ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சாமியக் கும்புடுற வழக்கம் இன்றைக்கும் இருந்து வர்றது எல்லாருக்கும் தெரியும். அதுலயும் இந்தப் பக்கம் ஆடி மாசத்துல வர்ற செவ்வாய்க்கிழமையில பெண்கள் மட்டும் ஒண்ணாச் சேர்ந்து சாமி கும்புடுவாங்க. அதுக்குப் பேரு செவ்வாய்ச்சாமி கும்புடுறதுன்னு சொல்வாங்க. அதென்ன செவ்வாய்ச்சாமின்னு கேட்டா அதுக்கு ஒரு கதையச் சொல்றாங்க.
ஒரு ஊருல நல்ல செல்வாக்கோட ஒரு குடும்பம் இருந்துச்சு. அந்தக் குடும்பத்துல ஒரேயொரு பொம்பளப்புள்ள இருந்துச்சு. அந்தப் பொம்பளப் பிள்ளையோட ஏழு பேரு அண்ணந்தம்பிக இருந்தாங்க. அந்த ஏழு பேரும் அந்தப் பிள்ளையத் தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க. தங்கச்சி பேருல அத்தன பேரும் உசிரா இருந்தாங்க. இப்படி இருக்கற போது அவளும் பெரியவளானா.
அந்தப் பிள்ளையைப் பொண்ணு கேட்டு பல பக்கத்துல இருந்தும் பலபேரு வந்தாங்க. அந்த ஏழுபேரும் சீருசெனத்தியோட பக்கத்துல இருக்குற ஊருல ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்தானுக. அவனோட குடும்பம் நடுத்தரமானதுதான். ஆனா அவன் ரொம்ப நல்லவன். அதனாலேயே அவனுக்கு அந்தப் புள்ளைய அந்த ஏழு பேரும் கட்டிக் கொடுத்தானுக. அவனும் அந்தப் புள்ளைய நல்லாப் பாத்துக்கிட்டான். அண்ணந்தம்பிக ஏழு பேரும் கலியாணமும் பண்ணிக்கிட்டு ஒண்ணாவே வாழ்ந்தானுக. அவனுக நல்லா இருந்தாலும் அவங்க மனைவிங்க வந்த நேரமோ என்னமோ வீட்டுல இருந்த செல்வமெல்லாம் மெல்ல மெல்ல கொறையத் தொடங்கிடுச்சு.
தங்கச்சிகாரியக் கட்டுனவன் வீடு ரெம்ப ரெம்ப வளமையா மாறுச்சு. சாதாரணமா இருந்தவன் குடும்பம் பேரும் புகழுமா மாறுச்சு. ஆனா அதுக்கு நேரரெதிரா அந்த ஏழு அண்ணந் தம்பிகளோட குடும்பமும் வறுமையில வாடத் தொடங்கிடுச்சு...
அவனுகளும் கடுமையா ஒழைச்சாங்க. ஆனாலும், அவனுக குடும்ப ரொம்ப ரொம்ப வறுமையில தள்ளாடத் தொடங்கிடுச்சு. வறுமையில இருந்தாலும் அவனுக தங்கச்சிய மறக்காம அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செஞ்சிக்கிட்டு வந்தாங்க. அவங்களோட தங்கச்சிகாரிக்கு அண்ணனுக குடும்பம் ரொம்ப கஷ்டப்படுதேன்னு ரொம்ப ரொம்ப வருத்தம். அவளும் தன்னால முடிஞ்ச ஒதவிகள அண்ணனுகளுக்குச் செஞ்சா. இருந்தாலும் அந்த ஒதவிகள்ளாம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆயிடிச்சி.
இருந்தாலும், அவளால சும்மா இருக்க முடியல. அப்போதைக்கு அவ வீட்டுக்கு ஔவையாருக் கௌவி வந்தாங்க. தன்னோட வீட்டுக்கு வந்த ஔவையார தங்கச்சிக்காரி நல்லாக் கவனிச்சிக்கிட்டா. ஔவையாரும் ரொம்ப சந்தோஷப்பட்டுப் போனாங்க. தங்கச்சிக்காரி தன்னோட அண்ணன்களோட நெலமைய எடுத்துச் சொன்னா.
அதையெல்லாம் கேட்ட ஔவையாரு அவளுக்கு செவ்வாச்சாமி கும்புடுறதப் பத்தியும் வெரதம் இருக்கறதப் பத்தியும் சொல்லிக் கொடுத்தாங்க. தங்கச்சிக்காரியும் தன்னோட அண்ணன் வீட்டுக்குப் போயி அண்ணன் பொண்டாட்டிங்களக் கூட்டிக்கிட்டு தன்னோட வீட்டுக்கு வந்தா.
அவங்க வந்த மாசம் ஆடிமாசமானதால ஔவையாரு சொன்னது மாதிரி சொல்லிக் கொடுத்து மாவ இடிச்சி யாருக்கும் தெரியாம தானும் அண்ணிகளும் சேர்ந்து ஔவையாரு சொன்ன சாமிக்குப் படைச்சிச் சாப்புட்டாங்க. இதே மாதிரி ஆடி மாசம் வந்த அத்தனை செவ்வாய்க்கிழமையும் வெரதம் இருந்து சாமியக் கும்பிட்டு வந்தாங்க.
அப்படி வந்ததால வெரதம் முடிஞ்ச நாள்ல இருந்து தங்கச்சிகாரியோட அண்ணனுக வீட்டுல செல்வம் வளம் கொழிக்கத் தொடங்கிடுச்சி. அண்ணன்கள் எல்லாரும் நல்ல செல்வத்தோட வாழத் தொடங்கினாங்க. அண்ணனுகளுக்கும் அவங்களோட மனைவிகளுக்கும் ரொம்பச் சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் தங்களோட தங்கச்சிதான்னு நெனச்சி தங்களோட தங்கச்சிய ரொம்பக் கொண்டாடுனாங்க.
ஔவையாரு சாமியக் கும்பிட்டதால செவ்வாய்க்கிழமை கும்புடுற சாமிக்கு ஔவையாரு சாமின்னு பேரு வச்சிட்டாங்க. செவ்வாச்சாமி கும்புடுறபோது யாரும் ஆம்பளங்க பாக்கக் கூடாது. அதோடு மட்டுமில்லாம சாமிக்குப் படைச்சத சாமி கும்புடுறவங்க மட்டுமே சாப்புடுவாங்க. யாருக்கும் கொடுக்கறது இல்லை. தங்கச்சிக்காரியும் அவளோட அண்ணன் பொண்டாட்டிகளும் செவ்வாச்சாமியக் கும்புட்டு செல்வத்தோட வாழ்ந்தாங்க. இன்னைக்கு வரைக்கும் இந்தச் செவ்வாச்சாமி கும்புடுற வழக்கம் இருந்துக்கிட்டு இருக்கு... உங்க ஊரிலும் இந்த ஔவையார் சாமியைக் கொழுக்கட்டை வச்சுக் கும்பிடுற பழக்கமிருக்கா...?