எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்னு எல்லாரும் சொல்வாங்க. மனசு நல்லா இருந்தா எல்லாம் நல்லாருக்கும். மனசு நல்லா இல்லைன்னா எந்தக் காரியமும் கெட்டுப் போகும். அதனால நல்ல மனசோட எதையும் செய்ய வேண்டும்னு சொல்வாங்க. இதைப் பத்தி ஒரு கதை வழக்கத்துல இருந்து வருது.
எங்க ஊருல இருந்து காவடி எடுத்துக்கிட்டு நடந்தே பழனிக்குப் போவாங்க. அந்தக் காலத்துல வழியில நெறையக் காடுகளைத் தாண்டி நடந்து போகணும். அப்படிப் போனவங்க சுத்த பத்தமா விரதம் இருந்து கோவிலுக்குப் போகணும். சுத்தபத்தமாப் போகலைன்னா காவடி எடுத்துக்கிட்டுப் போறவங்கள வழியில செந்நாயோ, புலியோ அடிச்சிக் கொன்னுடும். பழனிக்கு நடந்து போயிட்டு நடந்தே திரும்பி வரணும்.
முருகனோட அருள் இருந்தாத்தான் நல்லபடியாப் போயிட்டு நல்லபடியாத் திரும்பி வர முடியும். இல்லைன்னா பாதி வழியிலேயே இறந்து போயிடுவாங்க. இப்படித்தான் காவடி எடுத்துக்கிட்டுப் போறவங்க ரொம்பக் கட்டுப்பாட்டோட போவாங்க.
அண்ணந் தம்பிக ரெண்டு பேரு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் முருகன் மேல ரொம்ப பக்தி உள்ளவங்க. அவங்க ரெண்டு பேரும் பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கிட்டு கொஞ்சம் அரிசியையும் எடுத்துக்கிட்டுக் காவடியையும் தூக்கிக்கிட்டு பழனிக்கு நடந்து போனாங்க. ஏன்னா அந்தக் காலத்துல இப்ப உள்ளது மாதிரி கடைகள்ளாம் இருக்காது.
அண்ணந் தம்பிகள்ள தம்பி சாப்பாட்டுல ரெம்பப் பிரியமா இருப்பான். அதுலயும் மீனுன்னா அவனுக்கு அலாதிப் பிரியம். மீன எங்கயாவது கண்டுட்டான்னா விடமாட்டான். அதைப் பிடிச்சிச் சாப்புடணும்னு துடியாத் துடிச்சிப் போயிடுவான். சாப்புட்டாத்தான் அவனுக்கு நிம்மதி.
அண்ணனும் தம்பியுமா ஒவ்வொரு ஊராக் கடந்து பழனிக்கு நடந்து போயிக்கிட்டே இருந்தாங்க. அப்படிப் போயிக்கிட்டு இருந்தப்ப ஒருநாளு ஒரு ஆத்து ஓடையக் கடந்து போக வேண்டிய சூழ்நிலை. அண்ணனும் தம்பியும் தைரியமா ஆத்து ஓடையில எறங்குனாங்க. அது கொஞ்சந்தான் தண்ணீ இருந்துச்சு. அதுனால பயமில்லாம கடந்தாங்க. அப்படிக் கடந்தபோது அந்த ஓடையில பெரிய பெரிய மீனுக துள்ளிக் குதிச்சுச்சு.
தம்பிகாரனுக்கு அந்த மீனுகளப் பாத்த ஒடனேயே புடுச்சிச் சாப்புடணும் போல இருந்தது. அவனும் ஆசைய அடக்கி அடக்கிப் பார்த்தான். அவனால முடியல. அண்ணனுக்கிட்டச் சொன்னாச் சண்டைக்கு வந்துடுவான்னும் பயம்.
அண்ணனுக்கு அந்த மீனுகளப் பாத்தவுடனேயே, ‘‘ஆஹா நம்ம தம்பி இந்த மீனப் பார்த்த உடனேயே வரமாட்டானே! ரெண்டு மீனையாவது பிடிச்சுச் சாப்புட்டாமல் வரமாட்டேன்னு சொல்வானேனு’’ நெனச்சுக்கிட்டே எதையும் கண்டுக்காம முன்னால போயிக்கிட்டே இருந்தான்.
