கோழி எதுக்குக் குப்பையக் கிளறுது? கோழிக் குஞ்ச தூக்கிட்டுப் போறதுக்குக் காகம் ரெடியா இருக்கே ஏன்? பருந்து காகத்தை மட்டுமே கொத்திக் கொத்தி விரட்டுதே ஏன்? இதப்பத்தி இந்த வட்டாரத்துல ஒரு நாட்டுப்புறக் கதையொண்ணு வழங்கப்பட்டு வருது.
இறைவன் எல்லா உயிர்களையும் படைச்சு அததுக்குத் தக்கவாறு வலிமையையும் கொடுத்தாரு. பறவைகளைப் படைச்சு அதுகளுக்கெல்லாம் கருடன் அப்படீங்கற கிருஷ்ணப்பருந்த தலைவனா ஆக்குனாரு. கடவுள் பறவைகளைப் படைச்ச போது அதுகளுக்கு பறக்கறதுக்கு ரெக்கையைக் கொடுக்கல. அதுனால எல்லாப் பறவைகளும் நடந்துகிட்டும் ஓடிக்கிட்டுமா இருந்ததுக.
பறவைகளுக்குத் தலைவனாக்கிய கடவுளுக்கு நன்றி சொன்ன கிருஷ்ணப் பருந்து கடவுளுக்கிட்ட தங்களோட இனத்துக்குப் பறக்கறதுக்கு ரெக்கையக் கொடுங்க அப்படீன்னு கேட்டது. கடவுளும் “சரி தற்றேன்னு” சொல்லிட்டு ஒரு தங்க ஊசிய எடுத்துக் கொடுத்து “இதைவச்சு ரெக்கையத் தச்சுப் பறங்க. ஆனா இந்த ஊசியப் பத்திரமா எனக்கிட்ட நீ திருப்பித் தந்துடணும்” என்று சொன்னாரு.
கடவுளுக்கிட்ட இருந்து ஊசிய வாங்குன கருப்பருந்துக்கு ரொம்ப சந்தோஷம். ஊசியவச்சி தனக்கு ரெக்கையத் தச்சிக்கிடுச்சு. ரெக்கை வந்தவுடனேயே அத அடிச்சிக்கிட்டுப் பறந்துச்சு. கருடனுக்கு சந்தோஷத்துல தலைகாலு புரியல. அதைப் பாத்த மத்த பறவைங்க எல்லாம் கருடனுக்கிட்ட ஓசிகேட்டு தாங்களும் ரெக்கைகளைத் தச்சிக்கிட்டுப் பறந்துச்சுங்க. இப்படி எல்லாப் பறவைகளும் ரெக்கைகளைத் தச்சிக்கிட்டதுக.
காக்காவுக்கு இது தெரியாமப் போச்சு. காக்கா என்ன செஞ்சதுன்னா ஒடனே கருடப் பருந்துக்கிட்ட போயி, “கருடராஜாவே நீங்க ஊசி கொடுத்தப்ப வேற எடத்துக்குப் போயிட்டேன். நானும் என்னோட எனமும் ரெக்கை இல்லாம இருக்கறோம். தயவு செஞ்சு அந்த ஊசியத் தந்தீங்கன்னா அதவச்சு ரெக்கைய நாங்க தச்சுக்கிட்டு ஊசிய பத்திரமா ஒங்கக் கிட்ட கொடுத்துருவோம்” அப்படீன்னு ரொம்பப் பணிவாக் கேட்டது.
கருடப்பருந்தும் சரி போயிட்டுப் போறதுங்க அப்படீன்னு நெனச்சிக்கிட்டு தங்க ஊசியக் கொடுத்துச்சு. அதோடு மட்டுமில்லாம ரெக்கையத் தச்சிக்கிட்டுப் பத்திரமா தங்க ஊசியத் தந்துடணும். அத நான் கடவுளுக்கிட்டத் திருப்பிக் கொடுக்கணும்னு சொல்லி காக்கா கிட்ட நிபந்தனையும் விதிச்சது.
