மனிதர்கள் பேசுவார்கள். ஆடு, மாடுகள் பேசுமா? அம்மான்னு நம்ம வீட்டுல வளர்க்கக் கூடிய பசுமாடு எப்படி அழகாக் கூப்புடுது. அம்மாங்கறதுக்கு மேல ஏன் அதுகளுக்குப் பேச்சு வரமாட்டேங்குது. அந்தக் காலத்துல மாடுக பேசுச்சா? இல்லையா? அந்தக் காலத்துல எல்லா மாடுகளும் பேசுச்சுங்களாம். இதப் பத்தி ஒரு கதை இந்த வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருது.
ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு. அவரு வீட்டுல பசுமாடுக நெறைய இருந்துச்சு. அந்த மாடுக எல்லாம் பேசும். அந்த மாடுகள அவரு தன்னோட பிள்ளைங்க மாதிரி நல்லாக் கவனிச்சாரு. அவருக்குப் புள்ளைங்க இல்லை. அதனால அந்த மாடுகளப் புள்ளைங்களாவே நெனச்சு பராமரிச்சாரு.
அப்படி இருக்கற போது ஒருநாளு இராத்திரி நேரத்துல மாடுகளுக்கு வைக்கோல அள்ளிப் போட்டுட்டு வீட்டுக்குள்ளாறப் போயிப் படுக்கப் போயிட்டாரு. நடுச்சாமம். அப்ப அந்த மாடுக கட்டியிருந்த கட்டுத்துறைப் பக்கமா கன்னங்கரேர்னு ரெண்டு உருவம் வந்து நின்னுச்சுங்க.
வந்ததுங்க ரெண்டும் காலனும் தூதனும். அதுக ரெண்டும் தங்களுக்குள்ளாறப் பேசிக்கிடுச்சுங்க. காலன் தூதனப் பாத்து, ‘‘டேய் தூதா இந்த வீட்டுக்காரனோட ஆயுசு இன்னும் பத்து நாள்ள முடியப் போகுதுடா. அதப் பத்திக் கொஞ்சங்கூடக் கவலைப் படாம இந்தாளு தூங்குறான் பாரு. என்னத்தச் சொல்லறது’’ன்னான்.
அதக் கேட்ட தூதன், ‘‘ஆமா காலா... நம்ம எமதர்ம ராசா இதச் சொல்லித்தான் அவன் எப்படி இருக்காங்கறதப் பாத்துக்கிட்டு வரச் சொன்னாரு. பாவம் இவன் நல்லவனாத் தெரியுறான். ஆனாலும் இவனோட விதி இன்னும் பத்து நாள்ள போவப்போவுது. விதிய யாராலும் வெல்ல முடியாது’’ அப்படீன்னு சொன்னான்.
அதுக்குக் காலன், ‘‘நீ சொல்றது எல்லாஞ் சரிதான் தூதா. இவன் இந்த மாடுகள எல்லாம் தன்னோட பிள்ளைங்க மாதிரி பாசமா வளக்குறான். இவனுக்குப் பிறகு இதுகள யாரு காப்பாத்தப் போறாங்கன்னுதான் தெரியல. நாம இதுக்கு என்ன பண்ணறது. ஆனாலும் இவன் பத்து நாளும் சிவ பூசை செஞ்சா இந்த விதியிலிருந்து தப்பிக்கலாம். இது எப்படி அவனுக்குத் தெரியப்போகுது. நல்லவனா இருந்தாலும் விதி யாரையும் விடாது. சரிசரி. வா. நம்ப வேலையப் பாக்கப் போவோம். இன்னிலருந்து பத்தாவது நாள்ல வந்து இவனோட உசுரப் புடிச்சிக்கிட்டுப் போயிருவோம்னு’’ சொல்லிட்டு அந்தக் காலனும் தூதனும் போயிருச்சுக.
இதக் கவனமா ஒரு பசுமாடு பாத்துப்புடுச்சு. ஒடனே இந்த விசயத்தை தன்ன வளக்கறவனுக்கிட்ட சொல்லிடணும்னு நெனச்சி கயித்த அத்துக்கிட்டுப் போயி வீட்டுக்கதவ கொம்புனால தட்டுச்சு. அந்த விவசாயி என்னமோ ஏதோன்னு நெனச்சிக்கிட்டு வாரிச்சுருட்டி எந்திருச்சு வந்து பார்த்தாரு.
வெளியில மாடு நின்னதைப் பாத்துட்டு, ‘‘என்னன்’’னு கேட்டாரு. அதுக்குப் பசுமாடு காலனும் தூதனும் வந்ததப் பத்தியும் அவங்க பேசிக்கிட்டதப் பத்தியும் வெவரமாச் சொல்லி விதிய மாத்துறதுக்கு சிவ பூசை செய்யணுங்கறதயும் பத்திச் சொல்லி சிவ பூசையப் பண்ணச் சொன்னது.