தம்பிகாரனால ஆவல அடக்க முடியல. மெதுவா தன்னோட ஆசைய அண்ணனுக்கிட்ட, ‘‘அண்ணா நல்ல மீனா இருக்குது. இதுல ரெண்டு மூணு மீனையாவது பிடிச்சுச் சாப்புடணும்போல இருக்குது. இந்த ஓடைக் கரையில இன்னைக்குத் தங்கி இந்த மீனப் புடிச்சிச் சாப்புட்டுட்டு பெறகு பழனிக்கு நடந்து போயிருவோம்னு’’ சொன்னான்.
அண்ணனுக்குக் கோவங் கோவமா வந்துருச்சு. ‘‘ஏன்டா கடுமையா வெரதம் இருந்து நாம பழனிக்குக் காவடி எடுத்துக்கிட்டுப் போறம். நீ என்னடான்னா இந்த மீனப் பாத்த உடனேயே அதப் பிடிச்சிச் சாப்புடணும்னு சொல்றியே! இது நல்லா இருக்காடா? பேசாம நாக்க அடக்கிக்கிட்டு வா. முருகனக் கும்பிட்டு வந்து பெறகு பாத்துக்கலாம்னு’’ சொன்னான்.
ஆனா, தம்பிகாரனுக்கு ஆசைய அடக்க முடியல. அவன் அண்ணனப் பாத்து, ‘‘நீ வேணாப் போயிக்கிட்டு இருண்ணே! நானு இந்த மீனப் பிடிச்சிக் கொழம்பு வச்சிச் சாப்புட்டுட்டு வர்றேன்னு’’ சொல்லிட்டு அந்த ஓடைக்கரையில காவடிய எறக்கி வச்சிட்டு கழுத்தில இருந்த மாலையைக் கழட்டி வச்சிட்டு மீனப் புடிக்கத் தயாராயிட்டான்.
அண்ணங்காரன் எவ்வளவோ தடுத்தும் அவன் கேக்கல. அதனால அண்ணங்காரன் தம்பிய விட்டுட்டுத் தனியா பழனிக்கு நடந்து போக ஆரம்பிச்சிட்டான். தம்பிகாரன் முருகன மனசாறக் கும்பிட்டான். ‘‘அப்பா முருகா… என்னால மீனு திங்கிற ஆசைய விட்டுற முடியல… என்னையக் காப்பாத்துறதும் நீதான். வாழ வைக்கிறதும் நீதான். நான் செய்யிறது தப்புன்னா என்னைய மன்னிச்சிடுன்னு’’ சொல்லிட்டு மீனப் புடிக்க ஆரம்பிச்சான்.
பெரிய பெரிய மீனு. நாலஞ்சுதப் பிடிச்சு. நறுக்கி அலசி கொழம்பு வச்சி அத அப்படியே ஒரு எலையில போட்டு முருகனுக்குப் படைச்சான். பெறகு முருகனுக்குப் படைச்ச சாப்பாட்ட முருகா இன்னைக்கு நீ கொடுத்த இந்தச் சாப்பாட்டச் சாப்புடுறேன். எனக்கிட்ட இருக்கறது எல்லாமே நீ கொடுக்கறதுதான். அதனால இந்த மீனையும் நீ எனக்குத் தந்ததா நெனச்சி ஒனக்குப் படைச்சிட்டுச் சாப்புடறேன். நீயும் இந்தச் சாப்பாட்ட ஏத்துக்கணும்’’ அப்படீன்னு வேண்டிக்கிட்டுச் சாப்புட்டான்.
நல்லாத் திருப்தியாச் சாப்புட்டு முடிச்சிட்டு மறுபடியும் அந்த ஓடையில குளிச்சிப்பிட்டு மாலையக் கழுத்துல போட்டுக்கிட்டுக் காவடியத் தூக்கிக்கிட்டு, ‘‘அரோகரா… அரோகரான்னு’’ சொல்லிக்கிட்டு வேக வேகமா நடந்து போனான்.
அவனுக்கு முன்னால போய்கிட்டிருந்த அண்ணங்காரன் தம்பி இப்பிடிப் பண்ணிப்பிட்டானேன்னு மனசுல நெனச்சிக்கிட்டே நடந்து போயிக்கிட்டிருந்தான். அப்படிப் போயிக்கிட்டு இருந்தபோது காலு போற அளவுக்குப் ஆழமான பள்ளம் ஒண்ணு இருந்துச்சு அதக் கவனிக்காம அவன் போனதால அதுக்குள்ளாற கால விட்டு காலு மூட்டு எறங்கிக்கிடுச்சு.
