எங்க பக்கத்துல காரையூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊருக்காரவுகக்கிட்ட ஒரு கதை வழங்கப்பட்டு வருது. காரையூருக்காரங்கள யாராலும் ஏமாத்த முடியாது. அவங்க எதையாவது செய்யணும்னு திட்டமிட்டுட்டா அதைச் செஞ்சி முடிச்சிருவாங்க. அப்படிப்பட்டவங்க அவங்க. அந்த ஊருக்காரங்களோட இந்தத் திறமையை எடுத்துச் சொல்றது மாதிரி ஒரு கதை வழங்கி வருது...
ஒருமுறை காரையூருக்காரங்களப் பத்தி பக்கத்தூருக்காரங்க இழிவாப் பேசிட்டாங்க. அவங்களோட இழிவப் பொருக்கமாட்டாத காரையூருக்காரங்க, ‘‘எங்கள இழிவுபடுத்துனீங்கள்ள ஒங்களுக்குத் தெரியாமலேயே ஒங்கள ஏமாத்துறம் பாருங்க. அப்பத் தெரியும் காரையூராளுக எப்படிப்பட்டவங்கன்னு’’என்று சொல்லிட்டு பேசாம வந்துட்டாங்க.
நாளு போயிக்கிட்டே இருந்துச்சு. எல்லாரும் இந்தச் சம்பவத்தை மறந்துட்டாங்க. ஆனா காரையூராளுக மட்டும் இதை மறக்காம மனசுக்குள்ளறயே வச்சிருந்தாங்க. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டும் இருந்தாங்க.
கொன்னையூருன்னு ஒரு ஊரு பக்கத்துல இருக்கு. அங்க ஆட்டுச் சந்தை மாட்டுச் சந்தை நடக்கும் அங்க போயி காரையூர இழிவாப் பேசின கிராமத்தச் சேர்ந்த ஒருத்தரு ஒரு வெள்ளாட்டங் குட்டிய வெலைக்கு வாங்கி அதை ஓட்டிக்கிட்டுக் கிளம்பினாரு. அவரு காரையூரக் கடந்துதான் அவரோட கிராமத்துக்குப் போக முடியும்.
ஆட்டுக்குட்டினால வேகமா நடக்க முடியல. அதனலா அவரு ஆட்டுக்குட்டிய தோள்ல தூக்கிப் போட்டுக்கிட்டு வேகவேகமா நடந்தாரு. காரையூருக்கிட்ட வர்றபோது ஒருத்த எதுத்தாப்புல வந்தான். அப்படி வந்தவன் ஆட்டுக்குட்டிய தோள்ல தூக்கிப்போட்டுக்கிட்டு வந்த ஆளப் பாத்து, ‘‘அட என்னண்ணே கழுதக் குட்டியத் தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டுப் போற. இதென்ன அதிசயமாவுள்ள இருக்கு. எங்கயாவது கழுதக் குட்டியத் தோள்ல போட்டுக்கிட்டுப் போவாங்களா? ஒங்களப் பாத்தா விவரமான ஆளாத் தெரியுது. ஆனா இப்படி செய்யிறீங்களே?’’ன்னு சொன்னான்.
அதைக் கேட்ட ஆட்டுக்குட்டியத் தூக்கிக்கிட்டு வந்தவரு, ‘‘அடபோப்பா. நானு என்ன கேணயனா? இப்பத்தான் கொப்பனாபட்டி சந்தையில இருந்து நல்ல ஆட்டுக்குட்டியா வாங்கிட்டு வர்றேன். இந்தக் குட்டியினால வேகமா நடக்க முடியாததால அதத் தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டுப் போறேன். இதைப் போயி கழுதைக் குட்டியான்னு கேக்குறே. ஒனக்கென்ன மூளைகீளை கெட்டுப்போச்சா… நானொன்னும் முட்டாளு இல்ல... இது ஆட்டுக்குட்டிதான் தெரியுமா?ன்னு’’ சொல்லிக்கிட்டே நடந்தான்.