எல்லாக் காக்காவும் அந்தத் தங்க ஊசிய வாங்கி ரெக்கையத் தச்சிக்கிட்டு வானத்துல பறந்துச்சுங்க. சந்தோசப்பட்டதுங்க. காக்காவோட தலைவன் தங்க ஊசிய திரும்ப கருடப்பருந்துக்கிட்ட ஒப்படைக்கிறதுக்காக வேகவேகமாப் பறந்து வந்துச்சு. அப்ப ஒரு மரத்தடியில நின்ன கோழி காக்கா பறக்கறத அதிசயமாப் பாத்துச்சு. ஒடனே அந்தக் கோழி தன்னோட இனத்த அழைச்சி காக்கா பறக்கறதக் காட்டுச்சு.
வேகமாப் பறந்து வந்த காக்கா கோழிங்க நின்ன மரத்துமேல ஒக்காந்துச்சு. கோழிங்க வேகமா ஓடி அன்னாந்து பாத்து, “காக்கையாரே காக்கையாரே நீங்க பறக்கற மாதிரி நாங்களும் பறக்கணும்னு ஆசையா இருக்கு... இந்த ரெக்கைங்க ஒங்களுக்கு எப்படிக் கிடச்சது?” அப்படீன்னு கேட்டதுங்க.
காக்காவும் வெளக்கமா எல்லாததையும் எடுத்துச் சொன்னது. அதைக் கேட்ட கோழிங்க, “காக்கையாரே... தயவு செஞ்சு அந்தத் தங்க ஊசிய எங்களுக்கும் கொடுங்க. நாங்களும் ஒங்க மாதிரி ரெக்கைய விரிச்சிக்கிட்டுப் பறக்கணும். நாங்க எங்களுக்கு ரெக்கையத் தச்சிக்கிட்டு அந்த ஊசிய பத்திரமா தந்துடறோம்” அப்படீன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டதுங்க.
அந்தக் கோழிகளோட கெஞ்சலப் பாத்த காக்கா இரக்கப்பட்டு, “சரி தர்ரேன்... இதவச்சி ரெக்கைகளைத் தச்சுக்கோங்க... ஆனா ஊசிய பத்திரமா தந்துரணும். அதத் தரலைன்னா ஒங்களச் சும்மா விடமாட்டேன்” அப்படீன்னு சொல்லிட்டு ஊசியக் கொடுத்துட்டு ரெண்டு நாள் கழிச்சி வந்து ஊசிய வாங்கிக்கறதாச் சொல்லிட்டுப் பறந்து தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு.
ஊசிய வாங்குன கோழிக எல்லாம் ரெக்கைகளைத் தச்சிக்கிருச்சு. பிறகு வானத்துல எல்லாக் கோழிங்களும் சந்தோஷமாப் பறந்துச்சு. அந்தச் சந்தோஷத்துல கீழ ஊசியத் தவறவிட்டுதுங்க. ஊசியக் காணோம். ஒவ்வொரு கோழியும், காக்கா வந்து கேக்கறதுக்குள்ள ஊசியத் தேடிக் கொடுத்துரணும்னு மும்முரமாக் குப்பைகளைக் கிளறிக் கிளறித் தேடுச்சுங்க.
ரெண்டு நாளு ஆகிப்போச்சு. ஆனா ஊசியக் காணல. காக்கா வந்து கோழிகளுக்கிட்ட கேட்டுச்சு. கோழிங்க, “காக்கையாரே ஊசி எங்கிட்டோ விழுந்திருச்சு... கொஞ்சம் பொறுங்க... இப்பத் தேடி எடுத்துத் தந்துடறோம்...” அப்படீன்னு சொல்லிச்சிங்க. காக்காவும் பொறுத்துப் பொறுத்துப் பாத்துச்சு.
