நாம எந்தச் சூழல்ல இருக்கிறோமோ அந்தச் சூழலுக்குத் தகுந்த மாதிரிதான் நம்மளோட பழக்க வழக்கங்கள் எல்லாம் இருக்கும். அதனாலதான் குழந்தைகளை நல்ல சூழல்ல வளர்க்கணும்னு சொல்றாங்க. இதப் பத்தி ஒரு கத ஒண்ணு இருக்கு.
ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் காட்டுக்குப் போறது கிளிக்குஞ்சுகள பிடிச்சிக்கிட்டு வாரது. அதப் பேசுறதுக்குப் பழக்குறது. அப்பறம் அத விக்கிறது. இப்படியே அவனோட வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு. அவன் கிளிகள ஒழுங்கா வளக்கறவங்களாப் பாத்துத்தான் விப்பான். இல்லன்னா யாருக்கும் விக்கமாட்டான். கிளிகள வித்தாலும் அதுக எப்படி இருக்குதுகன்னும் வித்த எடத்துல போயிப் பார்ப்பான். இது அவனோட வழக்கமாவும் இருந்துச்சு. இதுனால எல்லா ஊருலயும் அவனுக்கு நல்ல பேரு இருந்துச்சு.
இப்படி இருக்கயில ஒருநாளு அவன் தான் ஆசையா வளத்த ரெண்டு கிளிகள எடுத்துக்கிட்டு அதுகள விக்கிறதுக்குச் சந்தைக்குப் போனான். ஒவ்வொருத்தரையும் பாத்து, “அற்புதமாப் பேசும் இந்தக் கிளிகள வாங்கிக்கிறீங்களான்னு?” ஒவ்வொருத்தருக்கிட்டயும் கேட்டான். அப்பப் பாத்து ஒருத்தரு வந்து அவங்கிட்ட வந்து தனக்கு ஒரு கிளியத் தாங்கன்னு சொல்லி ஒரு கிளிய வாங்கிக்கிட்டுப் போனாரு.
இன்னொரு கிளி மட்டும் இருந்தது. நெறையப் பேரு வந்தாங்க. ஆனா அவங்களுக்கிட்ட எல்லாம் அவனுக்குக் கிளியக் கொடுக்க மனசு இல்ல. கடைசியில பக்கத்து ஊருல இருக்கற ஒருத்தன் வந்தான். தனக்கு அந்தக் கிளியக் கொடுங்கன்னு கேட்டு அத நல்லா வளக்கறதாகவும் சொல்லிட்டு வாங்கிக்கிட்டுப் போனான். கிளிக்காரனும் சரி இவன் இந்தக் கிளிய நல்லாப் பாத்து வளர்ப்பான்னு நெனச்சிக்கிட்டு அதஅவங்கிட்ட வித்தான்.
கிளிகள வாங்கிக்கிட்டுப் போனவங்கக்கிட்ட அவங்க ஊரைப் பத்தியும் அவங்க வீடு இருக்கற இடத்தையும் தெரிஞ்சிக்கிட்டான் கிளிக்காரன். கொஞ்ச நாள் போச்சு. இந்தக் கிளிக்காரன் தான் மத்தவங்கிட்ட வளக்கக் கொடுத்த கிளிகள் எல்லாம் எப்படி இருக்கு. அத நல்லா வளக்கிறாங்களா? அந்தக் கிளி நல்லாப் பேசுதான்னு? பாக்குறதுக்காகப் போனான்.
மொதல்ல கோவில் குருக்கள் வீட்டுக்குப் போயி அங்க உள்ள கிளியப் பார்ப்போம்னு நெனச்சிக்கிட்டு அதப் பாக்குறதுக்காகப் போனான். அப்பப் பாத்து குருக்கள் வீட்டுல இல்ல. அவரு இல்லட்டியும் பராவாயில்ல. நாம போயி கிளியப் பாப்போன்னுட்டு வீட்டுக்குள்ளாற நுழஞ்சான் கிளிக்காரன்.
அவன் வீட்டுக்குள்ளாற நுழையறதப் பாத்த கிளி, “வாங்க.. வாங்க… நீங்க யாரு? ஐயா வெளியில போயிருக்காங்க. கொஞ்ச நேரம் ஒக்காருங்க. இப்ப ஐயா வந்துருவாரு”ன்னு கிளி பேசிச்சு. அதக் கேட்ட கிளிக்காரன். ஆஹா நாம கொடுத்த கிளிய இந்தக் குருக்கள் நல்லா வளத்து வச்சிருக்காருன்னு நெனச்சிக்கிட்டு அங்க இருந்த ஒரு முக்காலியில கொஞ்ச நேரம் ஒக்காந்தான்.