இதக்கேட்ட அந்த ஆளு, ஹஹஹன்னு சிரிச்சிட்டு, ‘‘அண்ணே நீயி வெவரமான ஆளுதான்ணே!. ஆனா ஒன்கிட்ட கழுதைக் குட்டிய ஆடுன்னு சொல்லி ஏமாத்தி இருக்காங்கன்ணே! இப்படிக் கழுதக் குட்டியத் தூக்கிக்கிட்டுப் போனேன்னு வச்சிக்க ஒனக்குப் பைத்தியம் புடிச்சிருக்குன்னு சொல்லுவாங்க. நீங்க நல்லவங்களா இருக்கறீங்க. ஏதோ ஒங்கக்கிட்ட உண்மையச் சொல்லணும்னு நெனச்சேன். அதனால சொன்னேன். நான் வர்றேன்’’ அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டான்.
ஆட்டத் தூக்கிக்கிட்டுப் போனவனுக்கு மனசுக்குள்ளாற ஒரு சின்ன சந்தேகம். உண்மையிலேயே கழுதைக் குட்டியக் கொடுத்து ஏமாத்திட்டானுகளான்னு யோசிச்சுக்கிட்டே நடந்து போனாரு.
கொஞ்சதூரம் போனவுடனேயே எதுத்தாப்புல இன்னொருத்தன் வந்தான். அவனும் ஆட்டத் தூக்கிக்கிட்டு வந்தவனப் பாத்து, ‘‘ஏன்ணே இது என்னது கழுதைக்குட்டியத் தூக்கிக்கிட்டுப் போயிக்கிட்டு இருக்கீங்க? ஒங்களப் பாத்தா நல்லாத்தான் இருக்கீங்க. ஆனா இப்படி கழுதையத் தூக்கிக்கிட்டு போனீங்கன்னா ஒங்களுக்குப் பையத்தியம் புடுச்சிக்கிருச்சுன்னு சொல்லுவாங்களே... அண்ணே இந்தக் கழுதைய எறக்கிவிடுங்கன்னு’’ சொல்லிட்டுப் போயிட்டான்.
ஆட்டத் தோளுமேல போட்டுக்கிட்டு வந்த ஆட்டுக்காரனுக்கு சந்தேகம் அதிகமா ஏற்பட்ருச்சு. ஆட்டக் கீழவிட்டு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான். பெறகு ஒரு முடிவுக்கு வந்தவனா, இது ஆடுதான்னு நெனச்சிக்கிட்டு நடந்தே ஆட்டக் கையில புடுச்சிக்கிட்டுப் போனான்.
கொஞ்ச தூரம் போனவுடனே அதேமாதிரி ஒருத்தன் வந்து கேட்டான். இப்ப ஆட்டுக்காரனுக்கு ‘‘ச்சே இந்த ஆட்டு யாவாரிகதான் நம்மள ஏமாத்திப்புட்டானுக போல இருக்கு. ஒருத்தன் இல்ல மூணுபேரு நம்மளப் பாத்து என்னண்ணே கழுதக் குட்டியத் தூக்கிக்கிட்டுப் போறீங்கண்ணு சொல்லறது உண்மையாத்தான் இருக்கும். நாமதான் ஏமாந்துட்டோம். இனிமே இந்தக் கழுதக் குட்டிய ஓட்டிக்கிட்டுப் போனாலோ தோள்ள சொமந்துக்கிட்டுப் போனாலோ நம்மளப் பைத்தியக்காரனா ஆக்கிடுவாங்கன்னு’’ நெனச்சிக்கிட்டு அந்த ஆட்டுக்குட்டிய அடிச்சி வெரட்டிட்டுத் தன்னோட ஊருக்குப் போயிட்டான்.
அவன் ரெம்ப தூரம் போனப்பறமா இந்த ஆளுங்க மூணுபேரும் வேகவேகமா வந்து அந்த ஆட்டப் புடுச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. ஆட்டப் புடுச்சிக்கிட்டுப் போயி காரையூருக்காரங்க எவ்வளவு தெறமையானவங்கன்னு நிருபிச்சாங்க. இதைக் கேட்ட காரையூரு ஆளுகள இழிவாப் பேசுனவங்க சரிசரி நாங்க காரையூருக்காரங்களப் பத்தி இனிமே இழிவாப் பேசமாட்டோம். நீங்க தெறமையானவங்கன்னு ஒத்துக்குறோம்னுட்டாங்க.
இன்னக்கி வரைக்கும் எங்க ஊருப்பக்கம் இந்தக் கதையச் சொல்லிச் சொல்லி சிரிப்பாங்க.