நல்லவங்களோடு எல்லாரும் இணைந்து இருப்பாங்க. அவங்க எங்க போனாலும் அங்க இருக்கறவங்க எல்லாரும் அவங்க சொல்றதக் கேப்பாங்க. ஆனா தீயவங்களோட யாரும் சேரமாட்டாங்க. அவங்க எங்க போனாலும் யாரா இருந்தாலும் அவங்களவிட்டு ஒதுங்கியே இருப்பாங்க. இதைப் பத்தின ஒரு கதை ஒண்ணு வழக்கத்துல இருக்குது.
ஒரு ஊருல பெரிய கோவில் இருந்துச்சு. அந்தக் கோவில்ல ஒரு பெரிய யானை ஒண்ணு இருந்துச்சு. அந்த யானை சாமி மேல ரொம்ப பக்தியுள்ளது. தெனந்தோறும் காலையில அந்த ஊருல இருக்கற ஆத்துக்குப் பாலத்தைக் கடந்து போகும். ஆத்துல குளிச்சிட்டு நேராக் கோயிலுக்குள்ளாற வந்து சாமியக் கும்பிட்டுட்டு அந்தக் கோயில்லயே படுத்துருக்கும். சாமிகும்புட வர்றவங்களுக்கு ஆசி வழங்கும்.
அங்க வர்றவங்களும் அந்த யானை மேல ரெம்பப் பாசமா இருந்தாங்க. இப்படி இருந்துக்கிட்டு இருக்கையில அந்த ஊருல ஒரு பெரிய ஊர்ப்பன்றி ஒண்ணு நாந்தான் பலசாலி நாந்தான் பலசாலின்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சது. எந்த மிருகத்தப் பார்த்தாலும் அந்தப் பன்றி தனக்கு மரியாதை செய்யணும்னு கட்டாயப்படுத்திச் சொல்லும். அந்த ஊருக்குள்ளாற இருந்த மிருகங்களும் இந்தப் பன்றிக்குப் பயந்துக்கிட்டுப் பேசாம மதிப்புக் கொடுத்துக்கிட்டு இருந்துச்சுங்க.
அப்படி இருக்கறபோது அந்த ஊருக்குள்ளாற வந்த ஒரு புது நாயொன்னு இந்தப் பன்றிக்கு மதிப்புக் கொடுக்கல. இதப் பாத்த பன்றிக்கு ரெம்பக் கோபம் வந்துருச்சு. அந்த நாய் முன்னால போயி நின்ன பன்றி, ‘‘என்னையப் பாத்துட்டு எல்லாரும் மதிப்புக் கொடுத்துட்டு விலகிப் போறாங்க. ஆனா நீ என்னடான்னா எனக்கு மதிப்புக் கொடுக்காமப் போற? என்னோட பலம் ஒனக்குத் தெரியுமா? நீ ஒன்னோட மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்க?’’ அப்படின்னு கேட்டுச்சு.
அதுக்கு அந்த நாயி, ‘‘ஒன்னையப் பத்தி எனக்குத் தெரியாது. ஆமா நீ என்ன பெரிய பலசாலியா? ஒன்னவிடப் பலசாலியா இந்தக் கோயில்ல இருக்கற யானை இருக்குது. அது ஒன்னப் பாத்துட்டு பயந்து விலகிப் போச்சுன்னா நானும் ஒனக்கு மதிப்புத் தர்றேன். அப்ப ஒன்ன பலசாலின்னு ஏத்துக்கறேன்னு’’ சொன்னது.
அதுக்குப் பன்றி, ‘‘நாளைக்குக் காலையில நீ அந்த ஆத்துப்பாலத்துக்கு வா. அந்த யானை என்னையப் பாத்துட்டு பயந்து ஒதுங்கி நிக்கிறதப் பாக்கலாம்னு’’சொன்னது.
நாயும் சரின்னுட்டுப் போயிடுச்சு. மறுநாளு அதிகாலையிலேயே நேராக் கௌம்பி அந்த ஆத்துப் பாலத்துக்கிட்டப் போயி நின்னுக்கிட்டது. அப்ப அந்தப் பன்றி சாக்கடையில பெறண்டு சொட்டச் சொட்ட நனஞ்சிங்கிட்டு வாலவேற ஆட்டி ஆட்டிக்கிட்டே வந்துச்சு.