அவனால நடக்க முடியல. மெதுவா மெதுவா ஒரு காலால விந்தி விந்தி நடந்தான். அப்ப தம்பிகாரன் வேக வேகமா நடந்து வந்து அண்ணனைத் தொட்டுட்டான். அண்ணனைப் பாத்த தம்பிக்கு மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு. மெதுவாக் கைத்தாங்கலா அண்ணனைக் கூட்டிக்கிட்டு தம்பிகாரன் நடந்தான்.
அவங்க பல நாள் கழிச்சு பழனிமலையில ஏறி முருகன வந்து கும்பிட்டாங்க. அப்படிக் கும்பிட்டவங்களுக்கு முருகன் அருள் கொடுத்தார். அதுலயும் தம்பிகாரனுக்குத்தான் முருகனோட அருள் ஒடனே கெடச்சது. அண்ணனுக்கு அதுக்கும் பெறகுதான் கெடச்சது. அதைப் பாத்த அண்ணங்காரனுக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
அவன் முருகனப் பாத்து, ‘‘தெய்வமே ஒன்னையே நெனச்சிக்கிட்டு வந்த என்னோட கால ஒடச்சி இப்படி நடக்க முடியாமப் பண்ணிட்டியே... ஆனா அசுத்தம் பண்ணிட்ட என்னோட தம்பிக்கு ஒடனடியா அருளக் கொடுத்துட்டியே? இது ஒனக்கே நல்லாருக்கா?’’ அப்படீன்னு கேட்டான்.
அவனோட மனக்கொறையக் கேட்ட முருகன், ‘‘அப்பா ஓந்தம்பி செஞ்சதுல எதுவும் தப்பு இல்ல. அவன் என்னைக் கும்பிட்டுட்டு எனக்குப் படைச்சிட்டுத்தான் சாப்புட்டான். எல்லா நேரத்திலயும் அவன் என்னைய நெனச்சிக்கிட்டே இருந்தான். ஆனா நீ எப்பப் பாத்தாலும் மத்தவங்களப் பத்தித்தான் நெனச்சிக்கிட்டு இருந்தே. என்ன நெனக்கிறது குறைவா இருந்தது. ஒன்னோட கவனமெல்லாம் என்னைய விட்டுச் சிதறிப் போயிருச்சு. அதனாலதான் ஒனக்கு இந்த லேசான தண்டனைய மட்டும் கொடுத்தேன்’’ அப்பவும் ஒன்னோட தம்பி என்னைய நெனச்சிக்கிட்டு ஒன்னையும் சேத்தே கூட்டிக்கிட்டு வந்தான். அதனால அவனுக்கு ஒடனே அருள் கொடுத்தேன். எவன் என்னை முழுசா நம்புறானோ அவனுக்கு ஒடனே நான் அருள் கொடுத்துருவேன்னு’’ சொன்னார்.
அதைக் கேட்ட அண்ணங்காரன், ‘‘ஆ... ஹாஹா... என்னோட தம்பி மீனப் புடிச்சிச் சாப்புட்டு வர்றேன்னு சொல்றபோது அவனோட கஷ்டத்தைப் பகிர்ந்துக்காம நான்பாட்டுக்கு அவன விட்டுட்டுக் கிளம்பிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறுன்னு முருகனே எனக்குக் காட்டிக் கொடுத்துட்டான். இனிமே இந்த மாதிரியான இழிசெயலைச் செய்யக் கூடாதுன்னு’’ முடிவு செஞ்சிட்டு முருகனோட விபூதிய எடுத்துக் கால்ல தம்பியத் தடவச் சொன்னான். தம்பியும் அவனோட கால்ல முருகன நெனச்சி விபூதியப் பூசிவிட்டான்.
என்ன ஆச்சரியம் ஒடனே கால் சரியாயிடுச்சு. ரெண்டுபேரும் முருகனக் கும்பிட்டுட்டுத் திரும்பவும் பொடிநடையா நடந்து ஊருக்கு வந்து சேந்தாங்க.
ஊருக்குள்ளாற முருகனோட அருள எல்லாருக்கிட்டேயும் சொல்லிச் சொல்லி வாழ்ந்தாங்க. மனசு சுத்தமா இருந்தா இறைவன் எல்லாத்தையும் கொடுப்பாங்கறதுக்கு அவங்களோட வாழ்க்கையே ஒரு உதாரணமா இன்றைக்கு வரைக்கும் இந்தக் கதை வழக்கத்துல இருந்து வருது.