டுப் பசியாறினீங்களான்னு கேட்டாங்க.
அவனுகளும் சாப்பிட்டோம்னு சொன்னானுங்க. அப்ப அந்த அம்மா, “ஏம்பா அம்மாவுக்குக் கொண்டுக்கிட்டு வந்துருக்கீகளா...?” அப்படீன்னு கேட்டாங்க.
அப்பத்தான் சூரியனுக்கு, அடடா நாம அம்மாவுக்குச் சோறு கொண்டுக்கிட்டு வர மறந்துட்டமேன்னு தெரிஞ்சது. அவன் அம்மாவப் பாத்து, “அம்மா நா ரெம்பப் பசியெடுத்ததால சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன். அதுல ஒனக்கு எடுத்துக்கிட்டு வரணுங்கறதையே மறந்துட்டேன்” அப்படீன்னு சொல்லிட்டு தலையைக் குனிஞ்சிக்கிட்டான்.
சந்திரனப் பாத்த ஒளவையாரம்மா, பெரியவனே மறந்துட்டு வந்துட்டான்... சின்னவனும் பசியில மறந்துருப்பான்னு நெனச்சிக்கிட்டாங்க... ஆனா, சந்திரன் அம்மாவப் பாத்து, “அம்மா நா ஒனக்குச் சோறு வெஞ்சனம் எல்லாம் கொண்டுக்கிட்டு வந்துருக்கேன். நீ சாப்புடும்மான்னு” சொன்னான்.
“எங்கேடா சாப்பாடுன்னு” மறுபடி அவனப் பாத்து அந்த அம்மா கேட்டாங்க…
அதுக்குச் சந்திரன் தன்னோட நெகக் கண்ண கொஞ்சம் அழுத்துனான் சோறு குழம்பு, வெஞ்சனம் எல்லாம் வந்துருச்சு. அந்த அம்மா நல்லாச் சாப்புட்டுப் பசியாருண்ணாங்க. இருந்தாலும், அவங்களுக்கு மனசுக்குள்ளாற ஒரு உறுத்தல். இந்தப் பெரிய பய இப்படி நம்மளப் பத்தி நெனக்கலையேன்னு. அந்த உறுத்தல்ல அவங்களுக்குக் கோவம் வரவே, “டே பெரியவனே, சூரியா நீ என்ன மறந்துட்டு ஓ வயிறமட்டும் பாத்துக்கிட்டே. என்னோட வயிறு எரிஞ்சது மாதிரி நீயும் எரிஞ்சே போ” அப்படீன்னு சாபம் கொடுத்துட்டாங்க.
சந்திரனப் பாத்து, “நீ எனக்குச் சாப்பாடக் கொண்டுவந்து கொடுத்து என்னோட வயிறக் குளிர வச்சதால நீ எப்பவும் குளிர்ச்சியாவே இருப்பே” அப்படீன்னு வரங் கொடுத்தாங்க.
இதனாலதான சூரியன் கடுமையா எரிஞ்சி மத்தவங்களக் கொடுமைப்படுத்துறான். சந்திரன் குளிர்ச்சியா இருந்து எல்லாருக்கும் மகிழ்ச்சியக் கொடுக்கறான்.