கோழிங்க குப்பையக் குப்பையக் கிளறிக்கிட்டே தேடுச்சுங்களே தவிர, அதுகனால ஊசியக் கண்டுபிடிக்க முடியல. காக்கா, “இப்ப ஊசியத் தரப் போறீகளா... இல்ல ஒங்க கோழிக் குஞ்சத் தூக்கட்டுமான்னு” கேட்டுக்கிட்டே கோழிக் குஞ்சத் தூக்கப் பாத்தது... அதுக்கு கோழிங்க சம்மதிக்கல... காக்காவ எதுத்துச்சு... அன்னையிலருந்து கோழிங்க குப்பையக் குப்பையக் கிளறிக்கிட்டுத் தங்க ஊசியத் தேடிக்கிட்டே இருக்குதுங்க... ஆனா ஊசியத்தான் கண்டுபிடிக்க முடியல...
கருடன கடவுளு “ஊசி எங்கன்னு கேட்டாரு?” கருடன் “காக்காகிட்ட கொடுத்துருக்கேன்... இந்தா வாங்கிட்டு வந்துடறேன்னு...” சொல்லிட்டு காக்காவத் தேடி வந்து கருடன் ஊசியக்கேட்டது. காக்கா நடந்ததச் சொன்னது. அதுக்குக் கருடன், “நான் சொன்னது மாதிரி நீ நடந்துக்கல. நீ பொய் சொல்ற. ஒன்னச் சும்மா விடமாட்டேன்” அப்படீன்னு சொல்லிக்கிட்டே விரட்டுச்சு.
காக்கா அதுக்கு “நானு பொய் சொல்லல, ஊசிய கோழிக்கிட்ட இருந்து வாங்கித் தர்றேன். நீயி வேணுமின்னா வந்து கோழியக் கேட்டுப்பாரு” அப்படீன்னு சொல்லிச்சு. கருடனும் கோழிங்கக் கிட்டப் போயி ஊசி எங்கன்னு கேட்டது. அதுக்குக் கோழிங்க, இந்தக் குப்பைக்குள்ளாற ஊசி விழுந்துருச்சி... அதத் தேடிக்கிட்டு இருக்கோம். கோவிச்சிக்காதீங்க... கெடச்சிரும்... கெடச்சவுடனேயே தந்துடறோம்...” அப்படீன்னு சொன்னதுங்க.
அதுக்குக் கருடன் “நீங்க ஊசியத் தர்ற வரைக்கும் ஒங்க குஞ்சுகளைத் தூக்கிக்கிட்டே இருப்பேன்... என்னக்கி நீங்க ஊசியத் தர்றீங்களோ அன்னைக்கு ஒங்கள எதுவும் செய்ய மாட்டேன்னு” சொல்லிட்டுக் கோழிக் குஞ்சிகளத் தூக்கிக்கிட்டுப் போயிருச்சு. அன்னையில இருந்து காக்காவும், கருடனும் மாத்தி மாத்திக் கோழிங்கள வந்து கேட்டு மிரட்டிட்டு கோழிக்குஞ்சுகளைத் தூக்கிக்கிட்டுப் போகுதுங்க... அதே மாதிரி கருடனும் காக்காவ அடிச்சி விரட்டி ஒன்னாலதான ஊசி போச்சு இப்பா நான் கடவுளப் போயி எப்படிப் பாப்பேன்” அப்படீன்னு அடிச்சு அடிச்சி விரட்டிக்கிட்டே இருக்குது. அதுனாலதான் கோழிங்க எப்படியாவது தங்க ஊசியத் தேடிக் கண்டுபிடிச்சி அத கருடன்கிட்டத் திரும்பக் கொடுத்துட்டு தங்களோட குஞ்சுகளக் காப்பாதணும்னு குப்பையக் கிளறிக்கிட்டே இருக்குதுங்க..