அதக் கேட்ட விவசாயி, ‘‘ஆஹா நம்ம பசு எவ்வளவு அறிவுள்ளதுன்னு நெனச்சிக்கிட்டு ஒடனே சிவ பூசையச் செய்ய ஆரம்பிச்சாரு. ஒவ்வொரு நாளும் சிவன நெனச்சி நெனச்சி சிறப்பா பூசையைச் செஞ்சாரு. பத்தாவது நாளும் வந்தது. அந்தக் காலணும் தூதனும் விவசாயோட உசுரப் புடிக்கறதுக்காக வந்தாங்க. வந்து பாத்தா அந்த விவசாயி சிவபூசை செஞ்சிக்கிட்டு சாமியக் கும்புட்டுக்கிட்டு இருந்தாரு.
ஆஹா நாம பேசிக்கிட்ட இரகசியம் எப்படி இந்தாளுக்குத் தெரிஞ்சது.?ன்னு நெனச்சிக்கிட்டு அந்த விவசாயியப் புடிக்க முடியாமத் திரும்பிப் போயிட்டாங்க. ஆனாலும் அவங்களுக்குக் கொளப்பமா இருந்துச்சு. இந்த இரகசியம் யாரு மூலமா இந்த விவசாயிக்கிட்ட போனதுங்கற மர்மத்தைக் கண்டுபிடிக்கணும்னு நெனச்சிக்கிட்டு திரும்பக் காலையில ஒரு மனுச உருவத்துல வந்ததுங்க.
அங்க வந்து அந்த விவசாயிகூடப் பேசிக்கிட்டு இருந்ததுங்க. அந்த விவசாயிக்கிட்ட, ‘‘நேத்து ராத்திரி நீங்க சிவபூசை செஞ்சிக்கிட்டிருந்தீங்களே? அதையேன் செஞ்சீக? அப்படிச் செய்யச் சொன்னவங்க யாருன்னு?’’ கேட்டதுங்க.
அதுக்கு விவசாயி தன்னோட மாடுகதான் சொன்னதுங்கன்னு, நடந்தத தெரியாத்தனமாச் சொல்லிட்டாரு. அதத் தெரிஞ்சிக்கிட்ட காலனும் தூதனும் சரி நாங்க வர்ரோம்னுட்டுக் கௌம்பிப் போயி, எமதர்ம ராசாக்கிட்ட வெவசாயியோட உயிர ஏம் புடிக்க முடியலங்கற காரணத்தச் சொன்னதுங்க. அவருங் கேட்டுட்டு ‘‘இனிமே அதுகள நான் பாத்துக்கறேன். நீங்க அந்த விவசாயிய புடிக்க போக வேண்டாம். நான் போயிட்டு வர்றேன்னு’’ சொல்லிட்டு அன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா அந்த விவசாயோட விதிய எழுதுறதுக்கு சித்திரபுத்திரனக் கூட்டிக்கிட்டு விவசாயியோட வீட்டுக்குப் போனாரு.
பேயி பிசாசு, கடவுளுங்க உருவமெல்லாம் விலங்குகளுக்குத் தெரியுன்றதால அங்க வந்த எமனையும் சித்திரபுத்திரனையும் பாத்துட்டு அந்த மாடுக, ‘‘அம்மா’’ன்னு கத்தி அந்த விவசாயிய எழுப்பப் பாத்துச்சுங்க. இந்த மாடுக கத்தி விசயத்தச் சொன்னா இந்த விவசாயியோட விதிய முடிக்க முடியாதுன்னு நெனச்சிக்கிட்டு, அந்தப் பசுங்க அம்மான்னு கத்துனதோட அதுகளப் பேச முடியாம ஆக்கிப்புட்டாரு. அம்மா அம்மான்னு பசுங்க கத்துனதுங்களே தவிர அதுகனாலே பேசமுடியல.
எமனும் சித்திரபுத்திரனும் மறுநாளு கல்லுத்தடுக்கி விழுந்து அந்த விவசாயி எறக்கணும்னு விதிய நிர்ணயிச்சிட்டுப் போயிட்டாங்க. இதை அந்தப் பசுக்களால விவசாயிக்கிட்ட சொல்ல முடியல. அந்த விவசாயி மாடுகளுக்குத் தீனி போட வந்தாரு. அவரப் பாத்த மாடுக அம்மா அம்மான்னு கத்துனுச்சுக. அதுக்குமேல அதுகளால எதுவும் பேசமுடியல.
அவருக்கும் ஒண்ணும் புரியல. சரி மாடுகளுக்கு எதுவோ ஆயிப்போச்சுன்னு நெனச்சிக்கிட்டு தீனியப் போட்டுட்டுத் திரும்பி வீட்டுக்குள்ளாறப் போகப் போனாரு. அப்ப வழியில இருந்த கல்லுத் தடுக்கிவிட்டுக் கீழ விழுந்து எறந்து போயிட்டாரு. மாடுக அழுததுங்க. அன்னயில இருந்து எமதர்மராசா சாபங் கொடுத்ததால எல்லா மாடுகளும் அம்மான்னு கூப்புடுமே தவிர அதுகளால பேச முடியாது. பேயி பிசாசு, கடவுள் இதையெல்லாம் மாடுகளால பாக்க முடியும். ஆனா பாத்ததைச் சொல்ல முடியாது.
இந்தக் கத இன்னைக்கும் வழக்கத்துல இருக்குது.