அப்ப ஆத்துக்குக் குளிக்கப் போன யானை கோயிலப் பாத்து வேக வேகமா வந்தது. அப்படி வர்றபோது அந்தக் குறுகிய பாலத்துல அப்பத்தான் ஏறிவந்த பன்றியப் பாத்துட்டு அது போற வரைக்கும் அந்தப் பாலத்தோடஒரு பக்கமா நின்னுச்சு.
அந்தக் குறுகிய பாலத்துல ஒரு பக்கமா நின்ன நாயி இதப் பாத்தது. அந்த நாயைப் பாத்த பன்றி, ‘‘டேய் இப்பப் பாத்துக்கிட்டியா என்னோட பலத்தப் பாத்துப் பயந்து போன இந்த யானை எனக்கு மரியாதை கொடுத்து ஒடுங்கிப் போயி நிக்கறதப் பாரு. இதைப் பாத்து இனிமே நீயும் எனக்கு மரியாதை தரணும். ஆமா… இப்ப நான் யாருன்னு புரிஞ்சிக்கிட்டியில்ல?’’ அப்படின்னு கேட்டது.
நாயும், ‘‘ஆமா…மா நான் ஒன்னோட பலத்தத் தெரிஞ்சிக்கிட்டேன். இனிமே ஒனக்கு மரியாதை செய்யிறேன்னு’’ சொல்லிட்டு அந்தப் பன்றி போனதையே பாத்துக்கிட்டு நின்னது. பன்றி சவுடலா வால ஆட்டி ஆட்டிக்கிட்டு மெதுவா ராஜநடை நடந்து போச்சு. பன்றி அந்தப் பாலத்தக் கடந்த ஒடனே யானை மெதுவா பாலத்துல ஏறி வந்துச்சு.
அப்ப எதுத்தாப்புல வந்த நாயி யானையப் பாத்து, ‘‘ஏன்ணே நீ எவ்வளவு பலசாலி. ஓங்கி ஒரு அடி அடிச்சா இந்த பன்றி எங்க போயி விழும். இப்படி இருக்கையில கேவலம் இந்த பன்றிக்குப் பயந்துக்கிட்டு நீயி ஒதுங்கி நிக்கிறியே. இது ஒனக்கே நல்லா இருக்கா’’ அப்படீன்னு கேட்டுச்சு.
அதைக் கேட்ட யானை, டேய் தம்பி நீ சொல்றது மாதிரி நான் பயந்து போயி நிக்கல. நான் இப்பத்தான் ஆத்துல குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிக்கிட்டு இருக்கேன். அந்தப் பன்றி சாக்கடையில விழுந்து ஏந்திரிச்சு வருது. பத்தாதுக்கு வாலவேற ஆட்டி ஆட்டிக்கிட்டே வருது. அந்தச் சாக்கடைத் தண்ணி என்னோட மேல்ல பட்டுருச்சுன்னா நான் திரும்பவும் ஆத்துக்குப் போயிக் குளிக்கணும். அதனால கால வெரயம் ஆகும். அதை நெனச்சுத்தான் நான் ஓரமா ஒதுங்கி நின்னேன். அந்தப் பன்றிக்குப் பயந்துபோயி இல்ல.’’ அப்படீன்னு சொல்லிப்புட்டு அதுபாட்டுக்கு நடந்து கோயிலுக்குப் போச்சு.
அப்பத்தான் அந்த நாய்க்கு உண்மை புரிஞ்சது. தீயவனைக் கண்ட நாமதான் ஒதுங்கிப் போகணும். ஒதுங்கறது பயத்துனால அல்ல. அப்படீங்கறத யானைமூலம் தெரிஞ்சிக்கிட்டு தன்னோட ஊரப் பாத்து நடந்து போச்சு. தீயவங்களப் பத்திப் பேசுனாலும் பாவம். அதனாலதான் தீயவங்களவிட்டுட்டு ஒதுங்கியே இருக்கணும்னு பெரியவங்க இன்னிக்கு வரைக்கும் சொல்றாங்க.