அப்பப் பாத்து அந்தக் குருக்கள் வீட்டுக்குள்ளாற நொழைஞ்சாரு. அவனப் பாத்து, “என்ன நல்லா இருக்கீங்களா? எப்ப வந்தீங்க? கிளி நல்லா இருக்கா? பாத்தீங்களான்னு?” கேட்டாரு. அதக் கேட்ட கிளிக்காரன், “ஐயா எனக்கு ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் வளக்கிறத விட நீங்க இந்தக் கிளிய நல்லாவே வளத்து நல்லாப் பேச வச்சிருக்கீங்க. ரெம்பச் சந்தோஷம். நான் போயிட்டு வர்றேன்”னு’ சொல்லிட்டு இன்னொரு கிளியப் பாக்குறதுக்காகப் பக்கத்து ஊருக்குப் போனான்.
கிளிய வாங்கிட்டுப் போனவன் சொன்ன அடையாளத்த வச்சி அவன் இருக்குற வீட்டக் கண்டுபிடிச்சிக் கிளிக்காரன் போனான். அங்க அவன் இல்ல. அவன் கடைக்குப் போயிருக்கறதா வீட்டுல சொன்னாங்க. அவனும் கடையில போயி பாத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு அங்க போனான்.
அங்க போனா அது ஒரு கசாப்புக் கடை. ஆட்டை வெட்டி உரிச்சித் தொங்கப் போட்டு கறிய நறுக்கி யாவாரம் பாத்துக்கிட்டு இருந்தான் கிளிய வாங்கிக்கிட்டுப் போனாவன்... கிளிக்காரன் போயி அந்தக் கடைக்கு முன்னால நின்னான். அப்ப, “யார்ரா நீ? கால வெட்டு. கைய வெட்டு. ஈரக் கொலைய வகுந்துப்புடுவேன்”னு ஒரு குரல் வந்தது. அந்தக் குரலக் கேட்டு அண்ணாந்து பாத்த அந்தக் கிளிக்காரன் திகைச்சுப் போயிட்டான்.
அந்தக் கிளிதான் இப்படிப் பேசியிருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டான். அவனப் பாத்த அந்தக் கசாப்புக் கடைக்காரன், “என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? எல்லாம் நம்ம கிளிதான் பேசுது. இன்னும் நல்லாப் பேசும்… கேக்குறீங்களா?"ன்னு கேட்டான். அதுக்குக் கிளிக்காரன், “இல்ல இல்ல... நான் நல்லாவே கேட்டுட்டேன். அடேயப்பா என்னமா கேவலமாப் பேசுது… போதும் போதும் … நான் போயிட்டு வாரேன்”னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டுக் கௌம்பினான். அவன் கௌம்புறதப் பாத்த கிளி, “வெட்டிப்புடுவேன், குத்திப் புடுவேன், ஈரல புடுங்கிடுவேன்”னு சொன்னது.
அதக் கேட்டுக்கிட்டே போன கிளிக்காரன், “எல்லாம் வளர்ற சூழல்தான் காரணம். குருக்களய்யா தன்னோட கிளிய நல்லாப் பேசுறது மாதிரி வளத்துருக்காரு. ஆனா இந்தக் கசாப்புக் கடைக்காரன் அவனப் போலப் பேசறது மாதிரி கிளிய வளத்து வச்சிருக்கான். சூழல்தான் எல்லாத்தையும் மாத்திப்புடுது. எல்லாம் இருக்குற இடத்தப் பொருத்து”ன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு தன்னோட வீட்டப் பாக்க நடந்து போனான்.
எந்தச் சூழல்ல நாம வளர்றமோ? அல்லது வளக்கப்படுறமோ அந்தச் சூழலுக்கு ஏத்தமாதிரி நம்மளோட பழக்க வழக்கமும் அமைஞ்சி போகுது. நம்மளோட செயல்பாடுகளும் அமைஞ்சிருது. இந்தக் கதை எதுக்கும் பொருந்தும்? நீங்களே தெரிஞ்சுக்குங்க...